மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியல்

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் - சில சிந்தனைகள்
சேயன் இப்ராகிம், நவம்பர் 16-30


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் ஆங்கிலேயர் அல்லாத, கிறித்தவர் அல்லாத முதல் பிரதமர் இவரே. போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த பிரதமருக்கான கட்சித் தேர்தலில் இவரும் களத்தில் இருந்தார். எனினும் மற்றொரு போட்டியாளரான ரன லிஸ்டிரஸ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்று பிரதமரானார்.

ஆனால் அவர் வெறும் 45 நாள்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தார். பெருமளவு வரிக்குறைப்புச் செய்ததன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பின்னடவைச் சந்தித்ததை அடுத்து அவர் பதவி விலகினார். அடுத்த பிரதமருக்கான தேர்வில் ரிஷி சுனக் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவருக்கு இந்திய நாட்டுத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நாமும் வாழ்த்துவோம்!

ரிஷி மூலம்

ரிஷி சுனக்கின் மூதாதையர்கள் அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில், இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற குஜ்ரன் வாலா என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரின் தந்தை கென்யாவில் பிறந்த யஷ்வர் சுனக். தாயார் தன்சானியாவில் பிறந்த உஷா. கென்யாவிலிருந்து கிளம்பி இலண்டனில் குடியேறி வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினரின் மகனாக ரிஷி சுனக் 12.5.1980 அன்று பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். அப்போதே கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

2015ஆம் ஆண்டு ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 2017, 2019 தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2020ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தற்போது பிரதமராகியுள்ளார். இன்போசிஸ் அதிபரான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.

பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை இவர் மீட்டெடுப்பாரா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முதிர்ச்சியுள்ள ஜனநாயகம்

இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் வெளிநாட்டின் உயர் பொறுப்புக்கு வருவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே இந்திய வம்சாவளியினரான (தமிழ்நாட்டைப் பூர்வீக மாகக் கொண்ட) கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஹலீமா யாகூப் தற்போது சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருக்கிறார். ஏற்கனவே அந்நாட்டின் ஜனாதிபதியாக எஸ்.ஆர்.நாதன் பொறுப்பு வகித்திருந்தார். அண்டை நாடான மலேசியாவில் தமிழரான டத்தோ சாமிவேல் அமைச்சராகப் பல்லாண்டுகள் பதவி வகித்தார். மொரிஷியஸ் தீவுகள், பிஜித் தீவுகளின் ஜனாதிபதிகளாகவும் தமிழ் வம்சாவளியினர் பதவி வகித்துள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இந்திய வம்சாவளியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் தலைநகரான இலண்டன் நகரின் மேயராக சாதிக் கான் என்ற பாகிஸ்தானியர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்து வருகிறார். அமெரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் மத, இன, மொழிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலுமிருந்தும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த நாடுகளில் ஜனநாயகம் அந்த அளவுக்கு வலுவாகவும் முதிர்ச்சியுள்ளதாகவும் இருக்கிறது.

ரிஷியும் மன்மோகனும்

ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், ’2004ஆம் ஆண்டு சோனியா காந்தி இந்திய நாட்டின் பிரதமராகப் பொறுப்பை ஏற்கத் தகுதியற்றவர்; ஏனெனில் அவர் இத்தாலிய நாட்டைச் சார்ந்தவர்' என்று சில பாஜக தலைவர்கள் பேசியதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். (சோனியா பிரதமரானால் நான் மொட்டை அடித்துக் கொண்டுதான் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான மறைந்த சுஸ்மா சுவராஜ் கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.)

இந்திய அரசு சட்டப்படி நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சோனியா காந்தி பிரதமராக வருவதற்கு சட்ட ரீதியான எந்தத் தடையுமில்லை. அவர் இந்தியரான ராஜீவ் காந்தியின் துணைவியார். இந்தியக் குடியுரிமை பெற்றவர். எனினும் அவர் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என பாஜக தலைவர்கள் அப்போது வாதிட்டனர்.

காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுக்குப் பாஜக தலைவர்கள் அப்துல் கலாம் ஜனாதிபதியாகவில்லையா டாக்டர் மன்மோகன் சிங் பிரதமார் ஆகவில்லையா எனப் பதிலளித்துள்ளனர். டாக்டர் அப்துல் கலாமும், டாக்டர் மன்மோகன் சிங்கும் இந்தியர்கள். தலைமுறை தலைமுறையாக இந்தியாவிலேயே வாழ்ந்து வருபவர்கள். ஆனால் ரிஷி சுனக் இங்கிலாந்தில் குடியேறியவர். அவரது மூதாதையர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களல்ல. எனவே ரிஷி சுனக்கை அப்துல் கலாமுடனும், மன்மோகன் சிங்குடனும் ஒப்பிடுவது சற்றும் பொருத்தமற்றது.

மேலும், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் பிரதமர் பதவிதான் அதிகாரம் மிக்க பதவி. ஜனாதிபதி பதவி ஓர் அலங்காரப் பதவியே. மந்திரி சபையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டே ஜனாதிபதி செயல்பட முடியும். அந்தப் பதவிக்கு முஸ்லிமான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சிறப்பு எதுவுமில்லை. இதற்கு முன்னரும் டாக்டர் ஜாகிர் ஹுஸைன், பக்ருதீன் அலீ அகமது ஆகிய முஸ்லிம்கள் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்துள்ளனர். இந்திய நாட்டின் பிரதமர் பதவிக்கு ஒரு முஸ்லிம் வர முடியுமா? அரசியல் சட்டத்தில் தடை இல்லா விட்டாலும், நடைமுறையில் அது சாத்தியமே இல்லை.

20 விழுக்காடு முஸ்லிம்கள் வசிக்கின்ற இந்திய நாட்டில் ஒன்றிய அமைச்சரவையில் பெயருக்குக்கூட முஸ்லிம் இல்லை. ஆளும் பாஜக கட்சியிலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினர்கூட நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு முஸ்லிம் இந்திய நாட்டின் பிரதமர் பதவிக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வர முடியாது என்பதே யதார்த்த நிலையாகும். இஸ்லாமிய நாடுகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டுள்ள பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் அங்குள்ள மத்திய அமைச்சரவைகளில் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது காங்கிரஸ் கட்சி. பாஜக அல்ல. தவிர சீக்கியர்கள் இந்து சமூகத்தின் உட்பிரிவாகவே கருதப்படுகின்றனர். எனவே இந்த விஷயத்தில் பாஜக பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமில்லை.

இந்தியாவில் இது சாத்தியமா?

அமெரிக்காவிலும், கனடாவிலும் ஐரோப் பிய நாடுகளிலும் குடியேறி வாழ்ந்து வரு கின்ற இந்தியர்கள் (குறிப்பாக இந்துக்கள்) அனைத்து சமய உரிமைகளையும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான கோயில்கள் அந்த நாடுகளில் உள்ளன. இந்தியாவை விடவும் பண்டிகைகளை அந்த நாடுகளில் வாழும் இந்துப் பெருங்குடி மக்கள் விமரிசையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடுகின்றனர். கனடா, சுவிட்சர் லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். தங்களது தாயகத்தில் கிடைக்காத பாதுகாப்பு அந்த நாடுகளில் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்ற மலேசியாவின் தலைநகராக கோலாலம்பூரில் உலகிலேயே மிக உயரமான பத்து மலை முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது. தைப்பூசம் மலேசியாவில் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினத்தை மலேசிய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற இந்தோனேஷியாவில் இந்துக்களின் வழிபாட்டு, பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் சில தொகுதிகளில் இந்திய வம்சாவளியினர் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். எனவே அவர்களின் ஆதரவைப் பெறுவதில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகள் பெரும் முனைப்புக் காட்டி வருகின்றனர். சென்ற முறை அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி அங்குள்ள ஹுஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றுகின்றபோது அன்றைய ஜனாதிபதி டொனால்டு டிரம்பை ஆதரித்துப் பேசினார். வரவிருக்கின்ற தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இது மரபை மீறிய செயல் என்ற போதிலும் அதனை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜனநாயகக் கட்சி விமர்சனம் செய்யவில்லை. அந்த அளவுக்கு அமெரிக்க ஜனநாயகம் நெகிழ்வாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கிறது.

கிறித்தவ சமய மக்கள் மிகப் பெரும்பான்மையினராக இருக்கின்ற இங்கிலாந்தில் ஓர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் பிரதமர் ஆவதற்கு அந்த நாட்டு ஜனநாயகம் வழிவ குக்கிறது. ஆனால் இந்தியாவில் மிகப் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அதுவும் இந்த நாட்டையே தங்களது பூர்வீகமாகக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை முற்றிலும் இழந்து விட்டனர். இந்திய ஜனநாயகத்தின் சாதனை இதுதானோ?

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறிய இந்தியர்களுக்கு மதம், இனம், மொழிப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. வாக்குரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் அரசியல் அதிகார மையங்களில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் சமய அடிப்படையில் குடியுரிமைக் கொள்கையைச் செயல்படுத்த இன்றைய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. CAA, NPR, NRC ஆகிய புதுப் புதுச் சட்டங்கள் மூலம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகளான முஸ்லிம்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுகிறார். பட்டாசு வெடிக்கிறார். இந்து சமய மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இது போன்ற ஒரு சமய சார்பற்ற, சமய நல்லிணக்க நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடியிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா?

மேற்குறிப்பிட்டுள்ள நாடுகளில் வாழுகின்ற இந்தியர்களின் சமய, வழிபாட்டு உரிமைகளை அந்த நாடுகள் மதிக்கின்றன. வாழுகின்ற உரிமையை மட்டுமல்ல ஆளுகின்ற உரிமையையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றிருப்பது இதற்குத் தக்கச் சான்றாகும். ஆனால் இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு ஆளுகின்ற உரிமை கிடைக்கவில்லை. அதனை இந்திய முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் கண்ணியமாக வாழுகின்ற உரிமையையே அச்சமூகம் எதிர்பார்க்கிறது. அதற்கும் பாஜக ஆட்சியில் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து ஜனநாயகத்திலும், மனித மாண்புகளிலும் நம்பிக்கை கொண்டுள்ள யாரும் மகிழ்ச்சியடைய முடியாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்