ஹிஜ்ரி 1447 புத்தாண்டு பிறந்து விட்டது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து யத்ரிப்(மதீனா) வரை ஹிஜ்ரத் செய்த(நாட்டை விட்டு விலகிய) 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி நாள்காட்டி உருவாக்கப்பட்டது.
இஸ்லாம் ஒரு மதம் அல்ல; மாறாக இஸ்லாம் தூய இலட்சியங்களை அடிப் படையாகக் கொண்ட ஒரு முழுமையான கலாச்சாரமும் நாகரிகமும் ஆகும். முஸ்லிம்களின் நடைமுறைகளும், பழக்க வழக்கங்களும், அடையாளங்களும், மரபுகளும் இஸ்லாமிய நாகரிகத்தின் தனித்தன்மையையும் மேன்மையையும் எடுத்துக் கூறிக்கொண்டிருப்பவையாகும்.
முழுமையானதும் நடுநிலையானதுமான (தவ்ஹீத் எனும்) ஏகத்துவக் கொள்கைக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தவ்ஹீதின் எதிர்பார்ப்பாகும். ஒரு சமூகம் பல நாகரிகங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும் போது துண்டு துண்டாகச் சிதறிப்போவதையும் அதன் மூலமான இயல்பான அழிவையும் எதிர்த்தவாறும்தான் தவ்ஹீத் பாதுகாக்கப்பட்டு வலிமையடைய வேண்டும்.
மிகப்பெரும் ஆளுமையான உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கும் போது இதனையே செய்தார். தவ்ஹீத் குறித்த நுண்ணறிவுதான் இதற்குத் தூண்டுதலாக இருந்தது.
ஒருங்கிணைந்த நாள்காட்டி வேண்டும் என்று உமர்(ரலி) நினைத்தார்; அது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார். பலர் பல கருத்துகளைக் கூறினார்கள். சிலர் நபியவர்களின் பிறப்பையும் வேறு சிலர் நபியவர்களின் மரணத்தையும் இஸ்லாமிய நாள்காட்டியின் தொடக்கத்துக்கு அடையாளமாக வைக்கலாம் என்று கூறினர். இந்த வழிகாட்டுதல்கள் எதிலும் உமர்(ரலி) அவர்களுக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் சிறிதும் அனுமதிக்காத தனிமனித வழிபாடு, மாவீரர் வணக்கம் போன்ற தீமைகளுக்கு அது இடம் கொடுக்கக் கூடும் என்ற அச்சமே அதனை ஏற்காததற்குக் காரணம்.
நபிகளார்(ஸல்) அவர்களும் இவ்வாறு கூறியுள்ளார்கள்: ‘கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர்களை வரம்பு கடந்து புகழ்ந்ததைப்போல என்னைப் புகழாதீர்கள். மாறாக, முஹம்மத் (அப்துஹு வ ரசூலுஹு) அல்லாஹ்வின் அடிமையும் இறைத்தூதரும் ஆவார் என்று மட்டும் கூறுங்கள்!’
இறை நம்பிக்கைக்குரிய வாக்குமூலத்திலும் இவ்வாறுதான் கூறப்படுகிறது. நபி(ஸல்) அவர்களும் மற்ற அனைத்து படைப்புகளைப் போலவே அல்லாஹ்வின் அடிமைதான் என்பதை முதலில் கூறிய பிறகுதான் நபித்துவத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று சாட்சியம் வழங்க வேண்டும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களையும் குர்ஆன் மரியாதையுடன் ‘அப்து’(அடிமை) என்றுதான் குறிப்பிடுகிறது. முற்றிலும் இவ்வாறே தனி மனித வழிபாட்டின் அனைத்து வாசல்களையும் அறைந்து சாத்துவதற்காக உமர்(ரலி) அவர்கள் பெரும் கவனம் எடுத்துக் கொண்டார்கள்.
வரலாற்றின் ஓர் அங்கமான மரத்துக்கு மக்கள் சட்டத்துக்குப் புறம்பாகவும் நெறிமுறைக்கு மாற்றமாகவும் மதிப்பளிப்பதைக் கண்ட உமர்(ரலி) அவர்கள் அதனை வெட்டி விடுமாறு உத்தரவிட்டார்.
கிறித்தவம், பௌத்தம், சமணம், சௌராஷ்டிரம், பஹாயிசம், மார்க்சியம், காந்தியம் முதல் பல்வேறு மதங்களும் சித்தாந்தங்களும் வரலாற்று மனிதர்களின் பெயர்களால் அறியப்பட்டாலும், இஸ்லாம் அவ்வாறு தனி மனிதரின் பெயரால் அறியப்படுவதில்லை. இதன் காரணமாகத்தான் இஸ்லாத்தின் இந்த சிறப்பு அம்சத்தை ‘முகமதியம்’ என்று சொல்லி முறியடிக்க மேற்குலகம் உள்பட மற்றவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை முஸ்லிம் உலகம் எதிர்த்தது.
நபிகளாரின் மரணம் நிகழ்ந்தபோது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அளவு கடந்த அன்பினால் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல், நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள் என்று கூறுபவர்களின் தலையைத் துண்டிப்பேன் என்று கூறிய உமர்(ரலி) அவர்கள் ஓர் இஸ்லாமிய நாள்காட்டியை உருவாக்கும்போது எடுத்துக் கொண்ட இந்த எச்சரிக்கை கவனம் நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றேயாகும்.
நீண்ட விவாதம், ஆலோசனைக்குப் பிறகு அலீ(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரா பயணம் மேற்கொண்டதை இஸ்லாமிய நாள்காட்டிக்குத் தொடக்க அடையாளமாகக் குறிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்த இலட்சிய சமுதாயத்தின் முதல் தலைமுறையினர், கொள்கை வழியில் செய்த அற்புதமான தியாகத்தின் கிளர்ச்சியூட்டும் நினைவுகளை உலக இறுதிவரை நிலை நிறுத்த வேண்டும். அவ்வாறு அது நிரந்தரமானதொரு உத்வேகமாக ஆகி விட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் ஆகும். இன்றைக்குக் குறிப்பிட்ட இந்த நன்னோக்கம் உரிய முறையில் வெளிப்படுகின்றதா என்பதைச் சமுதாயம் மிகக் கவனத்துடன் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயமாகும்.
முஸ்லிம்கள் கிறித்தவர்கள் யூதர்கள் உட்பட அனைவராலும் மதிக்கப்படுகின்ற நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்தான் வரலாற்றில் மிகப்பெரும் தியாகப்பூர்வமான ஹிஜ்ரத்தை மேற்கொண்டவராவார். அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனையில் இவ்வாறு கூறுகின்றார்கள் : ‘இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவுகூருங்கள்: என் இறைவனே! (மக்காவாகிய) இந் நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!’ (திருக்குர்ஆன் 14:35)
சிலைகள் (அஸ்னாம்) என்று பன்மையில் கூறும்போது அது பல்வேறு வகையிலான சிலைகளையே குறிக்கின்றது. பாரம்பர்ய மரபு எனும் சிலையையும் ஹிஜ்ரத் (நாட்டை விட்டுச்) செல்லுதல் மூலம் ‘குறுகிய தேசியவாதம்’ எனும் சிலையையும் உடைத்துள்ளார். இப்ராஹீமிய பாரம்பர்யத்தைச் சேர்ந்த முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் தனது ஹிஜ்ரத்தின் மூலம் இப்படிப்பட்ட தேசியவாதம் என்கிற சிலை அழிப்பையே நடத்தினார்கள்.
ஹிஜ்ரத்கள் நகரங்களையும் நல்ல நாகரிகங்களையும் உருவாக்கும். நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் தான் மேற்கொண்ட ஹிஜ்ரத்தின் மூலம் மக்கா எனும் முஸ்லிம் உலகின் தலைநகரத்துக்கு வித்திட்டார்கள் என்றால், முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தாங்கள் செய்த ஹிஜ்ரத் மூலம் மதீனா எனும் நகருக்கு வடிவம் கொடுத்தார்கள்.
நாட்டு மக்களை, ‘ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ள தீவிரமான தேசியவாதம்’ என்கிற பொய்யான சிலையின் வழிபாட்டாளர்களாக்கி, அவர்களை வழி தவறச் செய்து அழிவை விதைக்கின்ற இந்த மோசமான காலத்தில் ஹிஜ்ரத்தின் நினைவுகள் ஏராளமான நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகிறது.
தேசியம் என்பது அர்த்தமற்ற நில வழிபாடாக மாறி விடக்கூடாது. நாட்டு மக்கள் மீதான அன்பே தேசபக்தியாகும். அதனால்தான் நபிகள் நாயகம் மதீனாவுக்கு வந்தபோது, மக்காவில் மக்கள் பஞ்சத்தால் அவதிப்படுவதை அறிந்ததும், அவர்களுக்கு ஏராளமான தானியங்களை அனுப்பி உதவினார்கள்.
உண்மையான இறைவனை மறுப்பவர்கள் குறிப்பாக எதேச்சதிகாரிகள் சத்திய அழைப்பைத் தடுப்பதற்கு, ஆத்திரமூட்டல்களையும் தடைகளையும் உருவாக்குவது, விஷயத்தை அதன் சாரத்திலிருந்து திசை திருப்புவது போன்ற தந்திரங்களைப் பிரயோகிப்பதுண்டு.
முக்கிய விஷயத்திலிருந்து திசைதிருப்புவது என்பதுதான் இறை மறுப்பாளர்களின் குறிக்கோளாகும். அது வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது. எனவே, எதிரிகளின் தீய தந்திரங்களை விவேகத்துடன் தவிர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஹிஜ்ரத் என்பது ஒரு தந்திரமான நடவடிக்கையாகும். எந்தக் காலத்துக்கும் பொருந்துகின்ற சாமார்த்தியமான தந்திர உத்தி.
ஒரு சிறந்த மாற்றுக்காக சிறந்த மேய்ச்சல் நிலங்களை விடாமுயற்சியுடன் தேடுதல், தீமையிலிருந்து நன்மைக்கு மாறுதல், தீய சூழ்நிலைகளிலிருந்து சிறந்த சூழலுக்குத் தப்பிச் சென்று நல்லோருடன் இணைந்து கொள்ளுதல் போன்ற பொருள்களில் ஹிஜ்ரத் என்றென்றைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
அத்தகைய ஹிஜ்ரத் எனும் புலம்பெயர் உணர்வு இறை நம்பிக்கையாளர்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். பயிர்களை மேம்படுத்த விவசாயத்தில் நாற்று நடுதல் என்ற ஒரு செயல்முறை உள்ளது. அதைப் போன்றே அழைப்பியல் செயல்பாடுகள் கூடுதல் பயன்கள் கிடைப்பதற்குப் பறித்து நடல் தேவைப்படும்.
ஹிஜ்ரத் ஒரு வகையான மாற்று அறுவை சிகிச்சையும் கூடத்தான். உலகியல் லாபங்களுக்காக நாம் நாட்டை விட்டுச் சென்றும் கூட கடுமையாக உழைக்கின்றோம். அதன் மூலம் தங்கமான வாய்ப்பைப் பெற்று பொருளாதார வளர்ச்சி உட்பட வேறு பலவும் கிடைக்கின்றன. கொள்கை வழியிலான லாபங்களும் இது போன்றதுதான்.
மிகவும் அசுத்தமான சேற்றுக் குழியில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து வெளியேறõமல் அங்கிருந்து கொண்டே சுத்தம் செய்ய முயன்றால் முழுமையாக சுத்தம் செய்ய முடியாது.
நீங்கள் வேறொரு மேற்பரப்புக்கு விலகிச் சென்று அதைச் சுத்தம் செய்ய முயற்சித்தால், அது வேகமாகவும் நடைபெறும்; பயனுள்ளதாகவும் இருக்கும். சீர்திருத்தத்தின் விஷயத்திலும் இது மிகவும் பொருந்தக் கூடியதாகும்.
கெட்ட சகவாசத்திலும், தீய செயல்களின் மீதான பற்றுதலிலும் நிலைத்து நிற்கின்ற வரையிலும் முழுமையான சீர்திருத்தம் என்பது சாத்தியமில்லை. இங்கே சரியானதும் முழுமையானது மான ஹிஜ்ரத்தின் உணர்வுடன் தீயசூழ்நிலையிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். சீர்திருத்தத்தின் முயற்சிகளி லும் இத்தகைய ஹிஜ்ரத்கள் நடைபெற வேண்டும். நினைத்தபடி மாற்றங்கள் நடக்காமல் போனதற்கு அதுதான் காரணம்.
தயிர் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும்; எஞ்சுவது மோர் ஆகும். அதற்குப்பிறகும் அதனைக் கடைந்து கடைந்து நேரத்தையும் உழைப்பையும் வளங்களையும் வீணாக்கி விடக்கூடாது. அதற்கு மாற்றமாக புதிய தயிரைக் கண்டுபிடித்துக் கடைய வேண்டும். அதேபோல, நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தில் திரும்பி நின்று கொண்டே விளையாடாதீர்கள். புதிய மனிதர்களைத் தேட வேண்டும்; புதிய வட்டங்கள், பிரதேசங்கள் கண்டறியப்பட வேண்டும். அதனால்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் தனது முயற்சியை நிறுத்தி விட்டு மதீனாவுக்குச் சென்றார்கள்.
எதிர்மறையான சூழ்நிலையை மாற்றி அமைக்கவும் தடைகளை அகற்றவும் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு நடக்கும்போது, நெருக்கடிகள் பெரும்பாலும் வாய்ப்புகளாக மாறும். இல்லையெனில் நல்ல புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடவும், தியாகம் செய்யவும், நடவு செய்யவும் தயா ராக வேண்டும். இது விஷயத்தில் பாரம்பர்யமான வேர்களும் மரபுகளும், பழக்க வழக்கங்களும் உறவினர்கள், நண்பர்கள், வசதிகள் போன்றவையும் ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது.
திருக்குர்ஆனின் 4:97 வசனத்தை நன்கு ஆராய்ந்தால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
‘தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண் டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, அவர்களிடம் நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள் பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம் என பதிலளிப்பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவுவார்கள். இவர்களுக்குரிய இருப்பிடம் நரகம்தான்! மேலும் அது மிகக் கொடிய இருப்பிடமாகும்.’ (திருக்குர்ஆன் 4:97)
ஆனால், ஹிஜ்ரத் மேற்கொள்ள முடியாமல் உண்மையிலேயே தக்க காரணத்துடன் அவ்வாறு செல்லாமல் இருக்கின்றவர்கள் குற்றவாளிகள் அல்லர்.
‘ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைத் தவிர. அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்.’ (திருக்குர்ஆன் 4:98)
அது மட்டுமல்ல, அவ்வாறு புறப்பட்டுச் செல்லும்போது வழியிலேயே மரணம் வந்து விட்டால் அவர்களுக்கு ஹிஜ்ரத் சென்று முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை வாழ்ந்ததற்கான முழுமையான கூலி வழங்கப்படும்.
‘எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் எண்ணற்ற தங்குமிடங்களையும் வாழ்வதற்கான பெரும் வசதி வாய்ப்பையும் காண்பார். மேலும் ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டுவிட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 4:99,100)
இப்ராஹீம்(அலை) அவர்கள் ஈராக்கிலிருந்து ஹிஜாஸில் உள்ள (பக்கா) எனும் மக்காவிற்கும் நபி மூஸா(அலை) அவர்கள் எகிப்திலிருந்து ஃபலஸ்தீனுக்கும் ஹிஜ்ரத் செய்தார்கள். இடம் பெயர்ந்தார்கள். இறைத்தூதர்களான லூத்(அலை), இஸ்ஹாக்(அலை), யூஸுஃப்(அலை) ஆகிய அனைவரும் ஹிஜ்ரத் மேற்கொண்டவர்கள்தான். அவர்களில் எவரும் தாயகம் பிறந்த தேசம் என்ற வெற்றுச் சிந்தனையையும் உணர்வு களையும் மகிமைப்படுத்திக் கொண்டு இருந்த நிலைமையிலேயே சடங்கு ரீதியாக ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தைரியமாக தங்கள் நாட்டைத் துறந்தபோது, அல்லாஹ் அவர்களுக்குப் புதிய நல்ல அறுவடை நிலங்களைத் திறந்தான்.
இன்றும் ஏதோ சில பொருள்களில் அமைந்த ஹிஜ்ரத்கள் இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; நடைபெற வேண்டியும் உள்ளது. (எ.கா. ஃபலஸ்தீன, மியான்மர் அகதிகள்). ஆனால் மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களுக்கு மதீனாவில் கிடைத்த தங்குமிடமோ உதவி ஒத்துழைப்புகளோ கிடைக்கவில்லை என்பதுதான் வேத னையான உண்மை. இன்று பல இடங்களிலும் முஹாஜிர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவ அன்ஸாரிகள் இல்லை என்ற வேதனையான காட்சியைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஹிஜ்ரத் பயனளிக்க வேண்டுமானால் சந்தர்ப்பத்துக்கேற்ப இந்த (நுஸ்ரத்) உதவியும் இருக்க வேண்டும். ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக மாறிய போதுதான் அன்றைக்கு யத்ரிபில் மதீனா எனும் முன்மாதிரி அரசியலும் சிறந்ததொரு நாகரிகமும் பிறந்தது. முற்றிலும் உதவியற்றவர்களாகவும் மௌனிகளாகவும் வேறொரு நாட்டிற்குக் குடி பெயரும் போது ஏராளமான பிரச்னைகளும் சிக்கல்களும் ஏற்படும்.
இன்றும் உலகின் பல பகுதிகளில் உள்ள இனப்பிரச்னைகளில் பெரும்பாலானவை பூர்வீகக் குடிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையில் உள்ளவையே. நூற்றாண்டுகள் கடந்தாலும் பரிகாரம் காணப்படாமல் நடந்து கொண்டும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்ற இந்தப் பிரச்னை சில தினங்களுக்குள் முழுமையாகப் பரிகாரம் காணப்பட்ட அற்புதமானதொரு காட்சிதான் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதீனாவில் காணப்பட்டது. அதற்குப்பிறகு அது ஒரு பிரச்னையாகவே ஆனதில்லை.
தவ்ஹீதின் ஒருங்கிணைந்த சக்தி, நபிகளாரின் சிறப்பான தலைமைத்துவம், ஒழுக்கத்தின் விளைவு ஆகியவை நமக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்குகிறது. மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத்துக்காக நபிகளார்(ஸல்) அவர்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகளும், திறமையான திட்டமிடல்களும், உத்திகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் சிறந்த பாடங்களாகும்.
மனித குலத்தின் முதலாவதும் இயற்கையானதுமான இஸ்லாமிய மார்க்கம் உலக ளாவியதாகும். இது உலகளாவிய குடிமக்களை உருவாக்குகிறது. இறை நம்பிக் கையாளர்களின் சமுதாயத்தை உலகளாவிய அடிப்படையில் ஒன்றிணைத்து ஒருங்கிணைக்கின்ற இஸ்லாத்தின் கொள்கை, கலாச்சார நடைமுறைகளின் அழகையும் நறுமணத்தையும் பரவச் செய்கின்ற ஒன்றாக ஹிஜ்ரத்தின் நாள்காட்டி விளம்பரம் இல்லாமலேயே விரிவடையும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.