பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு(Economically Weaker Sections) கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ஒன்றிய அரசின் 103ஆவது சட்டத்திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி கொண்ட அமர்வு 3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு அளித்துள்ளது.
8.1.2019 அன்று ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மறுநாள் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேறியது.
இதன்படி ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஏற்கனவே இடஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளைத் தவிர்த்து பிற சாதிகளிலுள்ள நலிந்த பிரிவினருக்கே இந்த ஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இந்தச் சட்டம் 2019ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிறது.
ஏற்கனவே இடஒதுக்கீடு பெற்றுள்ள SC, ST, OBC சாதிப் பிரிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால், எஞ்சியிருப்பது சிறுபான்மையினரான முன்னேறிய சாதியினர் மட்டுமே. எனவே இதனை முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீடு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று கூறி திமுக, விசிக உள்ளிட்ட சில கட்சிகளும் தனிநபர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்தச் சட்டத்திற்குத் தடை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு இதனை விசாரித்து அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த அமைப்புகளின் சார்பில் கீழ்க்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
1. இடஒதுக்கீட்டின் நோக்கமே சமூகத்திலும் கல்வியிலும் ஆண்டாண்டுகாலமாகப் பின்தங்கியிருக்கிற SC, ST, OBC ஆகிய பிரிவு மக்களைக் கைதூக்கி விடுவதேயாகும். இந்தப் பிரிவு மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதற்காக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே இடஒதுக்கீட்டில் பொருளாதார ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கிடையாது. இதற்கு முன்னர் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இதனை உறுதி செய்துள்ளது. (இந்திரா ஷஹானி VS ஒன்றிய அரசு)
2. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு உதவி செய்ய வேண்டுமெனில் அவர்களுக்குப் பொருளாதார ரீதியில்தான் உதவி செய்ய முடியும். இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் இடமில்லை.
3. ஒன்றிய அரசு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போதோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையின் போதோ இந்தப் பிரிவினர் (EWS) சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டும் தரவுகள் அல்லது புள்ளி விவரங்கள் எதனையும் தாக்கல் செய்யவில்லை. உண்மையில் இந்தப் பிரிவு மக்கள் தங்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு அதிகமாகவே கல்வி, வேலை வாய்ப்புகளில் இடம்பெற்றுள்ளனர்.
4. இந்த இடஒதுக்கீடு வழங்க அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு வருமானம் ஐந்து இலட்சம் ரூபாய் அல்லது ஐந்து ஏக்கர் நிலம் அல்லது 1000 சதுர அடி வீடு என்பது அபத்தமானது. இதன்படி மாத வருமானம் ரூ. 65,000 பெறும் ஒருவர் இந்த இடஒதுக்கீட்டின் பயனை அடைய முடியும். ரூ. 65,000 மாத வருமானம் பெறுபவரை பொருளாதாரத்தில் நலிந்தவர் என்று எப்படிக் கூற முடியும்? ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டரை இலட்சத்தைத் தாண்டினால் வருமான வரி கட்டுபவராக இருக்க வேண்டும். எனவே ஆண்டு வருமானம் எட்டு இலட்சம் பெறும் ஒருவர் வருமான வரி கட்டுபவராக இருக்க வேண்டும். அவரை எப்படி ஏழையாகக் கருத முடியும்?
5. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசு வழங்கும் இடஒதுக்கீட்டில் SC, ST, OBC பிரிவு மக்களையும் சேர்க்க வேண்டும். ஏனெனில் அப்பிரிவு மக்களில்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
6. ஒட்டுமொத்த இடஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் போகக் கூடாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புக் கூறியுள்ளது. திறமைக்கும்(MERIT) இடஒதுக்கீட்டிற்குமிடையே ஒரு சமமான நிலைமை இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தாகும்.
மனுதாரர்கள் எழுப்பிய மேற்கண்ட வாதங்களில் 3, 4ஆவது அம்சங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பதில் ஏதும் கூறவில்லை.
பொருளாதார ரீதியில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகளில் ஒருவரான தினேஷ் மகேஸ்வரி "அரசு வழங்கும் இடஒதுக்கீடு SC, ST, OBC ஆகிய பிரிவினருக்கு மட்டும் பயனளிப்பதாக இருக்கக்கூடாது. பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள பிற பிரிவு மக்களுக்கும் வழங்க வேண்டும். அதுதான் சமத்துவம். எனவே இந்த 103ஆவது சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இல்லை' என்று கூறியுள்ளார்.
இந்த இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள மற்றொரு நீதிபதி திரிவேதி "50 விழுக்காட்டிற்கு மேல் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று முந்தைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றும் மாற்ற முடியாததல்ல. தேவை கருதி அதன் அளவை உயர்த்திக் கொள்வதில் தவறில்லை' என்று கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இந்த பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டில் SC, ST, OBC பிரிவு மக்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள நீதிபதி தினேஷ் மகேஸ்வரி "அப்பிரிவு மக்கள் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வருகிறார்கள். எனவே அவர்களை இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேர்த்துக் கொள்ள முடியாது. அப்படிச் சேர்த்தால், அவர்கள் இரட்டை அனுகூலங்களைப் பெறுவார்கள்' என்று கூறியுள்ளார்.
103ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ள மூன்று நீதிபதிகளும் சாதி ரீதியிலான இடஒதுக்கீடுகளை காலவரையின்றி வழங்க முடியாது. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். தங்களது கூற்றுக்கு ஆதரவாக "இடஒதுக்கீடு தற்காலிகமானதுதான்' என்று அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் அம்பேத்கர் பேசியதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்தச் சட்டத்திருத்தம் செல்லாது என தீர்ப்பளித்துள்ள நீதிபதிகளில் ஒருவரான ரவீந்திர பட் இந்த பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டில் SC, ST, OBC பிரிவினரையும் சேர்க்க வேண்டும். அப்படிச் செய்யாதது அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
1. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இந்த இடஒதுக்கீடு முன்னேறிய சாதியினருக்கு மட்டுமே பொருந்தும். அவர்கள் சமூக ரீதியில் பின்தங்கியிருக்கவில்லை. கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் அவர்கள் பின்தங்கியிருக்கவில்லை. அப்படிப் பின்தங்கியிருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய தரவுகள் எதனையும் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. வன்னியர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு தரவுகளின் அடிப்படையில் அமையவில்லை என்று கூறி அதனைச் செல்லாது என அறிவித்த உச்சநீதிமன்றம், இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவில்லை ஏனோ?
2. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்றால் அதில் அனைத்துப் பிரிவு மக்களையும் சேர்க்க வேண்டும். முன்னேறிய சாதிப் பிரிவுகளை மட்டுமே சேர்ப்பது சமநீதி அல்ல. SC, ST, OBC பிரிவினருக்கு இந்த இடஒதுக்கீட்டில் இடமளித்தால் அது அவர்களுக்கு இரட்டை பயன்களைத் தரும் என்று கூறியுள்ள நீதிபதிகள், தற்போதைய இந்த இடஒதுக்கீடு முன்னேறிய சாதியினருக்கும் இரட்டைப் பயன்களை அளிக்க வகை செய்கிறது என்ற உண்மையை மறந்தது ஏனோ?
3. ஆண்டுக்கு 8 இலட்சம் வருமானம் அல்லது ஐந்து ஏக்கர் நிலம் அல்லது 1000 சதுர அடி வீடு உள்ளவர்கள் இடஒதுக்கீட்டில் பயன்களை அனுபவிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு அபத்தமானது. நாளொன்றுக்கு 27 அல்லது 32 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று அரசே நிர்ணயம் செய்து விட்டு, நாளொன்றுக்கு ரூ. 2192 வரு மானம் பெறுபவர்கள் ஏழைகள். அவர்களுக்கு இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இடம் உண்டு என்று கூறுவது கடைந்தெடுத்த மோசடி அல்லவா? இதனையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், இந்த இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் வலதுசாரி அறிவுஜீவிகள் OBC பிரிவினரில் 8 இலட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. அதே அளவுகோல்தான் இந்த பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டிலும் பின்பற்றப்படுகின்றன என வாதிடுகின்றனர். ஆனால் OBC இடஒதுக்கீடு சமூக ரீதியில் வழங்கப்படுகிறது. இந்த பத்து விழுக்காடு இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். அல்லது மறைத்து விடுகின்றனர்.
4. ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது திறமையைப் பாதிக்கும் (MERIT) என்று கூறப்பட்ட முந்தைய தீர்ப்புகளைப் புறம்தள்ளி விட்டு, இடஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுவதில் தவறில்லை என்று இப்போது நீதிபதிகள் கூறுவது வியப்பளிக்கிறது. அப்படியாயின் திறமை (MERIT) என்னவாயிற்று? சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கியபோது அது ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுகிறது என்ற காரணம் காட்டி அந்த தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம், முன்னேறிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்று வரும்போது மட்டும், ஒட்டுமொத்த இடஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டைத் தாண்டினால் அது தவறில்லை என்று கூறுவது ஒரு பாரபட்சமான அணுகுமுறை அல்லவா? பல சட்ட நிபுணர்களும் ஊடகவியலாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளதைப் போல், இனி மாநிலங்கள் பல்வேறு சமூகப் பிரிவினருக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை அதிகரித்துக் கொண்டே போக வாய்ப்புகள் ஏற்படும். இது வாயிலைத் திறந்து விட்ட கதையாகிவிடும் அல்லவா?
5. 2012ஆம் ஆண்டு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒட்டுமொத்த இடஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் போகக் கூடாது என்று தீர்ப்பளித்த நிலையில், அதனை மாற்றுவதற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வுக்கு உரிமை உண்டா? இந்தக் கேள்வியையும் பல சட்ட நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
6. சாதி ரீதியிலான இடஒதுக்கீடுகளை காலவரையின்றி நீடித்துக் கொண்டே போக முடியாது. அதனை மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது என்று கூறியுள்ள நீதிபதிகள் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செல்லாது என்றல்லவா தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தானே அந்த வழியில் பயணம் செய்ய முடியும்?
(ஒன்றிய அரசிலும், தமிழகத்திலும் பல்வேறு சமுகப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் அளவுகள்)
தமிழக அரசு இந்த பத்து விழுக்காட்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறைப்படுத்தினால் பொதுப் பிரிவில் தற்போது வழங்கப்பட்டு வரும் அளவு 50.5 விழுக்காட்டிலிருந்து 40.5 விழுக்காடாகக் குறையும். தமிழக அரசு, இந்த 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தெளிவாகக் கூறியுள்ளது. தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை 33,97,240 ஆகும். (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) இது தமிழக மக்கள் தொகையில் 5.64 விழுக்காடே. எனவே இப்பிரிவு மக்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்க இயலாது. ஏற்கனவே பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலானவற்றை இம்மக்களே அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நிலையை ஆராய்வதற்காக அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அமைத்த மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹா தலைமையிலான குழு, இப்பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னேறிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பது நமது வாதமல்ல. சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்து அனைத்துச் சாதியினருக்கும் அவரவர் சாதியின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அளந்து வழங்கலாம் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. இதில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கும் அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த பத்து விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதிகளில் ஒருவரான ஜெ.பி.பர்திவாலா, குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியபோது வழங்கிய ஒரு தீர்ப்பில் இடஒதுக்கீடும் ஊழலும் நாட்டைப் பிடித்துள்ள கறைகள் என்று கூறியிருந்தார். இதற்குப் பல தரப்பினரிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால் பின்னர் அவர் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் கருத்துகளைக் கொண்டிருக்கும் ஒருவரை இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் சேர்த்தது எப்படி நியாயமாகும் எனப் பல ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 12.11.22 அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மறுஆய்வு செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.