மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

திருக்குர்ஆனின் பக்கம் மீள்வதற்கான வழிகள்
ஜி.சையத் முஹம்மத், 16-30 OCTOBER 2022


 

திருக்குர்ஆன் இறைவனால் மனிதகுல வழிகாட்டியாக இறக்கி வைக்கப் பட்ட வேதம். உண்மையில் இவ்வேதத்துடன் எத்தகைய தொடர்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் நமக்கும், மனித குலத்திற்கும் கிடைப்பது என்ன என்பதைப் பார்ப்போம்.

1. ஓதுதல்(வாசித்தல்)

எந்த ஓர் அறிவைத் தேடும் கல்விக்கும் அடிப்படை வாசித்தல்தான். கல்வியின் தொடக்கம் வாசித்தல். வாசித்தல் கண், உதடு, காது என்ற உறுப்புகளோடு தொடர்புடையது. வாசித்தல் சரியாகவும், முறையாகவும் இருக்க வேண்டும் என்று குர்ஆன் வலியுறுத்துகின்றது. "குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓது வீராக!' (திருக்குர்ஆன் 73:4) "எவர்களுக்கு நாம் வேதத்தை அருளி யிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள்.'

(திருக்குர்ஆன் 2:121) மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடை என்று குர்ஆன் தன்øனப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த வேத வெளிப்பாடு நிறைவு பெற்ற நாளில் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. "இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன்.

இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்  வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன்.' (திருக்குர்ஆன் 5:3)

ஆகவேதான் இந்த மாபெரும் அருட்கொடையை நோக்கி வைக்கும் முதல் அடியாகிய வாசித்தலுக்கு, ஓர் எழுத்துக்கு பத்து நன்மை இருப்பதாக இறைத்தூதர் மூலமாகவும், வாசித்தலைக் கேட்பதற்கு அருள் பொழியப்படுவதாக திருமறை மூலமாகவும் அதைப் படிப்பவருக்கு ஆர்வ மூட்டப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்ஆனைப் படியுங்கள். அதற்காக உங்களுக்குக் கூலி கிடைக்கும். அலீப் லாம்  மீம் ஓர் எழுத்து என்று நான் சொல்ல வில்லை. மாறாக, அலீப்க்கு பத்தும், லாமுக்கு பத்தும், மீமுக்கு பத்தும் ஆகவே அது முப்பது (நன்மைகள்) ஆகும்.'

நூல்: தாரகுத்னீ "குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும் போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்!

உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.' (திருக்குர்ஆன் 7:204) தொடக்க முயற்சியாக வாசித்தலுக்குத் தரப்படும் நன்மைகள், அருட்கொடைகள் குர்ஆனுக்கு ஒரு மனிதன் செய்ய வேண் டிய கடமையைச் செய்வதற்காகக் கொடுக்கப்படுவதல்ல. மாறாக இந்தப் பேரருளை நோக்கி மனிதன் வரத் தொடங்கியதற்காக, அந்த கருணைமிக்க இறைவனால், குர்ஆனின் மகத்துவத்திற்காக வழங்கப்படும் பரிசாகும். இது நாம் நினைவில் கொள்ள வேண்டிய முதல் அம்சம். இன்றைக்கு முஸ்லிம் சமூகம் இந்த முதல்நிலையே போதும் என்று கருதுவது விநோதம். இந்த முதல்நிலைக்கு வராமல் பலர் இருப்பது அதைவிடப் பெரும் சோகம்.

2. கற்றல்  விளங்குதல்

உறுப்புகளுடனான (கண், உதடு, காது) குர்ஆனுடைய உறவை, அடுத்து அறிவுக் குக் கொண்டு செல்ல வேண்டும். ஆம்! குர்ஆன் கூறும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம். மரணம், மரணத்திற்குப் பின்னுள்ள நிலை, வாழ்க்கை வழிகாட்டு தல்கள், சட்ட வரையறைகள், விதிகள், நன்மை, தீமை பற்றிய கருத்தோட்டங்கள். இவற்றை ஐயமறக் கற்பதும், விளங்குவதும் அது குறித்து சிந்தித்து நல்லுணர்வு பெறுவதும் ஒவ்வொருவரின் கடமை.

3. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல்

அறிவில் உள்ளவை அனைத்தையும் செயல்படுத்த முடியுமா? மனிதனிடம் உள்ள பிரச்னையே இதுதான். மனிதன் என்பது அவனது உள்ளம்தான். அந்த உள்ளம் வெறுமையானது அல்ல. பல்வேறு நல்ல, தீய உணர்வுகள், குணங்களின் இருப்பிடம். "மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், அதன் தீமை யையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!' (திருக்குர்ஆன் 91:7,8) கற்ற விஷயங்களைச் செயல்படுத்தத் தடையாக இருப்பது உள்ளத்தின் தீய உணர்வுகள், இச்சைகள் (உதாரணம்: பேராசை, சுயநலம், பொறாமை, கர்வம், ஆணவம், பிடிவாதம், மோகம்) போன்ற உள்ளத்தின் இந்த உணர்வுகளை அடக்கி, குர்ஆனுக்கு உடன்படும் உள்ளமாக,முரண்படாத உள்ளமாக ஆக்குவதே தஸ்கியா  தூய்மைப்படுத்துதல்.

4. உறுதிகொள்ளல்

திருமறையின் வாயிலாகக் கற்றுக் கொண்ட வாழ்வியல் கண்ணோட்டங்கள், கொள்கைக் கோட்பாடுகள், சட்ட விதி முறைகள், வரையறைகள், நன்மை, தீமை பற்றிய விளக்கங்கள், இலாப  நஷ்டம் பற்றிய பார்வைகள் யாவும் உண்மையானவை என்று உறுதியாக நம்புதல். இந்தக் கண்ணோட்டத்துடன் உலக வாழ்வை அணுகுதல். இது மிக முக்கியமானதாகும்.

5. நல்லறங்கள் புரிதல்

திருமறையைக் கற்றதால் பெற்ற உறுதி யான நம்பிக்கை சார்ந்த அறிவின் அடிப் படையில், வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் செயல்படுதல், இதன் மூலமாக ஒரு மனிதன் தன்னளவில் அமைதி பெறுதல். இது தனி மனிதன் அடைய வேண்டிய முக்கியமான இலக்காகும்.

6. இறைவனின் பக்கம் அழைத்தல்

எந்த அறிவு, புரிதலின் மூலமாக செயல் பட்டதில் நாம் அமைதி அடைந்தோமோ அந்த அமைதி நிறைந்த வாழ்வியலின்பால் பிற மக்களை அழைத்து முழு உலகிலும் அமைதியை நிலைநாட்டுதல். இதுவே இறை மறை வழங்கப்பட்டதன் இறுதி நோக்கம்! இஸ்லாத்தின் நோக்கம். இதுவே முஸ்லிமின் தகுதியும் பொறுப்பும் ஆகும் என்று திருமறை இயம்புகிறது. "எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம்(இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரை விட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக் கிறார்?' (திருக்குர்ஆன் 41:33) திருக்குர்ஆனின் பக்கம் மீள்வது என்பது இதல்லாமல் வேறென்ன இருக்க முடியும்?

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்