மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மருத்துவம் சார்ந்த 20 B.Sc. பட்டப் படிப்புகள் மருத்துவத்துறை சார்ந்த உயர் கல்வி தகவல் கட்டுரை
Dr. அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை, மே 16-31, 2025



12ஆம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு  தேர்வு  முடிவுகளுக் காகக் காத்திருப்பவரா நீங்கள்? 12ஆம்  வகுப்பில் பயாலஜி, உயிரியல் துறையைத் தேர்ந் தெடுத்து மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வம் இருப்பவரா நீங்கள்? நீட் தேர்வு எழுதாமல் 12ஆம் வகுப்பு  மதிப்பெண்களைக் கொண்டே படிக்கத் தகுந்த மருத்துவம் சார்ந்த B.Sc. படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கானது இக்கட்டுரை.


அனைத்துப் படிப்புகளுக்கும் பொதுவான விசயங்கள்

1. அனைத்து மருத்துவம் சார்ந்த B.Sc. படிப்புகளும் நான்கு ஆண்டு படிப்புகள் (ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கும்)

2. மூன்று ஆண்டுகள் படிப்பும் ஓராண்டு பயிற்சியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

3. அனைத்துப் படிப்புகளிலும் மனித உடல், அறிவியலின் அந்தந்த படிப்புகளுக்குத் தேவையான அடிப்படை உடற்கூறியல், இயங்குவியல், நுண்ணுயிரியியல், நோயியல், மருந்தியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

4. இத்துடன் அடிப்படை ஆங்கிலக் கல்வி, அடிப்படை கணினிக் கல்வி, அடிப்படை தொழில் சார்ந்த அறம் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. கீழ்காணும் படிப்புகளைத் தரவரிசை அடிப்படையில் அடுக்கவில்லை. எனவே அவரவர் விரும்பிய துறையை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.


1. B.Sc. விபத்து, அவசரச் சிகிச்சை தொழில்நுட்பம் (B.Sc Accident Emergency Care Technology)

இந்தப் படிப்பில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (CASUALTY EMERGENCY DEPARTMENTS) மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு உதவும் வகையிலும் சிகிச்சைக்கான அடிப்படை அனைத்தும் பயிற்றுவிக்கப்படும். அவசரச் சிகிச்சைப் பிரிவில் நோயாளி யைப் பரிசோதித்து அவருக்கு உரிய சிகிச்சையை வழங்குதல், அவசர அறுவைச் சிகிச்சைகள், அவசரச் சிகிச்சைப் பிரிவில் உபயோகப்படுத்தப்படும் மருத்துவ உபகர ணங்கள் குறித்த அறிவும் போதிக்கப்படும்.

கல்வி பயிலும் மூன்று ஆண்டுகளும் ஆண்டிற்கு ஆயிரம் மணி நேரங்கள் நேரடியாக விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவில் நேரடியாகக் கல்வி கற்குமாறு இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.  நான்காவது ஆண்டு பல்வேறு துறை (மருத்துவம், அறுவைச் சிகிச்சை, விபத்து சிகிச்சை, மகப்பேறு குழந்தைகள் அவசரச் சிகிச்சை) அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயிற்சி எடுக்க வேண்டும்.

எதிர்காலம்: இதே துறையில் M.Sc படிப்பு உள்ளது. அதைப் படிக்கலாம். சிறிய, பெரிய மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் விபத்து, அவசரச் சிகிச்சை தொழில் நுட்புநராக (B.Sc. Accident Emergency Care Technician) பணிபுரியலாம்.

பின்குறிப்பு:  தொடர்ந்து  அவசரச் சிகிச்சை  நோயாளிகளைப்  பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இரத்தம், சதை, எலும்பு போன்றவற்றைத் தினந்தோறும் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரத்தம், சதை, மரணங்கள் போன்றவற்றைத் தாங்க மாட்டேன் என்பவர்கள் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும். எனக்கு இந்தச் சவால்களை ஏற்று உயிரைக் காப்பாற்றுவது பிடிக்கும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு.

2.BASLP (B.Sc. Audiology Speech Language Pathology) B.Sc. செவிப் புலவியல் பேச்சு மொழி சார்ந்த நோயியல் தொழில் நுட்புநர்

இந்தப்  படிப்பில்  மனிதர்களின் செவித்திறன் குறைபாடு, காது கேளாமை, அதைக் கண்டறியச் செய்யப்படும் பரிசோத னைகள், காது கேளாதவர்களுக்கு எத்தகைய சிகிச்சை பரிந்துரை செய்வது? பேசுவதில் ஏற்படும் பிரச்னைகள், பேச்சு குளறுதல் அதற்குரிய சிகிச்சை, பேச்சுப் பயிற்சி அளித்தல், குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தல் இவ்வாறாக செவிப்புலன், பேச்சு அதை ஒட்டிய அனைத்து நோய்கள் அதைத் தீர்க்கும் வழிகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும்.

எதிர்காலம்: இதே துறையில் M.Sc. உள்ளது. காது மூக்கு தொண்டை நிபுணர் களுக்கு உதவும் வகையில் செவிப்புலன் பிரச்னையைக் கண்டறியும் நுட்புநர்களாக இருக்க முடியும். சுயமாகப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நிபுணர்களாகவும் மாற முடியும். இவர்கள் ஆடியாலஜிஸ்ட் என்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

3. B.Sc. இதயம் சார்ந்த தொழில்நுட்பம் (B.Sc. Cardiac Technology)

இந்தப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறு இயல், இயங்குவியல், நோயியல், நுண்ணுயிரியில், மருந்தியல், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். இத்துடன் இசிஜி எடுப்பது, ட்ரெட் மில் பரிசோதனை எடுப்பது, ஹோல்டர் மானிட்டர் எனப்படும் தொடர் இசிஜி கண்காணிப்பு, தொடர் இரத்த அழுத்த கண்காணிப்பு, எக்கோ எடுப்பது எப்படி? என்பவை கற்றுத் தரப்படும். இத்துடன் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோப்ளாஸ்டி, ஸ்டெண்ட் வைத்தல் போன்ற சிகிச்சைகளில் இதய மருத்துவருக்கு உதவுவது குறித்த நேரடி பயிற்சியும் வழங்கப்படும்.

இறுதி ஆண்டு: கேத் லேப் எனப்படும் ஆஞ்சியோ செய்யும் இடங்களில் மூன்று மாதம், எக்கோ பயிற்சி மூன்று மாதம், இதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று மாதம், ஹோல்டர் இசிஜி எடுக்கும் பயிற்சியில் மூன்று மாதம் நேரடி பயிற்சி பெற வேண்டும்

எதிர்காலம்: இதய நோய் சிறப்பு நிபுணர்களின் கேத் லேப்களில் அவர்களுக்கு உதவியாளர்களாக, தொழில் நுட்புநர்களாகப் பணிபுரிய முடியும். பெரிய மருத்துவமனைகளில் இசிஜி, எக்கோ, ட்ரெட்மில் போன்றவற்றைக் கையாளும் நுட்புநர்களாகப் பணியாற்ற முடியும்.

4. B.Sc. இதய நுரையீரல் இரத்த ஓட்ட தொழில்நுட்பம் (B.Sc. Cardio pulmonary Perfusion Techonology)

இந்தப் படிப்பு சார்ந்த இதயம், நுரையீரலுக்கான அடிப்படை மருத்துவக் கல்வி புகட்டப்படும். இத்துடன் இதயம், நுரையீரல் சார்ந்த அறுவைச் சிகிச்சைகளில் குறிப்பாக பைபாஸ் அறுவைச் சிகிச்சைகளில் உபயோகப்படுத்தப்படும் இதய நுரையீரல் இயந்திரத்தைக் கையாள்வது குறித்த நேரடிப் பயிற்சி வழங்கப்படும். இதயத்தில் அறுவைச் சிகிச்சை நடக்கும் போது இதய அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு உதவியாக ஹார்ட் லங்க் மெஷினைக் கையாளும் நுட்புநராகப் பணி செய்ய வேண்டும். அந்த இயந்திரத்தைச் சுத்தம் செய்வது, தொற்று நீக்கம் செய்வது, பராமரிப் பது போன்ற விஷயங்கள் கற்றுத் தரப்படும்.

எதிர்காலம்: இதயம் சார்ந்த பைபாஸ் அறுவை சிகிச்சைகள், இதய அறுவைச் சிகிச்சை நடைபெறும் இடத்தில் இதய நோய் சிறப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்களுக்கு உதவும் குழுவில் நுட்புநர்களாகப் பணி புரியலாம்.

5. B.Sc. மருத்துவ ஊட்டச்சத்தியல் தொழில் நுட்பம் (B.Sc. Clinical Nutrition)

இந்தக் கல்வியில் அடிப்படை மேம்பட்ட ஊட்டச்சத்தியல், அடிப்படை மேம்பட்ட உணவியல், உடல் இயங்குவியல், ஊட்டச் சத்து சார்ந்த உயிர் வேதியியல், உணவுத் துறை சார்ந்த நுண்ணுயிரியல், உணவுத்துறை அறிவியல், சமூக ஊட்டச்சத்தியல், உணவு சார்ந்த பரிந்துரை வழங்குதல் போன்றவை குறித்து களப்பயிற்சி வழங்கப்படும். பல்வேறு இணை நோய் கொண்ட மக்களுக்கு எவ்வாறு உணவு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது குறித்த கல்வி பயிற்றுவிக்கப்படும்.

எதிர்காலம்:  மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து, உணவியல் பரிந்துரையாளராகப் பணிபுரியலாம். சுயமாகவும் ஊட்டச்சத்து சார்ந்த உணவுமுறை பரிந்துரை செய்யும் நிபுணராக விளங்க முடியும்.

6. B.Sc. தீவிர சிகிச்சை தொழில்நுட்பம் (B.Sc Critical Care Technology)

இந்தப் படிப்பில் அடிப்படை மருத்துவக் கல்வியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (INTEN SIVE CARE) நோயாளிகளைக் கண்காணிப்பது குறித்து அடிப்படை, மேம்பட்ட கல்வி வழங்கப்படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கையாளப்படும் வெண்ட்டிலேட்டர் போன்ற கருவிகளை இயக்குவது, பராமரிப்பது குறித்தும் தீவிர சிகிச்சைப் பிரிவின் நிர்வாகம், தேவையான பொருட்கள் மருந்துகள் நோயாளிகளின் புள்ளியியல் பராமரிப்பு, அறம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படும்.

இறுதி ஆண்டு: மருத்துவத்துறை, குழந்தைகள் நலத்துறை, இதய நலத்துறை, நுரையீரல் நலத்துறை போன்றவற்றின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம்:  மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குழுவில் உறுப்பின ராகப் பணிபுரியலாம்.

7. B.Sc. டயாலிசிஸ் டெக்னாலஜி (B.Sc. Dialysis Technology)

சிறுநீரகத் துறை சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வி கற்றுத்தரப்படும். இத்துடன் சிறுநீரக செயலிழப்பில் உயிர்காக்கும் சிகிச்சையான டயாலிசிஸ் (இரத்த சுத்தி கரிப்பு முறை) செய்ய உதவும் டயாலிசிஸ் இயந்திரத்தை இயக்கி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பயிற்சி முழு நேரமாக வழங்கப்படும்.

எதிர்காலம்:  டயாலிசிஸ்  சிகிச்சை வழங்கும் தொழில்நுட்புநர்களாக டயாலி சிஸ் சிகிச்சை மையங்களில் பணிபுரியலாம். இவர்களை ‘டயாலிசிஸ் டெக்னீசியன்’ என்று அழைக்கலாம்.

8. B.Sc. நரம்பியல் மின் இயங்குவியல் தொழில் நுட்பம் (B.Sc. Neuro Electro Physiology)

இந்தப் படிப்பில் மூளை, நரம்பியல் சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வியுடன் ஈஈஜி எனப்படும் மூளை மின் இயங்குவியல் பரிசோதனை  செய்வதற்கான  பயிற்சி வழங்கப்படும்.  இதயத்துக்கு  எப்படி இசிஜியோ அது போல மூளைக்கு ஈஈஜி எடுக்கப்படுகிறது. இதை வைத்து நரம்பியல் நோய் சிறப்பு நிபுணர் ஒருவருக்கு வலிப்பு ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவார்.

வலிப்பின் தன்மை தூண்டப்பட்ட வலிப்பா? அல்லது தூண்டப்படாமல் ஏற்படும் வலிப்பா? என்பது குறித்தும் அறியப்படும். இது மட்டுமன்றி நரம்பு வழி கடத்தப்படும் உணர்வுகள் குறித்த பரிசோதனை (Nerve conduction study), தசை வழி மின் ஓட்டப் பரிசோதனை (Electromyography), உறக்கத்தில் செய்யப்படும் மூளை இயங்குவியல் பயிற்சி (Polysomnography) கபால வழி மின் காந்த அலைகள் மூலம் மூளையைத் தூண்டி செய்யப்படும் மேம்பட்ட பரிசோதனைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம்: நரம்பியல் சிறப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்தப் பரிசோதனைகளை எடுக்கும் நுட்புநராகப் பணிபுரியலாம். மருத்துவமனைகளில் ஈஈஜி டெக்னிசியன், நியூரோ எலக்ட்ரோ ஃபிசியாலஜி டெக்னிசியனாகப் பணிபுரியலாம்.

9. B.Sc. மருத்துவ ஆய்வக நுட்புநர் (B.Sc. Medical Laboratory Technology)

இந்தப் படிப்பில் மருத்துவ சமூகவியல் (sociology), நோயரின் மனோதத்துவவியல் (psychology), அடிப்படை மருத்துவத் துறை சார்ந்த கல்வி (Basic life sciences) இத்துடன்  ஆய்வகம்  நடத்துவதற்கு ஏதுவான  நோயாளிகளிடம்  இருந்து இரத்தம், சிறுநீர், மலம், சளி மாதிரிகளைப் பெறுவது குறித்த பயிற்சி. திசு நோயியல், மாதிரிகளில் இருந்து செல்களை நுண்ணோக்கிகளில் மருத்துவர்கள் பார்த்து நோய் கண்டறியும் வகையில் தயார் செய்வது, குருதி நோயியல், எதிர்ப்பு சக்தியியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல் சார்ந்த அத்தனை ஆய்வகப் பரிசோதனைகள் பற்றியும் கற்றுத் தரப்படும். இறுதி ஆண்டில் நான்கு மாதங்கள் நோயியல் துறை ஆய்வகத்திலும், நான்கு மாதங்கள் நுண்ணியிரியல் துறை ஆய்வகத்திலும், நான்கு மாதங்கள் உயிர் வேதியியல் துறை ஆய்வகத்திலும் பயிற்சி பெற வேண்டும்

எதிர்காலம்: இந்தப் படிப்பு படித்தவர்கள் மருத்துவமனைகளின் ஆய்வகங்களில் ஆய்வக நுட்புநர்களாகப் பணிபுரியலாம் சுயமாக ஆய்வகங்கள் தொடங்கி நடத்தி சேவையாற்றலாம்.

10. B.Sc. மருத்துவ சமூகவியல் (B.Sc. Medical Sociolgy)

மருத்துவத் துறை சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வி அத்துடன் சமூகத்தின் கலாச்சாரச் சூழல், சமூக, உடல் நலன் சார்ந்த மனோதத்துவவியல், சமூக நலன், சமூகம் சார்ந்த மருத்துவம், சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகள், மனித உரிமை, மருத்துவமனை நிர்வாக அடிப்படை, பேரிடர் மேலாண்மை, சூழலியல் போன்றவற்றில் கல்வி புகட்டப் படும்.

இறுதி ஆண்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது, மருத்துவத்துறை ஆவணங்களைப் பராமரித்தல், நோய்களுக்கு ஏற்ற சரியான குறியீடுகளை வழங்குதல், மனநலம், மனோதத்துவ கவுன்சிலிங் வழங்குதல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம்: மருத்துவமனைகளில் ஆற்றுப்படுத்துதல் மையங்களில் பணி புரியலாம். நோய் குறித்த மனம் சார்ந்த ஆற்றாமை, அச்சங்களைப் போக்கும் கவுன்சிலர்களாகச் செயல்படலாம். உறுப்பு மாற்று கவுன்சிலராகச் செயல்படலாம். அரசு சார் பற்ற இயக்கங்கள் மூலம் சமூக நலனுக்காக உழைக்கலாம். அரசின் சமூக நலன் சார்ந்த இயக்கங்களில் பங்கெடுக்கலாம். மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன் துறையில் பணிபுரியலாம். மருத்துவம் சார்ந்த சுற்றுலாவை மேற்பார்வை, நிர்வகிப்பவர்களாகப் பணிபுரி யலாம்.

(மீதமுள்ள 10 படிப்புகள் அடுத்த இதழில்...)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்