மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

மிரட்டித் துவைத்த மிக்ஜாம்! வரலாறு காணாத பெருமழை தத்தளித்த மக்கள்
பி.ரியாஸ் அகமது, 16 - 31 டிசம்பர் 2023


மிரட்டித் துவைத்த மிக்ஜாம்! வரலாறு காணாத பெருமழை தத்தளித்த மக்கள்

மிக்ஜாம் புயலையொட்டி பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்பினால் சென்னை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தற்போதுதான் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து சுமார் 30 மணி நேரமாக இடைவிடாது பெய்த பெருமழையை 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்னை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது. புயல் கடந்து மழை நின்றாலும் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நான்கு நாள்களைக் கடந்தும் தண்ணீர் வடியாமல் தத்தளித்தன.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த வெள்ள பாதிப்பையும் தற்போதைய வெள்ள பாதிப்பையும் ஒப்பிட்டு பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘4000 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக 47 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்த போதும் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. 2015ஆம் ஆண்டில் ஆறுநாள்கள் பெய்த மழையைக் காட்டிலும் தற்போது 2023இல் ஒரே நாளில் பெய்திருக்கும் மழையின் அளவு அதிகம். என்றாலும், அப்போது செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இம்முறை முன்னதாகவே திட்டமிடப்பட்டு அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இவ்வளவு கனமழை பெய்தபோதும் அதிகபட்சமாக எட்டாயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்டது’ என்று பதிலளித்திருந்தார்.

டிசம்பர் ஐந்தாம் நாள் காலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு லட்சம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் வடிந்து செல்வதற்காகத் துரிதமான நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆறுகளிலிருந்து தண்ணீர் வடிய முடியாத நிலை இருந்ததாகக் குறிப்பிட்டார். குறிப்பாக சென்னை போன்ற நகரங்கள் கடல் மட்டத்தின் உயரத்திலேயே அமைந்துள்ளன. இதனால் அலைகளின் உயரம் குறைவாக இருக்கும் நேரத்தில் மட்டுமே தண்ணீர் கடலுக்குச் செல்ல முடியும். 2015ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம். தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கை வெள்ளம். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

சென்னையில் டிசம்பர் 04 அன்று அதிகாலைவரை 340 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. இது 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த பெரிய மழை என்றும் தெரிவிக்கப்பட்டது. இம்மழையினால், சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் 2015ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய பாதிப்பு குறைவுதான். ஏனெனில், 2015ஆம் ஆண்டில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பவே 15 நாள்களுக்கும் மேல் ஆனது. ஆனால் தற்போது பல இடங்களில் ஒரே நாளில் வெள்ளம் வடிந்து போக்குவரத்து சீராகியுள்ளது. அதோடு ஒரு நாள் மட்டுமே விமான சேவை பாதிக்கப்பட்டது. தொலைக்காட்சி, பத்திரிகை உள்ளிட்ட ஊடக சேவைகள் எதுவும் தற்போது தடைபடவில்லை.

இம்முறை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும் அலைப்பேசி இணைய சேவை ஓரிரு நாள்கள் தவிர, பாதிப்பு பெரிதாக இல்லை. மின் விநியோகம் ஓரிரு நாள்களிலேயே பல இடங்களில் சீரானது. 2015இல் ஏற்பட்ட மழை பெரு வெள்ளத்தில் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 315. ஆனால் தற்போது 8 முதல் 12 பேர் பலியாயினர். 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்துக்கும் தற்போது 2023ஆம் ஆண்டு வெள்ளத்துக்குமான வித்தியாசத்தை செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை வைத்தே புரிந்துகொள்ளலாம்.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து முன் எச்சரிக்கை இன்றி திறந்துவிடப்பட்ட தண்ணீரே அப்போதைய பெரு வெள்ளத்துக்குக் காரணம் என்று சிஏஜி அறிக்கையே தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால் இம்முறை மிக்ஜாம் புயல் உருவாகும் முன் ஒரு வாரமாகவே செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளின் நீர் மட்டம் உயர உயர ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சரியான இடைவெளியில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் 2015 போன்ற பேரழிவில் இருந்து சென்னை இம்முறை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

சென்னையின் வரலாற்றில் அழிக்க முடியாத மறக்க முடியாத மிகப்பெரிய பேரழிவு 2015 பெருவெள்ளம். அந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை ஒரே நேரத்தில் தொடர் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி முன் எச்சரிக்கை இன்றி நீர் திறக்கப்பட்டதால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு சென்னை, புறநகர் பகுதிகள் நீரில் மூழ்கின.

வீடுகள், கட்டிடங்களின் தரைத்தளங்கள் மட்டுமின்றி அடையாறு, சைதாப்பேட்டை பாலங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ள நீர்மட்டம் அதிகரித்தது. பல கட்டிடங்களில் 2, 3ஆவது தளம் வரை தண்ணீர் மட்டம் உயர்ந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

மின்சாரம், தொலை தொடர்பு சேவைகள், இணையதள இணைப்பு போன்றவை சுமார் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை பாதிக்கப்பட்டன. 10 நாள்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் ரயில் சேவைகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டன. அதேபோல் விமான நிலையத்தைச் சூழ்ந்த வெள்ளத்தால் சென்னையில் விமான சேவையும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது. இலட்சக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. பல ஆயிரம் கோடி மதிப்பிலான இழப்பை அப்போது சென்னை சந்தித்து உள்ளது.

தற்போது மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய பெருமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்குப் பல இடங்களில் பாதிப்பு கடுமையாக இருந்தது. சென்னையில் ஒரேநாளில் 340 மில்லி மீட்டர் மழை பதிவாகியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது மொத்தமாக 340 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது. இதை வைத்துப் பார்க்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ள காலத்தில் கொட்டிய கனமழையைக் காட்டிலும் அதிக கனமழையை தற்போது சென்னை எதிர்கொண்டு உள்ளது.

சென்னை மக்களைப் பொறுத்தவரையில் 2015இல் சந்தித்த வெள்ள பாதிப்பு அவர்களது மனதில் அழுந்தப் பதிந்த ஆறாத வடு. அப்போதைய நிலையையும் இப்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து கருத்துப் பகிரும் மக்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து இருவேறு கருத்துகளைப் பகிர்கின்றனர். பெருமழையால் ஏற்பட்ட தற்போதைய பேரிடரை எதிர் கொண்ட தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமைகளைச் சீர் செய்தது என்று கூறப்படும் கருத்தின் உண்மையை மறுப்பதற்கில்லை. அதே நேரம், பாதிப்புக்குள்ளான பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ நேரில் வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் கள நிலவரத்தைப் பொறுத்தமட்டில் மக்கள் கூறும் இருவேறு கருத்துகளும் நிஜமே.

ஆயினும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு இயந்திரத்தின் வருகைக்காகக் காத்திராமல் பல தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி பாதுகாத்தனர். இம்மாதிரியான பேரிடர் பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு காலகட்டமும் நமக்குப் பல பாடங்களைக் கற்பித்துவிட்டுச் சென்றாலும், மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே பாதிப்பின்றி வெள்ளநீர் வெளியேறும் நீர்வழித்தடங்களின் மீது கவனம் கொள்ளாமல் இருந்து வருவதும், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து அதன்மீது அடுக்கடுக்காகக் கட்டடங்கள் கட்டி, நீர் வழித்தடத்தை மறிப்பதில் இருந்து மாறாமல் இருக்கின்றோம். அதனால்தான் நாம் விரித்த வலையில் நாமே சிக்கிக் கொள்வதுபோல் மழை வெள்ள பாதிப்பில் சிக்கிச் சின்னாபின்னமாகின்றோம்.

ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி, வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைக் கழிவுகள் என அனைத்துக் குப்பைகளையும் நீர்நிலைப் பகுதிகளிலும் அது செல்லும் வழித்தடத்திலும் இட்டு நிரப்பி விடுவதாலும் கனமழையினால் ஏற்படும் வெள்ளநீர் வெளியேற வழியின்றி வீடுகளை மூழ்கடிக்கிறது. தெருக்களும் சாலைகளும் வெள்ளத்தால் நிரம்பி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வெறுமனே அரசை மட்டுமே குறை சொல்வதால் பயனொன்றும் இல்லை. இங்கே வாழும் ஒவ்வொருவருமே தனிப்பட்ட முறையில் தங்களைத் தாங்களே ஒரு தன்னார்வலராக, சமூகச் செயற்பாட்டாளராக எண்ணி விழிப்பு உணர்வுடன் செயல்பட்டாலே வருமுன் காத்து வாழலாம்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வடசென்னை குறிப்பிடத்தக்க பகுதியாகும். மழை வெள்ள பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய வடசென்னைவாசியும் சமூக செயற்பாட்டாளருமான எ.த.இளங்கோ, ‘மிக்ஜாம் புயல், மழை வெள்ளம் காரணமாக சென்னை மாநகரமே நிலைகுலைந்து போனது. குறிப்பாக வடசென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பேரிடர்தான் என்றாலும் மார்பளவு வெள்ளநீரில் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவ அரசோ, ஆளும்கட்சியினரோ முழு அளவில் முன்வரவில்லை என்பது பேரவலம். திராவிட இயக்கக் கொள்கைகளுக்காக தி.மு.கவைத் தொடர்ந்து ஆதரித்து வரும் என்னாலேயே, மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கைவிடப்பட்ட செயலைச் சகித்துக் கொள்ள இயலவில்லை.

அதே நேரத்தில், ராயபுரம் ஆர்.கே.நகரில் மக்கள் பிரதிநிதிகளும், அரசுத்துறையும் கூடுமான அளவுக்கு உதவினர். என்ற போதிலும் பல்வேறு நலத்திட்டங்களை நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்திய தி.மு.க அரசுக்கு மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு பெரும் பின்னடைவே ஆகும். தி.மு.கவுக்கும் மக்களுக்குமிடையே இந்த பெருவெள்ள மழை பாதிப்பு பெரிய இடைவெளியை உண்டாக்கியுள்ளது என்பது உண்மை. காரணம், மார்பளவு வெள்ளநீரில் உணவுக்கும், குடிநீருக்கும், மின்சாரத்துக்கும் மக்கள் போராடியது பெருந்துயரம். களத்தில் இறங்கி மக்கள் நிலையறிந்த முதலமைச்சரின் செயல்பாட்டையோ, அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா ராஜனின் செயல்பாட்டையோ குறைசொல்ல ஒன்றுமில்லை என்றாலும், பல இடங்களில் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க முற்படவில்லை என்கிற செய்திகள் வேதனைக்குரியது.

பொதுவாகவே, பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அரசியல் கட்சிகள் அவர்களுக்கான உதவிகளைச் செய்ய முற்பட வேண்டுமே தவிர, இயற்கை ஏற்படுத்திய இடரில் அரசியல் செய்வது வெட்கக்கேடானது. ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சி குற்றம் சாட்டுவதும் எதிர்க்கட்சி மீது ஆளுங்கட்சி விமர்சனம் செய்வதும் வெள்ளப் பாதிப்பு நேரத்தில் வேண்டத்தகாதது. நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு எத்தனையோ ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. ஆட்சியாளர்கள் மாறினாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. நீர்வழித்தடத்தைப் பாதுகாப்பதே சென்னை மீண்டும் ஒரு வெள்ள ஆபத்தைச் சந்திக்காமல் இருப்பதற்கு வழிவகுக்கும்’ என்றார்.

மனித நேயத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் வித்திட்ட பள்ளிவாசல்கள்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பாதிப்பு சென்னை, சென்னைப் புறநகர்ப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட நிலையில், இணையத் தொடர்புகள், மின்சாரம், தண்ணீர், உணவு, தங்குமிடம் என அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் இழந்து தவித்த மக்களுக்கு ஆதரவு தந்து அணைத்துக் கொண்ட ஆலயமாக விளங்கின பள்ளிவாசல்கள். அதில் முதல் கதவைத் திறந்து விட்டது பூந்தமல்லியில் உள்ள பெரிய பள்ளிவாசல்.

இது, கி.பி.1653ஆம் ஆண்டுக்கு முன்பு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமை வாய்ந்த பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிவாசல் உருவான நாள் முதலாய் அப்பகுதி மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வந்த நிர்வாகிகளின் மனிதநேயம் மிக்க நற்பணி காலகாலமாகத் தொடர்ந்து வரும் தலைமுறையினரால் முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறது. அதன் நீட்சியாக, தற்போது ஏற்பட்ட பெருவெள்ள மழை பாதிப்பின் போது சாதி, மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் ஆதரவுத்தலமாக இப்பள்ளி தனித்துவம் மிக்கதாக பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

டிசம்பர் 5 அன்று அதிகாலைத் தொழுகைக்குப் பிறகு மின்சாரம் இன்றி கும்மிருட்டான வேளையில் மழைவெள்ள பாதிப்பால் அவதியுறும் மக்களுக்கு உதவும் பொருட்டு, பூந்தமல்லி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளைத் தலைவர் டாக்டர் எஸ்.முஸம்மில் ரபீக், ஜெ.நூர் முஹம்மது ஆகிய இருவரும் மழையின் பாதிப்பை ஆய்வு செய்ய மாங்காடு, சையது சாதிக் நகர், கண்டோன்மென்ட் ஆகிய பகுதிகளுக்கு புறப்பட்டுச் செல்லும் வழியில் பூந்தமல்லி வட்டார ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி கே.முஹம்மது இஸ்மாயீல் பாகவி, பொருளாளர் மௌலவி முஹம்மது ஃபஹ்மி காஷிபி ஆகிய இருவரையும் சந்திக்க நேரிடுகையில், மழை பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களைக் கூறியுள்ளனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூந்தமல்லி சுற்று வட்டார மக்களுக்கு உதவும் ஆக்கப்பூர்வமான பணிகளை பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ளவிருப்பதை அறிந்து பூந்தமல்லி ஜமாஅத்துல் உலமா சபையுடன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளையும் இணைந்து பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய டாக்டர் எஸ்.முஸம்மில் ரபீக், ‘பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் டிசம்பர் 5 அன்று மனித நேயத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் வித்திட்ட தலமாக விளங்கியது என்பது மிகையல்ல. அன்று, பள்ளிவாசலின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி மூலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு உணவு, தண்ணீர், அத்தியாவசிய உதவிகளுக்கும் பாதிக்கப்பட்ட அனைவரும் பள்ளிவாசலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டது.

சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் தயக்கமின்றி வருகை புரிய அழைத்த அழைப்பால் சற்றேறக்குறைய 3500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் பலன் பெற்றனர். பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக தனி இடம் வழங்கி தங்க வைத்து உதவியதை நெகிழ்வோடு குறிப்பிட்டனர். அதேபோல், சபரிமலைக்கு மாலை போட்ட பக்தர்களும் தங்களுக்குப் பள்ளிவாசலில் இடமளித்து உதவியதை நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கின்றனர்.

சைவ சாப்பாடு மட்டுமின்றி, 250 கிலோ சிக்கன் பிரியாணியும் செய்து ஐந்தாம் தேதி மதிய உணவாக பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பொதுவாக இஸ்லாமியரல்லாத பலர் இஸ்லாம் குறித்த புரிதல் இன்றி இருக்கும் நிலையில், அன்று பள்ளி வாசலின் இமாம் மௌலவி கே.முஹம்மது இஸ்மாயீல் பாகவி அவர்கள் பள்ளிவாசலை ஒரு சமய நல்லிணக்கக் களமாகவே மாற்றினார். தொழுகை முறை குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மூவாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிவாசலுக்குள் கூடினாலும் எந்தவித தள்ளுமுள்ளுக்கும் இடமளிக்காமல் உணவு வழங்கல் சிறப்பாக நடந்தது. இதற்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் ராஜா உசேன், ஆதம் பாய் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு முக்கியக் காரணமாக அமைந்தது’ என்றார் மகிழ்ச்சித் ததும்ப.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்