மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்தியா 2047 இந்திய முஸ்லிம்களுக்கான செயல் திட்டம்
H. அப்துர் ரகீப் பொதுச் செயலாளர், இந்திய இஸ்லாமிய நிதி மையம்(ICIF), ஜூலை 01-15, 2025


பின்னணி

‘எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை’. (திருக்குர்ஆன் 13:11)

‘அல்லாஹ்  வானத்திலிருந்து  மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும்போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. அல்லாஹ் இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தி யத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது; எது மக்களுக்குப் பலன் அளிக்கின்றதோ அது பூமியில் தங்கிவிடுகின்றது! இவ்வாறு அல்லாஹ் உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான்.’ (திருக்குர்ஆன் 13:17)

இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் வர இருக்கும் மாற்றங்களை எதிர்பார்த்துச் செயலூக்கத்துடன் வருமுன் காப்போம் என்று திட்டமிட்டு செயல்படுவதற்குப் பதிலாக, மாற்றப்பட்ட நிலைமைகளிலிருந்து எழும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றும் போக்கினை மேற்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய  சூழ்நிலையில், 2047 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிய விவாதமானது நம் நாட்டின் முஸ்லிம் சமுதாயத்தின்  எண்ண  ஓட்டத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றுவதற்கான ஒரு நல்ல அறிகுறியாகும். இனி, இந்தியா 2047க்கான முஸ்லிம்களின் உத்திகள், பங்களிப்பு பற்றி விவாதிப்போம்.

பன்முகத்தன்மை சார்ந்த உத்திகள்

விரிவான உத்திகள், தெளிவான திட்டங்களை வகுக்க நாம் இந்தியாவின் தனித்துவமான அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியம். முதலாவதாக உலகின் பிற நாடுகளைப் போல இந்தியா ஒரே மாதிரியான அம்சங் களை, இயல்புகளைக் கொண்ட நாடு அல்ல. மாறாக இந்தியா பன்முகக் கலாச்சாரத்øதயும், பல்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும் கொண்ட அதிகமான மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நாடு. இது ஒரு ‘மாநிலங்களின் ஒன்றியம்’.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த பிராந்திய மொழி, கலாச்சாரம், மரபுகள், மாறுபட்ட உணவுப் பழக்கங்கள் கொண்ட தனித்த இயல்புகள் உள்ளன. உருது மொழி அனைத்து இந்திய முஸ்லிம்களின் மொழியல்ல. முஸ்லிம்களில் சுமார் 45% பேர் தமிழ், தெலுங்கு, அசாமி, வங்காளம், மலையாளம் போன்ற மாநில மொழிகளைப் பேசுகிறார்கள். எனவே, வட இந்தியாவின் உருது மொழி பேசும் முஸ்லிம் மக்களுக்கான அதே அணுகுமுறையை ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் நாம் பயன்படுத்த முடியாது. எனவே இந்தியாவின் எதிர்காலத்திற்குப் பங்களிப்பதற்கான உத்தி பன்முகத்தன்மைக் கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

அரசியல் அமைப்பே உரிமைகளின் பாதுகாப்பு

இந்திய அரசியலமைப்பு 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசி யலமைப்பின் முகவுரை இந்திய மக்கள் ஓர் இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை அமைத்து, அதன் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி, சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பற்றுறுதி (faith), நம்பிக்கை(belief) சார்ந்த சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், சமத்துவ நிலை, சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அனைவரையும் ஊக்குவித்தல், தனிநபரின் கண்ணியத்தையும், தேசத்தின்  ஒற்றுமை, ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் சகோதரத்துவம் ஆகியவற்றை இந்திய  அரசியலமைப்புச்  சட்டம்  ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்கு வழிகாட்டியாகவும், பாதுகாவலாகவும் செயல்பட்டு வருகிறது. மேலும் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயல்படும்.

அரசியலமைப்பைப்  பாதுகாப்பதும், அது வழங்கும் உரிமைகள், கடமைகளை அறிந்து கொள்வதும் முஸ்லிம் சமுதாயத்தின் பொறுப்பாகும். குறிப்பாக, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அறிவுஜீவிகளும் அரசியலமைப்பு, அதன் விதிகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பின் நேர்மறையான அம்சங்கள், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதன் பங்கு குறித்து முஸ்லிம்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். தடைகளும் சவால்களும் இருந்தால், அவை சட்ட விதிகளின் வரம்புகளுக்குள் தீர்க்கப்பட வேண்டும். அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி அவர்களின் நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாம் இன்றைய சோதனையான காலகட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.

மகாசித், ஃபிக்ஹ்உல்அக்லியாத் வழிகாட்டப்பட்ட அணுகுமுறை

வரலாற்று ரீதியாக, முஸ்லிம்கள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வசித்து வந்தனர் அல்லது மிகக்குறைந்த உரிமைகளுடன் முஸ்லிம் அல்லாத நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்தனர். ஆனால், இந்தியாவில் நிலைமை வேறாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் சமமான அந்தஸ்துக்கு உரியவர்களே ஆவர். எனவே இந்தியாவின் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு உறுதியான ஒன்றாகும். அரசியலமைப்பு, ஷரீஅத் (இஸ்லாமிய சட்டம்) ஆகியவற்றின் மூலம் சரியான வழிகாட்டுதலைப் பெறுவதன் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் உரிய பங்கு வகிக்க முடியும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற் றிலிருந்து நாம் அறிந்து கொள்வதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நபித்தோழர்களில் ஒரு குழுவினர் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அங்கே நேர்மையான ஆட்சியாளராகத் திகழ்ந்த நஜ்ஜாஷி மன்னரின் ஆட்சியின் கீழ் பாது காப்புடன் முஸ்லிம்களாக வாழ்ந்தனர். மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய பிறகு அங்கு வாழ்ந்த யூதர்கள், பிற குழுக்கள் இடையே நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மதீனா சாசனம் எனும் சிறப்பான உடன் படிக்கை நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. பல்வேறு இனக்குழுக்கள் உள்ள ஒரு நாட்டில் சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க, அமைதி தழைக்க நல்ல முன் மாதிரியாக இந்த ஒப்பந்தம் திகழ்கின்றது.

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வுக்கு முந்தைய காலத்தில் அறத்தின் அடிப்படையில் ஏற்படுத்திய ஹில்புல் ஃபுளூல் என்ற அழகிய  ஒப்பந்தம்  குறிப்பிடத்தக்கது. அதாவது சமூகத்தின் பலவீனமான பிரிவினரை ஆதரிப்பது, அனைவருக்கும் நீதி, நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது இதன் முக்கிய அம்சமாகும்.  இங்கு  சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்கள் யாவும் அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும் இன்றைய சூழலுக்கும் பொருத்தமானது ஆகும்.

குறிப்பாக, முஸ்லிம் அறிஞர்கள் இந்தியாவின் முஸ்லிம் உம்மத்துக்கு போதுமான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஏதுவாக பாரம்பரிய ஃபிக்ஹ், இந்திய சட்ட அமைப்பு ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும். கேரளாவில் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த மர்கஸ் மதரசாவில் மார்க்க அறிஞர்களுக்கு என்று தனியாக ஒரு சட்டக் கல்லூரியை நிறுவியுள்ளனர். அவற்றில் இருந்து கல்வி பெற்று வெளிவந்து கேரளாவின் நீதித்துறை அமைப்பில் திறம் படச் செயல்படுகின்றார்கள். இதே போன்ற முன்முயற்சிகள்  இந்தியா  முழுவதும் உள்ள பிற மார்க்கக் கல்விக்கூடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொது சிவில் சட்டம் போன்ற பிரச்னைகளைக் கையாளவும், நாட்டில் முஸ்லிம்களின் செயலில் பங்கு பெறுவதற்கான பாதையைத் திறக்கவும் ‘ஃபிக்ஹ்உல்அக்லியாத்’ (சிறுபான்மையினருக்கான நீதித்துறை), ‘மகாசித் இ ஷரீஆ’ ஆகியவற்றிலிருந்து வழிகாட்டுதலைப் பெறலாம். மகாசித் அல்ஷரீஆ என்பது இஸ்லாமிய சட்டத்தின் (ஷரீஆ) குறிக்கோள்கள் அல்லது நோக்கங்களைக் குறிக்கிறது.

இஸ்லாமும் நவீன கல்வியும்

பாரம்பரிய,  மதச்சார்பற்ற  எனும் இரட்டைக் கல்வி முறையை மாற்றி, அதற்குப் பகரமாக இஸ்லாமிய, மதச்சார்பற்ற ஆகிய இரண்டும் இணைந்த ஒரு தனித்துவமான கல்வி முறையைக் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும். இத்தகைய மாற்றமõனது இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளைப் பின்பற்றவும், தற்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில், பிரபல அறிஞர் முஜத்தித் அல்ஃபசானி, தாஜ்மஹாலைக் கட்டிய மேமர் அஹமது, முகலா யத் தலைமைத் தளபதி சஆதுல்லாகான் ஆகியோர் ஒரே பள்ளியில்தான் அடிப்படைக் கல்வியைப் பெற்றனர். பின்னர் வேறுபட்ட துறைகளில்  சிறப்புற்று  விளங்கினர். துனிசியாவின் ஃபாத்திமா அல் ஃபஹிரி, முதல் பல்கலைக்கழகமான அல்கரவிய்யீனை நிறுவினார். இங்கு அரபு, இஸ்லாமியப் பாடங்கள் மட்டுமல்லாமல் புவியியல், வானியல், மருத்துவம் போன்ற பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டது. இங்குதான் புகழ்பெற்ற இப்னு கல்தூன், இப்னு ருஷ்த் போன்ற அறிஞர்கள் பட்டம் பெற்றனர். ஐரோப்பிய மாணவர்கள் கூட இங்கு வந்து படித்து புகழ்பெற்ற, சிறந்த அறிஞர்களாக உருவானார்கள்.

உலகளவில்  அரபு  மொழி  பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை குர்ஆன், ஹதீஸ், பிற இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றிய தெளிவைப் பெற்றுக்கொள்வதற்கு அரபு மொழி அறிவு முக்கியப் பங்காற்றுகிறது. எனவே அரபு மொழி நவீனமுறையில் வாழும் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணமாக மதீனா பல்கலைக்கழகத்தின் டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய துருசுல் லுகதுல் அரபியா லி
கைரி நாதிகினா பிஹா (Durusul Lughatul Arabia Li Ghairi Natiqina Biha) என்ற நூல் திகழ்கின்றது. உலகின் எந்த மூலையில் வாழும் புதிய முஸ்லிம்களுக்கும் இந்த நூல் ஏற்றது.

நாடு முழுவதும் இந்தி மட்டுமல்லாமல், தமிழ், வங்காளம், மலையாளம் போன்ற பிராந்திய  மொழிகளும்  மாநிலங்களில் கற்பிக்கப்பட வேண்டும். மேலும் அவற்றில் மேம்பட்ட திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பாரசீகத்திற்குப் பதிலாக ஆங்கிலம் தகவல் தொடர்பு, எழுத்து வடிவம் ஆகிய இரண்டிலும் மொழிப்பாடத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். சமஸ்கிருதம்,  பாலி  மொழிகளை முஸ்லிம் ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்து மதம், அதன் நெறிமுறைகள், கலாச்சாரம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். மேலும் பிற மதங்களுடன் இணைப்புப் பாலமாகவும் செயல்பட முடியும்.

பொருளாதார நடவடிக்கைகள் தொழில் முனைவு

பொருளாதார வளர்ச்சியின் நவீன தத்துவங்கள் சில செழிப்பான தீவுகளையும், வறுமையின் பெருங்கடல்களையும் உருவாக்கியுள்ளன. கடந்த ஒரு நூற்றாண்டில் உலகளாவிய செல்வம் பல மடங்கு பெருகியுள்ள நிலையில் வறுமை, சமத்துவமின்øமயும் பெருகியுள்ளது. S & B குளோபலின் கூற்றுப்படி,  2030ஆம்  ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘இந்தியாவில் சமத்துவமின்மை’  குறித்த  ஆக்ஸ்பாம் இந்தியாவின் அறிக்கை, இந்தியர்களில் ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே நாட்டின் செல்வத்தில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக வைத்திருக்கிறார்கள். அதே வேளை மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் 3 விழுக்காடு செல்வத்தை மட்டுமே கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

முஸ்லிம்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. எவ்வாறெனில், இந்தியாவில் முஸ்லிம்கள் ‘முக்கிய மதக்குழுக்களிடையே மிகக் குறைந்த சொத்து, நுகர்வு அளவைக் கொண்டுள்ளனர்.  மேலும்  அவர்கள் நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மதக் குழுவாக உள்ளனர்’ என்று சந்தையின் பல்வேறு பொருளாதார ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியாவில் உள்ள தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கவுன்சிலின் கருத்தின்படி, இந்திய முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே 31% ஆக உள்ளனர். இது பிற பின்தங்கிய சமூகங்களின் தேசிய சராசரியை (26%) விட அதிகம்.

அமர்த்தியா சென்னின் SNAP அறிக்கை கிறிஸ்டோபர் ஜாஃபர்லாட்டின் அண்மைய அறிக்கையின் படி, 1825 வயதுக்குட்பட்ட 31% முஸ்லிம்கள் கல்வியறிவற்றவர்களாகவும் வேலையில்லாதவர்களாகவும்  உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ‘மாநிலங்களுக்கு இடையே முஸ்லிம்களின் நிலைமைகளில் கணிசமõன வேறுபாடு உள்ளதால், சமூகம் வளர்ச்சியின் கிட்டத்தட்ட அனைத்து பரிமாணங்களிலும் பற்றாக்குறைகளையும் இழப்புகளையும் வெளிப்படுத்துகிறது’ (சச்சார் கமிட்டி அறிக்கை, அத்தியாயம் 12, பக்கம் 273) பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த நிலைமையைச் சீராக்க முடியும்.

செல்வத்தை உருவாக்குதல்

டாக்டர் நஜாதுல்லா சித்தீகியின் கூற்றுப்படி, கடந்த மூன்று நூற்றாண்டுகளில் எந்தவொரு முஸ்லிம் குழுவும், மதம் சார்ந்தோ அல்லது வேறு விதமாகவோ செல்வத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தைத்  தொடங்கவில்லை.  அவரது கருத்துப்படி, நமது சமூகத்தில் செல்வத்தை உருவாக்குபவர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். செல்வம் உருவாக்கப்படாவிட்டால், செல்வத்தை எப்படி விநியோகிக்க முடியும்? செல்வம் விநியோகிக்கப்படாமல் தேங்கி விட்டால், நமது சமூகத்தில் நிலவும் ஏழ்மையைப் போக்க முடியாது.

தொழில்முனைவு

இஸ்லாம்  தொழில்  முனைவோரின் மதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது குர்ஆன் வசனங்கள், நபிகள் நாயகத்தின் சுன்னாவால் வரையறுக்கப்படுகிறது. இது அனைத்து முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தொழில் முனைவோராகச் செயல்படுவதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. அதாவது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, தொழிலில் உள்ள ஆபத்துகளைத் துணிவுடன் எதிர்கொள்வது, தொழிலில் புதுமையான முறைகளைப் பயன்படுத்துவது ஆகிய வழிமுறைகளை முஸ்லிம் ஆணும் பெண்ணும் பின்பற்ற வேண்டும்.

நபி(ஸல்) அவர்களும் ஒரு வணிகராகவும், தொழில் முனைவோராகவும் இருந்துள்ளார்கள். மேலும் அன்னாரது தோழர்கள் குறிப்பாக ‘அஷரதுல் முபஷ்ஷரா’ (Ashara Mubashara) என்ற சிறப்புக்குரிய சொர்க்கத்தைக் கொண்டு உலகிலேயே நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து பேர்களும் இன்றைய தரத்தில் வைத்துப் பார்த்தால் கோடீஸ்வரர்கள் ஆவர்.

நபி(ஸல்) அவர்களது மனைவி கதீஜா(ரலி) ஒரு பிரபலமான பெரும் வணிகராக விளங்கினார்கள். எந்த அளவுக்கென்றால் மொத்த குறைஷி குலத்தின் வணிகத்தில் பாதியளவுக்கு அவர் கையாண்டார். நபி (ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட மதீனாவின் சந்தையானது  முஸ்லிம்  சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுவதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். மதீனத்து சந்தையில் வரிகள் எதுவும் விதிக் கப்படவில்லை. மேலும் பெண்கள் வணிகம் செய்வதற்கு ஏதுவாக தனிப் பிரிவைக் கொண்டிருந்தனர். குறைஷி குலத்தவரால் யேமன், ஷாம் (இன்றைய சிரியா) இடையே செயல்பட்ட வணிகர்கள் குழு இன்றைய கூட்டுப் பங்கு நிறுவனத்தை ஒத்து இருந்தது. சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அன்றைய வர்த்தகத்தில் அவரவர் தகுதிக்கேற்ப பெரிய, சிறிய அளவில் பங்களிப்பு செய்தனர்.

மற்றொரு அம்சம் என்னவென்றால், பாரம்பரிய கைவினைஞர்களைப் போலவே கீழ், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழில் முனைவோருக்கும் வழிகாட்டப்பட்டு, நிதி உதவி அளிக்கப்பட வேண்டும். முதாரபா, முஷாரகா போன்ற பங்கேற்பு நிதி முறைகள் மூலம் நாட்டில் உள்ள பல முதலீட்டாளர்கள் தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்க முன்வரலாம். இந்தச் சூழலில் இந்திய அரசின் முன்முயற்சிகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.

நிதி, முதலீடு

BSE, NSEஇல் பட்டியலிடப்பட்டுள்ள மொத்தப் பங்குகளில் சுமார் 20% ஷரிஆவுக்கு இணக்கமானவை.  வாய்ப்புக்கேடாக பேராசை, நிதி கல்வியறிவு, வணிக நெறிமுறைகள் இல்லாததால், முஸ்லிம் சமுதாயம் மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, IMA, Heera Gold போன்ற  மோசடியான  நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. சமணர்கள் போன்ற முஸ்லிம் அல்லாத பிற சமூகங்கள் ஷரிஆ வுக்கு இணக்கமான பங்குகளால் பயனடைகின்றன. முஸ்லிம்களிடையே ஷரிஆவுக்கு இணக்கமான மூலதன முதலீடு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

நாட்டில் வட்டி இல்லாமல் நிதி, வங்கி பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில்  அவை  அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ‘தகஃபுல்’ என்று அழைக்கப்படும் பரஸ்பர, கூட்டுறவுக் காப்பீட்டை அறிமுகப்படுத்துவதற்கு  இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கேரளாவில்  செயல்படும்  சேரமான் பைனான்சியல் சர்வீசஸ், ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கிரெடிட் லிமிடெட் (AICL) போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) நாட்டின் பிற பகுதிகளிலும் நிறுவப்பட வேண்டும்.

பல மாநிலங்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 2002இன் கீழ், (Multi State Co-Operative Societies Act) சஹுலத், ஜன்சேவா, சங்கமம், கித்மத் போன்ற கடன் சங்கங்கள் பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. முஸ்லிம்கள், பிற சமூகங்களின் நுண்நிதித் (micro finance) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும்.

தற்போதைய ஒன்றிய அரசும் பல்வேறு மாநிலங்களும் வெளிநாடுகளில் இருந்து இறையாண்மை மிக்க நிதியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் பல உயர் நிகர மதிப்புள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் வளர்ந்து வரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இது ஆராயப்பட வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் பங்கு

பல்வேறு அறிக்கைகளின்படி, இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் ஒப்பீட்டளவில் அதிகாரம் இழந்தவர்களாக உள்ளார்கள். கல்வி  சாதனைகள்,  வேலைவாய்ப்பு அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து முக்கிய சமூகங்களையும் விட முஸ்லிம்களிடையே பாலின இடைவெளி அதிகமாக உள்ளது என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது. பெண்களின் வீட்டில் முடிவெடுக்கும் சக்தி, இயங்கும் சுதந்திரம் பற்றிய தகவல்கள் மூலம் முஸ்லிம் பெண்கள் இரண்டு வழிகளிலும் மிகக் குறைந்த அதிகாரம் பெற்றவர்கள். சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளில் உள்ளனர் என்பது புலனாகிறது.

முதன்மைக்  காரணம்  பெண்ணாக இருப்பது, இரண்டாவது காரணம், கல்வியிலும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கி இருப்பதோடு மத ரீதியாகவும் மரபுவழி சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினராக இருப்பது. எனவே கல்வி, பொருளாதார நடவடிக்கைகள், சமூக அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலமாகப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தை வரைவு செய்ய வேண்டும்.

ஜகாத்தின் கூட்டு அமைப்பு

இஸ்லாம் என்பது ஈமான், தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டது. ஜகாத் என்பது அடித்தளத்தின் பிற கூறுகளில் உள்ள சிமெண்டைப் போன்றது. அது இல்லாமல் இஸ்லாம் எனும் கட்டடம் வலுவானதாகவோ அல்லது நிலையானதாகவோ இருக்க முடியாது. ஈமான், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் பரவலாக அறியப்பட்டு, இந்திய முஸ்லிம்களால் பெருமளவில் பின்பற்றப்பட்டாலும், ஜகாத் மட்டும் புறக்கணிக்கப்படுவது முரண்பாடாகவே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் சங்கம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 30% முஸ்லிம்களுக்கு ஜகாத் என்றால் என்ன என்று தெரியவில்லை; 40% பேருக்கு அதை எவ்வாறு கணக்கிடுவது என்று தெரியவில்லை. 60% பேர் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் கொடுத்த அதே நபர்களுக்கே மீண்டும் கொடுக்கிறார்கள். ஆனால் 80% பேர் ஜகாத் கூட்டு முறைக்கு ஆதரவாக உள்ளனர்.

நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், பின்னர் குலஃபாயே ராஷிதீன்களின் காலத்திலும், ஜகாத் கூட்டு முறையில் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சமூகத்தில் செழிப்பு இருந்தது. ஜகாத் கொடுப்பவர்கள் இருந்தனர். ஆனால் ஜகாத் வாங்கத்தான் யாரும் இல்லை. அதைவிட ஒருபடி மேலாக உமர்(ரலி) அவர்கள் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் ஜகாத் வழங்கப்பட்டது.

இன்றும் மலேசியா, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்காவில் ஜகாத் கூட்டு முறையில் செயல்படுத்தப்படுகிறது.  தென்னாப்பிரிக்காவில், மக்கள் தொகையில் 2% உள்ள முஸ்லிம்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிக்கின்றனர். தென்னாப்பிரிக்க தேசிய ஜகாத் அறக்கட்டளை (SANZAF) பைரோஸ் முஹம்மது, யாஸ்மினா ஃபிராங்கி ஆகிய இரண்டு முஸ்லிம் பெண்மணிகளால் வெற்றிகரமாக இயக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் 52% பணியாளர்கள் பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், நிர்வாகம்

ஆளுகை, அரசியல் அரங்கில் பங்கேற்பதில், விகிதாச்சார பிரதிநிதித்துவம் விருப்பமானதாக இருக்கலாம்; நாம் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சாத்தியமானால், ஒரு திட்டத்தைத் தயாரித்து, அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்திற்காக உறுதியாக வாதிட வேண்டும்.

தற்போதைய அரசியல், ஆளுகை முறை சில சிக்கல்களைக் கொண்டுள்ளது. இந்த சிக்கல்களில் மிக முக்கியமானது மேலே இருந்து கீழ்நோக்கிய முடிவுகளின் ஓட்டமாகும். எனவே, முடிவெடுக்கும் செயல்பாட்டில்  பிராந்தியங்கள்,  மாநிலங்கள், உள்ளூர் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பஞ்சாயத்து மட்டத்தில் தேர்தல்களில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளூர் மட்டத்தில் வெற்றி பெற திட்டமிடப்பட வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் வெற்றிபெற மன வலிமையும், திறமையும் கொண்ட முஸ்லிம் பெண்கள் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும்.

நாட்டின்  வளர்ச்சி,  மேம்பாட்டில் இந்திய முஸ்லிம்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும். அதே வேளை டிஜிட்டல் மயமாக்கல், நேரடி நிதி பரிமாற்றம், கிராமங்களில் கழிவறைகள் ஏற்படுத்தல் போன்ற நேர்மறையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதும் அவசியமாகும்.

ஊடகச் செயல்பாடு

பொதுக் கருத்தை உருவாக்கவும், ஒரு கருத்தைப் பெரிதுபடுத்த அல்லது நீர்த்துப் போகச் செய்யவும் ஊடகங்கள் மிகவும் பயனுள்ள வழியாகும். வாய்ப்புக் கேடாக, இந்திய முஸ்லிம்கள் இந்தத் துறையில் மோசமாக தோல்வியடைந்துள்ளனர். இந்தி, உருது, பிராந்திய மொழிகளிலும் (கேரளாவின் மாத்யமம், மீடியா ஒன் தவிர) எந்த ஒரு செய்தித்தாளும் அல்லது தொலைக்காட்சி சேனலும் ஒரு முன்மாதிரியான சாதனையாக நிற்கவில்லை. எனவே, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பணி ஆற்ற வேண்டியது  அவசியமாகும்.  அண்மையில், பிரபல பத்திரிகையாளர்கள் தங்கள் செய்திகளுடன் ஒரு மில்லியன் மக்களை எட்டுவதற்கு ஏதுவாக யூடியூப் சேனலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். முஸ்லிம் பத்திரிøகயாளர்களும் அதே வழிமுறையைப் பின்பற்றலாம். மேலும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், குறும்படங்கள்  போன்ற  வழிகளிலும் முயற்சிக்கலாம்.

முஸ்லிம் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள்

தற்போது, இஸ்லாமும் முஸ்லிம்களும் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். இது முஸ்லிம்கள் இஸ்லாத்தைத் தவறாகப்  பிரதிபலிப்பதன்  விளைவா என்பதை நாம் நன்கு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஒருபுறம்,  இந்திய  முஸ்லிம்களில் பெரும்பாலோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். மறுபுறம், ஹோட்டல்களில் ஆடம்பரமான திருமணங்கள், விருந்துகள், ஹஜ், உம்ரா பயணம் செல்வதை முன்னிட்டு ஊர் மக்களுக்கு விருந்து ஏற்பாடுகளும், சமூக விழாக்களில், நிகழ்ச்சிகளில் வீண் செலவுகள் போன்றவை மிகவும் இயல்பாக நடைபெறுகிறது. இந்த நடைமுறைகளை மக்கள் கைவிடுவதற்கு அறிஞர் பெருமக்களும், மார்க்க உபதேசம் செய்பவர்களும் தங்கள் உரையின் ஊடாக வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.

வாழ்க்கையில் ஒரு முறை ஹஜ் செய்வது கட்டாயமாகும் என்பதையும், மீண்டும் மீண்டும் ஹஜ் செய்வதற்கும், உம்ராக்கள் செய்வதும் கட்டாயம் இல்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். மேலும், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததைப் போல எளிய திருமணங்கள் அதிகமாக நடைபெறவேண்டும். இத்தகைய திருமணங்கள் பாராட்டப்பட வேண்டும் ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

கூடுதலாக, மத வழிபாட்டுக்காக பெரிய உள்கட்டமைப்புகளுடன் விலை உயர்ந்த ஆடம்பரக் கட்டடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, இந்திய முஸ்லிம்களின் மனித வள மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்குட்பட்ட (முஸ்லிம்கள் உள்ளிட்ட) இளைஞர்களாக உள்ளனர். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இளம் தலைமுறையினருக்கான ஒரு சிறப்பான திட்டமிடல் இருக்க வேண்டும்.

இறை இல்லத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துதல்

நபிகள் நாயகத்தின் காலத்தில் இறை இல்லம் என்பது பிரார்த்தனை அல்லது வழிபாட்டிற்குரிய இடமாக மட்டுமன்றி பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மையமாக இருந்தது. இன்றும் கூட மேற் கத்திய நாடுகளில் உள்ள பல பள்ளிவாசல்கள் இபாதத், தர்பியத், கித்மத் (வழிபõடு, கல்வி, சேவை) ஆகியவற்றின் மையங்களாகச் செயல்படுகின்றன. நூலகங்கள், மருத்துவமனைகள், திருமண ஆலோசனை மையங்கள், முதியோர் ஓய்வு அறைகள், குழந்தைகள் விளையாட்டுக்கான இடம், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கலந்துரையாடல் செய்வதற்கான சூழல் போன்றவை பள்ளிவாசல் வளாகத்திலேயே அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பள்ளிவாசல்கள் நம் நாட்டிலும் முதன்மையான பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை கட்டப்பட வேண்டும்.

வெள்ளிக்கிழமை  சொற்பொழிவுகள் பார்வையாளர்களுக்குக் கல்வி கற்பிக்கும் வகையிலும், அவர்களைச் சமூக மாற்றத்தின் தலைவர்களாக உருவாக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். பெண்களும் பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததைப்போல பெண்கள் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.

முடிவுரை

இறுதியாக, இந்திய முஸ்லிம்கள் 2047 ஆம் ஆண்டிற்கான ஒரு புதிய செயல் திட்டத்தை வரையறுக்க இரண்டு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சீர்குலைக்கும் புதுமை, பக்கவாட்டு நுழைவு (Disruptive Innovation Lateral Entry)

சீர்குலைக்கும் புதுமை என்பது இன்றிலிருந்து எதிர்காலத்திற்குச் செல்ல வேண்டிய கருவி, நுட்பமாகும். இதற்குக் கடந்த காலத்தில் நம்மிடம் இருந்த பல விஷயங்கள் அல்லது அனைத்தையுமே மாற்ற வேண்டும். மூன்று நிலை இடையூறுகள் என்பது புதுமை, அடைகாத்தல், அளவிடுதல் ஆகும். முதலில் 2047க்கான நமது செயல் திட்டத்தின் ஒரு யோசனையை நாம் வரைய வேண்டும். அடுத்து அதனை அடைகாத்து பின்னர் அளவிட முயற்சிக்க வேண்டும்.

எதிர்கால நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கியமான ஆவணத்தைத் தயாரிப்பதற்கு பக்கவாட்டு நுழைவு (lateral entry) அவசியம். பக்கவாட்டு நுழைவு என்பது நமது குழுவில் இல்லாத பிற குழுக்களைச் சேர்ந்த நிபுணர்கள், அறிவுஜீவிகளைக் கலந்தாலோசித்து அவர்களையும் ஈடுபடுத்துவதாகும். வாய்ப்புக்கேடாக இந்திய முஸ்லிம்கள் தேசிய, உலகளாவிய அந்தஸ்துள்ள பல நிபுணர்களையும், அறிவுஜீவிகளையும் அணுகவில்லை. இனிமேல் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நமது முன்மாதிரி வழிகாட்டி நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்: ‘மனிதர்களிலே மிகவும் சிறந்தவர் யாரெனில் மற்றவர்களுக்கு மிகவும் நன்மை பயப்பவரே ஆவார்’இந்த மாபெரும் இந்திய நாட்டில் உள்ள முஸ்லிம்களின் சிறந்த சொற்றொடராக, குறிக்கோளாக இது இருக்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்