மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

வெறுப்பின் அறுவடை ஹரியானா வன்முறை
ஹபிபுர் ரஹ்மான், Aug 16 - 31 2023


Art !.jpg

கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ‘பிரிட்ஜ் யாத்ரா’ எனும் பேரணியை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த வன்முறை முன் திட்டமிடலுடன் நடந்தேறி உள்ளது. 

கலவரத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே தீவிரவாத விஎச்பி, பசு இறைச்சியைக் கடத்தினர் எனக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் ஜுனைத், நசீர் ஆகியோரை உயிருடன் காருக்குள் வைத்து எரித்துக் கொலை செய்த ‘மோனு மோனோசர்’ என்பவனை அவர்களின் பேரணியில் கலந்துகொள்ள வைத்துள்ளனர்.

‘முஸ்லிம்கள் நாட்டிலிருந்து மொத்த- மாக அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்’ எனப் பொது மேடையிலேயே பேசியவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது வேலையே பசுக் காவலர் (கவ்ரட்ஷக்) எனும் பெயரில் ஒரு காரையும், அதில் நவீன ஆயுதங்களை ஏந்திய குண்டர்களையும் ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக காவல்துறையினரைப் போல வலம் வருவதுதான். அவர்களுக்கு ஐயம் ஏற்பட்டால் வாகனங்களையோ, வீடுகளுக்குள்ளேயோ எத்தகைய அனுமதியும் இன்றி நுழைந்து பசு இறைச்சி வைத்திருக்கிறார்களா அல்லது மாட்டு இறைச்சி உண்கிறார்களா என்பதை அடாவடித்தனமாகக் கண்காணிப்பது தான். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவன் மீது பல வழக்குகளும் நிலுவை-யில் உள்ளன. ஆனால் இவன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையிலும் உயர் பதவிகளில் உள்ள காவல்துறை, அரசு அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை இவன் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் திட்டப்படி நூஹ் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியாட்டங்கள் தொடங்கப்பட்டபோது இந்துத்துவ தீவிரவாதிகளைக் கிளர்ச்சி ஊட்டுவதற்காகவே அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ‘முஸ்லிம் கலகக்காரர்களால் 3000 - 4000 புனிதப் பயணிகள் கோவில்களில் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்’ என்கிற போலிச் செய்தியைப் பரப்பினார். ஆனால் இந்தச் செயதி வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த நல்ஹர் மகாதேவ் கோயிலின் தலைமை பூசாரி உள்துறை அமைச்சரின் கூற்று பொய்யானது எனக் கூறினார்.

ஆனாலும் அவர்களின் திட்டமிடலின்படியே வெற்றிகரமாக ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நெருப்பைப் பற்ற வைத்து அவர்கள் ஊற்றிய இந்தப் பொய் செய்தி எனும் எரிவாயுவினால் அந்த நெருப்பிற்குப் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் முஸ்லிம் பெண்களின் மானமும் இலக்காகப்பட்டுவிட்டது.

ஜூலை 31 அன்று வெடித்த இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஹரியானாவின் நூஹ், குருகிராம் ஆகிய பகுதிகளில் தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திய இந்துத்துவ வன்- முறைக் கும்பல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிவாசல்களைத் தாக்கியும் தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளனர். மேலும் அம்மாநிலத்தின் குருகிராம் நகரின் செக்டார் 57இல் அமைந்துள்ள அஞ்சுமன் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு தீ வைத்துள்ளது. மட்டுமின்றி அப்பள்ளின் இமாம் மௌலானா ஹாபிஸ் சாத் (19) கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுவரை இந்த வன்முறையில் அந்த இமாம் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லிம்கள் உள்பட 173 பேர் கைது செய்யப்பட்டு 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வன்முறை குறித்துப் பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் ‘வெறும் ஐம்பதாயிரம் காவலர்களை வைத்துக்கொண்டு இரண்டே முக்கால் கோடி மக்கள் தொகையில் ஒவ்வொருவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை’ என்று பேசினார். அக்கலவரத்தை தற்போது நிறுத்துவதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

வன்முறை சற்று தணிந்த உடனே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சொல்வதுதுõன் உலக நியதி. ஆனால் அதற்கு நேர் மாறாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் முஸ்லிம்களின் மீது ‘உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியைப் போன்று இங்கும் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர். இந்த மாநிலத்தில் நாங்கள் முஸ்லிம்களை அதிகாரப்பூர்வமாகவே இனச் சுத்திகரிப்பு செய்வோம் என்று அவர்கள் அறைகூவலிடுவதையே இது வெளிப்படுத்துகிறது.

இப்படி அவர்கள் கூறிய மறுநாளே வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் பகுதியில் ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமான 300க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாகக் கூறி அவசர அவசரமாக புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்துள்ளனர். அதில் பலரிடமும் உங்களுடைய வீடு இரண்டு நாள்களில் இடிக்கப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டு அதற்க டுத்த அரைமணி நேரத்திற்குள்ளேயே அவசர அவசரமாக இடிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறிக் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிந்து சமாஜ் எனும் அமைப்பின் மூலம் இமாமைக் கொன்ற கொலையாளி உட்பட பஜ்ரங் தள்ளின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சட்ட விரோதமாக மகா பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளனர். இச்சம்பவம் எந்த அளவு இஸ்லாமிய வெறுப்பு அவர்களின் உள்ளத்தில் ஊறிக் கிடக்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து நூஹ் வன்முறைக்குப் பிறகு அம்மாநில அரசு மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கையைத் தடை செய்து உத்தரவுகளைப் பிறப்பித்த நிலையில் இடிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் பல தினக்கூலி, இடம்பெயர் முஸ்லிம்கள் எந்த முன்னறிவிப்புமின்றி அவர்களின் பணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு இடிப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப்படாத பல குடும்பங்கள் இவ்வாறு மறைமுகமாக அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால் அடுத்தவேளை உணவிற்குக் கூட வழியின்றித் தவித்து வருகின்றனர்.

இன்னும் ஹரியானாவின் பல பகுதிகளில் இந்த வன்முறை நெருப்பின் அனல் இருந்து-கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் கூட இந்துத்துவ வன்முறைக் கும்பல் கையில் ஆயுதங்களை ஏந்தி ஹரியானாவின் தெருக்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கோஷமிடும் காட்சிகளையும் சமூக வலை தளங்களில் காணமுடிகிறது.

ஹரியானா இனச் சுத்திகரிப்பு நிகழ்விற்கு பிரதமர் மோடி உட்பட ஒன்றிய அரசின் சார்பில் ஒருவர் கூட வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்கு ஒன்று என்றால் ஏன் ஆட்சியாளர்கள் காதுகள் செவிடாகி விடுகின்றன? மணிப்பூர் வன்முறை வெறியாட்டத்தில் மௌனம் சாதித்ததைப் போலவே இப்போதும் சாதித்து விடலாம் என எண்ணுகின்றனர் போலும்.

அவர்களின் இம்மௌனமானது மணிப்பூர் நெருப்பு மூன்று மாதங்களையும் தாண்டி இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதைப் போல இந்த ஹரியானா நெருப்பும் எரிந்து விடுமோ என்கிற அச்சத்தையே ஏற்படுத்துகிறது. அரசு உடனடியாகப் பாதிக்கப்பட்ட மக்களையே வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு அவர்களுக்கு நீதமான முறையில் உடனடியாக உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்.

இந்த வன்முறை என்பது காலம் காலமாக சங் பரிவாரத்தினர் இஸ்லா மி-யர்-களுக்கு எதிராக நாடு முழுவதும் பல ஆண்டுகளாக விதைத்து வந்த வெறுப்பு விதையின் அறுவடைக்கான ஒரு சிறிய எடுத்துக்-காட்டு-தான். வருகிற 2024 தேர்தலில் சங்- பரி வார்கள் அதிகார மட்டத்திலிருந்து துடைத்தெறியப் படுவதே வருங்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்கான ஒரே வழி


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்