மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

நபிகளார் உருவாக்கிய தோழர்கள்
மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, September 16-30, 2023


நபிகளார்உருவாக்கியதோழர்கள்

நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சமூகத்தில் மாற்றத்திற்கான புரட்சிக் குரலை எழுப்புவது என்பது சாகசங்கள் நிறைந்த ஒரு பயணமாகவே இருக்கும். இருளை விரும்பும் மக்களிடம் விளக்கைக் கொடுப்பவரின் நிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது நபி(ஸல்) அவர்களின் அன்றைய நிலையும். ஆகவேதான் நபி(ஸல்) அவர்கள் தொடக்கம்

முதலே இந்தப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இஸ்லாமியப் பரப்புரையின் தொடக்க காலகட்டத்தில் இதற்கெனத் தனிக்கவனம் செலுத்தி வெகு சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்க முடிவெடுத்தார்கள். எடுத்துச் சொல்லப்படும் ஏகத்துவத்தை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் மனோவலிமையை அவர்களுடைய உள்ளங்களில் ஊன்றினார்கள்.

தொடக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெரும்பாலோரும், இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னரே நற்குணம் மிக்கவர்களாகவும் சிறந்த தலைவர்களாகவும் ஜாஹிலியா எனும் அறியாமைக் காலத்திலும்கூட ஒப்பற்ற ஆளுமை மிக்கவர்களாகவும் திகழ்ந்திருந்ததை அவதானித்திருக்கலாம்.

செல்வச் சீமாட்டி அன்னை கதீஜா(ரலி), அருமைத் தோழர் அபூபக்கர்(ரலி), வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிஸா(ரலி), அண்ண லாரின் அரவணைப்பில் வளர்ந்த அலீ(ரலி), அபூபக்கர்(ரலி), வெட்கத்தின் விளைநிலம் உஸ்மான் பின் அஃப்பான்(ரலி), பெரும் வீரர் ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மாபெரும் வணிகர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), சீறும் சிறுத்தை ஸஅத் பின் அபீ வகாஸ்(ரலி), ஒருமுறைகூட சிறுதவறும் செய்யாத தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரலி), நம்பிக்கை நட்சத்திரம் அபூ உபைதா(ரலி), யாஸிர்(ரலி), சுமைய்யா(ரலி), அம்மார்(ரலி), பிலால்(ரலி) போன்ற அனைவரும் தொடக்க காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள். இவர்களில் பெரும்பாலோரின் இஸ்லாத்திற்கு முந்தைய வரலாறு போற்றத்தக்கதாகவே இருந்துள்ளது.

இப்னு ஹிஷாம்(ரஹ்) அவர்களுடைய கருத்தின்படி, ரகசியப் பரப்புரை நடைபெற்ற தொடக்க மூன்று ஆண்டுகளில் மொத்தம் ஐம்பத்தி மூன்று பேர் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அதில் பத்துப் பேர் பெண்கள்.

அபூபக்கர்(ரலி)

செல்வந்தராகவும் குறைஷித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அபூபக்கர்(ரலி) அவர்களுடைய இஸ்லாத்திற்கு முந்தையகால மொத்தச் சொத்து மதிப்பு, ஏறக்குறைய நாற்பதாயிரம் திர்ஹம் ஆகும். அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அந்தச் செல்வம் முழுவதும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத்தான் பயன்பட்டது. ‘அபூபக்கர்(ரலி) அவர்களின் செல்வத்தைப் போன்று வேறு யாருடைய செல்வமும் எனக்குப் பயன் தரவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களே ஒருமுறை குறிப்பிட்டுக் காட்டினார்கள்.

சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அடிமைகளை விலைக்கு வாங்கி விடுதலை செல்வதற்கும், தமக்காக எதையும் சேர்த்து வைக்காமல் முழுச் செல்வத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செல்வதற்குமான விசாலமான இதயத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான்.

உஸ்மான்(ரலி)

உஸ்மான்(ரலி) அவர்களோ குறைஷிகளில் புகழ்பெற்ற வியாபாரியாகத் திகழ்ந்தவர். அன்றைய ஷாம் தேசத்திற்குச் செல்லும் அவருடைய வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் தயாராக நின்றுகொண்டே இருக்கும். தாய்நாட்டின் ஏழைகளையும் அநாதைகளையும் போற்றிப் பராமரிக்கும் விஷயத்தில் கடுகளவேனும் அவருக்குத் தயக்கம் இருக்கவில்லை. தபூக் போர் நடைபெற்ற காலத்தில் மதீனாவில் பெரும் பஞ்சம் நிலவியது. தனி ஒருவராக நின்று போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உஸ்மான்(ரலி) செய்து கொடுத்தார். ஒரு போருக்கான படையணியை ஒரு தனி மனிதர் தயார் செய்து கொடுத்துள்ளார் என்பதைக் கற்பனை செய்ய இயலுகிறதா..? ஆனால் உஸ்மான்(ரலி) செய்துள்ளார். அதுதான் உண்மை.

இன்றைய நாகரிக உலகில்கூட இப்படியான ஒருவரைக் காண முடியாது. ஒரு போர்ப் படைக்கான செலவினங்களையும் தயாரிப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் வசதிபடைத்த தனி மனிதர்களை இன்று பார்க்க இயலுமா? அப்படியே வசதி இருந்தாலும் அவர்களிடம் அதற்கான மனம் இருக்குமா? ஆனால் உஸ்மான்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவ்வாறுதான் தயார் செய்தார்கள்.

ஹம்ஸா(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றது முதல் இஸ்லாம் வேகமெடுக்கத் தொடங்கியது. உமர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவுவதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்டுப் பெற்றார்கள். அவருக்கென தனிப் பிரார்த்தனை செய்தார்கள் நபி(ஸல்) அவர்கள். (இஸ்லாத்தின் எதிரிகளுக்காக இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்கின்றோமா என்பது கேள்விக்குறியே)

ஹம்ஸா(ரலி)

இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னரே குறைஷிகளின் சிங்கம் என ஹம்ஸா(ரலி) புகழப்பட்டிருந்தார். ஆரோக்கியம் மிக்க இளமையும், தீரம்மிக்க வீரரகவும் திகழ்ந்தார் ஹம்ஸா(ரலி). அவர் ஒரு வார்த்தை கூறிவிட்டால் அதை எதிர்த்து மறுவார்த்தை கூறுவதற்கு அன்றைய மக்காவில் யாரும் இருக்கவில்லை. அண்ணலார்(ஸல்) அவர்களின் பெரிய தந்தையான ஹம்ஸா(ரலி) அவர்களுக்கு ஜாஹிலியா காலத்திலேயே நபி(ஸல்) அவர்கள் மீது அன்பும் மரியாதையும் இருந்தது.

ஒருநாள் வேட்டை முடிந்து திரும்பும் போது, கஅபாவில் வைத்து அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அபூஜஹ்ல் தொல்லை கொடுக்கின்றான் என்ற செய்தி ஹம்ஸாவின் காதுகளுக்கு எட்டுகிறது. கோபத்தை அடக்கி வைக்க அவரால் இயலவில்லை. அம்புடன் அபூஜஹ்லுக்கு முன்பாக வந்தார். அம்பால் அவனுடைய தலையில் ஓங்கி விட்டார் ஒரு குத்து. ரத்தம் பீறிட்டு வந்தது.

‘முஹம்மதின் மார்க்கத்தை நானும் பின்பற்றும்போது நீ எப்படி அவரை வேதனைப்படுத்துவாயா..? தைரியமிருந்தால் இதோ இப்போது என் முன்னால் அவரிடம் கூறிய வார்த்தைகளைக் கூறு பார்க்கலாம். முஹம்மத் என்ன கூறுகின்றாரோ அதையே நானும் கூறுகிறேன். முடிந்தால் என்னோடு மோது’. ஒரு சிங்கத்தைப் போன்று கர்ஜித்தார் ஹம்ஸா(ரலி).

ஹம்ஸா(ரலி) அவர்களின் வருகை, நபி(ஸல்) அவர்களுக்குப் புதிய பாதைகளைத் திறந்துவிட்டது. தீனுல் இஸ்லாத்திற்குப் பெரும் வெற்றிகளை அவர் மூலம் அல்லாஹ் கொடுத்தான். அன்று முதல் இஸ்லாம் ஏற்றம் பெறத்தொடங்கியது. எல்லாவாற்றுக்குப் பின்னாலும் பெருந்தலைவர் பெருமானார்(ஸல்) அவர்களின் பெருமுயற்சியும் தனிப்பெரும் வழிகாட்டுதலும் அடங்கியிருந்தது.

அர்கம்(ரலி) அவர்களுடைய வீட்டில் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் ஒன்று கூட்டினார்கள். தாருல் அர்கமில் அண்ணலாருக்கு முன்னால் அமர்ந்து அன்று பாடம் படித்த நபித்தோழர்கள்தான், பிற்காலத்தில் அலீ(ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலம்வரை இஸ்லாத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பயணத்தில் தங்கள் இன்னுயிரையும் ஈந்து பெரும் பங்காற்றியவர்கள்.

நம்பிக்கை, நாணயம், சத்தியம், சமர்ப்பணம், வீரம், விசுவாசம், தீரம், தைரியம், உலகப் பற்றின்மை போன்ற உன்னதக் குணங்களை நபி(ஸல்) அவர்கள் அந்தத் தோழர்களிடம் வளர்த்து எடுத்தார்கள். நன்கு பதப்படுத்தப்பட்ட மண்ணில் ஓர் உழவன் நாற்று நடுவதுபோல் தோழர்களின் உள்ளங்களில் தியாக உணர்வையும் நற்குணங்களையும் நாகரிகத்தையும் நபி(ஸல்) அவர்கள் நட்டு வளர்த்தார்கள். இவர்கள்தான் நபி(ஸல்) அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரங்கள். திருக்குர்ஆன் இவர்களைக் குறித்து இவ்வாறு கூறுகின்றது: ‘அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கின்றான். தன்னுடைய உதவியினாலும் இறைநம்பிக்கையாளர் மூலமாகவும் உமக்கு வலுவூட்டியவனும் அவனே. அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகின்ற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 8 : 62-64)

பூமியில் அதர்மங்களை அழித்தொழிப்பதற்கும் மறுமையில் சொர்க்கத்தைச் சொந்தமாக்குவதற்கும், அந்த இலட்சியத்தை அடைய எதை வேண்டுமென்றாலும் இழப்பதற்கும் எப்போதும் அந்தத் தோழர்கள் தயாராகவே இருந்தனர்.

கப்பாப் பின் அல்அரத்(ரலி)

நோவினைகளையும் வேதனைகளையும் சகித்துக்கொள்ள முடியாத தொடக்க நாள்களில் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். அழுது அழுது வீங்கிக் கலங்கிய கண்கள். சாட்டையடிகள் மூலம் உடலெங்கும் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்: ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் உதவி கேட்கக்கூடாதா? எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடாதா..?’

சற்றுநேர அமைதிக்குப் பின்னர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன் சென்ற எத்தைனையோ சமூகங்கள் அவர்களில் ஒருவரை எதிரிகள் பிடித்து வைப்பார்கள். அவரை ஒரு குழியில் நிறுத்துவார்கள். பின்னர் கூர்மையான வாளால் அவருடைய உடலை இரு கூறாகப் பிளப்பார்கள். இரும்புச் சீப்பின் மூலம் மாமிசத்தையும் எலும்பையும் பிரித்து எடுப்பார்கள். ஆயினும் தீனுல் இஸ்லாத்தில் இருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. ஆனால் நீங்கள் அவசரப்படுகின்றீர்கள்’.

‘இன்ஷா அல்லாஹ்! உங்களுக்காக நான் துஆச் செய்யலாம். பொறுத்துக்கொள்ளுங்கள்.. என்ன செய்ய? மக்காவின் நிலை அப்படியல்லவா உள்ளது?’ என்றெல்லாம் பொய்யான ஆறுதல் வார்த்தைகளைக் கூறவில்லை. இதுதான் பயிற்சி! இது தான் வார்த்தெடுக்கும் முறை! இதுதான் மிகச் சிறந்த வழிகாட்டல்! ஆகவேதான் அதற்குப்பின், துஆச் செய்யுங்கள்.. எங்களால் சோதனைகளைத் தாங்க இயலவில்லை என்று எந்த நபித்தோழரும் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு முன்னால் கண்களைக் கசக்கிக்கொண்டு வந்து நிற்கவில்லை.

சொல்லொணா துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த யாசிர்(ரலி) அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகள் அப்படித்தான் இருந்தன: ‘யாசிரின் குடும்பமே! சகித்துக்கொள்ளுங்கள்! உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இடம் சொர்க்கம்’.

அனைத்தையும் துறந்து ஹிஜ்ரத்திற்காக அபீசீனி யாவுக்குச் சென்றதாகட்டும், இரண்டாவது ஹிஜ்ரத்துக்காக மதீனாவுக்குச் சென்றதாகட்டும், பின்னர் நடைபெற்ற அனைத்துப் போர்களிலாகட்டும் பெருமானார்(ஸல்) அவர்களின் ஆணைகளைத் தலைமேல் தாங்கி கட்டுப்பட்டு நடக்கும் பெரும் தோழமை மிக்கவர்களாகவே நபி(ஸல்) அவர்கள் தோழர்களை வார்த்தெடுத்தார்கள். சொர்க்கம் மட்டும் கிடைத்தால் போதும். அதற்கு ஈடாக எந்தத் தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள்.

 

(அடுத்த இதழில் முடியும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்