மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஃபாசிஸத்திற்கு இரையாகும் பல்கலைக்கழகங்கள்
முனைவர் மு.அப்துல் ரசாக், September 16-30, 2023


Art 2.jpg

தேடல்கள், ஆய்வுகள், புது சிந்தனைகளின் ஒற்று மையங்கள் தான் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள். ஒரு நாட்டின் ஜனநாயக சமூக விழுமங்களுக்கு எந்த அளவு இடம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள அங்குள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்தால் போதும் என்பார்கள். இந்தியாவில் இன்று நடைபெற்று வரும் எதேச்சதிகார ஆட்சியின் கோரத் தாண்டவம் பல்கலைக்கழகங்களிலும் அரங்கேறி வருகின்றன. இது மிகவும் ஒரு ஆபத்தான அறிகுறியாகத் தென்படுகிறது.

இன்னும் 10 ஆண்டுகளை எட்டாத ஃபாசிஸ ஆட்சி அனைத்துத் துறைகளிலும்
ஆதிக்க குணத்தின் எல்லா அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து வருகிறது. நாட்டின் மதவாத பாஜக அரசு அதன் தொடக்கக் காலம் முதலே மையப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற பல ஆளுமைகளை உருவாக்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களை வேட்டையாடியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களைத் துன்புறுத்தியது, அதன் விளைவாக ரோகித் வெமூலா எனும் தலித் மாணவனின் உயிரை அபகரித்தது.

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்ட காலத்தில் நீதிக்காகக் குரல் கொடுத்த ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறை, இந்துத்துவா தீவிரவாதிகளை ஏவி காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. மாநிலங்களில் அரசியல் அநாதைகளை ஆளுநர்களாக நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைப் புறக்கணித்து அவர்களை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் அத்துமீறி நுழைய அனுமதிக்கின்றனர். அவர்கள் பல்கலைக்கழகங்களுள் சனாதனத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்களாகச் செயல்பட்டு வருவது கண்கூடு.

இதுவரை இவர்கள் அரசு பல்கலைக்கழகங்களில் தங்களது தகிடதத்தங்களை நடத்தி வந்தனர். ஆனால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பதைப் போல் இவர்கள் இப்போது தனியார் கல்வி நிறுவனங்களையும் வேட்டையாடத் தொடங்கி விட்டனர். அசோகா பல்கலைக்கழகம் தரமான, தகுதி வாய்ந்த, ஆற்றல்மிகு அறிவாளிகளை உருவாக்குகிற ஒரு பல்கலைக்கழகம். இது ஆழமான விமர்சன சிந்தனைக்கு இடமளிக்கும் கல்விக்கூடம் எனப் பெயர் பெற்றது.

2019 தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்த ஒரு ஆய்வை ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஜனநாயக விலகல்கள்’ எனும் தலைப்பில் பொருளாதாரத் துறை பேராசிரியர் சப்யசாஜி தாஸ் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையிலும் இருந்த முரண்பாட்டை கடும் போட்டிகள் நடந்த தொகுதிகளில் பாஜக பெற்ற வெற்றியைத் துல்லியமாகக் கேள்விக்குறியாக்கும் ஆய்வு அது.

இது பாஜகவைக் கலவரப்படுத்தியது. பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாக பல்கலைக்கழகமே இந்த ஆய்வுக்கு எதிரான கருத்தை முன் மொழிந்தது. உள் அழுத்தத்தின் காரணமாக சப்யசாஜி தாஸ் அங்கிருந்து ராஜினாமா செய்தே வெளியேறினார். இந்நிகழ்வு ஆளும் அரசு தனக்கு எதிரான கருத்தை ஒரு தனியார் பல்கலைக்கழகம் சொன்னால் கூட சகித்துக் கொள்ளாது என்பதற்கான சாட்சியம்.

இது முதல் நிகழ்வல்ல அசோகாவின் துணைவேந்தர் பதவியை அலங்கரித்து வந்த உலகப் புகழ்பெற்ற பிரதாப் பானு மேத்தா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ராஜினாமா செய்தார். அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பொருளாதார அறிஞர் அருண் சுப்பிரமணியனும் பல்கலையிலிருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

சப்யசாஜியை பல்கலைக்கழகம் கைவிட்ட நிலையிலும் சுதந்திரமான சிந்தனைக்குமதிப்பளிக்கிற சக ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பொருளியல் துறையின் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் புலாப்பிரை பாலகிருஷ்ணன், இங்கிலீஷ் அன்ட் கிரியேட்டிவ் ரைட்டிங் துறை ஆசிரியர்களும் மாணவர்களும் இச்சம்பவங்களை எதிர்த்துக் கடிதம் எழுதி உள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு EDயும் எதிர்க்கும் மக்களுக்கு புல்டோஸரும் அனுப்புகிற அரசு சுதந்திர பல்கலைக்கழகங்களில் இருந்து அறிவுசார் சமூகத்தை அகற்றி நிறுத்த முனைவது ஃபாசிஸத்தின் உச்சக்கட்டம்.

உண்மைகளையும் கருத்தியல்களையும் மாற்றுச் சிந்தனைகளையும் ஃபாசிஸம் அனுமதிக்காது என்கிற உண்மையை ஃபாசிஸ பாஜக நிஜமாகிக் கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ‘பிரேக் த சைன்ஸ்’ எனும் பெயரில் மாணவர்கள் நடத்த இருந்த நிகழ்வை அரசு அளித்த அழுத்தத்தின் பெயரில் அந்நிறுவனம் தடை செய்தது. ‘வகுப்புவாத இணக்கமும் நீதியும்’ எனும் தலைப்பில் தீஸ்தா செட்டில்வாத் எனும் மனித உரிமைப் போராளி பேசவிருந்த நிகழ்வை அரசு அச்சப்பட்டதின் விளைவாகத் தடை செய்தது.

இதற்கு முன்னால் பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டப் பிரச்னையில் பங்கேற்று சிறை சென்ற மாணவர்களின் கருத்தைப் பல்கலைக்கழகங்களுக்குள் பேசக்கூட அனுமதிக்கவில்லை. படித்த வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறிய ஆசிரியரை அன் அகாடமி வெளியேற்றியது போன்றவை இதற்கான சில உதாரணங்கள்.

பொது நலன், பாதுகாப்பு எனக் கூறி, இது போன்ற கருத்தரங்குகளை அரசு முடக்குகிறது. தில்லியில் சி.பி.எம் கட்சியின் அலுவலகமான சுர்ஜித் பவனில் ஒரு கருத்தரங்கு நடந்தால், அது எப்படி அரசு, சட்ட ஒழுங்கினைப் பாதிக்கும்? காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து ஜாமியா மில்லியாவில் நடக்கவிருந்த கருத்தரங்கைத் தடை செய்த அரசு, அதே படத்திற்குத் தேசிய விருதை வழங்கி கலை உலகைத் தலைகுனிய வைத்துள்ளது.

உண்மையைக் கண்டடைவதற்கான மார்க்கம்தான் அறிவும் அறிவு சார்ந்த நடவடிக்கைகளும், அதுதான் ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகு. உண்மைக்கு எதிராக நிற்கும் ஒரு நாட்டினால் முன்னேற முடியாது. சீனா இந்தியாவின் ஒரு துண்டு பூமியைக் கூட அபகரிக்கவில்லை என்று பல தடவை கூறிய பிரதமர் பாங்கோங்சோ எனும் இந்தியப் பகுதியிலிருந்து சீனா பின்வாங்க வேண்டும் என இப்போது கூறுகிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தின் உண்மை நிலையை மறைப்பதற்காக National Sample Surveyயின் அறிக்கையை வெளியிடாமல் இருப்பதன் விளைவாக National Statistical Commissionஇல் இருந்து அதன் செயல் தலைவர் உட்பட இருவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

GDP, விவசாயிகள் தற்கொலை எனப் பல தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. 13.5 கோடி இந்தியர்கள் பட்டினியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்று விடுதலை தின உரையில் பிரதமர் கூறுகிறார். இது பட்டினிக் குறியீட்டின் அளவு குறைந்ததனால் அல்ல; பட்டினியை அளக்கின்ற குறியீட்டை மாற்றியதால்தான் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. இப்படி கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பறித்து நடத்தப்படும் ஆட்சியின் மூலமாக ஒரு நாடு ஒருக்காலும் முன்னேறாது என்பது நிதர்சனம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்