மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

நாமும் ரமளானும்
S.T.முஹம்மது ரபிக், 16-31 மார்ச் 2023


ரமளான் மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? ரமளான் மாதத்தில் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும்? இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகரித்துக் கொள்வது எப்படி? ரமளான் மாதம் முழுக்க முழுக்க நன்மையின்பால் நம்மைத் திருப்பிக் கொள்வது எப்படி? இந்த வினாக்களுக்கான விடை தேடும் மாதமாக இந்த ரமளானை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நம்மால் இயன்ற அளவுக்கு நன்மையான காரியங்களில் ஈடுபட முயல வேண்டும்.

‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்'. (திருக்குர்ஆன் 2:183)

நோன்பு எதற்கு ?

’ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாள்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!' (திருக்குர்ஆன் 2:185)

நோன்பு வணக்க வழிபாட்டிற்காகவும், இறையச்சமிக்க நடத்தையை மேற்கொள்வதற்கான பயிற்சியாகவும் மட்டும் அறிவிக்கப்படவில்லை. அதற்கும் மேலாக திருக்குர்ஆன் எனும் வாழ்க்கை வழிகாட்டியை இந்த மாதத்தில்தான் இறைவன் அருளினான். ஆகவேதான் இந்த அருள்வளத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் செயலாகவும் நோன்பு அமைகிறது. இந்த எண்ணத்துடன் நோன்பு நோற்கும்போதுதான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கமும் நிறைவேறுகிறது.

நோன்பின் சிறப்பு

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ’ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)

 

’சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாயில் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாயில் அடைக்கப்பட்டுவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

குறைந்தபட்ச திட்டங்கள்

ரமளான் நோன்பைச் சரியான முறையில் நோற்று அதன் நன்மைகளை இறைவனிடத்தில் முழுமையாகப் பெற வேண்டும்.

1. இரவுநேரத் தொழுகைகளைப் பேணுதலாகத் தொழ வேண்டும்.

2. ஒருமுறையாவது திருக்குர்ஆனை ஓதி முடிக்க முயற்சி செய்வோம்.

3. திருக்குர்ஆனை அதிகம் அதிகம் ஒதுவோம். திருக்குர்ஆன் தமிழாக்கம் படிப்போம்.

4. இறைதியானம், பிரார்த்தனையில் அதிகமாக ஈடுபடுவோம்.

5. இறுதிப் பத்து நாள்களில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவைத் தேட பாடுபடுவோம்.

6.. அதிகம் அதிகம் தர்மம் செய்ய முயற்சி செய்வோம்.

7. பொய்யான, அருவெறுக்கத்தக்க செயல்களிலிருந்து விலகி வாழ்வோம்.

8. மனிதகுல அமைதிக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

நோன்பு அருள்வளங்களின் மாதமாக, பாவமன்னிப்பின் மாதமாக, கருணையின் மாதமாக, ஈடேற்றம் பெறுகின்ற மாதமாக, நன்மைகளின் மாதமாக ஒளிர்கிறது. அல்லாஹ் நமக்குப் புனித ரமளானின் சிறப்புமிகு நாள்களின் நற்செயல்களை முறையாக நிறைவேற்றவும், நமது பிரார்த்தனைகளை ஏற்று அருள்புரியவும், பாவமன்னிப்பு அளிக்கவும், நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாக்கவும், புனித ரமளானின் நோன்புகளை ஏற்று அனைத்து நன்மைகளையும் முழுமையாக வழங்கவும் அருள்புரிவானாக!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்