மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மருத்துவம் சார்ந்த 20 B.Sc. பட்டப் படிப்புகள் மருத்துவத்துறை சார்ந்த உயர் கல்வி தகவல் கட்டுரை 2
Dr. அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை, June 1-15, 2025


கடந்த இதழ் தொடர்ச்சி..

 

11. B.Sc அணுக்கதிர் மருத்துவம் (B.Sc. Nuclear Medicine)

நான்கு ஆண்டு படிப்பு இது. இதில் எக்ஸ்ரே எடுப்பது எப்படி, எக்ஸ்ரே ஃபிலிம் இருட்டறையில் கழுவும் தொழில்நுட்பம், அடிப்படை இயற்பியல், அணுக்கதிர் இயற்பியல், அணுக்கதிர் மருத்துவம் அதில் உபயோகப்படுத்தப்படும் கருவிகள், அணுக்கதிர் வேதியியல், அணுக்கதிர் மருந்தியல், அணுக்கதிர் மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படும் மருத்துவ முறைகள், அணுக்கதிர் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால வளர்ச்சி, அணுக்கதிர் கொண்டு உடலியலில் ஏற்படும் மாற்றங்கள், பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு போன் றவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படும்.

இறுதி ஆண்டில் புற்றுநோய் சிறப்பு மருத்துவத்தில் அணுக்கதிர் கொண்டு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் கொண்டு லீனியர் ஆக்சிலரேட்டர் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகள், இதய நலன் துறையில் இசிஜி, ட்ரெட்மில், ஆஞ்சியோகிராம் போன்றவற்றில் பயன் படுத்தப்படும் அணுக்கதிர் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், நரம்பியல் துறையில் ஈஈஜி பயிற்சி, எலிசா, CLIA போன்ற இரத்தப் பரி சோதனைகள், சைக்லோட்ரால், ஹாட் செல், சைக்லோட்ரால் மாட்யூல், ரேடியோ நியூக்ளியோடைடு தெரபி அணுக்கதிர் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

எதிர்காலம்: புற்றுநோய் சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் ரேடியோதெரபி சிகிச்சையாளராகப் பணிபுரியலாம். புற்று நோய் கண்டறியும் பெட் ஸ்கேன், எஃப் டி ஜி ஸ்கேன் போன்ற பிரத்யேக ஸ்கேன்கள் எடுக்கும் மையங்களில் நிபுணராகப் பணிபுரியலாம்.

12. B.Sc அறுவை அரங்கம், மயக்க மருந்தியல் தொழில் நுட்பம் (B.Sc. Operation Theatre & Anesthesia Technology)

அடிப்படை மருத்துவக் கல்வியுடன் வாரத்திற்கு பனிரெண்டு மணி நேரம் காலை வேளைகளில் அறுவை அரங்கங்களில் கற்றல் நிகழும். இத்துடன் மயக்க மருந்தியலின் வழி முறைகள் கற்றுத்தரப்படும். மயக்கமருந்து தரப் பயன்படும் கருவிகள் குறித்தும் அதை உப யோகித்தல், அவற்றைத் தொற்று நீக்கம் செய் தல், பராமரித்தல் குறித்தும் கற்றுத் தரப்படும். இறுதி ஆண்டில் அறுவை அரங்க தொற்று நீக்க அறையில் மூன்று மாதங்கள், அறுவை சிகிச்சைக்குப்  பின்னரான  கவனிப்பு அறையில் மூன்று மாதங்கள், அறுவைச் சிகிச்சைத் துறை தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று மாதங்கள், அறுவை அரங்கில் மூன்று மாதங்கள் என்று ஒராண்டு பயிற்சி இருக்கும்.

எதிர்காலம்: மருத்துவமனைகளின் அறுவை அரங்கங்களில் அறுவைச் சிகிச்சை தொழில் நுட்புநர்களாகவும் மயக்கவியல் துறை தொழில் நுட்புநர்களாகவும் பணி புரியலாம்.

13. B.Sc கண் பார்வை அளவையியல் (B.Sc. Optometry)

இந்தப் படிப்பில் கண் சார்ந்த மருத்துவ அடிப்படைக் கல்வி, கண் உடற்கூறியல், கண் இயங்குவியல், கண் பார்வை அளவையியலின் அடிப்படைத் தத்துவங்கள், கண் நோய்கள், கண் பார்வைக் குறைபாடுகள், அவற்றைக் கண்டறியும் முறைகள், பார்வைக் குறைபாடுகளைக் களைய பரிந்துரைக்க வேண்டிய கண்ணாடிகள், க்ளாகோமா, காண்டேக்ட் லென்ஸ் போன்றவை குறித்த கல்வி புகட்டப்படும். ஒராண்டு பயிற்சிக் காலத்தில் கண் பார்வை குறைபாடு கண்டறிதல், அவற்றை நீக்கும் கண்ணாடிகளைப் பரிந் துரைத்தல் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

எதிர்காலம்:  கண்  நோய்  சிறப்பு மருத்துவமனைகளில் கண் பார்வை, கண் அழுத்த அளவு பரிசோதகர், கண் பார்வைக் குறைபாடு களையும் தொழில் நுட்புநர், காண்டாக்ட் லென்ஸ் பரிந்துரைப்பாளர் பணிகள் உள்ளன. சுயமாகவும் பார்வைக் குறைபாடு களையும் கண்ணாடிக் கடைகள் நடத்தி சேவையாற்றலாம்.

14. B.Sc மருத்துவ உதவியாளர் (B.Sc. Physician Assistant)

மருத்துவத்துறையின்  அடிப்படைக் கல்வி, உடற்கூறியியல், இயங்குவியல், உயிர் வேதியியல், மருந்தியல், அறுவைச் சிகிச்சை மயக்க மருந்தியல், அதில் பயன்படும் உபகரணங்கள், கணினி அறிவியல், மருத்துவத் தொழில் சார்ந்த எழுத்தறிவு, பேச்சு ஆங்கிலம், ஆய்வுப் பயிற்சி, மருத்துவமனை வார்டுகளில் பயிற்சி, மருத்துவத்துறையில் அனைத்துப் பிரிவுகளிலும் சென்று பணிபுரிந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு.

எதிர்காலம் : மருத்துவமனைகளில் துறைசார் வல்லுநர்களின் கீழ் குழுவாக இயங்கும் போது மருத்துவர்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்து அவர் கூறும் பரிந்துரைகளை எழுதுவது, அவர் கூறும் மருத்துவ ரீதியான கட்டளைகளை நிறைவேற்றுவது, வார்டுகளை நிர்வகிப்பது, மேற்பார்வை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட முடியும்.

15. B.Sc. செயற்கை உறுப்புகள், மாற்றுத்திறனாளிகள் உதவிக் கருவி தொழில் நுட்பம் (B.Sc. Prosthesis Orthotics)

இந்த கல்வியில் உடல் இயந்திரவியல், அதன் உபயோகம், பொறியியல் வரைகலை, செயற்கை உறுப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகளை உருவாக்குதல், அதைப் பொருத்துதல், எலும்பியல் துறையில் கை கால் நீக்க அறுவைச் சிகிச்சை குறித்தும் அதற்குப் பின்னர் வழங்க வேண்டிய இயன்முறை மருத்துவம் புனரமைப்பு குறித்த கல்வி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக அவர்களது பணிகளைச் செய்ய ஏதுவான கருவிகள் குறித்த கல்வி, இந்தக் கருவிகளின் பயன்பாடு இதை மக்கள் நலம் பெறும் வண்ணம் உபயோகித்தல் குறித்த கல்வி போதிக்கப்படும்.

எதிர்காலம்: எலும்பியல்  சிறப்பு மருத்துவமனைகள், ப்ளாஸ்டிக் சர்ஜரி சிறப்பு மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிகள் புனரமைப்பு மையங்களில் இத்துறை நுட்புநர்கள் பணி புரியலாம்.

16. B.Sc. ஊடுகதிரியல், ஊடுகதிர் பட மெடுக்கும் தொழில்நுட்பம் (B.Sc. Radiography & Imaging)

எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்திச் செய்யப்படும் படங்கள், எக்ஸ்ரே கருவிகள், சிடி ஸ்கேன் கருவிகளைப் பராமரித்தல், அதன் மூலம் எடுக்கப்படும் படங்களை இருட்டறையில் கழுவுதல், சிடி ஸ்கேன் எடுத்தல், ஊடுகதிர் கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல் போன்றவை கற்றுத் தரப்படும். ஓராண்டுப் பயிற்சியில் ஊடுகதிர் வைத்துச் செய்யப்
படும் அத்தனை பரிசோதனைகள் குறித்தும் நேரடி களப்பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம்:  மருத்துவமனைகளில் எக்ஸ்ரே டெக்னீசியன்களாகவும் சிடி ஸ்கேன் டெக்னீசியன்களாகவும் எம்ஆர்ஐ இயக்குபவர் களாகவும் பணி புரிய முடியும். தனியாக எக்ஸ்ரே மையங்கள் தொடங்கி நடத்த முடியும்

17. B.Sc. ஊடுகதிர் சிகிச்சை தொழில்நுட்பம் (B.Sc. Radiotherapy Technology)

எக்ஸ்ரே எனும் ஊடுகதிரைப் பயன்படுத்தி  புற்றுநோய்க்கு  சிகிச்சை அளிக்கும் கல்வி புகட்டப்படும். ஊடுகதிர் சிகிச்சை அளிக்க உதவும் கருவிகள், உபகரணங்கள், அதைப் பராமரித்தல், சரியாகப் பயன்படுத்துதல் குறித்தும் கல்வி புகட்டப்படும். ஊடுகதிர் கருவிகளின் தரக்கட்டுப்பாடு, கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிவும் புகட்டப்படும்.
இறுதி ஆண்டில் நான்கு மாதங்கள் புற்றுநோய் ஊடுகதிர் சிகிச்சையிலும், நான்கு மாதங்கள் அணுக்கதிர் மருத்துவத் துறையிலும், நான்கு மாதங்கள் கதிரியக்கவியல் நோய் கண்டறிதல் துறையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

எதிர்காலம்: ரேடியோதெரபி  எனும் புற்று நோய்க்கு ஊடுகதிர் சிகிச்சை வழங்கும் நுட்புநர்களாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் பணி புரியலாம்.

18. B.Sc. மருத்துவ ஆவண அறிவியல் (B.Sc. Medical Record Science)

இந்தத் துறையில் மருத்துவ அடிப்படைக் கல்வி அனைத்தும் புகட்டப்படும். அத்துடன் மருத்துவ ரீதியான ஆவணங்களைப் பராமரிக்கும் கலை பயிற்றுவிக்கப்படும். மருத்துவப் புள்ளியியல், மருத்துவமனை புள்ளியில் கணக்குகள், தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்தல், மருத்துவமனை தகவல் தொழில்நுட்பத்தை நிர்வகித்தல், சர்வதேச நோய் வகைப்படுத்துதல், அறுவைச் சிகிச்சைகள், மருத்துவமனை நிர்வாக ஒழுங்கு, அறம், மருத்துவமனைக் கணக்கு வழக்கு, மருத்துவக் காப்பீடு போன்றவை குறித்தும் கற்றுத் தரப்படும்.

எதிர்காலம்:  மருத்துவமனைகளில் மருத்துவ ஆவணக் காப்பாளராகவும் மருத் துவமனை கணக்கியல் நிபுணராகவும் நிர்வாக மேற்பார்வையாளராகவும் பணிபுரிய முடியும்.

19. B.Sc. நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் (B.Sc. Respiratory Therapy)

இந்தப் படிப்பில் நுரையீரல் சிகிச்சை சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வி புகட் டப்படும். இத்துடன் நுரையீரலைத் தாக்கும் நோய்கள், இதயத்தைத் தாக்கும் நோய்கள், அவற்றைக் கண்டறியும் பரிசோதனைகள், நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கருவிகள், வென்ட்டிலேட்டர்கள் குறித்த அறிவு, அதை இயக்கும் வழிமுறை, பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான இதயம், நுரையீரல் புனரமைப்பு போன்றவற்றில் கல்வி அளிக்கப்படும். இறுதியாண்டில் நுரையீரல் நோய் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் நுரையீரல் இயக்க பரிசோதனை ஆய்வகத்திலும் பிராங்கோஸ்கோபி பரிசோதனை, உறங்கும் போது நுரையீரலின் இயக்கத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகம், நுரையீரல் புனரமைப்பு வார்டுகள், புறநோயாளிகள் பிரிவு ஆகியவற்றில் நேரடிப் பயிற்சி வழங்கப்படும்.

20. B.Sc. மருத்துவ ஆய்வுப் பரிசோதனை ஆய்வுத் தகவல்கள் மேலாண்மை தொழில்நுட்பம் (B.Sc. Clinical Trial & Clinical Data Management)

மருத்துவத்  துறையில்  மருந்துகள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவ ஆய்வின் அடிப்படைகள், மருத்துவ ஆய்வுகளின் வகைகள், புள்ளியியல், மருத்துவ ஆய்வுத் தகவல்களை மேலாண்மை செய்தல், ஆய்வுக்கு உதவும் மென்பொருள்களைக் கையாளுதல், பேச்சு ஆங்கிலப் பயிற்சி, மருத்துவ ஆராய்ச்சியில் கடைப்பிடிக்க வேண்டிய அறம், மருந்தியல் துறை, புதிய மருந்துகளைக் கண்டறிதல், மருத்துவ ஆராய்ச்சி குறித்த சட்டங்கள், வழிமுறைகள், தகவல் பாதுகாப்பு, மருத்துவ ஆராய்ச்சியில் பங்கெடுத்தல், மேற்பார்வை செய்தல், நிர்வகித்தல் குறித்தும் விரிவான கல்வி வழங்கப்படும்.

எதிர்காலம்: மருத்துவத் துறை சார்ந்த ஆய்வுகளில் பங்கெடுத்து ஆய்வு குறித்த தகவல்கள் சேகரிப்பவராகவும் மேலாண்மை செய்பவராகவும் விளங்கலாம். இதற்கடுத்து இந்தத் துறையில் பிஎச்டி படித்து இன்னும் துறை சார்ந்த முன்னேற்றம் காணலாம். மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரியலாம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்