ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபு. அவரது உரை மாநில அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டு பின் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரின் ஒப்புதல் பெற்ற பிறகே வாசிக்கப்படுகிறது. இந்த உரையில் மாநில அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகள், கடந்த ஆண்டில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், நடப்பு ஆண்டில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் ஆகியன இடம்பெறும்.
இந்த உரையினை ஆளுநர் வாசித்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு அவர் எந்தவிதத்திலும் பொறுப்பாளரல்ல. மாநில அமைச்சரவையே அதற்குப் பொறுப்பாகும். மாநில அமைச்சரவை தயாரித்த உரையினை அப்படியே வாசிப்பதுதான் ஆளுநரின் கடமையாகும். அதில் சில பகுதிகளை விட்டு விட்டு வாசிக்கவோ, புதிதாகச் சில விஷயங்களைச் சேர்க்கவோ அவருக்கு அரசியல் சட்டப்படி அதிகாரமில்லை.
கடந்த 9.1.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியபோது, அதில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டு அவரின் ஒப்புதலையும் பெற்ற உரையில் சில பகுதிகளை வாசிக்காமலும், புதிதாக தனது சொந்தக் கருத்துகள் சிலவற்றைச் சேர்த்தும் வாசித்துள்ளார். இது மரபுகளை மீறிய செயலாகும்.
அவரது உரை முடிந்து அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த உரையே சபையின் அவைக் குறிப்புகளில் இடம்பெறுமென்றும், ஆளுநர் வாசிக்காமல் விட்ட பகுதிகள் இடம்பெறுமென்றும், அவர் புதிதாக வாசித்த விஷயங்கள் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது. நடந்த விஷயங்களைத் தனது பாதுகாப்பு அதிகாரி மூலம் தெரிந்து கொண்ட ஆளுநர் உடனடியாக அவையை விட்டு வெளியேறிச் சென்றார். தேசிய கீதம் இசைக்கப்படும் வரைகூட அவர் காத்திருக்கவில்லை.
"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நன்முறையில் பாதுகாக்கப்பட்டு மாநிலம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கின்றது; தமிழ்நாடு தொழில்துறையில் வளர்ச்சி பெற்று, இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்குகிறது; பெரியார், அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அம்பேத்கர், கலைஞர் ஆகியோர் காட்டித் தந்த வழியில் இந்த திராவிட மாடல் அரசு செயல்படுகின்றது' என்ற வரிகளையே ஆளுநர் தனது உரையில் தவிர்த்துள்ளார்.
இந்த வரிகளில் ஆட்சேபிக்கக்கூடிய செய்திகள் எதுவுமில்லை. இவற்றை ஏன் வாசிக்காமல் விட்டார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. ஆளுநர் மாளிகையும் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.
ஆனால், வலதுசாரி அறிவுஜீவிகளும்(!) பாஜக பிரமுகர்களும் ஆளுநரின் இந்தச் செயலை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். ஆளுநருக்கு ஆதரவாக அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் இவைதான்.
1. தமிழ்நாடு அமைச்சரவை தயார் செய்த உரையினை அவர் அப்படியே வாசிக்க வேண்டிய அவசியமில்லை. தனக்கு உடன்பாடு இல்லாத விஷயங்களை அவர் வாசிக்காமல் விட்டு விடலாம்.
2. திராவிட மாடல் அரசு என்று உரையில் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி திராவிட மாடல் அரசு என்று கூறலாம்?
3. ஆளுநர் தனக்குச் சரியெனப்படுகின்ற கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை இல்லையா?
4. திமுக பொதுக்கூட்ட மேடையில் பேச வேண்டியவற்றை எழுதிக் கொடுத்தால் ஆளுநர் எப்படி அதனை வாசிப்பார்? (இப்படிக் கூறியவர் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை)
5. ஆர்.எஸ்.எஸ். மாடல் அரசு என குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருந்தால், அதனை திமுக ஏற்றுக் கொள்ளுமா? (இப்படிக் கேட்டவர் பாஜகவின் முன்னணித் தலைவர் பேராசிரியர் சீனிவாசன்)
இனி, அவர்களுடைய வாதங்களின் பொய்த் தன்மையைப் பார்ப்போம்.
1. ஆளுநர், அமைச்சரவை தயாரித்துக் கொடுத்துள்ள உரையினை அப்படியேதான் வாசிக்க வேண்டும். அதுதான் சட்டம். உரையில் இடம்பெற்ற விஷயங்களை நீக்குவதற்கோ, புதிதாக எதையும் சேர்ப்பதற்கோ அவருக்கு உரிமை இல்லை. மேலும் இந்த உரைக்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2. திராவிட மாடல் என்பது சமூகநீதியைப் பாதுகாக்கின்ற ஆட்சி என்ற பொருளில்தான் கூறப்படுகிறது என தமிழ்நாட்டு முதலமைச்சர் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். ஆளும் கட்சியின் பெயரே திராவிட முன்னேற்றக் கழகம்தான். எனவே தங்கள் கட்சியின் பெயரை அவர்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?
3. ஆளுநர் சொந்தக் கருத்துகளைக் கூற அரசியல் சட்டப்படி உரிமை இல்லை. உரையில் தனது சொந்தக் கருத்துகளைத் திணித்தால் அது சட்டப்படி தவறான செயலாகும்.
4. பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது போல், ஆளுநர் உரை திமுக மேடையில் ஆற்றப்படுகின்ற உரைபோல நிச்சயமாக இல்லை. உரையினை முழுமையாகப் படித்துப் பார்த்தால், இந்த உண்மை தெளிவாகும்.
5. தங்களது அரசு ஆர்.எஸ்.எஸ் மாடல் அரசு என ஒன்றிய அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும் உரையில் இடம்பெற்றிருந்தால் அதனை குடியரசுத் தலைவர் நிச்சயம் வாசிப்பார். அதுவே சரியான நடைமுறை. அவர் உரையாற்றுகின்றபோது இந்த வரிகளை வாசிக்காமல் விட்டு விட்டால் ஒன்றிய அரசு அதனை ஏற்றுக் கொள்ளுமா? ஆர்.எஸ். எஸ். மாடல் அரசு என்று அவரது உரையில் இடம்பெற்றிருந்தால், விவாதத்தின்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை நிச்சயம் எதிர்க்கும். ஆனால் குடியரசுத் தலைவர் ஏன் அதனை வாசிக்காமல் விட வேண்டும்? அதுபோல திராவிட மாடல் ஆட்சி என்றால் அதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றும்போது எதிர்ப்புத் தெரிவிக்கட்டும். பாஜக உறுப்பினர்கள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் ஆர்.என். ரவி ஏன் செய்கிறார்?
வலதுசாரி அறிவுஜீவிகளும் பாஜக பிரமுகர்களும் ஆளுநருக்கு இவ்வளவு முட்டுக் கொடுப்பதிலிருந்தே அவர் ஆர்.எஸ். எஸ்ஸின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகிறது. பதவியேற்ற காலத்திலிருந்து ஆளுநர் ரவி, மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே பேசி வருகிறார். திராவிடம் என்ற சொல்லைக் கண்டு அஞ்சுகிறார். அதனைத் தவிர்க்கிறார். திராவிடம் இந்திய தேசிய கீதத்தில் இருக்கின்றது. வரலாற்றில் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் இருக்கிறது. தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது எனப் பிதற்றுகின்றார். (பின்னர் அந்தர் பல்டியடித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.)
சென்னை மாகாணம் தமிழ்நாடு என அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் இது குறித்து புதிதாகப் பிரச்னையை அவர் ஏன் கிளப்புகிறார்? சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட காலகட்டத்தில், தமிழ்நாடு ஒரே ஆட்சியின் கீழ் இல்லாத காலகட்டத்திலேயே தமிழ்நாடு என்ற வார்த்தை நமது தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது. மகாகவி பாரதியார் தனது பாடல்கள் பலவற்றில் தமிழ்நாடு, தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அவரை விட நாட்டுப்பற்றில், மொழி அறிவில் மிகைத்தவரா ஆளுநர் ஆர்.என்.ரவி?
திருக்குறள் ஓர் ஆன்மிக நூல். ஆனால் ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறளில் அது பிரதிபலிக்கவில்லை என்று கூறுகின்றார். திருக்குறள் ஒரு பக்தி இலக்கிய நூல் அல்ல. அது அறநெறிகளைப் போதிக்கின்ற நூல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திருக்குறளுக்குப் பல தமிழ் அறிஞர்கள் உரை எழுதியுள்ளார்கள். அதில் ஜி.யு.போப்பும் ஒருவர். அவரது உரை மற்ற அறிஞர்களின் உரையிலிருந்து பெரிதும் மாறுபடவில்லை. மேலும் நமது பள்ளி மாணவர்கள் திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையினையே படிக்கின்றனர். இந்த உண்மைகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அவர் வாய்க்கு வந்தபடி உளறுகிறார்.
தமிழ்நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே சனாதன தர்மத்தைப் பின்பற்றியதாகவும், தமிழ்நாட்டிலிருந்துதான் சனாதனம் வட மாநிலங்களுக்குச் சென்றது என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார் தமிழ்ப்புலவர் கனியன் பூங்குன்றன். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் வள்ளுவர். இதில் எங்கே இருக்கிறது சனாதனம்? ஆரியர்களின் வருகைக்குப் பின்னர்தான் தமிழ்நாட்டுக்குச் சனாதன தர்மம் வந்தது. மேலும் தமிழ்நாட்டு மக்கள் பண்டையக் காலத்திலிருந்தே இராமரை வழிபட்டதாகச் சொல்கிறார். இதுவும் ஓர் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு ஆகும்.
இராமரைத் தமிழ்நாட்டு இந்து சமய மக்கள் ஒருபோதும் கடவுளாகக் கொண்டாடியது இல்லை. இங்கு குலதெய்வ வழிபாடுகளும், அம்மன் வழிபாடுகளும், மூதாதையர் வழிபாடுகளுமே இருந்தன. தமிழ்நாட்டில் இருக்கின்ற இராமர் கோவில்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்புலவர் கம்பன் இயற்றிய கம்பராமாயணத்தையே அது ஒரு வைணவக் காப்பியம் என்று கூறி சைவரான சோழ மன்னர் தனது அரண்மனையில் அதனை அரங்கேற்ற அனுமதிக்கவில்லை. இதுதான் வரலாறு.
பெரும் கடவுள்களைப் பொறுத்தவரை சைவ சமய மக்கள் சிவனையும் முருகனையும், வைணவ சமய மக்கள் விஷ்ணுவையுமே வழிபட்டு வந்தனர். தென்னாடுடைய சிவனே போற்றி என்றுதான் தமிழ்நாட்டுப் பக்தி இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் ஆளுநருக்கு வரலாறும் தெரியவில்லை; ஆன்மிகமும் தெரியவில்லை. இங்கிதமும் தெரியவில்லை.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. மக்களாட்சியை அவர் மதிக்கின்ற இலட்சணம் இதுதான். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்றால், அவர் அவற்றை மறுபரிசீலனை செய்வதற்காக மீண்டும் சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும். அதனையும் அவர் செய்வதில்லை. வலதுசாரி அறிவுஜீவிகள், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு இந்திய அரசியல் சட்டம் ஆளுநருக்குக் காலவரையறை எதுவும் விதிக்கவில்லை என வாதிடுகின்றனர்.
ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள், நடுநிலையாளர்களாகவும், நேர்மையாளர்களாகவும், கண்ணியம்மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதியே அரசியல் சட்ட வல்லுநர்கள் காலவரையறை எதனையும் நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் ஆர்.என்.ரவி போன்றவர்கள் ஆளுநர்களாக வரக்கூடும் என்று கருதியிருந்தால் காலவரையறை நிச்சயம் செய்திருப்பார்கள்.
தமிழ்நாட்டு ஆளுநர் அரசியல் சட்டம் தனக்கு வழங்கியிருக்கின்ற சலுகையைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றார். அவர் ஆளுநருக்குரிய எந்தப் பணிகளையும் செய்யவில்லை. ஆனால் தேவையற்ற அனைத்தும் செய்து வருகிறார். ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் அவருக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவருக்கு மிகச் சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநரின் ஒரு வினைக்கு முதல்வர் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற குரல் தமிழ்நாடெங்கும் உரக்கக் கேட்கிறது. அது பேரிறைச்சலாய் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.