மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஈரான் இஸ்ரேல் போர் தீர்வு என்ன?
ரியாஸ் மொய்தீன், ஜூலை 01-15, 2025


 

மத்திய  கிழக்கில்  அமெரிக்காவின் முக்கிய  கூட்டாளியாகவும்  இஸ்ரேல் உருவான இரண்டே ஆண்டுகளில் (1950) அதை ஓர் இறையாண்மை உடைய நாடாக அங்கீகரித்த இரண்டாவது முஸ்லிம் பெரும் பான்மை நாடாக இருந்தது ஈரான்.

ஆனால் இந்த நிலை 1979 புரட்சிக்குப் பின் தலைகீழாக மாறியது. ஆயத்துல்லா ரூஹுல்லா குமைனி ஈரானின் உயரிய தலைவரானது  முதல்  மேற்கத்திய ஜியோனிச எதிர்ப்பையும் இஸ்லாமிய நிலைப்பாட்டையும் வலுவாகக் கடைப்பிடித்தார். இதன் விளைவாக ஈரானில் இருந்த இஸ்ரேலிய தூதரகத்தை ஃபலஸ்தீன போராட்டக் குழுவான PLO(Palestine Liberation Organization)விற்குக் கொடுத்தார்.

அமெரிக்காவை GREAT SATAN, இஸ்ரேலை LITTLE SATAN எனவும் ஆயத்துல்லா ரூஹுல்லா குமைனி 1979 புரட்சிக்குப் பின் அறிவித்தார். அன்று  முதல்  மத்திய  கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல், அதன் நட்பு நாடுகள் ஈரானை ஓர் அச்சுறுத்தலாகவே பார்த்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகளுடன் இஸ்லாமியக் குடியரசான ஈரான் நெருக்கமாகப் பழகி வருகிறது. இப்பொழுது நடந்து வரும் இஸ்ரேல் ஈரான் தாக்குதலைப் புரிந்து கொள்வதற்கும் அதன் தொடக்கத்தைத் தெரிந்து கொள்வதற்கும் மேலே கூறிய வரலாறு மிக அவசியமாகும். இது இன்றோ நேற்றோ அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கிய பிரச்னை அல்ல. 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே இஸ்ரேலும் ஈரானும் மறைமுக யுத்தத்தில் (SHADOW WAR) ஈடுபட்டு வருகின்றன.

2023 அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ஃபலஸ்தீனர்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டதிலிருந்து ஈரான் கடும் எச்சரிக்கையைக்  கொடுத்து  வந்தது. இஸ்ரேல் ஃபலஸ்தீன யுத்தம் அருகிலுள்ள லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பரவியது. இஸ்ரேல் ஈரானையும் விடவில்லை. இந்த யுத்தத்தில் ஈரானையும் சேர்த்துக் கொண்டது.

ஈரான் இஸ்ரேல் தாக்குதலின் சுருக்கம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு ஈரான் நடத்திய எதிர் தாக்குதல்களுக்கு Operation True Promise என ஈரான் பெயர் சூட்டி இருந்தது. அதன் மூன்றாம் கட்டத் தாக்குதல்களாகத்தான்  Operation True Promise 3 இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

Operation True Promise 1

2024 ஏப்ரல் மாதம் சிரியாவின் டமாஸ் கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC)யின் முக்கியத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு முன்பு வரை ஈரானின் ஆதரவுக் குழுக்களைத் தாக்கிக் கொண்டிருந்த இஸ்ரேல் இந்தத் தாக்குதலில் நேரடியாக ஈரானின் தூதரகத்தைத் தாக்கியிருந்தது.

இதுவரை ஈரானிலிருந்து இஸ்ரேலை நேரடியாகத் தாக்கிடாத ஈரான் இம்முறை இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு இரண்டே வாரங்களில் ஈரானிலிருந்து ஏவுகணை, ஆளில்லா விமானம் (Drone) மூலம் பதில் தாக்குதல் தந்திருந்தது. பாதிப்புகள் குறைவாக இருப்பினும் ஈரானால் 2000 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேலைத் தாக்க இயலாது என்ற பிம்பத்தைத் தவிடு பொடியாக்கி இருந்தது ஈரான்.

Operation True Promise 2

ஈரானின் புதிய தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தெஹ்ரானுக்குச் சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயீல் ஹனியாவை ஈரானில் வைத்துக் கொலை செய்தது இஸ்ரேல். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த ஈரான் நிச்சயமாக பதிலடி தருவதாகத் தெரிவித்திருந்தது. இது மட்டுமன்றி இஸ்ரேல் ஹிஸ்புல்லா போரின் போது லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வையும், IRGCயின் முக்கியத் தலைவரான அப்பாஸ் நில்ஃபோரஷனையும் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலின் மூலம் கொலை செய்திருந்தது.

இவை அனைத்திற்கும் நிச்சயமாகப் பதிலடி தரப்படும் என ஈரான் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் 2024 அக்டோபர் 1ஆம் தேதி ஈரான் தனது நவீன தொலை தூர ஏவுகணைகள்(Ballistic missiles) மூலம் எதிர்தாக்குதல் நடத்தி இருந்தது. இந்தத் தாக்குதலில் 90% வெற்றியடைந்ததாக ஈரான் தெரிவித்தது. இஸ்ரேலின் IRON DOME தான் உலகின் சிறந்த வான்வெளி பாதுகாப்பு ஆயுதம் என இஸ்ரேல் கூறி வந்த நிலையில் அதைப் பொய்யாக்கும் விதமாக இந்தத் தாக்குதலின் மூலம் IRON DOMEஐக் கடந்து இஸ்ரேலைத் தாக்கியது ஈரான்.

இந்தத் தாக்குதல் வெறும் எச்சரிக்கை தான் எனவும் இஸ்ரேல் ஈரானைத் தாக்குமெனில் இஸ்ரேல் மீதும் துல்லியத் தாக்குதல் நடத்த முடியும் என ஈரான் இந்தத் தாக்குதல் மூலம் இஸ்ரேலுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியைத்  தெரிவித்தது.  தாக்குதல் நடத்திய உடனே அறிக்கை வெளியிட்ட IRGC ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் எங்களைத் தற்காத்துக் கொள்ளவே இந்தத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தது.

Operation True Promise 3

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானிடம் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு  மிரட்டி  அச்சுறுத்தி வந்தார். இதைத் தொடர்ந்து 2025 ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சிக் கூடங்களையும், விஞ்ஞானிகளையும், இராணுவத் தளவாடங்களையும் தாக்கியது. இந்தத் தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட மிக முக்கிய ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானிகளும் சில முக்கிய IRGC தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதில் இஸ்ரேல் மருத்துவமனை, குடியிருப்பு வளாகங்கள், ஊடகத்துறைக் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே இஸ்ரேலின் உளவு அமைப்பான  மொஸாத்(MOSSAD)  உளவாளிகள் ஈரானில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆளில்லா விமானங்கள் (Drone) மூலம் தாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் RAISING LION எனப் பெயர் வைத்துள்ளது. இந்தப் பெயர் பைபிளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் டெல்அவிவ், ஹைஃபா என இஸ்ரேலின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து வான்வெளித் தாக்குதலை நடத்தியது. இது இஸ்ரேலில் பலத்த சேதத்தை உருவாக்கியது. இப்பொழுது ஒரு வாரத்தைக் கடந்தும் இஸ்ரேலும் ஈரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டு வருகின்றன.

இஸ்ரேல் ஈரான் ஒப்பீடு

இஸ்ரேல்

மத்திய கிழக்கில் பரப்பளவில் சிறிய நாடாகவும் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கிய நாடாக இஸ்ரேல் இருந்தாலும் இராணுவத் தொழில்நுட்பத் துறைகளில் இஸ் ரேல் முன்னேறிக் காணப்படுகிறது.இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஏறத்தாழ 550 பில்லியன் டாலராக இருக்கிறது. இதில் இணைய பாதுகாப்புத் துறை, நவீன தொழில்நுட்பத் துறை, இராணுவத் தளவாடங்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதனால் வரும் வருமானம் பொருளாதாரத்தில் பெரிய பங்கு வகிக்கிறது. (பெகாசஸ் உளவு மென்பொருள் என இன்னும் பல அதிநவீன மென்பொருள்கள் இஸ்ரேலின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்று)

என்னதான் இஸ்ரேலை பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் அங்கீகரிக்காமல் எந்த நேரடி வர்த்தகத் தொடர்பில் இல்லாமல் இருந்தாலும் கூட அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகள் அதன் முக்கிய வர்த்தக பங்காளிகளாக இருக்கின்றன.

அமெரிக்காவின் தலையீட்டால் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான், மொராக்கோ ஆகிய நாடுகள் அண்மைக் காலங்களாக ஆப்ரஹாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இஸ்ரேலுடன் தங்களின் இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டன.இதில் சவூதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகள் கையெழுத்திட இருந்தன. ஃபலஸ்தீன இனப்படுகொலையால் அது நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. உலகின் தலைசிறந்த உளவு அமைப்பாகச் சொல்லப்படும் மொஸாத் இஸ்ரேல் நடத்தக்கூடிய தாக்குதலில் அளப்பரிய பங்காற்றுகிறது. மத்திய கிழக்கில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் மொஸாதின் உளவாளிகள் உயரிய பொறுப்புகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை மொஸாத் பல வெளிப்படையான, மறைமுகமான நடவடிக்கைகளைச் செய்துள்ளனர்.

உலகில் உள்ள பெரும்பாலான பெருநிறுவனங்களின் தலைவராகவும், உயரிய பொறுப்புகளிலும் யூதர்கள் தான் இருக்கின்றனர். அவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். இஸ்ரேலின் பெரும்பாலான நவீன இராணுவத் தளவாளங்கள், போர் விமானங்கள்,  வான்வெளி  பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் அமெரிக்காவின் துணையுடன் செய்யப்பட்டவைதான். உலகின் சிறந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்பு எனச் சொல்லப்படும் IRON DOME அமெரிக்காவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாகும். 2022ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கான ஏவுகணை பாதுகாப்பிற்காக 1.5 பில்லியன் டாலருக்கும்  அதிகமான  தொகையை ஒதுக்கியது அமெரிக்கா.

2022இல் இஸ்ரேல் இராணுவத்திற்காக 23.4 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 விழுக்காடு ஆகும். அமெரிக்காவில் வெளிநாட்டு நிதி (USAID) பெறும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இஸ்ரேல் 1946 முதல் 2023 வரை 263 பில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுள்ளது. 1946-2023க்கு இடை யில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராணுவ, பாதுகாப்பு உதவியாக மொத்தம் 124 பில்லியனை வழங்கியுள்ளது.

ஹமõஸின் தாக்குதலுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ நிதி புதிய உச்சமான 3.8 பில்லியனை எட்டியது. இதில் பாதிக்கு மேற்பட்ட நிதி இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்காகச் செலவிடப்பட்டது. இன்னும் ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எனப் பல நாடுகள் இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகின்றன. மிக முக்கியமாக 1970களிலே அணு ஆயுதத்தை உருவாக்கி மத்திய கிழக்கில் அணு ஆயுதமுள்ள ஒரே நாடாக இஸ்ரேல் திகழ்கிறது.

ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் நல்ல இயற்கை வளம் மிக்க நாடாக ஈரான் இருப்பினும் தொடர் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஏறத்தாழ 2025 ஆம் ஆண்டு கணக்கின் படி 460 பில்லியன் டாலராக இருக்கிறது. உலகின் 3ஆவது பெரிய எண்ணெய் வளம்மிக்க நாடாகவும், 2ஆவது பெரிய இயற்கை எரிவாயு வளம்மிக்க நாடாகவும் இருக்கிறது ஈரான். 1979 ஈரானியப் புரட்சி நடைபெற்றது முதல் இன்றுவரை ஈரான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை எதிர்கொண்டு வருகிறது.

ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற இஸ்ரேலிய ஆதரவு நாடுகள் உலக நாடுகளுக்குத் தடை விதித்துள்ளன. பொருளாதாரத் தடைகளால் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாகக் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது அமெரிக்காவுக்கும்  ஈரானுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டு JCPOA (Joint comprehensive plan of action) 2016 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தக் காலத்தில் ஈரானின் பொருளாதாரம் சற்று முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் 2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய பிறகு மீண்டும் ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

பொருளாதாரத் தடைக்கு முன்பு ஒரு நாளைக்கு 2.5 மில்லியன்(2011) பேரலாக இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி இப்போது 700,000 பேரலாகச் சரிந்துள்ளது. அதேபோல் 10% (2016) இருந்த பண வீக்க விகிதம் இப்போது 35% ஆகவும், 122 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி 15 பில்லியன் டாலராக இருந்து வருகிறது. உலக அளவில் ஏறத் தாழ 100 பில்லியன் ஈரானின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளால் ஈரானிய வங்கிகளின் சொத்துகள் முடுக்கப்பட்டு உலக வங்கிகள் அனைத்தும் ஈரானின் வங்கிகளுடனான தங்களின் தொடர்புகளை முறித்துக்கொண்டன.

இந்தக் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஈரானுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் கிடைப்பதில் கடும் சிரமம் இருந்து வருகிறது. இன்றளவும் ரஷ்யாவின் பழைய தொழில் நுட்பங்களையும், கள்ளச் சந்தையில் வாங்கப்படும் சில உதிரி பாகங்களின் மூலமாக  உள்நாட்டு  உற்பத்தியையும் நம்பிய ஈரானின் இராணுவ உபகரணங்கள் இருக்கின்றன.

அமைதிக்கு ஆபத்தாக இருப்பது யார்?

பல ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவர நாங்கள் தான் பாடுபடுகிறோம் என  அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வருகின்றன. ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி விட்டால் அமைதி சீர்குலையும் என இப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இஸ்ரேல் இதுவரையிலும் 60,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஃபலஸ்தீனர்களில் 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் 8000க்கும்  மேற்பட்ட  பெண்களையும் கொன்று குவித்துள்ளது.

2024 கணக்கின்படி 200க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டு 52க்கும்  மேற்பட்ட  பள்ளிக்கூடங்கள் முழுமையாக  அழிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மையங்கள் மீது 697 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 55 பள்ளிவாசல்கள், 3 தேவாலயங்கள் இஸ்ரேலின் தாக்குதலால் தரைமட்டமாக்கப்பட்டன. இது மட்டுமன்றி உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக நின்று கொண்டிருந்த அப்பாவி மக்களைக் கொல்வது முதல் சர்வதேசச் சட்டங்கள் அனைத்தையும்  துளிகூட  மதிக்காமல் இஸ்ரேல் ஃபலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து வருகிறது.

2024 நவம்பர் 21 அன்று போர்க் குற்றங்கள்,  மனிதகுலத்திற்கு  எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ICC) இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு கைது வாரண்டுகளைப் பிறப்பித்தது.

ஈரான்(1953), ஆப்கானிஸ்தான்(2001) ஈராக்(2003), லிபியா(2011) ஆகிய நாடுகளில் நேரடியாக அமெரிக்கா படையெடுத்து அங்குள்ள ஆட்சியைக் கலைத்து தங்களுக்குச் சாதகமான ஆட்சியாளர்களை நியமித்துள்ளது. இந்தப் படையெடுப்புகளால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டு அனைத்து வகையான மனித உரிமை மீறலும் நடந்துள்ளன.

இன்றளவும் மேற்கத்திய எதிர்ப்புடன் இஸ்லாமியக் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடிய அமைப்புகள், தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் கொலை செய்யும். இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் இருப்பினும் எகிப்தில் இஹ்வான்கள், லிபியாவின் உமர் முக்தார் எனப் பலரைக் கூறலாம். அமெரிக்காவின் 30க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்கள் மத்திய கிழக்கில் உள்ளது.

குறிப்பாகக் கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், ஜோர்டான், சிரியா, ஓமன், துருக்கி ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் மத்திய கிழக்கில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக எந்த நாடும் திரும்பி விடாத வகையில் அச்சுறுத்துவதற்குமே பயன்படுத்தப்படுகிறது.  ஆனால்  ஈரான்  அணு ஆயுதம் உருவாக்கினால் அது மத்திய கிழக்கிற்கு ஆபத்தாக அமைந்துவிடும் என இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நேரடியாகவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகள் மறைமுகமாகவும் பயப்படுகின்றன.

இஸ்ரேல் எந்த ஒரு எதிர்ப்பும், தடையு மின்றி 1970களிலேயே அணு ஆயுதத்தைத் தயாரித்து எந்த நாடுகளுக்கும் தெரிவிக்காமல் எந்தச் சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் இருந்து வருகிறது. ஈரான் 1967களிலேயே Non Proliferation Treaty(NPT) கையெழுத்திட்டு அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டோம் என வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் JCPOA அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு இருந்தது. 2018 டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். பன்னாட்டு அணுசக்தி முகமையக (IAEA) இயக்குநர் ரஃபேல் க்ரோஸி கூறுகையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்த ஒரு நம்பத் தகுந்த ஆதாரமும் இல்லையெனக் கூறினார்.

2025 மார்ச் 25 அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் துளசி கப்பார்ட் அமெரிக்கா காங்கிரஸில் பேசுகையில் 2003இல் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் திட்டத்தைக் கைவிட்டதை மீண்டும் தொடரவில்லை எனத் தெரிவித்தார். ட்ரம்ப் இதை மறுத்த நிலையில் தன் ஙீ வலைதளப் பக்கத்தில் 2025 ஜூன் 21 ஈரான் சில வாரங்களில் அல்லது மாதத்தில் அணு ஆயுதத்தை உருவாக்கக்கூடும் எனத் தன் கருத்திற்கு முரணாகக் கருத்து தெரிவித்தார்.

1992 முதலே ஈரான் அணு ஆயுதத்தை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் தயாரித்து விடும் எனக் கூறிக்கொண்டு வருகின்றன. இவ்வாறாகப் பலமுறை ஈரானைத் தாக்குவதற்காக இதை இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுவதுண்டு.

முடிவு என்ன?

2025 ஜூன் 22 அமெரிக்கா தனது அதிநவீன பங்கர் பஸ்டர் குண்டுகளால் ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சிக் கூடங்களைத் தாக்கின. அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பாகவே அங்கு இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இடம் மாற்றப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்காவிடம் தெரிவித்து கத்தாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளத்தின் மீது குண்டுகளை வீசியது. இதில் எந்தவித உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஜூன் 24 காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த அடிப்படையில் சில மணி நேரங்களில் ஈரான் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இது தற்காலிகத் தீர்வாகவே இருக்குமே தவிர நிரந்தரத் தீர்வாக இருக்காது. அண்மைக் காலமாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்துப் பேசி வருகிறார்.

இஸ்ரேலுக்கும்  அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கில் தங்களின் அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கக்கூடிய ஒரே நாடாக ஈரான் இருந்து வருவதால் அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. ஈரானைக் கடும் பொருளாதார நெருக்கடியில் வைத்துப் பொருளாதார நெருக்கடியையும் வறட்சியையும் அதிகரிக்கச் செய்து உள்நாட்டுப் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்ய முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கு பெரும் முட்டுக்கட்டையாகச் செயல்பட்டு வரும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் வரை இதற்கு ஒரு தீர்வு ஏற்படாது.

எப்போது  சுதந்திர  ஃபலஸ்தீனம் மலருமோ அன்றுதான் மத்திய கிழக்கில் அமைதியும் நிரந்தரத் தீர்வும் ஏற்படும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்