மீண்டும் பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. பற்றி எரியும் மணிப்பூர் குறித்து மௌனம் காட்டும் ஒன்றிய அரசுக்கு பொது சிவில் சட்டம் விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை அக்கறை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
22ஆவது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் பற்றி மக்களின் கருத்தைக் கேட்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் (2018) இதே சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் நாட்டிற்கு 'தேவையற்றது' 'விரும்பத்தகாதது' என்று அறிவிப்புச் செய்தது. ஐந்து ஆண்டுகளிலேயே மீண்டும் பொது சிவில் சட்டம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் சட்ட ஆணையத்திற்கு ஏன் ஏற்பட்டது என்பதை அது தெரிவிக்கவில்லை. பொது சிவில் சட்டத்தின் வரைவையும் (Draft) அது முன்வைக்கவில்லை. பொது சிவில் சட்டம் எப்படி அமையப் போகிறது என்பதைச் சொல்லிவிட்டால்லவா கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும்.
முதலில் பொது சிவில் சட்டம் என்ற பெயரே தவறு. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், மணவிலக்குக்குப் பின் குழந்தைப் பராமரிப்பு, பாகப் பிரிவினை, வாரிசுரிமை, நன்கொடை, வக்ஃப் ஆகியவற்றைப் பற்றிய சட்டங்களே தனியார் சட்டம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர மற்ற எல்லா சிவில் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன. எனவே இதனை பொதுவான குடும்பச் சட்டம் (Uniform Family Code) என்று அழைப்பதே சரியாக இருக்கும்.
தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறித்தவர்கள், மலைவாழ் மக்கள் என பல பிரிவினருக்கும் தனிச் சட்டங்கள் உள்ளன.
பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் தத்தமது வாதங்களை முன் வைக்கின்றனர். பொது சிவில் சட்டம் இருந்தால் நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இணக்கம், சமத்துவம், முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் அதனை ஆதரிப்போர்.
இது ஒரு போலியான வாதம். அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் இருந்தாலே ஒற்றுமை வந்துவிடும் என்று கூறுவது தவறு. தனியார் சட்டங்களைத் தவிர மற்ற எல்லாச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவாகத்தானே உள்ளது. சட்டங்கள் மனிதர்களை இணைப்பதில்லை. அன்பு, நல்லிணக்கம், உரிமைகளை வழங்குதல், உணர்வுகளை மதித்தல் ஆகியவற்றின் மூலமே ஒற்றுமை உண்டாகும். ஒருவருக்குப் பிடிக்காத பண்பாட்டை, மொழியை அவர் மீது திணித்தால் ஒற்றுமை குலையுமே தவிர ஒற்றுமை ஏற்படாது.
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் 1972 ஆகஸ்ட் 20ஆம் தேதி தீனதயாள் உபாத்தியாயா ஆராய்ச்சிக் கழகத் தைத் தொடங்கி வைத்துப் பேசும் போது ‘பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்க பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்வது இயற்கைக்கு விரோதமானது. விபரீத விளைவுகளையே உண்டாக்கக் கூடியது' என்று அறிவுறுத்தியுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசிய அம்பேத்கரும் அதைத் திணிப்பது புத்தி சுவாதீனமற்ற செயல் என்று வர்ணித்தார்.
அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசிய நேருவும், அம்பேத்கரும் அதனைத் திணிக்கக் கூடாது என்றே கருத்துத் தெரிவித்தனர்.
பொது சிவில் சட்டம் பற்றி சட்ட ஆணையம் 2018 ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கையில் 'ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வர அவசரப்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் காரணங்களில் ஒன்றாக ஆகிவிடும் (Our urge for uniformity itself becomes a reason for threat to the Territorial Integrity of the Nation)' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
சட்ட ஆணையம் மேலும் கூறியது, உலகில் பல நாடுகள் (அங்குள்ள மக்களிடையே நிலவும்) வேற்றுமைகளை அடையாளம் கண்டுகொள்வதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேற்றுமை, இருப்பதினாலேயே பாகுபாடு ஏற்படுகிறது என்று கூற முடியாது. மாறாக, அதுவே வலுவான ஜனநாயகத்தின் அடையாளமாகும். (Most Countries are moving towards recognition of the difference and the mere excistence of difference does not imply discrimination but is Indica- tion of Robust Democracy.)
பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதற்கு ஆதாரமாக இன்னொரு வாதம் வைக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழிகாட்டும் நெறிகளின் (Directive Principle) 44ஆவது பிரிவு பொது சிவில் சட்டத்தை இயற்ற அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறதே என்று வாதிக்கிறார்கள்.
அரசு இந்தியா முழுவதும் எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு சட்டத் தைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். (The State Shall Endeavour to secure for Citizens a uniform civil code throughout the territory of India.)
வழிகாட்டும் நெறிகள் சட்டமாகாது. அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கையை மட்டுமே அது சுட்டிக்காட்டுகிறது. அடிப்படை உரிமைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் அதற்குக் கிடையாது. வழிகாட்டும் நெறி அடிப்படை உரிமைகளோடு மோதும் எனில் அடிப்படை உரிமைகளே கவனத்தில் கொள்ளப்படும்.
அரசியல் சாசனம் பிரிவு 25 ‘இந்திய நாட்டில் அனைவரும் எந்த சமயத்தையும் தழுவவும், தழுவியபடி வாழவும், பரப்பவும் உரிமை உண்டு' என்று சொல்கிறது.
இந்தப் பிரிவு அனைவரும் அவரவர் மதத்தின் சட்டங்களைப் பின்பற்றி வாழ உரிமை அளிக்கிறது. இந்த உரிமையை வேறு எந்தச் சட்டத்தாலும் பறிக்க முடியாது.
பிரிவு 29 (1)
இந்தியப் பிரதேசத்தில் வசிக்கும் குடி மக்களின் எந்தப் பிரிவினரோ, பகுதியினரோ தனக்கான தனிமொழி, எழுத்து, பண்பாடு ஆகியவற்றுக்கு இந்தப் பிரிவு உரிமையளிக்கிறது.
இந்தப் பிரிவும் ஒரு பிரிவினரின் மதச் சட்டங்கள் பண்பாடுகளில் அரசு தலையிட அனுமதி மறுக்கிறது.
இதனடிப்படையில் வழிகாட்டு நெறிகளை விட அடிப்படை உரிமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டமா? மதச் சுதந்திரமா? இவ்விரண்டில் எது முக்கியத் துவம் என்று விவாதிப்பதற்காக சர்தார் படேல் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அதில் ஐந்து பேர் மதச் சுதந்திரம் முக்கியம் என வாக்களித்தனர். இதன் மூலம் பொது சிவில் சட்டம் கைவிடப்பட்டு அது வழிகாட்டும் நெறியில் சேர்க்கப்பட்டது.
வழிகாட்டும் நெறிகளில் வேறு பல விஷயங்களும் சேர்க்கப்பட்டிருக்கும்போது பொது சிவில் சட்டத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது சிந்தனைக்குரியது.
வழிகாட்டும் நெறியில் 45ஆவது பிரிவு கட்டணமில்லா கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. 47ஆவது பிரிவு மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அவற்றை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு 44ஐ மட்டும் தூக்கிப் பிடிப்பதில் உள்நோக்கம் உள்ளது.
பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர் கூறும் ஒரு கருத்தில் வலுவான வாதம் ஒன்று உள்ளது. அது, மதங்களின் பெயரால் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன. தனியார் சட்டம் இதற்கு வசதியாக அமைந்துள்ளது என்பதாகும். இதனைச் சரி செய்ய பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. பல மதச் சட்டங்கள் முறையாகத் தொகுத்து அமைக்கப்படவில்லை (No proper codificationtion) என்ற நிலை உள்ளது. அதைச் சரி செய்ய வேண்டும்.
தனியார் சட்டத்தின் சில விதிகள் அந்த மதத்தின் சட்டங்களுக்கு முரணாக உள்ளன. இன்றைய முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. எனவே அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடையே இருக்கும் ஒரு பிரிவினர் (மத்ஹபுகள்) மற்ற பிரிவினரின் சட்டத்தை ஏற்று மாற்றங்களைச் செய்துள்ளனர். அது 1939இல் நடைபெற்றது. அது தொடர வேண்டும்.
1955-56களில் இந்து திருமண, வாரிசு, சொத்துரிமை சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதுவும் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதுபோன்ற சீர்திருத்தங்களை அந்தந்த மதத்தினரே தாமே முன்வந்து செய்தால் ஆண், பெண் பாகுபாட்டு விதிகள் அகற்றப்படும். மதத் தலைவர்கள் தமது பழமைச் சிந்தனைகளையும், பிடி வாதத்தையும் கைவிட வேண்டும்.
சாத்தியமா?
பல்வேறு மதத்தவர், மொழியினர், பண்பாட்டு மரபினர் வாழும் ஒரு பன்மைச் சமூகத்தில் பொது சிவில் சட்டம் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.
பல்வேறு மதங்களுக்கிடையே வேறு பாடுகள் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு மதத்திற்குள்ளேயே பல மரபுகள் உள்ளனவே. அவற்றை ஒரே மாதிரியாக ஆக்க முடியுமா?
தமிழ்நாட்டில் தாய்மாமனை மணக்கும் மரபு உள்ளது. இது மற்ற மாநிலங்களில் இல்லை.
கேரளா இந்துக்களின் பண்பாட்டிற்கும், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் இந்துக்களின் பண்பாட்டிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.
மலைவாழ் மக்கள், பழங்குடியினர் பின்பற்றும் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பெரும்பான்மை இந்துக்களின் பண்பாட்டு மரபிலிருந்து வேறுபடுகிறது.
பிரிக்கப்படாத இந்துக் குடும்பம்(HUF) என்ற முறை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகப் பல வரிச் சலுகைகளை இந்துக்கள் அனுபவிக்கின்றனர். பொது சிவில் சட்டத்தின் மூலம் இதனை இந்துக்கள் இழக்க நேரிடும். இதனை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
ஒருவேளை இந்துச் சட்டங்களை மாற்றி திருமணத்தின்போது நெருப்பினை வலம் வரக்கூடாது, தாய் மாமானை மணக்கக்கூடாது என்ற சட்டங்கள் வந்தால் இந்துக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும்.
மலைவாழ் மக்களும், வடகிழக்கு மாநில மக்களும் ஏற்கனவே 'பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்' என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்குப் பொது சிவில் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப் படும் என்கிறது ஒன்றிய அரசு. பொது சிவில் சட்டம் என்று கூறிவிட்டு ஒரு பிரிவினருக்கு மட்டும் விதிவிலக்கு என்பதை எந்தச் சட்டத்தின் கீழ் நியாயப்படுத்த முடியும் இதே விதிவிலக்கை மற்ற சமூகங்களுக்கும் அளிக்கலாமே!
முஸ்லிம்களும், சீக்கியர்களும் வெளிப் படையாகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை இந்துக்களில் எவரும் ஏற்போம் என்று சொல்லவில்லையே. சட்டக் கமிஷன் பொது சிவில் சட்ட முன்வரைவை (Draft) தெரிவித்தால் அவர்களும் எதிர்க்கவே செய்வார்கள்.
தேவையா?
பொது சிவில் சட்டம் தேவை என பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்தக் கோரிக்கையும் வராத போது அதுபற்றி தேர்தல் நேரத்தில் அறிவிப்பது தேர்தல் வியூகமாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாராள மான பரந்துபட்ட கொள்கையின் கீழ் மக்களை ஒன்றிணைப்பதுதான் அறம் சார்ந்த அரசியல் ஆகும்.
மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமலிருப்பது, மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதுதான் நமது நாட்டில் பின்பற்றப்படும் மதச் சார்பின்மை. அதற்கு வேட்டு வைக்கும் முறையில் ஓர் அரசு நடந்துகொள்ளலாமா?
எந்த மதச் சட்டங்களின் கீழும் வர விரும்பாதவர்களுக்கு தனியாகவே சட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 (Special Marriage Act) இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 (India Succession Act) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதுவும் ஒரு வகையில் தனியார் சட்டமே.
ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் சட்டங்கள் பிற மதத்தவரின் உரிமைகளைப் பாதிக்காத வரையில் பொது சிவில் சட்டத்திற்கு அவசியமில்லை.
சில சமயங்களில் ஒன்றிய அரசு இரட்டை நிலையைக் கடைப்பிடிக்கிறது. இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்தால் மதத்தின் புனிதம் கெட்டுவிடும் என எதிர்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமியச் சட்டங்களில் தலையிடுகிறார்கள். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, முத்தலாக் விஷயத்தில் தலையிட்டது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதை எதிர்த்தது.
பொது சிவில் சட்டத்தைத் திணிப்பது பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறிய சொற்களோடு இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.
'பொது சிவில் சட்டத்ததை மக்கள் மீது திணிப்பதற்கான எந்த அதிகாரத்தையும் இந்தப் பகுதி வழங்கவில்லை. ஆனால் அதை நோக்கிச் செல்வதற்கான அதிகாரத்தை வழங்குகிறது' (The Provision was not an obliga- tion on the state to introduce a common civil code but just gave the state. the power to move towards its) என்று சொல்லிவிட்டு மேலும் சொன்னார்:
எந்த அரசும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்யும் வகையில் செயலாற்றக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் அது புத்தி சுவாதீனமற்ற அரசாகவே அமையும் (No government can exercise its power in such a manner as to provoke the Muslim Community to rise in rebellion. I think it would be a mad government if it did so) என்று அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்ட விவாதத்தை நிறைவு செய்து அம்பேத்கர் 1948, டிசம்பர் 2ஆம் நாள் நிகழ்த்திய உரையின்போது அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
மாற்றமும், சீர்திருத்தமும் தேவை என்றால் அது அந்தச் சமுதாயத்திலிருந்து தான் வர வேண்டும். அந்தச் சீர்திருத்தத்தை நோக்கி அந்தச் சமுதாய மக்களிடம் கோரிக்கை வைப்பதும், அவர்களுக்கு வழி காட்டுவதும், சீர்திருத்தத்தை அவர்கள் மூலமே மேற்கொள்வதும்தான் சிறந்த வழி முறையாக இருக்கும். வெளியிலிருந்து திணிக்கப்படும் தீர்வுகள் ஒருபோதும் நிலைக்கப் போவதில்லை.