மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பக்கீர்கள்
வரலாற்றாய்வாளர் செ.திவான், ஆகஸ்ட் 1-15, 2025


இஸ்லாமியப் பக்கீர்கள் இந்திய விடுதலைப் போரில் இரத்தம் சிந்தியுள்ளனர். ஆங்கிலேயர்களை யுத்த களத்தில் எதிர்த்துப் போராடி இன்னுயிரைத் தந்துள்ளனர். அவர்களது வரலாறு முழுமையாக அறியப்படவில்லை.


பக்கீர்கள் நடத்திய விடுதலைப் போர்

‘இந்தியாவின் சுயேட்சை, ஆங்கிலேயர்களால் சிறிது சிறிதாக அபகரிக்கப்படுவதை முதன் முதலாக அறிந்து கொண்டவர்கள் பூனா நானா பர்னலிஸும், மைசூர் ஹைதர் சாகிபுமாவர். அதன் பின்தான் மற்றவர்கள் அந்த உண்மையை உணர ஆரம்பித்தனர். 1806ஆம் ஆண்டு எழுந்த வேலூர் சிப்பாய்களின் புரட்சி, விடுதலை தாகத்தை மூலகாரணமாகக் கொண்டதாகும். பின்னர் ஏற்பட்ட முதலாவது சுதந்திர யுத்தத்திற்கு அது ஒத்திகை போலும்’ (எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம், பிளாஸியில் செய்த பிரதிக்ஞை அத்தியாயம், ஜெயமணி பொ.சுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு, சென்னை 1949) என்கிறார் வீரசாவர்கர்.

வேலூரில்  வீழ்த்தப்பட்ட  வீரர்கள்  நெற்கட்டுஞ் செவலில் மாவீரர் பூலித்தேவர்(1764), சீரங்கப்பட்டணத் தில் தீரர் திப்புசுல்தான்(1799), பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன்(1799), சிவகங்கைச் சீமை யில் மானங்காத்த மருது பாண்டியர்கள்(1800,1801) விடுதலைப் போரின் முன்னோடிகளான இவர்களை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வீழ்த்திற்று.

தமிழகத்தின் பல்வேறு பாளையங்களில் விடுதலைக் கிளர்ச்சியாளர்களின்  நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டு,  அடக்கப்பட்டதற்குப் பின்னர் எஞ்சியுள்ள வீரர்களை ஆங்கிலேயர்கள் வேலூர்க் கோட்டையில் அடைத்து வைத்திருந்தனர். கோட்டையின் பாதுகாப்புப்படையில்  ஜரோப்பியத் துருப்புகளைத் தவிர திருநெல்வேலியில் திரட்டப்பட்ட 23ஆம் படைப்பிரிவில் இரண்டாவது பட்டாளப் பிரிவின் அனைத்துக் கம்பெனிகளும் முதல் பட்டாளப் பிரிவில் ஆறு கம்பெனிகளும் இருந்தன. (கு.இராஜய்யன், தமிழக வரலாறு. (1565 1967) மதுரை, 1980, பக்கம் 207) 1500க்கும் மேற்பட்ட நம் நாட்டவரும், 379 ஐரோப்பியர்களும் வேலூர்க் கோட்டையில் இருந்தனர். (K.Rajayyan, Selections Form History of Tamil Nadu 15651965 Madurai 1978 Page 242)

திப்புவின் தீரப்பிள்ளைகள் விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்டு, சொத்துகள் பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சுதந்திரக் கிளர்ச்சியாளர்கள் வேலூர்க் கோட்டையில், பிரிட்டிஷ் ஆதிக்கம் அழிக்கப்பட வேண்டும் என்பது குறித்துக் கூடி ஆலோசிக்கத் தொடங்கினர். திப்புசுல்தானின் வீரப் பிள்ளைகளான பத்தே ஹைதர் சுல்தான், முசிஉத்தீன் சுல்தான், அப்துல் காலிக் சுல்தான், முனிஉத்தின் சுல்தான், முகம்மது சுபான் சுல்தான், சுக்ருல்லா சுல்தான், குலாம் அகமது சுல்தான், குலாம் முகம்மது சுல்தான், சர்வார் உத்தின் சுல்தான், முகம்மது யாசின் சுல்தான், ஜாமீஉத்தீன் சுல்தான், முனீர் உத்தீன் சுல்தான் முதலிய பன்னிரெண்டு பேரில் சிலர் கைது செய்யப்பட்டு வேலூர்க் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தனர். (Mohibbul Hasan Khan, History of Tippu Sulthan, Dacca, 1951 Page368) Husan, Alikhan, Kirmani, Nishani, Haidari, Royal Asiatic Society of Bengal Bombay, 1890 Page 395

முஸ்லிம் வீரருக்கு 900 சவுக்கடி

1806 ஏப்ரல், மே மாதங்களில் வேலூரில் இருக்கும் படைவீரர்கள் புதுவிதத் தொப்பிகளை அணிய வேண்டுமென்று ஆங்கிலக் கம்பெனியின் படைத் தளகர்த்தர்கள் உத்தரவிட்டார்கள். இத்தொப்பிகள் கிழக்கிந்தியப் பாண்டு வாத்தியக்காரர்களின் குல்லாய்கள் போல் இருக்கின்றன எனவே நாங்கள் அவற்றை நிச்சயமாக அணிய முடியாது என்று வீரர்கள் மறுத்து விட்டனர். லெப்டினண்ட் கர்னல் டார்லி, கர்னல் பான் கோர்ட்டு ஆகியோர் இதனை மேலிடத்திற்கு அறிவித்தனர். ஏற்றுக் கொள்ளாத ஒரு முஸ்லிம் வீரருக்கும் ஒரு ஹிந்துத் தோழருக்கும் முறையே 900 சாட்டையடிகள்  கொடுக்கப்பட்டன. சாட் டையடிகளால் பிழிந்து சக்கையாக்கப்பட்ட அவர்கள் உத்தியோகத்தினின்றும் நீக்கப்பட உத்தரவிடப்பட்டது. மேலும் 19 பேருக்கு 500   சாட்டையடிகள்  வழங்கப்பட்டன. (ந.சஞ்சீவி, வேலூர்ப் புரட்சி, காவ்யா, சென்னை, 2004, பக்கம் 20)

ஜமேதார் ஷேக் காசீம்

இரவு நேரங்களிலும் வேலூர்க் கோட்டையிலேயே கழிப்பதில் வெற்றி கண்ட வீரச் சிப்பாய்களுள் தலை சிறந்தவர் ஜமேதார் ஷேக் காசீம். 1806 ஜூலை 9 இரவில் சொந்தக் காரணங்களுக்காக ஓய்வு எடுக்கச் செல்ல விரும்பிய கோட்டைத் தலைவாயில் காப்பாளரான ஆங்கிலேய அதிகாரியின் விருப்பத்தை அறிந்து அவரிடம் வலியச் சென்ற ஜமேதார் ஷேக் காசீம் அந்தக் கடமையைச் செய்வதாகப் பணிவாகப் பேசிப் பக்குவமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வேலூர்ப் புரட்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஷேக் காசீம்.

திப்புவின் கொடி பறந்தது

1806 ஜுலை 10 விடியற்காலை வேலூர்க் கோட்டை விடுதலை வீரர்கள் கையில்! சிவப்புத் துணியில் பச்சைக் கோடுகள் இட்டுச் செங்கதிரோன் திகழ்ந்த மைசூர் திப்புவின் கொடி கோட்டையில் பறந்து கொண்டிருந்தது. கோட்டையில் இருந்த 379 ஆங்கிலேயரில் 191 பேர் கொல்லப்பட்டனர். 45 ஆங்கிலேயரின் உடல் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் வீழ்ந்த செய்தி ஆற்காட்டிற்குப் பறந்தது. அங்கிருந்து பெரும்படை வந்தது. எட்டுமணி நேரம் விடுதலை வீரர்கள் கையிலிருந்த வேலூர்க் கோட்டை ஆங்கிலேயரிடம் மீண்டும் சென்றது. 80க்கும் மேற்பட்ட இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். 2222 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். புரட்சியாளர்கள் பலர் பீரங்கி வாயிலாகப் பிளந்தெறியப்பட்டார்கள். பலர் நாடு கடத்தப்பட்டனர். இந்த எழுச்சிக்கு, விடுதலைக்கு வித்திட்ட இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பக்கீர்களின் பெரும் பங்கு வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

வேலூரிலும் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் ‘எரிமலை வெடிக்கப் போகுது ஐயோ! வெள்ளைச் சீமான்கள் குடல்வேகப் போகுது’ என்று காதோடு காதாகப் பேசிக் கொண்டனர்.

நெஞ்சத் துணிச்சல் மிக்க பக்கீரின் புரட்சிக் குரல்

நெஞ்சத் துணிச்சல் படைத்த ஓர் இஸ்லாமியப் பக்கீர் மட்டும் வேலூர் வீதிகளிலே ஒய்யாரமாக உலாவி, ஒளிவு மறைவின்றி புரட்சிக் குரல் கொடுத்து வந்தார். ‘ஆங்கில ஆட்சியே உன் அந்திமக்காலம் நெருங்கி விட்டது’ என்று வேலூர் வீதிகளில் முஸ்லிம் பக்கீர்கள் பாடிச் சென்றதை ஆங்கிலேயே ஆவணங்கள் உறுதிப் படுத்துகின்றன.

பக்கீர் இயக்கங்கள்

இஸ்லாத்தின் அடிப்படை ஞானங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு, நாட்டு நடப்புகளும் விளக்கிச் சொல்லப்பட்டு, அரசியல் தெளிவு பெற்ற பிரச்சாரகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ‘பக்கீர்கள்’ என அழைக்கப்பட்டார்கள். மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் கொள்கைகளை எடுத்துச் சொல்லியும், ஆங்கிலேய ஆட்சியின் அபாயத்தை மறைமுகமாகவும் நாசூக்காகவும் மக்களிடம் எடுத்து விளக்கியும் மக்களை விழிப்பு உணர்வு கொள்ளச் செய்வது இவர்களின் தலையாயப் பணியாக இருந்தது. அவுலியாக்களின் அடக்கத் தலங்களில் கந்தூரி உரூஸ் விழாக்களில் (இறைநேசர்களின் விழாக்கள்) மக்கள் கூட்டம் பெரும் அளவில் சேரும் இடங்களில் பக்கீர்கள் தங்களது பணியினைச் செய்தார்கள். (ஏ.கே.ரிபாயி, தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு. வாவா நகரம், 1988 பக். 213, 214)

பக்கீர் இயக்கத் தலைவர்கள்

வட இந்தியாவில் தான் முதன் முதலாக பக்கீர் இயக்கம் ஆரம்பமானது. சில ஆண்டுகளில் தென்னாட்டின் பல பாகங்களுக்கும் இது பரவியது. பெங்களூர், வேலூர், கோலார், நந்திதுர்க், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், பாளையங்கோட்டை போன்ற இடங்களில் பக்கீர்கள் முகாம்கள் அமைத்திருந்தனர். பகல் நேரங்களில் யாசகர்கள் போல் வேடமணிந்து கொண்டு படைவீரர்களை அணுகி இவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். வேலூர் எழுச்சியைத் தொடர்ந்து, தென்னாட்டில் நடைபெற்ற பல்வேறு விடுதலை எழுச்சிப் போராட்டங்களில் பக்கீர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

பள்ளிவாசலில் பறந்த கொடி

பாளையங்கோட்டையில் ஆங்கிலேய அதிகாரிகளை வீழ்த்துவதற்குத் திட்டமிட்ட பக்கீர்கள் சுதேசிச் சிப்பாய்களோடு தொடர்பு கொண்டனர். புரட்சியை உருவாக்கத் திட்டமிட்டனர். ஆங்கிலேயர்களால் பீரங்கி வாயில் வைத்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் வீரரின் ஆவி கோட்டையைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக நம்ப வைத்தார்கள். கோட்டைக்குள்ளிருந்த கிறித்தவ ஆலயத்தின் வாயிலில் இரத்தம் சிதறிக் கிடந்தது. அந்த இரத்த அடையாளம் அருகிலிருந்த கல்லறைத் தோட்டம் வரை சென்றது. இரத்தக் கறை அபாயத்தின் அறிகுறி என்ற பக்கீர்களின் பரப்புரையினால் பிரிட்டிஷார் மனக்கலக்கம் அடைந்தனர்.(Secret Sundries Vol.VI, P 29-25. Vol VIII Page 284-285)

பச்சைப் பதாகை பறந்தது

பாளையங்கோட்டை பள்ளிவாசலில் பட்டுத் துணியாலான நல்ல தோற்றத்தை அளித்த பச்சை நிறப் பின்னணியோடு, நீல நிறத்துடனும், அதில் மஞ்சள் நிறப்பொட்டுக்கள் அமைந்த கொடிகளையும் பக்கீர்கள் பறக்கவிட்டனர். (Secret Sundries, Volume VI Page 2943)

வேலூர்ப் புரட்சிக்கு இரண்டு நாள்களுக்குப் பின் மற்றொரு பள்ளிவாசலில் பச்சைக் கொடி ஏற்றப்பட்டது. அடுத்த பத்து நாள்களுக்குள் வெள்ளைக் கொடி பறக்க வேலூர் புரட்சிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் பச்சைக் கொடி ஏற்றப்பட்டது. பாளையங்கோட்டை இராணுவக் குடியிருப்புப்பகுதியில் மிகுந்த தோரணையுடன் பக்கீர்கள் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது தமக்கு எரிச்சலை ஊட்டியது என்று மேஜர் வெல்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். (When the above incidents were in progress numerous Fakeers were Pouring into Pallam Cottach) * Secret Sundries, Volume IX, Page 535 Dr. P. Chinnian, The vellore Mutiny 1806 Erode, 1982, Page 21.

வேலூரிலிருந்து பாளையங்கோட்டைக்கு வந்த பக்கீர்கள் மற்ற சூழ்ச்சியாளர்களைக் கலந்து இரகசியக் கூட்டம் நடத்தி, இன்னும் 10 நாள்களுக்குள் ஜரோப்பிய அதிகாரிகள் அனைவரையும் கொலை செய்து விட வேண்டுமென்று திட்டமிட்டனர். இதற்கேற்றாற்போல் சுதேசி வீரர்கள் தயார் செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரகசியத் தகவல்கள் அனுப்பப்பட்டன. திப்புவின் வீரர்களும், நவாபின் ஆட்களும், பிரெஞ்சுக்காரர்களும் பாளையங்கோட்டைக்கு உதவிக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தியும் கிடைத்ததால் சுதேசி வீரர்கள் ஆங்கிலேயரை வீழ்த்த பாளையங்கோட்டையில் வீறு கொண்டெழுந்தனர்.

சுபேதார் ஹைதர் சாகிப்

பாளையங்கோட்டையில் சுதேசி வீரர்களை இயக்கி, ஆங்கிலேயரை வீழ்த்தத் தலைமை தாங்கிய தீரர் சுபேதார் ஹைதர் சாகிப்பிற்கு மதுரை, திருச்சி, செங்கல்பட்டிலிருந்து கடிதங்கள் வந்தன. சோமசுந்தர முதலி என்ற தபால்காரரிடம் தமக்கு வரும் கடிதங்களைத் தமது தம்பியிடம் கொடுத்து விடுமாறு சொல்லி வைத்திருந்தார். ஓர் இரகசியக் கடிதம் ஆங்கிலேயர் வசம் சிக்கியது. கோட்டையில் ஆங்கிலேயரைக் கொல்வதற்குச் சதி நடைபெறுவதையும், திருவிதாங்கூர் அரசரும், இராமலிங்க முதலியாரும் சுதேசியாளர்களுக்கு உதவி வருகின்றனர் என்ற தகவலை வெள்ளைக் கும்பினி அறிந்து கொண்டது. SECRET SUNDRIES Vol. VI P. 2966

சம்பள எழுத்தர் (Paymaster's writer) இராமசாமியும் எட்டி வீர் சிங் (Eitiverer Singh a sepoy) அய்யம் பெருமாள் என்ற பட்லரும், (lyamperumaal, the butler) தகவல் தந்ததால் சுதேசி வீரர்களின் சுதந்திர தாகச் செய்தியினை வெள்ளைக் கும்பினி அறிந்து விழித்துக் கொண்டது.

1806 நவம்பர் 19 காலையில் மேஜர் வெல்ஸ் பாளையங்கோட்டையின் கோட்டையில் அனைத்து வீரர்களையும் ஒருங்கே நிறுத்தினார். தனது கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, வீரர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்தார். குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. சுபேதார் ஷேக் நூர் துப்பாக்கியில் வெடிகுண்டுகளைச் செலுத்திக் கொண்டிருந்ததை மேஜர் வெல்ஸ் கவனித்தார். துப்பாக்கியைக் கீழே போடும்படி உத்திரவிடப்பட்டது. அதே வேளையில் மேஜர் வெல்ஸின் பின்னால் நின்று கொண்டிருந்த சுதேசி வீரர் துப்பாக்கியை ஓங்கிப் பிடிக்க முயன்றார். அதுவும் கவனிக்கப்பட்டு மற்றொரு ஹவில்தாரால் அவர் தாக்கப்பட்டார்.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்