மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

அத்துமீறும் ஆளுநர்
கப்ளிசேட், 1 - 15 டிசம்பர் 2023


 அத்துமீறும் ஆளுநர்

‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என்று பேரறிஞர் அண்ணா தொடங்கிவைத்த சொல்லாடல் திராவிடத் தலைவர்கள் அனைவராலும் இன்று முன்மொழியப்படுகிறது. குடியரசுத்தலைவர் நாட்டின் முதல் குடிமகன் என்பது போல, ஆளுநர் மாநிலத்தின் முதல் குடிமகனாகக் கருதப்படுகிறார். ஆளுநருக்குத் தனி மாளிகை, பணியாளர்கள் என்ற செலவுகளையும் அவரின் பணிகளையும் தெரிந்துகொள்ளும் எவரும் ஆளுநர் என்ற ஒரு பதவியே தேவையில்லை என்ற முடிவுக்கே வருவர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் நபர்களை குடியரசுத்தலைவர் ஆளுநர்களாக நியமிக்கிறார். பொதுவாக ஒன்றிய அரசை ஆளுங்கட்சிகளோ, அல்லது அதன் கூட்டணிக்கட்சிகளோ ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் அவர்களுக்குத் தோதுவான ஆளுநர்களை நியமிக்கும் போது கருத்து முரண்பாடுகள் இல்லாமல் நிர்வாகம் சீராக இயங்கும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அவர்களது மனநிலைக்கு மாற்றமான ஆளுநர்களை ஒன்றிய அரசு நியமிக்கும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசிற்கும், நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு நிர்வாகங்கள் தடுமாறுகின்றன.

விடுதலைக்குப் பிறகு மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட எல்லா ஆளுநர்களாலும் பிரச்னைகள் இருக்கவே செய்தன. சில விதிவிலக்காக சிறப்பான ஆளுநர்களும் பதவி வகித்துள்ளனர். சுர்ஜித் சிங் பர்னாலா இரண்டுமுறை தமிழ்நாட்டு ஆளுநராகப் பதவிவகித்தார். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவர்களின் உறவு சீராகவும், சிறப்பாகவும் இருந்தன. சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டது. பன்வாரிலால் புரோஹித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

ஆளுநருக்கான செலவுகள்

ஆளுநர் பதவி என்பது அலங்காரமாகவும், கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கௌரவிக்கவும், கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பதவி கொடுத்து சமாதானப்படுத்தவும் ஒன்றிய அரசுகள் பயன்படுத்தின. தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ்பவன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, ஏறக்குறைய 388 ஏக்கர் பரப்பளவில் தோட்டங்கள் அமைக்கப்பட்டது. அதில் அரியவகை மரங்களும், அரியவகை விலங்குகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பல தலைவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டது. இன்றும் கிண்டி ஆளுநர் மாளிகை இருக்கிற ராஜ்பவனைக் கடந்து செல்கிறவர்கள் அதனை ஒரு பெரிய அரண்மனை என்று நம்பும் அளவிற்கு அதன் அமைப்புகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் சம்பந்தப்பட்ட மரபுகளும், ஆடம்பரங்களும், அலங்காரங்களும் இன்றைய ஜனநாயக மக்கள் அரசில் நீக்கப்பட வேண்டியதாகும்.

ஆளுநர் மாளிகைச் செலவுகள், ஆளுநர் சம்பளம், ஆளுநரின் விருப்பநிதி போன்ற செலவினங்களுக்கு தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து அளிக்கப்படுகிறது. இதனை முன்னாள் தமிழ்நாடு நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் சட்டமன்ற உரை தெளிவாக்குகிறது. தமிழ்நாடு நிதி அமைச்சகம் மூன்று தலைப்புகளில் நிதி ஒதுக்கீடு செய்வதாகக் கூறினார். ஒன்று செயலகத்திற்கும், இரண்டாவதாக ஆளுநரின் வீட்டுச் செலவிற்கும், மூன்றாவதாக ஆளுநரின் விருப்பநிதி என்றும் நிதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறினார்.

நடப்பாண்டு நிதியாக ஆளுநரின் செயலகத்திற்கு 3 கோடியே 63 இலட்சமாக நிதிகளை உயர்த்தி ஒதுக்கீடு செய்தனர். மேலும் ஆளுநரின் வீட்டு வசதி செலவிற்கு 16 கோடியே 69 இலட்சம் என்று உயர்த்தி ஒதுக்கீடு செய்தனர். 1937ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரின் விருப்பநிதி என்ற ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. 2018-19இல் ஒரு இலட்சத்து ஐம்பத்தி ஏழாயிரம் என்ற ஒதுக்கீடு, ஐம்பது இலட்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது ஐந்து கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து மருத்துவ சேவை, திருமண உதவி, வாழ்வாதாரம், தகுதிவாய்ந்த தொண்டு நிறுவனங்கள் என ஆளுநர் தனது விருப்பத்தின்படி நிதி வழங்கலாம் என்பது நடைமுறையாக உள்ளது.

இலட்சங்களாக ஆளுநர் நிதி இருந்தபோது பிரச்னை இல்லை. கோடிகளாக உயர்த்தப்பட்டதிலிருந்து பல விதிமீறல்கள் நடைபெறுகிறது. 'அட்சயபாத்திரா' என்ற திட்டத்தின் பெயரைச் சொல்லி ஆளுநரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றி பிறகு அவரின் விருப்பப்படி நிதிகளை மாற்றியுள்ளனர். ஆளுநர் மாளிகையின் மொத்தச் செலவு 18 கோடியே 38 இலட்ச ரூபாயாகும். இதில் 11 கோடியே 32 இலட்ச ரூபாய் அவரின் வங்கிக் கணக்கிற்கு நிதி மாற்றப்பட்டுள்ளது.

அது எங்கே, யாருக்கு, எதற்குச் செலவிடப்பட்டது என்ற விபரம் தமிழ்நாடு அரசிற்குத் தெரிவிக்கவில்லை என வெளிப்படையாக ஒரு நிதி அமைச்சர் சட்ட மன்றத்தில் குற்றம் சாட்டும் போது, தமிழ்நாட்டு மக்களின் நிதிகள் எவ்வாறெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதை நடுநிலை ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளுநர் விருப்பநிதி 25 இலட்சமே ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தான் இவ்வளவு தாராளமாக ஆளுநருக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆளுநரின் பணிகள்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கையெழுத்திட்டு சட்டமாக்க உதவுவது, மாநில முதல் அமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, மாநில அட்வகேட் ஜெனரலை நியமித்து அவருக்கு ஊதியம் நிர்ணயிப்பது, மாநிலத் தேர்தல் ஆணையர், மாநிலப் பொதுச்சேவை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களை நியமிப்பது, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பது, துணைவேந்தர்களை நியமிப்பது, மாநிலத்தில் அரசியலமைப்பு சீர்கெடும் போது அதை அவசரநிலையாகக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பது. 

ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டால், குடியரசுத் தலைவரின் முகவராகச் செயல்பட்டு அதிகாரம் செலுத்துவது, மாநில சட்டப் பேரவையை ஒத்திவைப்பது, கலைப்பது. ஆண்டின் முதல் அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்களைப்பற்றி அரசின் தயாரிப்பு உரையைப் படிப்பது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அங்கீகரித்து சட்டமாக்கி நடைமுறைபடுத்த குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது, நிதிநிலை அறிக்கையைப் பார்வையிடுவது, சட்டமன்றத்தில் பண மசோதாவை அறிமுகப்படுத்த பரிந்துரை செய்வது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணையம் அமைத்தல் போன்ற அலுவல் சார்ந்த பணிகளைச் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறது.

மாநில அரசின் தண்டனைக் கைதிகளை மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. தண்டனையைக் குறைக்கவோ, மாற்றவோ, அவகாசம் அளிக்கவோ ஆளுநரால் முடியும். ஆனால் மரணதண்டனையை ஆளுநர் மன்னிக்க முடியாது. அதை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது குடியரசுத் தலைவர் ஆளுநரிடம் ஆலோசனை நடத்தி நீதிபதிகளை நியமிப்பார். மாவட்ட நீதிபதிகளின் நியமனங்கள், பணியிடங்கள், பதவி உயர்வுகளை மாநில உயர் நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசனை செய்து ஆளுநர் செயல்படுத்துவார். அரசியல் அமைப்புச் சட்டம் 154ஆவது பிரிவின்படி ஆளுநரே ஒரு மாநிலத்தின் செயல்படும் தலைவர் ஆவார். அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும், அவருக்குக் கீழுள்ள அரசு அதிகாரிகளால் செயல் படுத்தப்படும்.

வரம்பு மீறும் தமிழ்நாட்டு ஆளுநர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக மக்கள் அரசைக் கட்டுப்படுத்த, எந்தப் பயனுமில்லாத அலங்காரப் பதவியான ஆளுநர் என்ற பதவி தேவையில்லை என்பது அறிவுஜீவிகளின் வாதமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நடந்து வருகிற மாநில அரசு ஆளுநர் மோதல்கள் ஆளுநர்பதவி மீதான விமர்சனங்களை இன்னும் கூர்மையாக்கி இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் மரபுப்படி அரசின் உரையைப் படித்த ஆளுநர் R.N.ரவி உரையின் சில பகுதிகளைப் படிக்க மறுத்ததுடன், தனது சொந்த வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினார். மாநில அரசு தயாரித்த உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, அவர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையில், அரசின் கொள்கைகளும், கருத்துகளும் இருக்கும். அரசு கொடுக்கும் உரையில் எதையும் சேர்க்கவோ, குறைக்கவோ, நீக்கவோ, ஆளுநருக்கு அதிகாரமில்லை.

இதில் விதிமுறைகள் தெளிவாக உள்ளன. ஆளுநர் தன்னிச்சையாகப் படிக்க முற்பட்ட இந்த அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பாடு என்றும் கூறப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் நடத்தைகள் முரணாக இருப்பதாகவும், அது கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைச் சீர்குலைத்து விடும்.

தி ஹிந்து நாளிதழ் தனது தலையங்கத்திலேயே ஆளுநரின் இந்தப் போக்கைக் கடுமையாகச் சாடியதுடன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே இது முரணானது என்றும் எழுதியுள்ளது. மாநில சட்ட சபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது அதிகப்பிரசங்கித்தனமானது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வாதிட்டது. மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயரைச் சேர்க்காமல் பொங்கல் அழைப்பிதழை ஆளுநர் வடிவமைத்ததையும் தலையங்கம் சுட்டிக்காட்டியது. நிறைவேற்றப்பட்ட மசோதக்களில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள மசோதாக்களின் எண்ணிக்கை, உச்சநீதி மன்றமே எதிர்பார்க்காத அளவில் உள்ளது என்றும் குறிப்பிடுகிறது. 

அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் சுட்டுப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்தும், ஒரு மசோதாவை ஆளுநர் எவ்வளவு காலம் நிலுவையில் வைத்திருக்க முடியும் என்பதில் அரசியலமைப்பும், நீதித்துறையும் மௌனம் காக்கிறது. ஆளுநர் ரவியின் நடத்தை அரசியல் சாசன பதவியைக் காயப்படுத்துகிறது' என்று விமர்சித்ததோடு அவரின் நடத்தைகள் பாஜகவிற்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. இது மக்களின் மனங்களில் மிகப்பெரும் அவநம்பிக்கையையும், வெறுப்பையும் உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, ஆளுநர் இடையேயான மோதல் அரசியல் சாசன உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பதை விரும்பாத ஆளுநரின் இரு தகவல்களையும் புறக்கணிக்க மாநில அரசு முடிவெடுத்தது. எனது அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரமில்லை. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது தனிப்பட்ட உரிமை என்றும், அவரைப் பதவிநீக்கம் செய்த தகவல் சட்டத்திற்குப் புறம்பானது. அது சட்டத்தில் இல்லாதது ஆகவே புறக்கணிக்கப்படுகிறது என்றும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதுபோன்ற முக்கிய முடிவுக்கு சட்டத்தின் கருத்தைக் கூட எடுக்கவில்லை என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அவசரமாகச் செயல்பட்டுள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கையாளும்போது ஆளுநர் கண்ணியத்துடன் செயல் படவேண்டும் என்றும், இல்லையெனில் அது அரசியல் அமைப்பைச் சீர்குலைத்துவிடும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள்

இந்தக் கடுமையான மோதல் போக்கின் காரணமாகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்கள் ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, நிறைய உயிர்களைக் காவுவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு அரசுக்கே அதனை 131 நாள்களுக்குப் பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து இந்த மசோதா மீண்டும் அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு மார்ச் 24ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொடுத்த அழுத்தங்களுக்குப் பிறகு இந்த மசோதாவிற்கு ஒருவழியாக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையில் ஆளுநருக்கும், ஆளும் அரசிற்கும் பல வகையில் வார்த்தைப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் பல முக்கிய மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு இழுத்தடித்து வருகிறார். தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகளைப் பலவாறு விமர்சித்தும் வருகிறார்.

நீட்தேர்வு மசோதா ஒப்புதல் எல்லோராலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனிக்கப் படுகிறது. ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்கள் ஆகும் கனவுகள் நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு, பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தும், இந்த மசோதாவிற்கு இன்னும் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு இதற்கு நீண்ட நாள்களாகப் போராடி வந்தாலும், இதைமக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை சம்பந்தமான கோப்பும் நிலுவையில் உள்ளது. இதன் ஒப்புதலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய ஆளுநர் R.N.ரவி நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, திராவிட மாடலைச் சீண்டி, சனாதனத்தை உயர்த்திப் பிடித்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் நடந்த பல்கலைக்கழக விழாவில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆளுநருடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

சட்டசபை நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு உரிய காலத்தில் அனுமதி கொடுத்தால்தான் மக்களுக்குப் பயனளிக்கும். ஆனால் ஆளுநரின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிப்பதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதங்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம் குட்டு

தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடுத்தது. தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதே சரியானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விவகாரத்தில் 'மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பி கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனுப்பும் ஒவ்வொரு மசோதாவிற்கும் விளக்கம் கேட்பது, திருத்தங்கள் செய்யச் சொல்வது, கிடப்பில் போடுவது அல்லது திருப்பி அனுப்புவது என்ற நடைமுறையையே ஆளுநர் கடைப்பிடித்து வருவதையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் மாநில ஆளுநர் மீது பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு தொடுத்த வழக்கில் தீர்பளித்த நீதிபதிகள் 'மசோதாக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை காலவரையின்றி ஆளுநர் கிடப்பில் போட முடியாது. இதில் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார்' என்று எச்சரித்தது. அதே எச்சரிக்கை தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும் பொருந்தும். இந்த நெருப்பு விளையாட்டை விட்டுவிட்டு ஆளுநர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்