ஒரு நல்ல குடும்பம் என்பது ஓர் அமைப்பாகும். இதில் மனைவியின் வெற்றி கணவனின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. கணவனின் வளர்ச்சி மனைவியின் சகிப்புத் தன்மை, அன்பு,ஒத்துழைப்பு மீது இயங்குகிறது. இன்றைய உறவுகளில் இடைவெளி ஏற்படுவதற்கான முக்கியக் காரணிகளில் நம்பிக்கையின்மை, அதீத எதிர்பார்ப்புகள், கலாச்சார மாறுபாடுகள், மேற்கத்திய வாழ்வியல் தாக்கங்கள் முக்கியமானவை. ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்த பின்னர் கணவன் மனைவி இருவரின் வாழ்க்கை திசை மாறுகிறது. அவர்களது பொறுப்புகள் பெருகுகின்றன; அதனுடன் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றன.
திருமணம் முடிந்து பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் உடல்நல மாற்றங்கள், ஆர்வக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இது மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மாற்றங்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டிய நேரத்தில், தவறான ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் தடுமாற்றத்தை உருவாக்குகின்றன.
தங்கள் சொந்தத் தேவைகளைத் தீர்க்காமல், பெற்றோர் அல்லது உறவினர்களின் விருப்பங்களைத் தங்கள் குடும்பத்தின் மீது திணிக்கும் போது மன அழுத்தம் உருவாகிறது. இது குழந்தைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எதிர்பார்ப்புகளை மனம்திறந்து பேசாமல் மறைமுகமாகத் திணிப் பது ஏமாற்றத்தை உருவாக்கும்.
சிறிய சண்டைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படவில்லை என்றால், பெரிய பிரச்னைகளாக உருவாகி உறவுகளை முறித்து விடும் அளவுக்குச் செல்வதுண்டு. ஓர் ஆழமான புரிதலும், உணர்வுப் பகிர்வும் இல்லாவிட்டால் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே வன்முறையாக மாறுவதற்கான வழியையும் உருவாக்கி விடு கிறது. புரிதல், நம்பிக்கையின் அடிப்படையில் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் உணர்ந்தால் முழுக் குடும்பத்திலும் ஒற்றுமை நிலைபெறும்.
நல்ல குடும்பத்தின் அடிப்படைக் கூறுகள்
வெளிப்படையான தொடர்பு - ஒவ்வொரு உறுப்பினரின் சிந்தனையும் கேட்கப்படும் சூழல்.
நம்பிக்கை, மாற்றம் - வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல் களில் வெளிப்படும் உண்மைகள்.
ஒத்த எதிர்பார்ப்புகள் வேலைப்பங்கீடு, நிதி நிர்வாகம், பெற்றோராகச் செயல்படும் விதிகள், உணர்வுப் பாதுகாப்புகள்.
பரஸ்பர ஆதரவு - தனிப்பட்ட குடும்ப வளர்ச்சிக்கான ஆதாரம்.
தகுந்த எல்லைகள் - தனிப்பட்ட செயல் வெளி மதிக்கும். ஆனால் உறவுகளில் தொடர்புள்ள நிலைமை.
சிக்கல்களைத் தீர்க்கும் திறன் - சண்டைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றும் திறமை.
குடும்ப நலனில் சிக்கலைத் தீர்ப்பதன் முக்கியத்துவம்
குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் நிலவும் எதிர்பார்ப்புகள், கருத்து வேறுபாடுகள், ஒத்துழைப்பு குறைபாடு விரோதமாக மாறுகிறது. இந்நிலை உரையாடல் இல்லாமை, புரிதல் இல்லாமை, குடும்பப் பொறுப்புகளுக்குள் ஏற்பட்ட குழப்பம் அல்லது தலையீடு ஆகியவற்றால் பெருமளவில் ஏற்படுகிறது.
விரோதங்கள் உருவாகும் வழிகள்
குடும்பத்தில் விரோதங்கள் பல்வேறு வழிகளில் உருவாகலாம். நம்பிக்கையின்மை, உணர்வு ரீதியான தொடர்பின்மை, பொருளாதார மேலாண்மைக் குறைபாடு, மூத்தோர், உறவினர்களின் தலையீடு, தன்னம்பிக்கையற்ற அல்லது அகந்தையான நடத்தை போன்றவை காரணமாகின்றன.
விரோதங்கள் தூரத்தை உருவாக்கி உறவுகளை வலுவிழக்கச் செய்கின்றன. குழந்தைகள் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவுகள் சிதைந்து விடுகின்றன. தம்பதியர் உறவில் பிழைகள் அதிகரிக்கின்றன. இது விவாகரத்து, தற்கொலைக்கும் வழிவகுக்கும். சச்சரவுகள் தோல்வி அல்ல; அது நுண்ணறிவுடன் பேசித் தீர்வு காணும் ஒரு வாய்ப்பாகும்.
பணம், பொறுப்புகள், எதிர்பார்ப்புகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் திறமையுடன் எதிர்கொள்ளும் குடும்பங்கள், உயர்ந்த மனநலத்தையும் உறுதியான உறவுகளையும் கொண்டுள்ளன. இவற்றைத் தொடரும் வகையில், தேசிய குற்றக் குறியீட்டு பணி யகத்தின் (NCRB) தரவுகள் உறவுகளில் ஏற்படும் இந்த நிலைப்பாடுகளை மிகவும் தெளிவாகக் காட்டுகின்றன. இதில் மனநல பாதிப்புகள், உறவுச் சிக்கல்களால் நிகழும் கொலைகள், தற்கொலைகள் போன்றவை மட்டும் அல்ல, திருமண உறவுகளில் ஆண்களும் பெண்களும் சமமாகப் பாதிக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
குடும்ப உறவுகளில் தொடர்புக் குறைபாடுகள் எவ்வாறு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தெளிவாக்க தேசிய குற்றக் குறியீட்டு பணியகம் (NCRB) வெளியிட்ட 2022ஆம் ஆண்டு தரவுகள் உதவுகின்றன.
குடும்பத்தில் நிகழும் சண்டைகள், பிரச்னைகள், பெரும்பாலும் குழந்øதகளின் மனநல வளர்ச்சியிலும், அவர்களின் எதிர்காலத்திலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கணவன் மனைவிக்கிடையிலான வாக்குவாதங்கள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், நம்பிக்கை இழப்புகள், உணர்வுப்பூர்வ பிணைப்புகளின் குறைபாடுகள் ஆகியன குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன. தொடர்ந்து சண்டைகள், மனஅழுத்த சூழ்நிலைகள், அன்பு, ஒத்துழைப்பு இல்லாத உறவுகள் போன்றவை குழந்தையின் நம்பிக்கையை, திறன்களை, கல்வி முன்னேற்றத்தையே பாதிக்கும்.
சில குடும்பங்களில் விவாகரத்து, வாழ்க்கைத் துணையில்லாமல் தனியாக வாழ முடிவு செய்தல் அல்லது இறப்பு போன்ற காரணங்களால் ஒரே பெற்றோரால் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இந்தக் குடும்பங்களில் சிலவற்றில் நேரமின்மை, மன அழுத்தம், பொருளாதாரச் சவால்களால் குழந்தைக்குத் தேவையான பரிவும் வழி காட்டுதலும் குறைவாகக் கிடைக்கின்றன.
தாய் அல்லது தந்தையிடம் வளர்ந்த குழந்தைகள் மனஉறுதி, உறவுகள் மேல் நம்பிக்கை, தன்னம்பிக்கை போன்ற அம்சங்களில் பாதிப்படைகின்றனர். சிலர் மிக விரைவாகவே முதிர்ச்சி அடைந்து தங்களின் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. சிலர் தவறான நட்புகள், போதை அல்லது மனநலச் சிக்கல்கள் நோக்கிச் செல்லும் அபாயமும்தி இருக்கிறது. குடும்ப உறவுகள் பலவகையான மனோநிலை, சூழலியல், சமூகக் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, எதிர்பார்ப்பு குறித்த தெளிவு, நிலையான பொருளாதாரம் ஆகிய அம்சங்கள் குடும்ப ஒற்றுமை, நலத்திற்குப் பிரதான அடித்தளமாக அமைகின்றன.
இதனடிப்படையில் கீழ்க்காணும் கூறுகள் குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருப்
பதற்கும், உறவுகளில் வலிமையைப் பேணுவதற்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நம்பிக்கை
நம்பிக்கை என்பது வெறும் உணர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவதில்லை. தொடர்ந்து நடைபெறும் நிலைத்த செயல்கள், திறந்த, நேர்மையான உரையாடல்களால் அது வளர்த்தெடுக்கப்படுகிறது. உறவுகளில் நம்பிக்கை நிலைத்திருக்கும்போது ஐயம், கவலை, ஏமாற்றம் குறைவடைந்து பரஸ்பர உறவு வலிமைப்படுத்தப்படுகிறது.
திருமண எதிர்பார்ப்புகள்
தம்பதியருக்கிடையே எதிர்பார்ப்புகள் தெளிவாகப் பகிரப்படாமை, தவறான ஊகங்களை உருவாக்கி குழப்பம், மன வருத்தம், புலம்பலை அதிகரிக்கும். எனவே எதிர்பார்ப்புகள் பற்றிய உரையாடல்கள் தொடக்க நிலைமையிலேயே நடைபெறுதல் உறவுகளில் நெருக்கத்தை வளர்க்கும்.
நிதிநிலை தொடர்பான உறவுக் கூறுகள்
குடும்பத்தின் பொருளாதார விஷயங்களில் பங்கீடு, முடிவெடுத்தல் வெளிப்படையாக இல்லாத போது, ஐயத்துடன் கூடிய சூழல் உருவாகி சண்டைகள், நம்பிக்øகயின்மை ஏற்பட வழிவகுக்கும். திட்டமிடப்பட்ட நிதிநிலை மேலாண்மை, அதனைச் சுற்றிய உரையாடல்கள், உறவுகளை நிலை யாக வைத்திருக்க உதவுகின்றன.
தலையீடு
மூத்தோர், குடும்ப உறுப்பினர்கள் அல்லது மற்ற உறவினர்கள் புதிய தம்பதிகளின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் போது, அது பதட்டமான சூழ்நிலையையும், கருத்து மோதல்களையும் ஏற்படுத்தும். இவற்றைச் சரியான முறையில் அணுகும் போது உறவுகள் பலமாகும்; தவறாக அணுகும்போது சிக்கல்கள் வேரூன்றி உறவுகளைப் பாதிக்கும்.
குடும்ப நலனைப் பாதுகாக்க உறவுகளைத் தெளிவாக்குவது எப்படி?
நேரம் திட்டமிடப்பட்ட உரையாடல்
குடும்ப உறவுகளை வலுப்படுத்த வாரத்திற்கு ஒரு முறை குறைந்தபட்சம் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உணர்வுகள், பொருளாதார நிலை, குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களைச் சீரான, மனம் திறந்த உரையாடல்களின் மூலம் பகிர்வது அவசியமாகும். இது உறவுகளில் பாதுகாப்பையும், பரஸ்பர நம்பிக்கையும் நிலைநிறுத்துகிறது.
எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துதல்
தனிப்பட்ட மனநிலைகளை உணர்ந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் முடிவுகள் எடுக்கப்படும் போது உறவுகள் புரிதல், நெருக்கம் அடைந்த வலுவான கட்டமைப்பாக மாறுகின்றன.
நிதி மேலாண்மை
தம்பதியினர் இருவரும் சம பங்கேற்புடன் திட்டமிட்ட பொருளாதார மேலாண்மையில் ஈடுபடும்போது, எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்கவும் உறவுகளில் நம்பிக்கை, உறுதி பெறவும் வழிவகுக்கிறது.
தலையீடுகளைக் கட்டுப்படுத்துதல்
குடும்ப உறவுகளில் மூத்தோர், பிற உறவினர்கள் தங்கள் பங்களிப்பை மரியாதையுடனும், நுணுக்கமான எல்லைகளுக்குள் அமைக்க வேண்டும். அப்போதுதான் புதுமணத் தம்பதிகளின் தனித்துவ உறவுச் சூழலைப் பாதுகாக்க முடியும்.
சிக்கல் தீர்ப்புத் திறன்கள்
Time out, Active Listening, Empathy போன்ற உடனடி, தீவிரமான உறவுச் சிக்கல்களைச் சமாளிக்கும் உளவியல் நுணுக்கங்களைப் பயிற்சியில் கொண்டு வருவதன் மூலம், உரையாடல் அமைதியாகவும், ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் நடைபெற முடியும்.
வெளிச்சார்பு ஆதரவை நாடுதல்
உறவுகளில் ஏதேனும் தீவிர சிக்கல்கள் தோன்றும் நேரத்தில் குடும்ப ஆலோசனை அல்லது நடுவர் வழிகாட்டுதல் போன்ற வெளிப்புற ஆதரவு சேவைகளை நாடுவதால் உறவுகளைப் பாதுகாக்கவும், வலிமைப்படுத்தவும் வழிவகையாக அமையும்.
இவ்வாறு நம்பிக்கை, எதிர்பார்ப்புகளைத் தெளிவாகக் கையாண்டு தலையீடுகளைக் கட்டுப்படுத்தி, திறமையான சிக்கல் தீர்ப்புக் கலைகளைப் பயின்று, நிதிநிலையை வலுப்படுத்துவதன் மூலம் குடும்ப உறவுகளின் நலன், ஒற்றுமை, மகிழ்ச்சியைப் பாதுகாக்க முடியும்.
ஒரு வலுவான குடும்பம் என்பது ஒரே வீட்டில் வாழும் உறவுகளைவிடக் கூடுதல் நம்பிக்கை, மாற்றம், உறுதி செய்யப்பட்ட எதிர்பார்ப்புகள், திறந்த உரையாடல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 72006 07034
மின்னஞ்சல்: mindsolutionsoffice@gmail.com