மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

முழுமை

மாற்றத்தின் முகவராக நாம் மாற வேண்டும்
ரஹ்மத்துன்னிஸா, செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழில் : ஆர். அஃப்ரிதா சுலைஹா, September 1 - 15, 2023


மாற்றத்தின் முகவராக நாம் மாற வேண்டும்

கடந்த இதழ் தொடர்ச்சி…

 

மக்கள் கருத்தை மாற்றுவதற்கான திட்டங்களாக எவற்றை முன்வைக்கின்றீர்கள்?

ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி எல்லா முஸ்லிம்களும் இதரமதச் சொந்தங்களுடன் சீரான தொடர்பு களை வைக்க வேண்டும். அவர்களுடனான நல் உறவை வலுப்படுத்த வேண்டும். நமது சொல்லால் மட்டுமின்றி செயலாலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இஸ்லாத்தைக் குறித்தும், முஸ்லிம்களைக் குறித்தும் அவர்கள் ஊடகங்களைப் பார்த்துப் புரிந்து கொள்வதை விட நம்மைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தின் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இஸ்லாம் தரும் அமைதி, எல்லாருக்குமான நீதி, சமத்துவம் ஆகியவற்றை முஸ்லிம்கள் நடத்துகின்ற வியாபாரம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வட்டியில்லா நிறுவனங்கள் போன்ற அனைத்துமே பிரதிபலிக்க வேண்டும். மக்கள் சேவையின் மூலமும் இஸ்லாம் குறித்த நேர்மறையான சிந்தனையை அவர்களிடம் உருவாக்க முடியும்.

 

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டுள்ளது. குறைந்த ஆள்வளத்தை வைத்துக் கொண்டு பெரிய இலக்கை அடைய முடியுமா?

ஜமாஅத்தின் உறுப்பினர்கள், ஊழியர்கள், அபிமானிகள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும். சில நிகழ்வுகளுடன் நின்றுவிடாமல் ஒவ்வொருவரின் தனிப் பட்ட நிகழ்ச்சி நிரலாக இப்பணிகள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் மூன்று நபர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தினால் ஒன்பது நபர்களுக்கு நமது செய்தியை எடுத்துவைக்க முடியும். ஒவ்வொரு நல்ல முயற்சியும் சிறிய அளவிலான நபர்களைக் கொண்டே தொடங்கப்படுகின்றன. அயராத உழைப்பும், திட்டமிட்ட தொடர் சந்திப்புகளும் பெரிய மாற்றத்திற்கு வித்திடுகின்றன. மாற்றத்தின் முகவராக நாம் மாற வேண்டும்.

இந்தப் பணி இயக்க ஊழியர்களுடன் நின்றுவிடக் கூடாது. முஸ்லிம் சமுதாயத் தையும் இந்தப் பணி செய்பவர்களாக மாற்ற வேண்டும். மனித குலத்தின் நன்மையை, அமைதியை நாடி நாம் செய்யும் நற்பணிகளில் இதரமதச் சகோதரர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் இணைந்து பணியாற்றும் போது எத்தகையை இலக்கையும் எட்டிவிட முடியும்.

 

முஸ்லிம் சமுதாய மேம்பாட்டிற்கான திட்டம் உங்களிடம் எதுவும் உள்ளதா?

ஜமாஅத் வகுத்த கொள்கைத் திட்டம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியதாகும். முஸ்லிம் சமுதாயம் கல்வி, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்றைய கால நெருக்கடிகள், பிரச்னைகளால் இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சச்சார் கமிட்டி அறிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து நேர்மறையான வளர்ச்சிக்குப் பதிலாக எதிர்மறையான வளர்ச்சியே உள்ளது எனப் பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அவர்களின் பொருளாதார நல்வாழ்வுக்காகவும் நாம் பல திட்டங்களை வகுத்துள்ளோம். நாடு முழுவதும் குறைந்தபட்சம் 300 வட்டியில்லா நிறுவனங் களை உருவாக்குவோம் என்ற இலக்கை வைத்துள்ளோம். பொருளாதார மேம்பாடு, கல்வி மேம்பாடு, முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் அதிகாரமளித்தல் போன்றவை உரிய முக்கியத்துவத்தோடு நான்காண்டு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

 

தொடக்கத்திலிருந்தே ஜமாஅத் பெண்களுக்கான மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது. இப்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்தச் செயல்திட்டத்தில் பெண்களுக்கான பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஜமாஅத்தில் பெண்களுக்கான மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஜமாஅத் தின் பொறுப்புகள், ஆலோசனைக் குழு அனைத்திலும் பெண்களின் பலம் அதிகரித்துள்ளது. பெண்கள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். முஸ்லிம் பெண்கள் இப்போது மிகவும் படித்தவர்களாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும், லட்சியத்துடனும் இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றலையும் வலிமையையும் நாம் பயன்படுத்தினால், நமது பணிகள் பல மடங்கு அதிகரிக்கும். இலக்கை மிக வேகமாக அடைய முடியும்.

இஸ்லாம் பெண்களுக்கு மிகவும் கௌரவமான இடத்தை வழங்கியுள்ளது. அது அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும், அதிகபட்ச உரிமைகளையும் வழங்கியுள்ளது. அந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் நம் பெண்களுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலங்களில் கல்வி, பொருளாதார நடவடிக்கைகள், சமூக ஈடுபாடு என அனைத்திலும் பெண்கள் முன்னணியில் இருந்தனர். பல்வேறு பண்பாட்டுத் தாக்கத்தினால் அந்தப் பாரம்பரியம் நீடிக்கவில்லை.

பெண்களைக் குறித்த தவறான நம்பிக்கைகள் உள்ளன. அதன் காரணமாகப் பெண்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. அந்தத் தவறான நம்பிக்கைகளை அகற்றாமல் நம்மால் பெண்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஜமாஅத் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறது. பெண்களின் உரிமைகள் என்ன என்ப தையும், பெண்களைக் குறித்த சிந்தனை மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறோம். இப்போது இந்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருவதால் பெண்களின் பங்களிப்பை நாம் பெறமுடிகிறது.

 

கடந்த மீகாத்தில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்கும் முயற்சியை ஜமாஅத் மேற்கொண்டது. இளைஞர் ஜமாஅத்திற்கான உங்கள் திட்டம் என்ன?

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். வயது வந்தோர் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டால் குறைந்தது 50 விழுக் காட்டினர் 35 வயதுக்குக் கீழே உள்ளனர். ஆனால் ஜமாஅத்தில் அப்படியான நிலை இல்லை. ஒவ்வொரு கிளையிலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்கள், ஊழியர்கள் பலத்தில் மிகக் குறைவான இளைஞர்களே உள்ளனர். பொதுவாக, வயதானவர்கள் எண்ணிக்கையில் அதிகம். ஜமாஅத்தில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். வளர்ந்து வரும் எந்த இயக்கத்திலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்வதனால் வயதானவர்கள் முக்கியமில்லை என்று அர்த்தமில்லை. வயதானவர்கள் இளைஞர்களுக்கு வலிமை, உத்வேகத்தின் ஆதாரமாக மாறுகிறார்கள். அவர்கள் இளம் தலைமுறையை சீர்படுத்தித் தயார்படுத்துவார்கள். இளைஞர் ஜமாஅத்தாக மாற்ற நிறைய உழைக்க வேண்டியுள்ளது. ஜமாஅத்தின் அனைத்து மட்டங்களிலும் இளைஞர்களையும் பெண் களையும் அதிக அளவில் ஈடுபடுத்துவதை எங்களது திட்டத்தில் காணமுடியும். இந்த நான்காண்டுத் திட்டத்தில் எங்கள் ஊழியர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு 40 வயதுக்குக் கீழே இருக்க வேண்டும் என்று இலக்கு கொடுத்துள்ளோம்.

 

ஜமாஅத்தின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) இஸ்லாமிய மாணவியர் அமைப்பு (GIO) பங்களிப்பை எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?

 

SIO, GIO இரண்டும் சுதந்திரமாக இயங்கும் அமைப்புகள். அவர்களுக்கென கொள்கைகளையும் திட்டங்களையும் வைத்திருக்கிறார்கள். இலக்கை நிர்ணயித்து அவர்களுக்கென செயல் திட்டங்களை உரு வாக்குகிறார்கள். அத்தகைய சுதந்திரத்தை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். எனவே, நாம் எதைத் திட்டமிடுகிறோமோ அது அவர்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால் அவர்கள் இந்த நான்காண்டுத் திட்டத்தில் பங்களிப்பு செய்ய முடியும். பொதுமக்களின் கருத்தை இஸ்லாத்திற்குச் சாதகமாக மாற்றுவதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது. அவர்களுடைய செயல் திட்டத்துடன் இணைந்து போவது. SIO, GIO, சிறுவர் சிறுமிகளின் முக்கிய பணியும் இதனுடன் தொடர்புடையது. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மத்தியிலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளைத் தெரிவிக்க முயற்சிப்பார்கள். இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை அகற்ற முயற்சிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கல்வியாளர்களுக்கான தளங்களை உரு வாக்கியுள்ளோம். மதத் தலைவர்களுக்காக தார்மிக் ஜன் மோட்சா போன்ற மன்றங்கள் செயல்படுகின்றன. அடிமட்ட அளவில் சத்பவானா மன்ஞ்(சயம நல்லிணக்க மன்றங்கள்) தொடங்கியுள்ளோம். இந்தச் சூழலில் இளைஞர்கள் மத்தியில் இந்தச் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்புகிறோம். சிறுவர், சிறுமியருக்கான இதுபோன்ற மன்றங்களை நடத்துவோம் இந்த முயற்சிகளில் SIO, GIO எங்களுக்கு உறுதுணையாக இருக்கவும், இளைஞர்களிடம் இந்த வேலையை எடுத்துச் செல்லவும் விரும்புகிறோம்.

 

இன்றைய காலத்தில் முஸ்லிம் சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகளாக எதைக் கருதுகின்றீர்கள்?

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும். இந்த நம்பிக்கை என்பது நமது முழு அணுகுமுறையையும், மனநிலையையும் மாற்றும் ஒன்று. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை நம்மை அச்சமற்றவர்களாக ஆக்க வேண்டும். அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை நம்மை மிகவும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் ஆக்க வேண்டும். நம்மை மிகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும், துடிப்பானவர்களாகவும் மாற்ற வேண்டும். எனவே, இவை அனைத்தும் ஒரு முஸ்லிமின் நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

நாம் மிக வேகமாக மாறிவரும் உலகில் வாழ்கிறோம். எனவே, கற்றல், மீள்கற்றல் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் முக்கிய மானது. சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது தொடர்பான எந்தவொரு கருத்தியல் பணியிலும் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் கற்றல், மீள்கற்றல் மிகவும் அவசியமானது. இந்தப் பழக்கங்களை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால், வேகமாக மாறிவரும் இந்த உலகத்தில் நம்மால் தாக்கம் ஏற்படுத்த முடியாது. புதிய விஷயங்கள், புதிய நுட்பங்கள், மக்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய வழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் நம்மைப் பயிற்றுவிப்பதற்கும் சமூகத்துடன் இணங்குவதற்கும் நிலையான முயற்சிகள் தேவை.

அடிப்படைச் சித்தாந்தம், குர்ஆன், நபிவழி, இஸ்லாமிய போதனைகள் போன்ற வற்றைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளுக்கு மேலதிகமாக அல்லாஹ்வுடனான நமது தார்மிக, ஆன்மிகத் தொடர்புகளை வலுப்படுத்துதல், புதியவற்றைக் கற்றுக் கொள்வது ஒவ்வொருவருக்கும் இப்போது தேவை என்று நான் நினைக்கிறேன்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்