மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை அரசியல்

சவுக்கு சங்கருக்குத் தண்டனை: கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு
சேயன் இப்ராகிம், 1 - 15 OCTOBER 2022


 

சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு தாமாகவே முன்வந்து எடுத்து விசாரித்து இத்தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையான ஆறு மாத சிறைவாசம் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டுள்ளது. "நீதித்துறை ஊழல் மயமாகிவிட்டது' என்று சவுக்கு சங்கர் தனது யூடியூப் பக்கங்களில் விமர்சனம் செய்ததே அவர் மீதான இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்குக் காரண மாகும். ஆனால் இதற்கு முன்னர் அவர் நீதிபதி சுவாமிநாதனின் சில தீர்ப்புகளை விமர்சனம் செய்து எழுதி இருந்தார். மற்றொரு யூடியூபரான மாரிதாஸ் சென்ற 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி யில் கொரோனா பரவலுக்கு தப்லீக் இயக்கத்தினரே காரணம்! அவர்கள்தான் ஒருவர் மீது ஒருவர் எச்சிலை உமிழ்ந்து இந்த நோயைத் திட்டமிட்டு பரப்பினர் என்று பேசி இருந்தார்.

மேலப்பாளையத்தில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள தமிழக அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. தன்மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி அதனை இரத்து செய்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை விமர்சனம் செய்தே சவுக்கு சங்கர் பேசியிருந்தார். இதனை நீதிமன்ற அவதூறாக எடுத்துக் கொண்ட நீதிபதி சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார். ஆனால் ஒரு நீதிபதிக்கு எதிராக விமர்சனம் செய்யப்பட்ட விவகாரத்தை அந்த நீதிபதியே விசாரணை செய்வது மரபுகளுக்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு அவர் அந்த வழக்கினை அப்படியே விட்டுவிட்டு, "நீதித்துறையே ஊழல் மயமாகிவிட்டது' என்ற சங்கரின் இரண்டாவது குற்றச்சாட்டை எடுத்து விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை இரண்டு நாள்கள் மட்டுமே நடைபெற்றது. முதல்நாளில் நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்குக் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது. ஒரு வாரம் அவ காசம் கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்தபோது அதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். கால அவகாசம் முடிந்து சென்ற 15.9.22 அன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, "தான் எழுப்பிய குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அதற்காக தான் வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கப் போவதில்லை' எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

 

 

வழக்கறிஞரின் துணையின்றியே அவர் வாதாடினார். இந்நிலையில் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு சவுக்கு சங்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதாகக் கூறி அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தனர். முதல் கட்ட விசாரணையின்போது, "நீங்கள் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளப் போகிறீர்களா? உங்களுக்கு இலவச சட்ட உதவி மையத்திலிருந்து வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கலாமா?' என கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன் இரண்டாம் கட்ட விசாரணையின் போது அது குறித்து எதுவும் கேட்கவில்லை தண்டனையை வழங்கி விட்டார். நீதித்துறை வரலாற்றில் மிக விரைவாக விசாரித்து தண் டனை வழங்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு விசாரணை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே மீது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். "உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல்வாதிகள்' என அவர் தெரிவித்திருந்த இன்னொரு கருத்துக்காகவும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அவரது தந்தையார் சாந்தி பூஷன் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 

 

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை குறித்து தலையங்கம் எழுதியுள்ள தி இந்து ஆங்கில நாளிதழ் (16.09.22) சில கேள்விகளை எழுப்பி உள்ளது. 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர்களை வரவழைத்து அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்யும்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும் சீனியர் நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் அற்ற சாதாரண வழக்குகளையே ஒதுக்கீடு செய்வதாகவும் குற்றம் சாட்டியதைச் சுட்டிக் காட்டி இதைவிட நீதிமன்ற அவமதிப்பு வேறு இருக்க முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் சவுக்கு சங்கர் தனது கட்டுரையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை நியமனம் செய்யப் பரிந் துரைக்கப்படும் வழக்கறிஞர்களின் பட்டிய லில் இரண்டு மூன்று பிராமண சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த வழக்கறிஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் குற்றம் சாட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டி அவரது நோக்கம் சமூக நீதியைப் பாதுகாப்பதுதான் எனவும் அந்த நாளேடு கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி சுவாமிநாதன் மீது சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருக்கும்போது, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக அவர் இருந்திருக்கக்கூடாது எனவும் தி இந்து நாளிதழ் சுட்டிக்காட்டி உள்ளது.

சாதாரண பாமர மக்களும் இந்தத் தீர்ப்பு குறித்து கண்டனம் தெரிவிக்கின்றனர். பிஜேபி தலைவர் ஹெச்.ராஜா நீதிமன்றம் குறித்து மிக மிகத் தரக்குறைவாக விமர்சனம் செய்த போதும், "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளின் காலில் விழுந்து பதவிக்கு வருகிறார்கள்' என இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசியதையும் ஏன் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி ஒருமுறை, "வழக்கறிஞர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர் ஒரு பிரிவினர் சட்டம் தெரிந்தவர்கள். இன்னொரு பிரிவினர் சட்ட அமைச்சரைத் தெரிந்தவர்கள்' என்று குறிப்பிட்டார். இதுவும் அப்போது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படவில்லை.

 

 

நீதிபதி சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்ற குற்றச்சாட்டை வைக்கும்போது அதற்குப் பதில் அளிக்கும் சில வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பொதுவுடமை கொள்கை கொண்டவர். அவர் நீதிபதியாக இருக்கவில்லையா என்று பதில் அளிக்கின்றனர். ஆனால் நீதிபதி சந்துரு வழங் கிய எந்தத் தீர்ப்பும் விமர்சனத்திற்கு உள்ளானது இல்லை என்பதையும் நீதிபதி சுவாமிநாதன் அளிக்கும் பெரும்பாலான தீர்ப்புகள் விமர்ச னத்திற்கு உள்ளாகின்றன என்பதையும் வசதி யாக அவர்கள் மறந்து விடுகின்றனர். இன்றைக்கு சாதாரண மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் நீதித் துறையின் பால் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

சிறுபான்மை மக்களைப் பாதிக்கின்ற வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த பல சட்டங்களை எதிர்த்துத் தொடுக்கப் பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. அவை:

1. முத்தலாக் தடை மசோதா

2.  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு இரத்து

3. காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அதன் மாநில அந்தஸ்தைக் குறைத்தது

4. குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா 2019.

இவை தவிர முன்னேறிய வகுப்பினருக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில் வழங்கப் பட்டுள்ள 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கும் நிலுவை யில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது அப்போதைய தலைமை நீதிபதி ரமணா "இது ஒன்றும் அவசர வழக்கல்ல' என்று கூறினார்.

தற்போது மேற்கண்ட வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே என்பதை நீதிமன் றங்கள் உணராமல் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. நீதிமன்றங்களையே மக்கள் தங்களது கடைசி வாய்ப்பாகக் கருது கின்றனர். அந்த வாய்ப்பை அவை மறுக்கக் கூடாது. நீதிமன்றங்களின் மாண்பு நீதிபதிகளாலும் அவர்கள் வழங்குகின்ற தீர்ப்புகளாலும்தான் பாதுகாக்கப்படுமே தவிர சவுக்கு சங்கர் போன்றவர்களைத் தண்டிப்பதால் அல்ல! யூடியூபர் மாரிதாஸûக்கு இருக்கக்கூடிய கருத்துச் சுதந்திரம் சவுக்கு சங்கருக்கு இல்லையா என்று மக்கள் எழுப்புகின்ற கேள்விக்கு நீதிமன்றங்களிலிருந்து தக்க பதில் இல்லை. நீதிமன்றங்கள் இராணுவம் உட்பட நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும், நிறுவனங்களிலும் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு மக்கள் அளிக்கின்ற வரிப்பணத்தில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அந்த மக்களுக்குக் கேள்வி கேட்கின்ற உரிமை உண்டு. நீதிமன்ற அவமதிப்பு என்று காரணம் காட்டி அந்த உரிமையை மறுக்கக்கூடாது. சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற குரல் தற்போது உரக்க எழுப்பப்பட்டு வருகிறது. அந்த குரல்களோடு நமது குரல்களும் இணையட்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்