மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நேர்காணல்
ரஹ்மத்துன்னிஸா, தமிழில் : R. அஃப்ரிதா சுலைஹா, Aug 1 - 15 2023


 

2015ஆம் ஆண்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் துணைத் தலைவராக, அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். நடப்பு நான்காண்டுகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்து கள்! உங்கள் குழந்தைப் பருவம், பெற்றோர் குறித்துக் கூறுங்களேன்.

நான் 1973 ஜூன் 7ஆம் நாள் தெலுங்கானாவில் உள்ள மக்தால் என்ற இடத்தில் பிறந்தேன். எனது தந்தை, அவரது முன்னோர்களின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ளது. என் அம்மாவின் முன்னோர்கள் தெலுங்கானாவில் வாழ்ந்தனர். கர்நாடகாவையும் தெலுங்கானா வையும் பிரிக்கும் கிருஷ்ணா நதி உள்ளது. எனது தந்தை வழி முன்னோர்கள் இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்தனர். என் தந்தை ஒரு சிவில் இன்ஜினியர். அவருக்கு மகாராஷ்டிராவில் வேலை கிடைத்தது. அவர் தனது வேலை காரணமாகப் பல இடங்களில் வாழ்ந்தார்.

எனவே நாங்களும் மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மாறிக்கொண்டே இருந்தோம். அப்பாவும் என் ஒரு சிறந்த போதகர். நீர்ப்பாசனத் திட்டப் பணியிடங்களில் அவரது தொழில்சார் நிர்வாகம் அவரை எந்த அமைப்புடனும் முறை யாகத் தொடர்பு வைத்துக்கொள்ள அனுமதிக்க வில்லை என்றாலும், அவர் எங்கு வாழ்ந்தாலும் அழைப்புப் பணியை மேற்கொண்டார். அவரைச் சுற்றியுள்ள மக்களின் இஸ்லாமிய கல்விக்காகப் பணியாற்றினார். ஃபஜ்ர் தொழு கைக்குப் பிறகு குர்ஆன் தர்ஸ் செய்தார். என் அம்மாவும் ஒரு படித்த பெண்மணி. அவரும் ஜமாஅத் உறுப்பினர்.

உங்கள் கல்வி குறித்துச் சொல்லுங்கள்

எனது பள்ளிக் கல்வி 1978ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள இசாபூரில் உருது நடுநிலை அரசுப் பள்ளியில் தொடங்கியது. அதன் பிறகு இசாபூரில் உருது மீடியம் பள்ளி இல்லாததால், இசாபூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கலாம்நூரியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு என் தந்தை நன்டேட் மாற்றப்பட்டார். அது ஒரு பெரிய இடமாக இருந்தது. அதனால், அங்கிருந்து 11,12,மின்னணுவியல், தொலைத்தொடர்பு (Electronics and Telecommunications) பிரிவில் இன்ஜினியரிங் முடித்தேன்.

பள்ளிக்காலத்திலேயே இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்புடன் (SIO) தொடர்பு வைத்திருந்தீர்களா?

நாங்கள் இசாபூரில் வசித்து வந்தபோது 45 கிலோமீட்டர் தொலைவில் பூசாத் என்ற இடம் இருந்தது. அங்கு போட்டிகள் நடை பெறும். நான் அதில் கலந்துகொள்வேன். அந்தப் போட்டிகள் மூலம் எனக்கு ஜமாஅத் அறிமுகம் ஆனது. புத்தகங்கள், பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் என் தந்தைக்கு முறையாக ஜமாஅத் உடன் தொடர்பு இல்லாததாலும், நாங்கள் வாழ்ந்த இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயல்படாததாலும் அந்தப் போட்டிகள்தான் முதல் அறிமுகம். பின்னர் நாங்கள் நன்டேட் வந்ததும் அங்கு SIO செயல்படுவதை அறிந்து முறைப்படி அதில் இணைந்தேன்.

அப்படியானால் எந்தக் கட்டத்தில் நீங்கள் பொறியியல் துறையிலிருந்து மாறி இயக்க வாழ்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள்?

நான் மாணவப் பருவத்திலிருந்தே இயக்க வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். 11ஆம் வகுப்பு படிக்கும் போது SIO உடன் தொடர்பு ஏற்பட்டது. 1990இல் உறுப்பினரானேன். மாநில ஆலோசனைக் குழுவிற்கு(ZAC) தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது எனக்கு 18 வயது. கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இன்ஜினியரிங் முடித்த உடனேயே நான் SIO மாநிலத் தலைவராகவும், மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாநிலத் தலைவர் பொறுப்புக் காலம் முடிந்ததும் SIO அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் பொறியியல் துறையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. SIOவில் இருந்து வெளியே வந்த பிறகு எனது முறையான பொறியியல் வாழ்க்கையைத் தொடங்கி ஹைதராபாத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தேன். 2015 வரை அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.

நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. உங்கள் கட்டுரைகள், புத்தகங்களைப் படிக்கும்போது, உங்கள் உரைகளைக் கேட்கும்போது தேர்ந்தெடுத்த மார்க்க அறிஞரின் குர்ஆன், சுன்னா, இஸ்லாத்தின் வரலாறு பற்றிய ஆழமான அறிவையும் புரிதலையும் அவை வெளிப்படுத்துகின்றன. மார்க்க அறிவை எங்கிருந்து கற்றீர்கள்?

பிள்ளைகளுடைய இஸ்லாமியக் கல்வியில் எனது தந்தை மிகவும் கவனம் செலுத்தினார். அதற்காக மிக முக்கியமான மூன்று விஷயங்களைச் செய்தார். ஒன்று அவரே எங்களுக்கு மார்க்கத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தார்.

இரண்டாவதாக வீட்டில் முறையான இஸ்லாமியக் கல்விச் சூழலை உருவாக்கினார். எங்கள் வீட்டிற்கு ஒரு மௌலவி வருவார். சாதாரணமாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெறும் இஸ்லாமியக் கல்வி, அடிப்படை துஆக்கள் போன்றவற்றை மட்டும் கற்றுக்கொடுப்பதற்காக அவர் நியமிக்கப் படவில்லை. எனது தந்தை எங்களுக்கு முறையாகத் திருக்குர்ஆனின் முழு தஃப்ஸீரைக் கற்பிப்பதில் கவனமாக இருந்தார். மௌலவி அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து தஃப்ஸீருடன் முறையான பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். ஏழாம் வகுப்பிற்கு முன்பே என்னால் தஃப்ஸீரை வாசித்து முடிக்க முடிந்தது. அவர் ஹதீஸ் உள்ளிட்ட பல ஆழமான விஷயங்களைக் கற்றுக் கொடுத் தார். அந்தக் கற்றல் பின்னர் பல வழிகளில் உதவியது.

மூன்றாவதாக இஸ்லாமியப் புத்தகங்கள், பருவ இதழ்கள் எங்கள் வீட்டிற்கு வரும். பல கிளாசிக்கல் புத்தகங்களையும் ஹதீஸ் புத்தகங்களையும் படித்தேன். SIO மூலமாக இமாம் கஸ்ஸாலி, ஷா வலியுல்லா, இப்னு கல்தூம் போன்ற அறிஞர்களைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

இஸ்லாமிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் மட்டுமின்றி பல்வேறு வகையான எழுத்தாளர்களின் வாசகராகவும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துகளும் புத்தகங்களும் உணர்த்துகின்றன. புத்தகங்களை எப்படித் தேர்வு செய்கின்றீர்கள்? நீங்கள் எழுதுவது அல்லது உரை நிகழ்த்துவது குறித்த திட்டங்களை வகுத்துக் கொள்கின்றீர்களா?

இரண்டு விஷயங்கள் உள்ளன.

முதலாவதாக எந்த ஒரு புதிய விஷயத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. பொறியியல் படிக்கும்போதே சமூக அறிவியல், உள் வியல், பொருளாதாரம் போன்ற மற்ற பாடங்களைப் பற்றி எனக்குப் புரிதல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் பொருளாதாரத்தை விரிவாகப் படித்தேன். பொறியியல் புத்தகங்களை விட உங்கள் பாடத்துடன் தொடர்பில்லாத புத்தகங்களை எடுத்துக்கொள்கின்றீகளே.. உங்கள் ஆர்வம் விசித்திரமாக இருக்கிறதே' என்று எங்கள் கல்லூரி நூலகர் சொல்வார். என் படிப்பு முடிந்த பிறகும் அது தொடர்ந்தது. ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போதெல்லாம் எந்தப் புதிய பிரிவு வந்தாலும் அதைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ள முயல்வேன்.

இரண்டாவது அது ஒரு தேவை. ஜமாஅத்தில் பணிபுரிவது பல SIO, சவால்களை முன்வைக்கிறது. ஒரு புதிய சவால் வரும்போதெல்லாம் விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு நேரடியாகத் தகவல்களை பெற முயற்சிக்கிறேன். ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பாமல் அசல் மூலங்களிலிருந்து எப்போதும் தகவல்களைச் சேகரிப்பதில் நான் குறிப்பாக இருக்கிறேன். இது தானாகவே பல பாடங்களின் புத்தகங்களுக்கு இழுத்துச் செல்லும்.

உங்கள் உரைக்கான, நூல்களுக்கான தலைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கின்றீர்களா அல்லது அந்தச் சூழ்நிலையை வைத்து முடிவு செய்வீர்களா? இது குறித்து நீங்கள் ஆலோசிப்பதுண்டா?

தலைப்புகளைப் பொதுவாக நான் தேர்ந்தெடுக்கிறேன். நான் SIOவில் இருந்த போதும் மக்களுக்குத் தெரிவிக்க ஏதாவது இருக்கிறது என்று உணர்ந்த போதெல்லாம் எழுதினேன்.

இங்கேயும் நான் தொடங்கும் போது எந்தெந்தப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும், எந்தெந்தப் பகுதிகளில் கல்விசார் சொற்பொழிவுகள் தேவைப்படுகிறது என்று யோசித்து, அந்த தனிப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்கினேன். ஆனால் நான் எழுதும் போதெல்லாம், முதலில் என்ன எழுத வேண்டும் என்று வரைவு செய்து எனது யோசனையை உருவாக்குகிறேன். 

பின்னர் ஆலோசனை செய்வேன். டாக்டர் ஹசன் ரஸா, டாக்டர் ரஃபத், அமீனுல் ஹசன், ஷபீர் ஆலம், முஹ்யுதீன் காஸி, டாக்டர் ரஸீயுல் இஸ்லாம் நத்வி உள்ளிட்ட பலரிடம் இந்த விஷயத்தின் அடிப்படையில் நான் ஆலோசனை செய்துள்ளேன்.

அமீரே ஜமாஅத் என்ற பொறுப்பிலிருந்து எழுதுவதை எப்படி உணர்கின்றீர்கள்?

பொறுப்பு இல்லாமல் நீங்கள் ஒரு சுதந்திரமான மனிதர், எந்தச் சுமையும் இல்லாமல் உங்கள் எண்ணங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் இப்போது நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் அதை ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளலாம். எனவே நான் மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டியுள்ளது. இது சில வரம்புகளை உருவாக்குகிறது.

ஒரு சிந்தனையாளருக்கும் அறிஞருக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நம்மிடம் அதிக அறிஞர்கள் உள்ளனர். ஆனால் நமது சமூகத்தில் சிந்தனையாளர்கள் மிகக் குறைவு, நடைமுறை ஞானம் குறைவு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆம்! இவை ஒன்றுக்கொன்று முரணானவை என்று பலர் நினைக்கிறார்கள். அறி வார்ந்த வேலை என்பது வேறு, நடைமுறைச் செயல்பாடு என்பது வேறு. ஆனால் கருத்தியல் இயக்கம் இரண்டின் கலவையையும் கோருகிறது என்று நான் நினைக்கிறேன். இதிலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே சிறந்த முன்மாதிரி. மௌலானா மௌதூதி போன்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் முதல் தலைமுறை தலைவர்களும் அத்தகைய முன்மாதிரியையே பின்பற்றி உள்ளனர். இரண்டு விஷயங்களையும் மிக அழகாக இணைத்தார்கள். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஒரு கருத்தியல் இயக்கம். எனவே, நாம் வெறும் செயற்பாட்டாளர்களாக இருக்க முடியாது. சித்தாந்தத்திலிருந்து நாம் நம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது. குறிப்பாகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்கித் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அறிவார்ந்த ஞானம் வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு நடைமுறை இயக்கம். நாம் முன்வைக்கும் யோசனைகள் அனைத்தும் சமூகத்தில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தச் சமுதாயத்திற்கு உதவ வேண்டும். அதற்கு நடைமுறை ஞானமும் அனுபவமும் வேண்டும். SIOவில் நாங்கள் பெற்ற சீர்திருத்தம் மிகவும் உதவியது. மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு சூழ்நிலைகள், சவால்களுக்கு ஏராளமான நடைமுறை வெளிப்பாடுகளைப் பெற்றோம். நாங்கள் நிறைய சித்தாந்த சீர்திருத்தம், அறிவுசார் பயிற்சிகளை 21, 22 வயதில் பெற்றோம்.

டாக்டர் ஃபரீதி, அப்துல் ஹக் அன்சாரி, டி.கே.அப்துல்லா, ஜலாலுதீன் உமரி, டாக்டர் நஜத்துல்லாஹ் சித்தீகி போன்ற அறிஞர்களுடன் அடிக்கடி உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் மிக நெருக்கமாகப் பேசி மணிக்கணக்கில் உரையாடினேன். அவர்களுடன் விவாதித்திருக்கின்றேன். எனவே நடைமுறைச் செயல்பாடு, அறிவுசார் ஆதரவு, சீர்திருத்தம் சிறுவயதிலிருந்தே எங்களுக்குக் கிடைத்த விஷயங்கள். எனவே SIO நமது இளைஞர்களுக்கு ஒரு நல்ல தளம் என்று நான் நினைக்கிறேன். இது புதிய தலைமுறையைச் சரியான நடைமுறைக்கேற்ற சிந்தனையுடன் பயிற்றுவிக்கிறது.

உங்கள் உரையில் புதிய செய்தி ஒன்று எப்போதும் இருக்கும். அதுபோல நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஓராண்டிற்குப் பிறகு கூட அதே இடத்தில் நீங்கள் பேசும் போதெல்லாம் உங்களுடைய முந்தைய பேச்சை இணைத்து அதைக் கட்டி யெழுப்புகின்றீர்கள். நீங்கள் அதை எப்படி நிர்வகிக்கிறீர்கள்? உங்கள் உரைக்கான பல்வேறு குழுக்களுக்கான கோப்புகளைப் பராமரிக்கிறீர்களா?

ஆம். எனது அனைத்துப் பேச்சு, எழுத்து களையும் நான் பதிவு செய்கிறேன். அவை சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு எனது கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. உண்மையில், எனது எழுத்துகளிலும் குறிப்பு எடுக்கும் பழக்கம் பெரிதும் உதவுகிறது. என்னுடைய எழுத்துகளில் வரும் அந்தக் குறிப்புகள் எல்லாம் இந்தப் பழக்கத்தால் தான் வருகிறது. இந்தப் பழக்கம் குறைந்த முயற்சியில் பல விஷயங்களை மிகவும் திறமையாகச் செய்ய உதவுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக நான் பேசும் போதெல்லாம், முந்தைய பாதையைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். அது எந்த மாதிரியான பார்வையாளர்கள் என்பதையும், அவர்களிடம் நான் முன்பு என்ன சொன்னேன் என்பதையும் ஸ்கேன் செய்து என்ன பேசுவது என்று முடிவு செய்ய முடிகிறது.

தொழில்நுட்பத்தில் உங்கள் நிபுணத்துவம் இதை எளிதாகச் செய்ய உதவுகிறது என்று நினைக்கிறீர்களா?

இதை நான் எப்போதும் குறிப்பாக நம் இளைஞர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். தொழில்நுட்பத்தின் திறமையான பயன்பாடு நமது செயல்திறனை குறைந்தபட்சம் மூன்றால் பெருக்குவதை நான் உணர்கிறேன். ஒரு மணிநேரம் மூன்று மணிநேரமாகிறது. இது தொழில்நுட்பத்தின் சகாப்தம், நாம் தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நமது பழைய தலைமுறை தொழில்நுட்பத்தில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்டு விட்டது. ஆனால் நம் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் என்பது சமூக ஊடகங்கள் மட்டுமே. சமூக ஊடகங்களை விட மிக விரிவானது தொழில்நுட்பம் என்று நான் நினைக்கிறேன். திறமையான வாசிப்பு, தனிப்பட்ட வளர்ச்சி, தனிப்பட்ட அமைப்பு உங்கள் அறிவை ஒழுங்கமைக்க இது சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அனைத்து நோக்கங்களுக்காகவும் தொழில்நுட்பத்தில் பல வசதிகள் உள்ளன. அதன் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய முடியும்.

கேள்விகள், கோரிக்கைகளுக்கான பதிலுக்கு நீங்கள் அதிக நேரம் எடுக்க மாட்டீர்கள். சட்டென்று உங்கள் பதில் வந்துவிடும். எல்லாப் பொறுப்புகளுடனும் சரியான நேர மேலாண்மையால் மட்டுமே இதைச் சாத்தியமாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் நீங்கள் எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்று பல சமயங்களில் எனக்கு வியப்பாக இருக்கிறது. உங்கள் நேர மேலாண்மை உத்திகளை எங்களுக்குச் சொன்னால் அது எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

தனிப்பட்ட முறையில் எனது நேரத்தைச் சரியாக நிர்வகிக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமான விஷயம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். நான் ஒரு பரந்த நேரப் பிரிவை பராமரிக்க முயற்சிக்கிறேன். எனது இரவு நேரம் எனக்கு மிகவும் முக்கியமானது. என் வாசிப்பு பொதுவாக இரவு நேரங்களில் நடக்கும். ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலை நேரம் மிகவும் மதிப்புமிக்கது. இது எனக்கு பொன்னான நேரம். எல்லா எழுத்துகளும் பொதுவாக ஃபஜ்ருக்குப் பிறகுதான் நடக்கும். இந்த மூன்று நான்கு மணி நேரம் எனக்கு மிகவும் பயனுள்ள நேரம். தொந்தரவு இல்லை. முழுமையாகக் கவனம் செலுத்த முடியும். பின்னர் நாள் முழுவதும் நிர்வாகம் தொடர்பான பணிகள் மக்களுடனான சந்திப்புகளுக்கு எனது அலுவலகத்தில் இருப் பேன். எனவே இதில் அதிக சிரமம் இல்லை.

எனது சமூக ஊடக ஈடுபாட்டையும் ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறேன். குறிப்பாக வாட்ஸ்அப் குழுக்கள் ஒரு பெரிய கவனச் சிதறல். நேரத்தைக் கொல்பவை என்று நான் கருதுகிறேன். அவற்றை நீங்கள் சரியாக நிர்வகிக்கவேண்டும். எனது மொபைலைப் பார்த்தால், அதில் தேவை இல்லாத குழுக்களுக்கும் அறிவிப்பு முடக்கப்பட்டுள்ளது (Notification offl). நான் அவற்றைப் பொதுக் குழுவில் வைத்து பயணத்தின் போது நான் முற்றிலும் ஓய்வாக இருக்கும்போது மட்டுமே அவற்றைப் பார்க்கிறேன்.

மற்ற முக்கியக் குழுக்கள், மர்கஸ் செயலகக் குழு, ஷூரா குழு, முக்கிய நபர்கள் போன்றவை குழுவாக உள்ளன. இந்த நோக்கத்திற்காக நான் சில Software, filterகளைப் பயன்படுத்துகிறேன். எனவே முக்கியமான தகவல்தொடர்பு தேவை இல்லா தொடர்பு ஆகியவை எனது அலைப்பேசியில் வித்தியாசமாக வருகின்றன. எனவே முக்கியமான தகவல்தொடர்புக்குப் பதிலளிக்க அதிக அழுத்தம் தேவையில்லை. மன வீடியோக்கள், ஆடியோக்கள், ஆடியோ செய்திகளும் நேரத்தைக் கொல்லும். நான் முக்கியமான கோப்புகளை Filter செய்து, வொர்க் அவுட்களின் போது அவற்றைக் கேட்க முயற்சிக்கிறேன்.

 

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்