மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

அன்பு நபியை அறிமுகப்படுத்தும் வழிமுறைகள்
வி.எஸ்.முஹம்மத் அமீன், October 1 - 15, 2023


அன்பு நபியை அறிமுகப்படுத்தும் வழிமுறைகள்

அகிலத்தின் அருட்கொடையான இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இந்த ரபியுல் அவ்வல் மாதம். இந்த மாதத்தில் நபிகளாரின் புகழ்பாடலைப் பாடி மகிழும் ஒரு காலம் இருந்தது. மௌலூது ஓதிக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு எல்லையிலிருந்து நபிகளார் தமது பிறந்தநாளைக் கொண்டாடுமாறு சொன்னதில்லை. தோழர்களும் அவ்வாறு கொண்டாடியதில்லை. எனவே மீலாது தேவையில்லை என்ற மறு எல்லைக்குச் சென்றுவிட்டனர். ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் நின்று இந்த வாய்ப்பை அழைப்பியலுக்கான காலமாக, அண்ணல் நபி(ஸல்) அவர்களை அறிமுகப்படுத்தும் தருணமாகப் பயன்படுத்த வேண்டும்.

பல இடங்களில் இப்போது மீலாது சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. முஸ்லிம்களுக்குள்ளேயே, மஹல்லா, பள்ளிவாசல்களுக்குள்ளாகவே இந்தச் சொற்பொழிவுகள் முடிந்து விடுகின்றன. இதைத் தாண்டி இதரமத அன்பர்களுக்கும் நபி(ஸல்) அவர்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது. முன்பெல்லாம் திராவிடக் கட்சிகளில் மீலாது பேச்சாளர்கள் இருந்தார்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டது.

நபி(ஸல்) அவர்களை எவ்வளவு பேருக்கு நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்? இதரமத அன்பர்களிடம் கணக்கெடுப்பு நிகழ்த்தினால் எத்தனை பேர் நபி(ஸல்) அவர்களைக் குறித்து மிகச்சரியாகச் சொல்லுவார்கள்? அப்படியே சொன்னாலும், நபிகளார் முஸ்லிம்களின் கடவுள், அரபு நாட்டின் ஆட்சியாளர், முஸ்லிம்களின் தலைவர் என்று கூறுவதைக் காணமுடியும். காரணம் நபி(ஸல்) அவர்களை முஸ்லிம்கள் முறையாக, சரியாக அறிமுகப்படுத்தவில்லை. மனிதகுலத்திற்கு அருட்கொடையாக வந்த மகத்தான ஆளுமையான நபி(ஸல்) அவர்களை நமக்குள் மட்டுமே வைத்துக் கொண்டோம். நபி நாயகத்தின் பெருவாழ்வை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற அக்கறையற்றவர்களாக நாம் இருந்திருக்கின்றோம். 

அறிமுகம் செய்வதற்கு முன்..

நபி(ஸல்) அவர்களை இதரமத அன்பர்களுக்கு நாம் அறிமுகப்படுத்துவதற்கு முன் முதலில் நாம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களின் பிறப்பு, அவர்களின் குடும்பம், அவர்களுடைய மக்கா வாழ்க்கை, மதீனா வாழ்க்கை, நபிப்பட்டம், ஆட்சி, போர்கள், ஒப்பந்தங்கள் என அனைத்தையும் முழுமையாக நாம் அறிந்திருக்க வேண்டும். இறைவன் எந்த நோக்கத்திற்காக நபி(ஸல்) அவர்களை அனுப்பினானோ அந்தக்

கண்ணோட்டத்திலிருந்தும் நபி வாழ்வை நாம் அணுகியிருக்க வேண்டும். நபி(ஸல்) அவர் களின் முதன்மைப் பணி என்னவாக இருந்தது? அவர்கள் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள்? என்பதை நபித்தோழர்களின் வாழ்வியலின் வழியாகவும் அறிந்திருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள், போதனைகள் எவ்வாறு இருந்தது? அதற்கு எப்படி செயல்வடிவம் கொடுத்தார்கள்? தாம் கொண்டுவந்த அறபோதனைகளைத் தம் வாழ்நாளில் எப்படி சாத்தியப்படுத்தினார்கள்? தாம் ஒழிக்க விரும்பிய தீமைகளை அகற்றி ஒரு சமுதாயத்தை எப்படி உருவாக்கிக் காட்டினார்கள்? என்ற விசாலமான பார்வையுடன் அண்ணல் நாயகத்தின் வாழ்வியலை நாம் அறிந்து, புரிந்து அதனை இதரமத அன்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

நாம் நபி(ஸல்) அவர்களை அறிமுகப்படுத்தும் வேளையில் இதரமத அன்பர்கள் எழுப்பும் வினாக்களையும் நாம் எதிர் கொள்ள வேண்டும். அதற்கான பதிலும் நம்மிடம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏன் இத்தனை திருமணம் செய்தார்கள்? ஆயிஷா(ரலி) அவர்களை சிறுவயதில் திருமணம் செய்தார்களே ஏன்? என்ற கேள்விக்கான பதிலை அவர்களிடம் நாம் எடுத்துரைக்கும்போது அவர்கள் நெகிழ்ந்து போவார்கள். தம்மை விட 15 வயது மூத்த 40 வயதான ஏற்கனவே இருமுறை திருமணமாகி விதவையான கதீஜா(ரலி) அவர்கள் இறக்கும் வரையில் நபிகளார் மறுமணம் செய்யவில்லை.

கதீஜா(ரலி) அவர்களின் இறப்பிற்குப் பிறகு தம்முடைய 50 வயதிற்குப் பிறகு இத்தனை பெண்களை மறுமணம் செய்ததற்கான காரணங்களை அவர்கள் அறிந்தால் பெருமானார் மீது பெருமதிப்புக் கொள்வார்கள். நபிகளாரை அன்பு நபி என்று அறிமுகப்படுத்துகின்றீர்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் பல போர்களை நிகழ்த்தியிருக்கின்றார்களே சரிதானா? என்ற கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தங்களை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள். ஒரு ஆட்சியாளராக போர்விதிகளை எப்படி வகுத்தார்கள். போரில் எதிரிகளுடன் அவர்கள் நடந்து கொண்டவிதம் என்று நாம் அளிக்கும் பதில் போர் உலகின் பாடங்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபி எப்படி இன்றைக்கும் வழிகாட்ட முடியும்? அரபுநாட்டில் பிறந்த நபியை தமிழ்நாட்டில் வாழும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? என்ற வினாவிற்கு நாம் அளிக்கும் விடையில் அவர்கள் இஸ்லாத்தின் மீது பெருங்காதல் கொள்வார்கள். இதுபோன்ற நபி(ஸல்) அவர்கள் குறித்த வினாக்களையும், இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். 

மெய்யான அறிமுகம்

நபி(ஸல்) அவர்களை ஒரு தலைவர், சிந்தனையாளர், புரட்சியாளர், நல்லவர், மானுட விடுதலை நாயகர் என்றெல்லாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். உண்மைதான் நபி(ஸல்) அவர்கள் ஆகச் சிறந்த தலைவர், மாபெரும் சிந்தனையாளர், பெரும் புரட்சியாளர், சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த உத்தமர், மானுட விடுதலை நாயகர், அதிசிறந்த ஆட்சியாளர். இவை எல்லாவற்றையும் தாண்டிய சிறப்பு அவர்கள் இறைவனின் தூதர் என்பதுதான்.

அவர்கள் இறைவனின் தூதர் என்பதால்தான் அவர்களால் உலக மக்கள் அனைவருக்குமான வழிகாட்டியாகத் திகழ முடிந்தது. ஏனெனில் இறைவன் அவர்களுக்கு வழிகாட்டினான். தனியொரு மனிதராக மட்டுமே இருந்தால் தான் வாழும் நிலம், அன்றைய காலத்தை மட்டும்தான் அவர்களால் சிந்தித்திருக்க முடியும். எல்லாத் தலைவர்களும் ஒரு கட்டம் வரைக்கும்தான் சிந்திக்க முடியும். நபி(ஸல்) அவர்கள் எல்லா காலத்திற்கும் வழிகாட்டியுள்ளார்கள் என்றால் அவர்கள் இறைவனின் தூதர் என்பதால்தான்.

ஒரு சிந்தனையாளர் அவர் சார்ந்த துறைக்கு மட்டுமே வழிகாட்டிச் சென்றிருக்க முடியும். எல்லாத் துறைக்கும் ஒருவரால் முழுமையான வழிகாட்டுதலை வழங்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் எல்லாத் துறைக்கும் தீர்க்கமான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இறைவனின் தூதர்.

அறியாமை இருள் நிறைந்த காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபி உலகின் அடர் இருளைக் கிழித்து வெளிச்சப் புள்ளியைப் பாய்ச்சினார்கள். வாழ்வின் அத்தனை அடிமைத் தளைகளிலிருந்தும் மனித குலத்திற்கு விடுதலையின் விலாசத்தை வழங்கினார்கள். ஏனெனில் இறைவன் அவர்களுக்கு கற்றுத் தந்தான். அவனே ஒளிகாட்டினான். வழிகாட்டினான். 

ஒரு தலைவரை விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம். விரும்பாவிட்டால் விட்டுவிடலாம். தலைவர்களை மாற்றிக் கொள்ளலாம். ஒரு தலைவரிடம் சில விசயங்களை எடுத்துக் கொண்டு பல விசயங்களை விட்டுவிட முடியும். ஆனால் நபி(ஸல்) அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொள்வது என்பது அவர்களை அப்படியே பின்பற்றுவது. ஏனெனில் அவர்கள் பின்பற்றத்தகுந்த முன்மாதிரி அவர்கள் இறைவனின் தூதர். இறைவனின் தூதராக நபிகளாரை ஏற்றுக் கொண்டதால்தான் நாம் முஸ்லிம் என்ற தகுதி நிலையை அடைந்திருக்கின்றோம். 

எல்லாருக்குமானவர், என்றைக்குமானவர் 

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழிகாட்ட வந்த தலைவர் அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த தலைவர். குறிப்பிட்ட நிலம், காலம், மொழி எல்லாவற்றையும் கடந்து வழிகாட்டும் பெருவாழ்வு நபிவாழ்வு என்ற தகுதிநிலையிலிருந்து நபி(ஸல்) அவர்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ஆன்மிகம், அரசியல், கல்வி, பொருளாதாரம், இல்லறம் என எல்லாத் துறைக்கும் வழிகாட்டியுள்ளார்கள். அந்த வழிகாட்டுதலும் வெற்றுத் தத்துவங்களால் அல்ல. அத்தனை துறைகளிலும் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள் நபிமார்கள் துறவிகளல்ல. அவர்கள் இல்லற வாழ்விலும் வழிகாட்டியுள்ளார்கள். ‘என்னைப் பின்பற்றுங்கள்’ என்று சொல்லக்கூடிய தகுதிவாய்ந்த தலைவர் நபி(ஸல்) அவர்கள் மட்டும்தான்.

செயல்வழி அறிமுகம்

நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் குறித்து தமிழிலும் ஏராளமான நூல்கள் வந்துள்ளன. குறிப்பாக இதரமத அன்பர்களுக்கு வழங்குவதற்காகவே ‘இம் மாமனிதரைத் தெரிந்து கொள்ளுங்கள்’, ‘மானுட வசந்தம் நபிகளார்’, ‘இவர்தான் முஹம்மத்(ஸல்)’ போன்ற நூல்கள் உள்ளன. நபிகளார் பிறந்த மீலாதை முன்னிட்டு இதுபோன்ற நூல்களை அன்பளிப்பு செய்து அறிமுகப்படுத்தலாம். மீலாது கூட்டங்களில் அண்ணலாரை அறிமுகப்படுத்தலாம். இவையெல்லாம் எளிது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் வாழ்வை செயல்வழியில் அறிமுகம் செய்ய வேண்டும்.

நபிவழித் தொழுகை என்று தொழுகையை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறோம். அதில் சின்னச்சின்ன வழிமுறைகளுக்காக பெரும் வாத விவாதங்களை எழுப்புகின்றோம். நபிவழி ஜனாஸா என்று இப்போது சில அமைப்புகளில் உறுதிமொழிப் படிவம் எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். நபிவழித் திருமணம் என்ற பெயரில் எளிமையாகத் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். நபிவழித் தொழுகை, நபிவழித் திருமணம், நபிவழி ஜனாஸா. அவ்வளவுதானா? இதைத் தவிர வேறு எதற்குமே நபி வழிகாட்ட வில்லையா?

நபிவழிக் கல்வி நிலையம், நபிவழி வியாபாரம் என்று ஏன் போடுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் வியாபாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டிச் சென்றுள்ளார்களே..! எனவே நபிவாழ்வை நம் வாழ்வு முழுமையும் கடைப்பிடித்து செயல்வழிச் சான்று வழங்குவதன் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும்.

உள்ளத்திலும், இல்லத்திலும்

நபி(ஸல்) அவர்களுக்காக எப்போதும் நம் உள்ளத்திலும், இல்லத்திலும் சிறப்பான இடம் இருக்க வேண்டும். நம் இல்லங்களில் நூலகம் அவசியம் இருக்க வேண்டும். அந்த நூலகத்திலும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல், வழிமுறைகள் நூல்களால் அந்த நூலகத்தை அலங்கரிக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு அவற்றை வாசிக்கப்பழக்க வேண்டும். நண்பர்களுக்கு நாம் வழங்கும் அன்பளிப்புகளில் நபி வாழ்வு நூல்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்வை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் வாழ்வதற்கும் நாம் தயாராக வேண்டும். ஏனெனில் அண்ணலின் அந்தப் பெருவாழ்வு வாசிப்பதற்காக மட்டுமல்ல. வாழ்வதற்காகவும்..!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்