மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஆபரேஷன் சிந்தூர் நாடாளுமன்ற விவாதம் எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை
சேயன் இப்ராகிம், ஆகஸ்ட் 16-31, 2025


தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற இரு அவைகளின் மழைக்காலத் தொடரில் சென்ற மே மாதம் நடைபெற்ற சிந்தூர் தாக்குதல் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் இது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது.

இதற்கு முன்னர், இந்தியா சீனப் போர் (1962) இந்தியா பாகிஸ்தான் போர்கள், 1965, 1971, 1999 நடைபெற்ற போது அன்றைய ஆட்சியாளர்கள் இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1962ஆம் ஆண்டு சீனா, இந்தியாவின் மீது திடீரெனப் படையெடுத்து சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்களைக் கைப்பற்றியது. சீனாவிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு திடீர்த் தாக்குதல் நிகழுமென பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அப்போது சீனா இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. போரை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள் எதுவும் இல்லாததால் இந்தப் போரில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

போர் நடந்து கொண்டிருந்த போதே பிரதமர் நேரு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். இது சம்பந்தமாக நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். பிரதமர் நேரு நிலைகுலைந்து போனார். அப்போது இராணுவ அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு நடந்த இந்தியா பாகிஸ்தான் போர்களில் இந்தியாவின் கையே மேலோங்கி இருந்தது.

அதிலும் குறிப்பாக 1971ஆம் ஆண்டு போரின் போது, இலட்சக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் அந்த நாட்டின் ஜெனரல் நியாஸி தலைமையில் கிழக்குப் பாகிஸ்தானில் சரணடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் தனி நாடாகியது. அப்போதும் கூட, ஏன் 1999ஆம் ஆண்டு பாஜகவின் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் பொறுப்பிருந்த போதும் கார்கில் போர் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்றைய பிரதமர் மோடி சூப்பர் பிரதமர் அல்லவா? விமர்சனங்களுக்கு  அப்பாற்பட்டவராகத்  தன்னை நினைத்துக் கொள்பவர் அல்லவா? அதனால் தான் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை.

கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என அழைக்கப்பட்ட மூன்று நாள்கள் இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து தற்போது  நடைபெற்று  வரும்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடை பெற்ற விவாதங்களைப் பார்ப்போம்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சவ்ரோவ் கோகாய், வேணுகோபாலன், திமுகவின் ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், சு.வெங்கடேசன் ஆகியோர் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பிரதமோ, உள்துறை அமைச்சரோ, இராணுவ அமைச்சரோ நேரடியான பதில்கள் எதுவும் தரவில்லை. மாறாக எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு எதிராகப் பேசுவதாகக் குற்றம் சாட்டினர்.

1. ‘இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் வர்த்தக ஒப்பந்தங்களை இரத்து செய்து விடுவேன் என்று அச்சுறுத்தி போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைத்தேன்’ என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி மறுப்பு எதுவும் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மோடி நேரடியான பதில் எதுவும் அளிக்கவில்லை.

எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடு காரணமாகவும் இந்தியா போர் நிறுத்தம் செய்யவில்லை. பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாலேயே போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்தோம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, தான் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஒருபோதும் பேசவில்லை என்றும் 8.5.25 அன்று காலை அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ் தன்னுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இன்று இன்னும் சிறிது நேரத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்ததாகவும் அதற்கு அப்படிப் பாகிஸ்தான் தாக்கினால் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று அவரிடம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

எனினும் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று உண்மையல்ல என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு விஷயம் இங்கே இடிக்கிறது. 10.5.2025 அன்று மாலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நான்தான் காரணம் என முதன்முதலில் அறிவித்தார். அதற்குப் பின்னர்தான் இந்திய இராணுவ அதிகாரிகளும், பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளும் போர் நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டனர். இதற்கும் பிரதமரிடமிருந்து விளக்கம் இல்லை. சுருங்கக் கூறின் பிரதமர் மோடி அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிக்க அஞ்சுகிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் எந்த அந்நிய நாட்டின் தலையீடும் இல்லை என்று தெரிவித்த பின்னரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் நான் தலையிட்டுத்தான் போரை நிறுத்தினேன் என்று 21ஆவது முறையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் தான் இந்தியா போரை நிறுத்தியது எனக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் கெஞ்சியது என்றால் அந்த நாடு போரில் பெரும் தோல்வி அடைந்து விட்டது என்றுதான் பொருள். அந்த நிலையில் பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அந்நாட்டின் வசமுள்ள ஆஸாத் காஷ்மீரை இந்தியா கைப்பற்றி இருக்கலாமே! ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.

1948ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது அன்றைய பிரதமர் நேரு தலைமை யிலான காங்கிரஸ் அரசு ஆக்கிரமிக்கப்பட்ட அந்தப் பகுதியை ஏன் கைப்பற்றவில்லை எனக் கடந்த 77 ஆண்டுகளாகப் பரப்புரை செய்து வருகின்ற பாஜகவின் பிரதமரான மோடி இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டது ஏன்? 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தானின் பலவீனத்தைப் பயன்படுத்தித்தானே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தானைப் பிரித்து வங்க தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தார் என்பதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எந்தக் கேள்விகளுக்கும்  சரியான  முறையில் பதிலளிக்க முடியாமல் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்று தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இராணுவ அமைச்சரும் மற்ற பாஜக உறுப்பினர்களும் பேசினர். இது ஓர் அப்பட்டமான அவதூறுப் பரப்புரை. 1947ஆம் ஆண்டு பாஜக என்ற எங்களது கட்சி இருந்திருந்தால், பாகிஸ்தான் பிரிவினை நடந்திருக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பாகிஸ்தான் என்று ஒரு நாடு இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிந்து சென்றிருக்காவிட்டால், பாஜக இன்றைக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை உள்துறை அமைச்சர் வசதியாக மறந்து விடுகிறார். அவரும் தனது உரையில் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரை மீட்டெடுப்போம் என முழக்கமிட்டார். சென்ற மே மாதம் கிடைத்த அதற்கான அரிய வாய்ப்பை நழுவ விட்டு விட்டு பின்னர் முழங்குவது யாரை ஏமாற்ற அமித்ஷா அவர்களே என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

2. பஹல்ஹாமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் அதில் 26 பேர் கொல்லப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அரசுத் தரப்பு பதிலளிக்கவில்லை. இராணுவத்தையும், உளவுத்துறை அமைப்புகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒன்றிய அரசால் ஏன் அந்தத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து தடுத்து நிறுத்த முடியவில்லை? உளவுத்துறையின் இந்தத் தோல்விக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா? தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு கொண்டு வரப்படவில்லை?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் அளிக்காத பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர் ஆகியோர் எதிர்க்கட்சி  உறுப்பினர்களின்  குற்றச்சாட்டுகள்  பாகிஸ்தானுக்கு  ஆதரவாக இருக்கின்றன என்று அவதூறு செய்யவே முயன்றனர். 2011ஆம் ஆண்டு பம்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர், அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவி விலகினர். ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு ஏன் ஒன்றிய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்கவில்லை என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அரசுத் தரப்பில் பதில் இல்லை.

3. பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதைக் கேள்விப்பட்ட  உடனேயே  சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, உடனே தனது நிகழ்ச்சிகளை இரத்துச் செய்து விட்டு இந்தியா விரைந்தார். ஆனால் வந்தவுடன் அவர் அங்கு செல்லவில்லை. பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்குச் சென்றார். இந்தத் தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டங்கள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. உள்துறை அமைச்சரே  அந்தக்  கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிரதமர் மோடி அவையில் இல்லை. மாலத்தீவில் இருந்தார். அன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்த பின்னரே அவைக்கு வந்தார். விவாதங்களுக்குப் பதிலளித்து உரை நிகழ்த்தினார். மாநிலங்களவைக்கு அவர் செல்லவே இல்லை. நாடாளுமன்றத்தை கோயில் என்று வர்ணித்த பிரதமர் மோடி அந்தக் கோயிலுக்கு வழங்கும் மரியாதை இதுதான். இது குறித்துக் கிண்டலாகப் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கோயிலுக்கு வருவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்?

நீங்கள் நாத்திகவாதிகளாகி விட்டீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். விவாதத்தின் போது கலந்து கொண்டு பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தனது உரையில் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படையின் கர்னல் ஷோபியா குரைஷியை பாகிஸ்தானின் சகோதரி என்று வர்ணித்த மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சரைக் கண்டிக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அது போல் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது அந்த இடத்திற்குச் சென்ற சிலரைக் காப்பாற்றி விட்டு, தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி உயிர் நீத்த குதிரை வண்டி ஓட்டி செய்யது ஆதில் ஹுஸைன் ஷா பற்றிப் பேசப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கும் அரசுத் தரப்பிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.

விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் பஹல்காமில் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறிய போது அவையிலிருந்த பிரியங்கா காந்தி எழுந்து நின்று ‘26 இந்தியர்கள் என்று கூறுங்கள்’என்று குறிப்பிட்டார்.

போரின் போது இந்தியாவுக்கு ஆதரவாக உலகிலுள்ள எந்த நாடுகளும் குரல் கொடுக்க வில்லை. போருக்குப் பிறகு பல சர்வதேச நிதி உதவி அமைப்புகள் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகள் அறிவித்தன. பாகிஸ்தானின் இராணுவத்  தளபதி ஃபீல்டு  மார்ஷல் முனீருக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது மாளிகையில் விருந்து கொடுத்தார். இதுபோன்ற செய்திகளையெல்லாம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் குறிப்பிட்டு, இது நமது வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைத் தானே காட்டுகிறது என்று கேட்ட போது அதற்கும் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

மொத்தத்தில் இந்த விவாதங்களின் போது பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக உறுப்பினர்கள் மிகவும் நிதானம் தவறியே பேசினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. மாறாக அனைத்துப் பிரச்னைகளுக்கும், காங்கிரஸ் கட்சியும் ஜவஹர்லால் நேருவுமே காரணம் என பிரச்னையை இந்து முஸ்லிம் பிரச்னையாக மடைமாற்றம் செய்து தங்களது இந்துத்துவா வாக்கு வங்கியைத் தக்க வைக்கும் செயல்களிலேயே ஈடுபட்டனர். இவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது ‘எத்தனை காலம் தாம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சொந்த நாட்டிலே’ என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்