மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

மாமனிதர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், 1 - 15 OCTOBER 2022


 

இந்த உலகத்தைத் திருத்துவதற்காக எத்தனையோ உத்தமர்கள் வந்திருக்கிறார்கள். அந்நிய ஆட்சியின் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதற்காக, சாதியை அகற்றுவதற்காக, அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக, வறுமையை அகற்றுவதற்காக, மது, சூது போன்ற தீமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக, சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக உலகில் பல்வேறு தலைவர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அவர்களது கருத்துகளில் நமக்கு வேறுபாடு இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றால் இந்த உலகம் காட்டுமிராண்டிகள் நிறைந்ததாக மாறிப்போயிருக்கும்.

அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர்கள் இறைத்தூதர்கள். மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு அந்த அக்கறை இல்லாமல் போய்விடுமா? மனிதர்களுக்காக வானத்தைப் படைத்தான், பூமியைப் படைத்தான், நட்சத்திரங்களைப் படைத்தான், வாழ்வாதாரங்களை வழங்கினான். இத்தனையையும் வழங்கிவிட்டு "நீ எந்த வழியிலும் போ' என்று இறைவன் விட்டுவிடுவானா? நமது பெற்றோர்களே அவ்வாறு விட்டு விடுவதில்லை. நம்மைப் பெற்றவர்கள் "உனக்குச் சாப்பாடு தருவேன். பள்ளிக் கூடத்தில் சேர்ப்பேன். ஆனால் ஒழுக்கத்தை மட்டும் கற்றுத் தர மாட்டேன்' என்று சொல்வார்களா? நமது பெற்றோர்களை விட ஆயிரம் மடங்கு நம் மீது அன்பு கொண்டிருக்கின்ற இறைவன் அவ்வாறு விடுவானா? அவனே ஓர் ஏற்பாடு செய்தான்.

மனிதர்களிலேயே புனிதர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் இறைத் தூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தனது வழிகாட் டலை வழங்கினான். அவர்கள் இந்த உலகத்திலே மக்களுக்கு நீதியை, அன்பை, ஒழுக்கத்தைப் போதித்தார்கள். மனித சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றினார்கள். அந்த வரிசையில் இறுதியாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இந்த மனித குலத்தைக் காப்பதற்காக வந்தார்கள். "படைத்தவனை வணங்கு! படைப்புகளை வணங்காதே!' என்று கூறினார்கள். "எல்லா நாடுகளும் சமம். எல்லா மொழிகளும் சமம். ஆணும் பெண்ணும் சமம்' என்ற கருத்தை மக்களுக்கு மத்தியிலே எடுத்துரைத்தார்கள். கொண்ட கொள்கையிலே அவர்கள் வெற்றியும் அடைந்தார்கள். நபித்துவம் பெற்றபிறகு வாழ்ந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அந்தக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் தந்தார்கள்.

அகிலத்தின் அருட்கொடை

இன்று உலகத்தில் நால்வரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். அதில் சிறப்பு என்னவென்றால் அரபுகளை விட அரபு அல்லாத முஸ்லிம்களே அதிகம். இஸ்லாம் பரவியது அரேபியாவில். ஆனால் உலக முஸ்லிம் மக்கள்தொகையில் அரேபியர்களின் எண்ணிக்கை 20% மட்டுமே. எஞ்சிய 80 விழுக்காட்டினர் அரபுகளல்லாதவர்கள். எனவே இந்த மார்க்கம் அவர்கள் பிறந்த நாட்டையும் தாண்டி பரவியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் அரபுகளுக்காகப் பேசியவரல்லர். அரபு மொழியுடைய முக்கியத்துவத்தை, அரபு பண்பாட்டை, மேன்மையைப் பற்றி மட்டும் பேசுவதற்காக வந்தவரல்லர். முழு மனித சமுதாயத்தையும் காப்பாற்ற வந்தவர்கள் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட செய்தியாக உள்ளது. நபிகளாருடைய வெற்றிக்குக் காரணங்களாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று அவர்கள் கொண்டு வந்த கொள்கைகள். இரண்டாவது அவர்களுடைய ஆளுமை.

நீதி நபி

நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த கொள்கைகள் நீதியை அடிப்படையாகக் கொண்டவை. பாரபட்சமில்லாத கொள்கைகள். மனிதர்கள் அனைவரும் சமம். ஆளுக்கொரு நீதி கூடாது. இவருக்கு ஒரு நீதி அவருக்கு ஒரு நீதி, இந்தச் சமூகத்திற்கு ஒரு நீதி அந்தச் சமூகத்திற்கு ஒரு நீதி, உயர்ந்தவருக்கு ஒரு நீதி தாழ்ந்தவருக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி, தொழிலாளிக்கு ஒரு நீதி முதலாளிக்கு ஒரு நீதி என்று இல்லாமல் அனைவருக்கும் சமநீதி என்ற கருத்தைச் சொன்னவர்கள்.

ஆகவே அவர்களுடைய கொள்கைகள் வெற்றி பெற்றன. எல்லாரும் ஏற்றுக்கொண்ட னர். தொழிலாளி ஏற்றுக்கொண்டார், முதலாளி யும் ஏற்றுக்கொண்டார். ஏழை ஏற்றுக்கொண்டார் பணக்காரரும் ஏற்றுக்கொண்டார். ஏழை களுக்காக மட்டும் பேசியிருந்தால் பணக்காரர்கள் ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள்.  பணக்காரர் களுக்காக மட்டும் பேசி இருந்தால் ஏழைகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெண்களுக்காக மட்டும் பேசி இருந்தால் ஆண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எல்லோருக்குமாகப் பேசினார்கள். ஆகவே அது வெற்றி பெற்றது.

அன்பு நபிகளார்

அண்ணல் நாயகம்(ஸல்) அன்பை விதைத்தார்கள். அன்புதான் அவர்கள் பேசிய தத்துவங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருப் பதைப் பார்க்கிறோம். அன்பு தான் மனிதர்களை இணைப்பது. அன்றைய அரபுலகம் பல்வேறாகப் பிளவுபட்டிருந்தது. அவர்கள் அனைவரையும் அன்பின் அடிப்படையில் ஒன்றாக இணைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள். திருக்குர்ஆன் கூறுகிறது: "நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள். இறைவன் உங்கள் இதயங்களை ஒன்றுபடுத்தினான். அவனுடைய அருளினால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்'. நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: "மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்'. நேசம் என்றால் என்ன? "அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் நேசிப்பதுதான் உண்மையான நேசம்.' இவ்வாறு அன்பை விதைத்த காரணத்தினால் இந்தக் கொள்கை வெற்றி பெற்றது.

இயல்புக்கேற்ற இனிய வழிமுறைகள்

அடுத்தடுத்த வெற்றிக்கான காரணம் நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த தத்துவங்கள் மனித இயற்கையோடு ஒத்துப் போகக்கூடியவை. மனித இயற்கை ஏற்றுக் கொள்ளாத எந்தத் தத்துவமும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. என்றாவது ஒருநாள் தோற்றுப்போகும் அல்லது சமூகத்தில் சிலரால் பின்பற்றப்படும் பலரால் நிராகரிக்கப்படும். உதாரணமாக துறவறம் கூடாது என்ற கொள்கையை எடுத்துக் கொள்ளுங்கள். பசியைப் போல காமம் என்பதும் மனிதனின் இயற்கைத் தேவைகளில் ஒன்று. அது மனிதனின் அடிப்படை உணர்வு. ஆகவேதான் துறவறம் கூடாது என்கிறது இஸ்லாம். "இம் மையை இழந்து விடாதே, மறுமையை மறந்து விடாதே' என்று எல்லாவற்றிலும் நடுநிலையாகவும் மனித இயற்கையோடு ஒத்துப் போகக் கூடியதாகவும் இருந்ததால்தான் நபி(ஸல்) அவர்கள் ஏந்திவந்த கொள்கைகள் வெற்றி பெற்றன.

ஆளுமைமிக்க தலைவர்

என்னதான் நல்ல தத்துவமாக இருந்தாலும் சொல் லக்கூடியவர் நல்லவராக இருக்க வேண்டுமே! சிறந்த கவிதைகளை எல்லாம் சொல்லிவிட்டு அவர்கள் மது அருந்தக்கூடியவர்களாக இருந்தால் எப்படி? சிறந்த அறுவடையைப் பெற நல்ல நிலமும் வேண்டும், நல்ல விவசாயியும் வேண்டும். நபிகளாரிடத்திலே நல்ல குணங்கள் அமைந்திருந்தன. 40ஆவது வயதில்தான் இறைக் கட்டளையின் பேரில் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்தார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்பதை வரலாற்றுப் பதிவுகள் தெள்ளத் தெளிவாகக் காட் டுகின்றன. இறைத்தூதராகிய பின்புதான் என்பதாக அல்ல. அதற்கு முன்னரே நபிகளாருடைய வாழ்க்கை சிறப்பாக இருந்தது. அங்குள்ள மக்களால் "நம்பிக்கைக்குரியவர்', "உண்மையாளர்' என்று நபிகளார் அழைக்கப்பட்டார்கள்.

எதிரிகளாலும் போற்றப்பட்ட மாமனிதர்

மக்காவில் நபி(ஸல்) அவர்களைக் கொடுமைப்படுத்துவார்கள், அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய பொருள்களைப் பாதுகாக்க ஒருவர் உண்டு என்றால் அது முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான். He was the safety locker of Makkah. அவர்களிடம்தான் கொடுத்து வைப்பார்கள். பிரச்னைகள் வந்தால் தீர்வுக்கு அவர்களிடத் தில்தாம் செல்வார்கள். அவர்களுடைய நேர்மை அந்த அளவுக்கு இருந்தது. அவர்கள் ஒருபோதும் பொய் பேசியதில்லை. எதிரியாக இருந்த அபூசுஃப்யான் ஹெர்கல் மன்னரிடத்தில் சான்று பகர்கிறார். ரோமானிய மன்னர் அவரிடம் ஒவ்வொன்றாகக் கேட்கிறார்: "முஹம்மத் என்றாவது பொய் சொல்லியது உண்டா?' என்று கேட்டதற்கு அபூசுஃப்யான் பதில் கூறினார், "இல்லை அவர் பொய் சொல்லி நாங்கள் கேட்டதில்லை'. அதற்கு மன்னர் கூறினார், "தன் சொந்த வாழ்க்கையிலேயே பொய் சொல்லாத மனிதர் ஏன் மத விஷயத்தில் பொய் சொல்லப் போகிறார்?'

தீமைகளற்ற தூய வாழ்க்கை

அன்றைய மக்களிடத்திலே மது, மாது, சூது ஆகியவை சர்வ சாதாரணம். அதை யாரும் தவறு என்றுகூடச் சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் ஒழுக்கமுள்ள மனிதராக வாழ்ந்தார்கள். பலருடைய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால் இளமைக் காலத்தைப் பற்றி பேசமுடியாது. அதைப் பற்றி பேசா மல் இருந்தால் நல்லது என்பதாக இருக்கும். Every saint had a past and sinner will have a future. "ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு' என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. பலர் பொது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள். சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் தூய் மையாக இருந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள். நபிகள் நாயகம் தாம் மட்டும் நல்லவராக இருக்கவில்லை. தோழர்களையும் அவ்வாறு பயிற்றுவித்தார்கள். இதுதான் அவர்களுடைய வெற்றிக்குக் காரணம். அதனால்தான் நபிகளõரால் பயிற்றுவிக்கப்பட்ட தோழர்கள் வரலாற்றில் புரட்சிகளை ஏற்படுத்தினார்கள். அவர்கள் மறைந்து நூறாண்டுக்குள் உலகத்தில் அன்று அறியப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு இஸ்லாம் சென்றடைந்து விட்டது. இது எதனால் சாத்தியமாயிற்று? பயிற்றுவிக்கப்பட்ட, ஒழுக்கமுள்ள, வீர முள்ள, தியாகம் உள்ள தோழர்களாலேயே சாத்தியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நேர்மையான வழிமுறை

End justifies the means "நோக்கம் நன்றாக இருந்தால் போதும் அடையும் வழிமுறை எப்படியிருந்தாலும் பரவாயில்லை' என்று பழமொழி ஒன்று கூறுவார்கள். இஸ்லாம் இந்தக் கருத்தை மறுக்கிறது. நோக்கமும் சரி யாக இருக்க வேண்டும்; அதை அடைகின்ற வழிமுறைகளும் சரியாக இருக்க வேண் டும். நபி(ஸல்) அவர்கள் வழிமுறையில், நெருக்கடியான வேளைகளில்கூட ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. நபிகள் நாயகம் அவர்கள் மக்காவி லிருந்து மதீனாவுக்குச் செல்லும்போது குறைவான எண்ணிக்கையானவர்களே அவர்களோடு இருந்தார்கள். எல்லாரும் ஏழைகள். குதிரை இல்லை, ஆயுதங்கள் இல்லை. அந்தச் சமயத்தில் ஆட்கள் தேவைப்படு கிறார்கள். அப்போது இரண்டு நபர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வருகிறார்கள். அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் கேட்டார்கள்: "உங்களை குறைஷியர்கள் பிடித்தார்களே..! அப்போது நீங்கள் என்ன சொல்லி விட்டு வந்தீர்கள்?' அதற்கு அவர்கள் "நீங்கள் மதீனாவுக்குச் சென்றால் போரில் கலந்து கொள்ள மாட் டோம் என்று உறுதிமொழி கொடுத்தால் உங்களை மதீனாவிற்கு அனுப்புகிறேன்' என்றõர்கள். அதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் "அப்படியானால் நீங்கள் போரில் கலந்து கொள்ளாதீர்கள்' என்றார்கள். ஆட்களின் தேவை அதிகம் இருந்த அந்தச் சூழலி லும் நபிகள் நாயகம் அவர்கள், "வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற வேண்டும். எனவே நீங்கள் படையில் கலந்து கொள்ள வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள்.

ஒப்பந்தங்களைப் பேணுதல்

ஒப்பந்தங்களைப் போட்டால் அவற்றை எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அண்ணலார் மீற மாட்டார்கள். பிறர் ஒப்பந்தம் செய்தால் அவர்களாக மீறாத வரை நபிகள் நாயகம் அவர்கள் ஒப்பந்தத்தை மீற மாட்டார்கள். போரிலே ஒழுங்குகளைக் கடைப்பிடித்தார்கள். "அப்பாவிகளை, குழந்தைகளை, முதியோர்களை, துறவிகளைத் தாக்கõதீர்கள். சொத்துகளை அழிக்காதீர்கள். நாச வேலை களில் ஈடுபடாதீர்கள். மடங்களில் இருக்கும் துறவிகளைத் தாக்காதீர்கள்' என்று ஆணை யிட்டார்கள்.

மன்னிக்கும் மாண்பு

பழிவாங்குதல் வெறுப்பின் ஒரு பகுதி. நபி(ஸல்) அவர்களுக்கு வந்த பல எதிர்ப்புகள் மறைந்து போனதற்குக் காரணமே அவர்களின் மன்னிக்கும் மனப்பான்மைதான். அதுதான் எதிர்ப்புகளை மழுங்கச் செய்தது. தண்டிக்கும் சக்தி பெற்ற நிலையிலும் ஒருவரை மன்னிப்பதுதான் கண்ணியத்திற்கு ரியது. அண்ணல் நபிகளார் மக்காவை வெற்றி கொண்டபோது அவர்கள் நடந்துகொண்ட விதம் வரலாற்றில் காணக்கிடைக்காத அற்புத நிகழ்வு. 13 ஆண்டுகாலம் மக்காவில் அவர் களைக் கொடுமைப்படுத்தியவர்கள், வேதனைப்படுத்தியவர்கள், ஒதுக்கி வைத்தவர்கள் கைதிகளாகப் பிடிபட்டபோது அனைவரையும் மன்னித்தார்கள். "இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை' என எல்லாவற்றையும் மன்னித்து விட்டõர்கள். ஒரே வரியில் ஒரே வார்த்தையில் அனைத்தையும் மன்னித்து விட்டேன் என்றார்கள்.

பெருமானார்(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது உதுமான் பின் தல்ஹா என்பவரிடத்திலே கஅபாவின் சாவி இருந்தது. அவர்தான் கஅபாவின் சாவியைப் பாதுகாப்பவர். அவரிடம் "அந்தச் சாவியைக் கொஞ்சம் கொடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, தல்ஹா சாவியைத் தர மறுத்துவிட்டார். "ஒரு காலம் வரும். அப்போது சாவி என்னிடத்தில் இருக்கும். நான் நாடியவர்களுக்கு அந்தச் சாவியைக் கொடுப்பேன்' என்று நபிகளார் கூற, அதற்கு "அப்படி ஒரு காலம் வந்தால் அரபுகள் உயிரோடு இருக்கமாட்டார்கள்' என்று உதுமான் பின் தல்ஹா கூறினார். நபிகள் நாயகம் சொன்னார்கள், "இல்லை அப் போதுதான் குறைஷிகள் மிகவும் பெருமை யோடு இருப்பார்கள்.' காலச்சக்கரம் சுழன்றது. 20 ஆண்டுகள் கழிந்த பின் நபி(ஸல்) அவர்கள் வெற்றி வீரராக மக்காவுக்குள் நுழைகின்றார்கள். அப்போது, "எங்கே அந்த உதுமான் பின் தல்ஹா?' என்று வினவி அவரை அழைத்து அவரிடமே சாவியைக் கொடுத்தார்கள். "இந்த உலகம் முடியும் வரை சாவி உம்மிடமும் உம் வாரிசுகளிடமும்தான் இருக்கும்' என்று கூறி அவமானப்படுத்தியவருக்கும் வெகுமானம் தந்தவர்கள் பெருமானார்.

இன்றுவரை அந்தக் குடும்பத்தில்தான் கஅபாவின் சாவி இருக்கிறது. நபிகளார் எதற்கும் பழிக்குப் பழி வாங்கியதில்லை. அவர்களது மன்னிப்பின் வாயிலாக அரபு தீபகற்பம் முழுவதும் இஸ்லாத்தைத் தழுவுவதற்குக் காரணமாக அமைந்தது என்பதை நம்மால் பார்க்க முடியும். நபிகளார் என்ற அள்ளக் குறையாத கடல்போன்ற பெருவாழ்விலிருந்து சில துளிகளையே இங்கு குறிப்பிட்டுள்ளோம். இது போன்று அவர்களது வாழ்வு முழுவதும் எல்லாருக்குமான வழிகாட்டுதல்களும், செய்திகளும் நிறையவே இருக்கின்றன. நபி களாரை வாசிப்போம். பின்பற்றுவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்