மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

பறிபோன காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் தீர்ப்பு
சேயன் இப்ராகிம், 1 - 15 ஜனவரி 2024


பறிபோன காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து  மாநிலங்களின் சுயாட்சிக்கு  வேட்டு வைக்கும் தீர்ப்பு சேயன் இப்ராகிம்

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை இரத்து செய்தும், அம்மாநிலத்தை லடாக் - ஜம்மு காஷ்மீர் என இரண்டாகப் பிரித்தும், அப்படிப் பிரிக்கப் பட்ட இந்த இரண்டு அரசுகளின் மாநில அந்தஸ்தைக் குறைத்து அவற்றை யூனியன் பிரதேசங்களாக்கியும் ஒன்றிய அரசு கடந்த 5.8.2019 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய சட்டங்கள் செல்லும் என உச்ச நீதி மன்றம் 11.12.2023 அன்று வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்ததே! ஏனெனில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மனுதாரர்களின் வாதங்களுக்கிடையே குறுக்கிட்டுப் பேசிய, நீதி யரசர்கள் ‘இந்தச் சட்டங்களை ரத்து செய்யவே முடியாதா? அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லையா? ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றுதானே! அதற்கென தனி இறையாண்மை இல்லையே; அம்மாநிலத்தின் இறையாண்மை இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டதே’ என்ற ரீதியில் கருத்துகளை வெளியிட்டனர். அப்போதே இந்த வழக்கில் அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும் என என்னைப் போன்றவர்கள் கருதினோம். எதிர்பார்த்த படியே தீர்ப்பு வந்துள்ளது.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற சில நாள்களிலேயே அதனை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால் உச்ச நீதிமன்றம் நான்காண்டுகள் கழித்தே இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது 'Justice delayed Justice Denied' என்று கூறவும் வாய்ப்பில்லை. தாமதமாக வந்த இந்தத் தீர்ப்பு தங்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்றே காஷ்மீர் மக்கள் கருதுகிறார்கள்.

370ஆவது பிரிவு

15.8.1947 அன்று இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த அந்த சமஸ்தானத்தை ஆண்டு வந்த இந்து மன்னர் ஹரிசிங், இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைக்க விரும்பவில்லை. தனது சமஸ்தானம் தனி நாடாகவே இருக்கும் என அறிவித்தார். ஆனால் அந்த நாட்டின் மக்கள் ஆதரவு பெற்றிருந்த தலைவரான ஷேக் அப்துல்லா அந்த சமஸ்தானம் இந்தியாவுடன் வேண்டுமென வலியுறுத்தினார். அவர் அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர்களுடன் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியுடனும், அதன் தலைவர்களுடனுமே நெருக்கமாக இருந்தார்.

இந்நிலையில் 24.10.1947 அன்று பாகிஸ்தானின் மறைமுக ஆதரவுடன் அந்நாட்டின் எல்லைப்புற மாகாணத்தைச் சார்ந்தவர்கள் காஷ்மீர் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி அதன் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தனது சமஸ்தானத்தை அவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டி மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் இந்தியாவின் உதவி வேண்டுமென்றால், அந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தனர். மன்னர் ஹரிசிங் அதனை ஏற்றுக் கொண்டு 26.10.1947 அன்று இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். 

அதன் பின்னரே இந்திய இராணுவம் அங்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தது. இவ்வாறாக, ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியைத் தவிர (தற்போது பாகிஸ்தான் வசமிருக்கும் ஆஸாத் காஷ்மீர்) சமஸ்தானத்தின் பிற பகுதிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றானது.

அம்மாநில மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ஷேக் அப்துல்லா, தனது மாநிலத்திற்குச் சில சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டுமென இந்தியத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் கோபால்சாமி ஐயங்கார் ஆகியோர் விரிவான விவாதங்கள் நடத்தி, காஷ்மீர் மாநிலத்திற்குச் சில சிறப்புச் சலுகைகளை வழங்க முன்வந்தனர். அதுவே 370ஆவது சட்டப் பிரிவாகும்.

அவையாவன

  1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவுக்கு இணக்கமாக காஷ்மீர் மாநிலம் தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  2. காஷ்மீர் மாநில நிர்வாகத் தலைவர் (ஆளுநர் போன்ற பதவி) சதாரே ரியாஸத் என அழைக்கப்படுவார். இவர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட மாட்டார். காஷ்மீர் சட்டசபையே இவரைத் தேர்ந்தெடுக்கும்.
  3. மாநில முதலமைச்சர் பிரதமர் என அழைக்கப்படுவார்.
  4. மாநில அரசைக் கலைக்க வகை செய்யும் 356ஆவது சட்டப் பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது.
  5. காஷ்மீர் மாநிலத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  6. காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனிக்கொடி இருக்கும். இந்திய தேசியக் கொடிக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்.

எனினும், ஷேக் அப்துல்லா 9.8.1953 அன்று ஒன்றிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப் பிறகு பொறுப்பேற்ற அரசுகள் (பெரும்பாலும் காங்கிரஸ் அரசுகள்) இந்த 370ஆவது சட்டப் பிரிவை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பல திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.

அதன்படி

  1. நிர்வாகத் தலைவர் (சதாரே ரியாஸத்) ஆளுநர் ஆனார்.
  2. பிரதம மந்திரி முதல் அமைச்சரானார்.
  3. அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவு காஷ்மீருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
  4. மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
  5. காஷ்மீர் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

 

எனவே 370ஆவது சட்டப் பிரிவில் எஞ்சியிருந்தது தனிக் கொடியும், காஷ்மீர் மாநில சட்டசபை தனக்கென சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற அம்சங்களே ஆகும். 5.8.2019 அன்று இந்த நீர்த்துப் போன சட்டப் பிரிவை ரத்து செய்து தான் மத்திய பாஜக அரசு சட்டத்தை இயற்றியது. அது செல்லும் என தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தப் பிரிவை ரத்து செய்ய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டத்தின் பாற்பட்டதாக இல்லை என்பதுதான் வழக்குத் தொடுத்தவர்களின் வாதமாகும். தங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவர்கள் அரசியல் சட்டத்தின் 370(3) பிரிவைச் சுட்டிக்காட்டி வாதாடினர்.

அந்தச் சட்டப் பிரிவு சொல்வதென்ன?

Notwithstanding anything in the foregoing provisions of this article, the president may by public notification declare that this article lease to be operative only with such exceptions and modifications and from such date as he may specify provided that the recommendations of the constituent assembly of the state referred in clause 2 shall be necessary. 

மேற்கண்ட சட்டப்பிரிவின்படி 370 ஆவது பிரிவை நீக்க வேண்டுமானால், அம்மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைகள் அவசியமானவை. ஆனால் 1957ஆம் ஆண்டே காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டுவிட்டதால், சட்டப் பிரிவு 370 நிரந்தரமான ஓர் அம்சமாகிவிட்டது. எனவே அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை இல்லாமல் 5.8.2019 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டதால், அந்த இடத்திற்கு காஷ்மீர் சட்டமன்றம் வந்து விடுகிறது. சட்டம் கொண்டு வரப்பட்ட போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றதால், சட்டசபையின் பொறுப்புகளை நிறைவேற்ற மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே, மாநில ஆளுநரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கி விட்டார்.

370ஆவது பிரிவு நிரந்தரமானதல்ல தற்காலிகமானதுதான். காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆகிவிட்ட பிறகு, அம்மாநிலம் குறித்து சட்டங்கள் இயற்ற ஒன்றிய அரசுக்கு (அதாவது நாடாளுமன்றத்திற்கு) அதிகாரம் உண்டு என்று வாதங்களை முன்வைத்தனர். அந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால் இந்தச் சட்டப் பிரிவை நீக்க, ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் சில உள்நோக்கங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. அல்லது பொருட்படுத்தவில்லை. 19.6.2018 அன்று காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்ட போது, அம்மாநிலத்தில் பாஜகவும், மக்கள் ஜனநாயக் கட்சியும் இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மஹ்பூபா முதல் அமைச்சராகப் பொறுப்பில் இருந்தார். அந்தக் கூட்டணி அரசிலிருந்து பாஜக விலகியதால், அது பெரும்பான்மையை இழந்தது.

மாநிலத்தில் சட்டமன்றம் இருந்தால் 370ஆவது பிரிவை இரத்து செய்ய முடியாது என்பதாலேயே, பாஜக அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தது. ஆளுநரைப் பரிந்துரைக்கச் சொல்லி 370ஆவது சட்டப் பிரிவை இரத்து செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேறியது. இந்தச் சட்டம் மாநில உரிமைகளுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்ற வாதத்தையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. 

370ஆவது பிரிவை இரத்து செய்த அதே நேரத்தில் ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரண்டாகப் பிரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. அத்தோடு, பிரிக்கப்பட்ட மாநிலங்களின் மாநில அந்தஸ்தையும் குறைத்து அவற்றை யூனியன் பிரதேசங்களாக மாற்றும் சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்திய அரசியல் சட்டத்தின் 3ஆவது பிரிவின் படி எந்த ஒரு மாநிலத்தையும் பிரிக்கவோ, தகுதிக் குறைப்புச் செய்யவோ, எல்லைகளை மாற்றி அமைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சட்டமும் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. 

எதற்காக காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்? லடாக் பகுதி மக்கள் தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று ஒருபோதும் கோரிக்கை வைத்தது இல்லை. போராட்டங்கள் நடத்தியதில்லை. இரண்டு மாநிலங்களின் அந்தஸ்தையும் குறைத்து அவற்றை யூனியன் பிரதேசங்களாக ஏன் மாற்ற வேண்டும்? இதற்கு ஒன்றிய அரசிடம் பதில் இல்லை. உச்ச நீதிமன்றமும் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. இரண்டு மாநிலங்களுக்கும் விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசு வழக்கறிஞரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அத்தோடு விஷயத்தை விட்டு விட்டனர். 30.09.2024க்குள் அம்மாநிலங்களில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதோடு தங்களது பணி முடிந்து விட்டதாக நீதிபதிகள் கருதி விட்டனர்.

அரசியல் சட்டத்தின் 35அ பிரிவு இப்போது இரத்து செய்யப்பட்டு விட்டதால், இனிமேல் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் காஷ்மீரில் நிலமோ, சொத்தோ வாங்கத் தடை ஏதும் இல்லை. சாமானியர்கள் அங்கு போய் நிலம் வாங்கப் போவதில்லை. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளே அங்கு நிலங்களை வாங்குவர். பெரும் கட்டிடங்களைக் கட்டி அதன் இயற்கை வளங்களை அழிப்பர். மன்னர் ஹரிசிங்கும், ஷேக் அப்துல்லாவும் எதற்காகப் பயந்து இந்தத் தடை நீடிக்க வேண்டுமென்று விரும்பினார்களோ, அது இனிமேல் நடைபெறப் போகிறது.

‘இந்தத் தீர்ப்பினை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் ஒன்றிய அரசு எந்த ஒரு மாநிலத்தையும் பிரிக்கலாம், தகுதிக் குறைப்புச் செய்யலாம் என்ற அச்சத்தையும் சட்ட நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு மாநிலத்தைப் பிரிக்க வேண்டுமானால், ஒருங்கிணைந்த அந்த மாநிலத்தின் சட்டப் பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உயரிய மரபுகளும் தற்போது மீறப்பட்டுள்ளன’ என்று 12.12.2023 தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகள் செய்யப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் இதுபோன்ற சலுகைகள் உள்ளன. அவை குறித்து யாரும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் இருப்பதே பாஜகவின் கண்களை உறுத்துகின்றது. இதை விட வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இந்தியாவுடன் தனது சமஸ்தானத்தை இணைக்க மறுத்த ஹைதராபாத் நிஜாம் தேச விரோதி என பாஜக தலைவர்களால் தூற்றப்படுகிறார். அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைய மறுத்த காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மீது எந்தவிதமான விமர்சனமும் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற தங்களது மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு உறுதுணையாக இருந்த ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் இறையாண்மைக்கு விசுவாசமாக இருக்கின்ற அவரது வாரிசுகளும் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகின்றனர். 

தங்களோடு ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட மஹ்பூபா முப்தியையும் பாஜக ஆட்சியினர் வீட்டுச் சிறையில் வைக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்புச் செய்தும் காஷ்மீர் பண்டிட்களுக்கும், பெண்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கீடு வழங்கியும் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் முதல் அமைச்சராக வரக் கூடாது என்ற ரகசிய திட்டத்தை நோக்கி பாஜக முன்னேறிச் செல்கிறது என்பதே தற்போதைய நிலைமையாகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்