மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
சேயன் இப்ராகிம், 1-15 நவம்பர் 2022


அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்குமென்றும், இந்தியைப் பொதுமொழியாக்கும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்றுமொழியாக ஆக்கப்பட வேண்டுமென்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்காக நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு இந்தியைத் திணிக்கின்ற முயற்சியேயன்றி வேறில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் 18.10.22 அன்று முதல்வரால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. பாஜக தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தது. அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தைக் கிளப்பி புறக்கணிப்புச் செய்தது.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1937ஆம் ஆண்டிலிருந்தே தமிழகம் போராடி வருகிறது. 1965ஆம் ஆண்டு இப்போராட்டம் கொதிநிலையை அடைந்தது.

அப்போது நாட்டின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி "இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகின்றவரை, ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும்' என்று வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தபோது, இந்திமொழி பள்ளிக்கூடங்களிலிருந்து நீக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே(அதாவது தமிழும் ஆங்கிலமும்) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மாறாக, ஒன்றிய அரசில் பொறுப்பு வகிக்கின்ற அரசுகள் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்தி வருகின்றன. அதிலும் தற்போதைய பாஜக அரசு இந்தியை நாடு முழுவதும் அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கியே தீர வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் மும்மொழிக் கொள்கை நாடு முழுவதிலும் நடைமுறையில் இருக்கிறதா? இந்தி பேசுகின்ற மாநிலங்களில் தாய் மொழியான இந்தியும் ஆங்கிலமும் தவிர வேறு ஏதேனும் ஓர் இந்திய மொழி கற்றுக் கொடுக்கப்படுகின்றதா? இல்லவே இல்லை.

தமிழையோ அல்லது வேறு ஓர் இந்தி அல்லாத மொழியையோ கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத் தேவை எதுவும் அவர்களுக்கு இல்லை. தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைக்குப் பிறகு இந்தி பேசுகின்ற மாநிலங்களில் ஒருமொழிக் கொள்கை(அதாவது இந்தி) மட்டுமே நடைமுறையில் இருக்கும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்க வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்காது.

ஆங்கிலத்தைப் பொறுத்த அளவில், அது இந்தியர்கள் அனைவருக்கும் ஓர் அந்நிய மொழி. அது அலுவல் மொழியாகவோ அல்லது பயிற்று மொழியாகவோ இருந்தால், அதனால் விளையும் சாதக பாதகங்கள் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அந்த இடத்திற்கு இந்திமொழி கொண்டு வரப்பட்டால் அது இந்தி பேசுகின்ற மாநிலங்களுக்குச் சாதகமாகவும், இந்தி பேசாத மாநிலங்களுக்குப் பாதகமாகவும் அமையும். ஆங்கிலம் அந்நிய மொழி. அதனை அகற்றுவது சரிதான் என இந்தி மொழிக்கு வக்காலத்து வாங்குபவர்களும், வலதுசாரிகளும் வாதிடுகிறார்கள். ஆனால் இந்தி பேசாத மாநில மக்களுக்கு இந்தி மொழியும் ஓர் அந்நிய மொழியே என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தில் உச்சநிலையில் இருந்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைவர்களும், இந்திமொழி ஆதரவாளர்களும், அம்மொழியைப் படித்தால்தான் வடமாநிலங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எனவே அதனைக் கற்க வேண்டும் என வாதிட்டனர். ஆனால் நிலைமை என்ன? தமிழக மாணவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி வடமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படவே இல்லை.

ஏனெனில் அங்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கவில்லை. மாறாக இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்ட தமிழக மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், கணிப்பொறி வல்லுநர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்தியைப் புறக்கணிப்பதால் தமிழக மாணவர்களுக்குப் பாதிப்பு எதுவுமில்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் பயிலாத காரணத்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் பின்தங்கியே இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமான நிலையாகும்.

கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழகத்தில் பார்த்து வருகின்ற நிலைமை என்ன? தமிழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் கூலி வேலை செய்வதற்காகக்கூட வடமாநிலங் களுக்குச் செல்லவில்லை. மாறாக பீகார், ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலிருந்துதான் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து கட்டுமானப் பணிகளிலும் இன்னபிற உடலுழைப்பு சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி வடமாநிலங்களிலிருந்து தமிழகம் வருகின்ற அந்தத் தொழிலாளர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு தமிழகம் வரவில்லை. இங்கு வேலை செய்ய வந்தார்கள். சில மாதங்களிலேயே தமிழைப் பேசக் கற்றுக் கொண்டார்கள். அதுபோல தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அரபு மொழியைக் கற்றுக் கொண்டு அங்கே செல்லவில்லை. அங்கு சென்றார்கள். அரபு மொழியைப் பேசாமலேயே பலருக்கு அங்கு காலம் தள்ள முடிகிறது.

1950களில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பம்பாய் சென்று குடியேறி அங்கேயே நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்தி அல்லது மராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு அங்கு செல்லவில்லை. அதுபோல் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும்(குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில்) சேலம், கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களிலிருந்து குடியேறி பல்வேறு வணிகத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற வடஇந்திய சேட்டுகளும் மார்வாடிகளும் தமிழைக் கற்றுக் கொண்டு இங்கே வரவில்லை. இங்கே வந்தார்கள். குடியேறினார்கள். தமிழ் பேசக் கற்றுக் கொண்டார்கள். இன்றைய தலைமுறையினர் தமிழில் எழுதவும், பேசவும் செய்கிறார்கள். எனவே ஒரு மாநிலத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமானால் அந்த மாநிலத்தின் அல்லது நாட்டின் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இடம், தேவை கருதி அவர்கள் அந்த மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார்கள். இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் பிதற்றுவது தேவையற்றது.

இப்படி நாம் மறுமொழி கூறினால், கூடுதலாக இன்னொரு மொழியை அதுவும் இந்தியைக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என அவர்கள் வாதிடுவார்கள். இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. விரும்புகிறவர்கள் கற்றுக் கொள்ளலாம். கட்டாயப்படுத்தி எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்றுதான் கூறுகிறோம். தமிழ்நாடெங்கும் ஏராளமான இந்தி பிரச்சார சபைகள் இருக்கின்றன. அவை இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்கின்றன. அதுவும் இலவசமாகவே! எனவே இந்திமொழி தேவை என விரும்புகிறவர்கள் அந்த அமைப்புகளில் சேர்ந்து அம்மொழியைக் கற்றுக் கொள்ளலாம். பல நூற்றுக்கணக்கானவர்கள் அப்படிக் கற்றுக்கொண்டுதான் வருகிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கற்றுக் கொடுத்தால் என்ன என அடுத்த கேள்வியை எழுப்புகிறார்கள். 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுகவும், அதிமுகவும் இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்கின்றன. தங்களது தேர்தல் அறிக்கைகளிலும் இந்த இரு கட்சிகளும் இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும், இந்தி மொழிக்கு இடமில்லை எனவும் தெளிவாகத் தெரிவித்துள்ளன. எனவே இக்கட்சிகளுக்கு மக்களின் உத்தரவு இருக்கிறது. அதன்படியே செயல்படுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது?

இன்றைய ஒன்றிய பாஜக அரசின் நோக்கம் இந்தியை அலுவல் மொழியாகவும், பயிற்றுமொழியாகவும் படிப்படியாகக் கொண்டு வருவது, பின்னர் அந்த இடத்திற்கு சமஸ்கிருத மொழியைக் கொண்டு வருவதேயாகும். ஏனெனில் இந்தியிலிருந்து சமஸ்கிருதத்திற்கு வெகுஎளிதாக மாறிவிட முடியும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மொழிக் கொள்கை அதுதான். அதைச் செயல்படுத்தவே பாஜக அரசு முனைகிறது. அதன் காரணமாகவே இந்திமொழி வளர்ச்சிக்கும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் மிக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது. மற்ற மொழிகளுக்கு மிக மிகக் குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுவே ஒரு பாரபட்சமான போக்குதான்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளும் அலுவல் மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கவேண்டும் என்பதே சரியான மொழிக் கொள்கையாக இருக்க முடியும். அதை விட்டு விட்டு இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகும்.

"செப்பும் மொழி பதினெட்டுடையாள்; எனில் சிந்தனை ஒன்றுடையாள்' என்றார் பாரதியார். செப்பும் மொழி பதினெட்டிற்கும் சம வாய்ப்பு அளித்தால்தான் இந்தியாவின் சிந்தனை ஒன்றுபட்டதாக இருக்கும். செப்பும் மொழி ஒன்றென்றால் சிந்தனை பதினெட்டாகி விடும் என்று அன்றே எச்சரித்தார் பாரதி. அந்த மகாகவியின் வரிகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்