மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்அரசியல்

குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
சேயன் இப்ராகிம், 1-15 ஜனவரி 2023


குஜராத் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளையும் மீறி பாஜக 156 இடங்களைப் பெற்று ஏழாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அக்கட்சிக்கு 99 இடங்களே கிடைத்திருந்தன. தற்போது அக்கட்சி 57 இடங்களை அதிகமாகப் பெற்றுள்ளது. 2017 சட்டமன்றத் தேர்தலில் 49.1 விழுக்காடுகளைப் பெற்றிருந்த அக்கட்சி தற்போது 52.5 விகித வாக்குகளை அதாவது 3.4 விழுக்காடு வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. சென்ற தேர்தலில் 41.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 77 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி இம்முறை 27.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது அக்கட்சியின் வாக்கு 14.1 விழுக்காடு குறைந்துள்ளது.

கடந்த தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இருமுனைப் போட்டி நிலவியது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி அங்கு போட்டியிட்டு மும்முனைப் போட்டியை உருவாக்கியது. அக்கட்சி 12.92 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஐந்து இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரித்து ஆம் ஆத்மி கட்சி ஐந்து இடங்களைப் பெற்றதோடு, 33 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பையும் பறித்துள்ளது. பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு 156 இடங்களைக் கைப்பற்றியிருப்பதற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஓட்டுப் பிரிப்பும், பாஜகவின் வாக்கு விழுக்காடு 3.4 விழுக்காடு கூடியிருப்பதும் காரணமாகும்.

2017 சட்டமன்றத் தேர்தலை விட இந்தத் தேர்தலின்போது அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்கு நான்கு விழுக்காடு குறைந்துள்ளது. இதுவும் காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வரவு பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியை எந்த விதத்திலும் பாதிப்பிற்குள்ளாக்கவில்லை.

தேர்தலுக்கு முந்தைய/பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்த போதிலும், அக்கட்சி தேர்தலில் அசிரத்தையாக இருக்கவில்லை. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அங்கு கடும் பரப்புரையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மட்டும் 30 பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு முதல் நாள் அஹமதாபாத்தில் மிகப் பெரிய பேரணியை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்களும் தங்கள் பங்குக்குப் பரப்புரையில் ஈடுபட்டனர். வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் கிராமப் புறங்களில் பரப்புரை செய்தனர்.

புதிதாகக் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சியும் தனது பரப்புரையை முடுக்கி விட்டது. பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் ஆகியோர் பரப்புரை செய் தனர். பாஜகவுக்கு ஈடு கொடுத்துப் பரப்புரையில் ஈடுபட்டது அக்கட்சியே. போட்டியே பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமிடையேதான் எனச் சில செய்தித்தாள்கள் கூறின.

ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் நிலையோ பரிதாபகரமாக இருந்தது. கடந்த தேர்தலின்போது 77 இடங்களைக் கைப்பற்றிய அக்கட்சி பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆனால் இம்முறை அக்கட்சிக்குப் பல பாதகமான அம்சங்கள் நிலவி வந்தன.

அவையாவன :

1. கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து விட்டனர்.

2. கடந்த 2017 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்த படேல் சமூகத்தின் இளம் தலைவர் ஹர்திக் படேலும், பிற்பட்ட மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அல்பேஸ் தாகூரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து விட்டனர்.

இந்த இளம் தலைவர்களைக் கட்சியில் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

3. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த படேல் சமூகத்தினர் இம்முறை பாஜகவுக்கு ஆதரவாகத் திரும்பி விட்டனர். இது சௌராஷ்டிரா பகுதியில் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் என்றே கணிக்கப்பட்டது.

4. குஜராத்திலுள்ள அதானி போன்ற மிகப் பெரிய தொழிலதிபர்களும், கார்ப்பரேட்டுகளும் பாஜக தோல்வியுறுவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இதற்காக அவர்கள் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

இவ்வளவு பாதகமான அம்சங்கள் களத்தில் இருந்த போதிலும், காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரையில் பெருமளவு முனைப்புக் காட்டவில்லை. எங்கோ தேர்தல் நடைபெறாத மாநிலங்களின் வழியாக இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கின்ற இராகுல் காந்தி, தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலம் வழியாக அல்லவா தனது பயணத்தை வகுத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் தனது பயணத்தைப் பாதி வழியில் நிறுத்திவிட்டு குஜராத் மாநிலத்திற்கு வந்து பரப்புரையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் அவர் செய்யவில்லை.

கடமையைக் கழிப்பதற்காக அங்கு சென்று ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் உரையாற்றி விட்டு வந்து விட்டார். (சென்றமுறை இராகுல் காந்தி குஜராத்தில் கடும் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர் போன்ற நட்சத்திரத் தலைவர்கள் தேர்தல் பரப்புரைக்குச் செல்லவில்லையென்றால் கட்சித் தொண்டர்கள் எப்படி உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவர்?

இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே ஆகியோர் மட்டுமே அங்கு சில நாள்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்தத் தேர்தலை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற எண்ணம் பெரும்பாலான நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. எனவே அக்கட்சிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்? புதிதாகக் களமிறங்கியுள்ள ஆம் ஆத்மிக்கு வாக்களிப்போம் அல்லது வாக்களிக்காமல் இருப்போம் என அவர்கள் முடிவெடுத்து விட்டனர் போலும். விளைவு! காங்கிரஸின் பரிதாபகரமான தோல்வி.

இந்தத் தேர்தலில், முஸ்லிம் வாக்காளர்களில் சுமார் 64 விழுக்காட்டினர் காங்கிரஸ் கட்சிக்கும், 14 விழுக்காட்டினர் பாஜகவுக்கும், 12 விழுக்காட்டினர் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக அஹமதாபாத் நகரத்திலுள்ள ஜமால்பூர் காடியா தொகுதியில் போட்டியிட்ட இம்ரான் கோடாவாலா வெற்றி பெற்றுள்ளார்.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் இவர் ஒருவர் மட்டுமே முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற முறை சட்டமன்றத்தில் மூன்று முஸ்லிம் உறுப் பினர்கள் இருந்தனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் படிப்படியாக தங்களது அரசியல் அதிகாரத்தை இழந்து வருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது ஐந்து மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் மாநிலமெங்கும் ஆறு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் வேறு எந்த மாநிலத் தேர்தல்களிலும் இது போன்று நடைபெறவில்லை என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கடைசி ஒரு மணி நேரத்தில் பாஜக தொண்டர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர் போலும்! ஆனால் தேர்தல் ஆணையம் இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளவில்லை.

குஜராத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

1. காங்கிரஸ் கட்சி இன்னமும் தூக்கத்திலிருந்து எழவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. சென்ற முறை 77 இடங்களைப் பெற்ற அக்கட்சி அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்தவிதமான தீவிரப் பரப்புரையிலும் ஈடுபடவில்லை. மௌனப் பரப்புரை ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் கை கொடுக்காது. இனியாவது, அக்கட்சி படிப்பினை பெறுமா?

2. ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வடக்கிலுள்ள மேலும் சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அக்கட்சி செயல்பட வேண்டும்.

3. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பேசி வந்தாலும்கூட அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் பாஜகவைத் தோற்கடிக்க முடியும். தங்களுக்குள் உடன்பாடு செய்து கொள்ளாமல் தனித்தனியாகப் போட்டியிட்டால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து மீண்டும் அக்கட்சியே வர வழிவகுக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் விரைந்து செயலாற்ற வேண்டிய காலகட்டமிது. இந்த வரலாற்றுக் கடமையை எதிர்க்கட்சிகள் செய்யாவிட்டால், காலம் அவர்களை பழிக்கும்; மன்னிக்காது என்பது திண்ணம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்