மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

நீதிப்போராளி பில்கீஸ் வாழ்வும், வழக்கும்
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1 - 15 பிப்ரவரி 2024


நீதிப்போராளி பில்கீஸ் வாழ்வும், வழக்கும்

2001ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அடுத்த ஐந்து மாதங்களில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

ரயில் எரிப்புக்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி குஜராத் முழுவதும் இந்துத்துவ சங்பரிவார வெறியர்கள் தாக்குதல்களைத் தொடங்கினர். அரசே முன்னின்று நடத்திய இன அழிப்பில் காவல்துறையின் கண் முன்னே கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. இரண்டு வாரங்கள் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், 360 மஸ்ஜித்கள்  ரைமட்டமாக்கப்பட்டன. கோடிக்கணக்கில் சொத்துகள் சூறையாடப்பட்டன.

790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கலவரத்தில் கொல்லப்பட்டதாக அரசு தெரி வித்தது. ஆனால் கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். ஒன்றரை இலட்சம் இஸ்லாமியர்கள் குஜராத்தை விட்டு வெளியேறினர்.

59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 2005ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்தனர் என்றும், ரயில் எரிப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தது.

நரோடா பாட்டியா படுகொலை

குஜராத் கலவரம் இந்தியச் சரித்திரத்தின் கறைபடிந்த பக்கம். மிகக் கொடூரமாக மாநில அரசே மக்களைக் கொன்றொழித்தது. உலகமே இந்தியாவை பெரும் கவலையுடனும் அச்சத்துடனும் நோக்கியது. ‘இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்வேன்’ என்றார் அன்றைய பிரதமர் வாஜ்பாய். ‘குஜராத் அரசு ராஜநீதியை மீறிவிட்டது’ என்று வாஜ்பாயே சொல்லுமளவுக்கு நிலைமை மோசமானது.

மாநிலம் முழுவதும் வெடித்த இந்த இன அழிப்பு நிகழ்வுகளைத் தொகுத்தால் இதயம் நொறுங்கிப்போகும். அத்தகைய பெருந் துயரின் அத்தாட்சிகளில் ஒன்றுதான் நரோடா பாட்டியா படுகொலைகள். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அஹமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். 

குல்பர்க் சொஸைட்டி படுகொலை

2002 இன அழிப்புப் படுகொலையின் போது முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜஃப்ரியின் வீட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிருக்கு அஞ்சி தஞ்சமடைந்தனர். இதனை அறிந்த வெறிக்கும்பல் அந்த வீட்டிற்குத் தீ வைத்தனர். உள்ளே இருந்தவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். வெளியே வந்தவர்கள் கத்தியால் குத்திச் சாய்க்கப்பட்டனர். இஹ்ஸான் ஜஃப்ரியின் மனைவி ஜகியா ஜஃப்ரி கண் முன்னால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இஹ்ஸான் ஜஃப்ரி கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 

பில்கீஸ் பானுவிற்கு நேர்ந்த கொடூரம்

குஜராத் பற்றி எரிந்து கொண்டிருந்தது உயிர் பிழைக்க சொந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லிம்களில் 19 வயது பில்கீஸ் பானுவின் குடும்பமும் ஒன்று. 2002 பிப்ரவரி 27ஆம் நாள் பில்கிஸும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.பில்கீஸ் 5 மாத கர்ப்பிணி. பள்ளிவாசலுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள். அங்கும் பாதுகாப்பில்லை என வெளியேறி ஒவ்வொரு இடமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

மார்ச் 3ஆம் தேதி ரந்திக்பூர் கிராமத்தை அடைந்த பில்கீஸ் குடும்பத்தைச் சுற்றிச் சூழ்ந்தது 20 பேர் கொண்ட கும்பல். அச்சத்திற்குப் பதில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தார் பில்கீஸ். காரணம் அதில் பலரும் பில்கீஸை நன்கு அறிந்தவர்கள். பில்கீஸ் வீட்டில் பால் வாங்கிச் செல்பவர்கள். பில்கீஸின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் அதில் இருந்தார். பில்கீஸ் ‘சாச்சா’ என அழைக்கும் ஊர்க்காரர்கள்தான் அவர்கள். ஆனால் அப்போது அவர்கள் அனைவரும் மிருகங்களாகவே மாறியிருந்தார்கள். இல்லை மிருகங்களை விடக் கீழானவர்களாக வெளிப்பட்டார்கள்.

பில்கீஸின் குடும்பத்தினரை குத்திச் சாய்த்தது அந்த வெறிப்பிடித்த ஃபாசிஸக் கும்பல். ஏழு பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். குழந்தை பெற்று இரண்டே நாள்களாகியிருந்த பில்கீஸின் சித்தப்பா மகளையும் வன்புணர்ந்து கொன்றனர். பில்கீஸின் கண்முன்னே அவரது மூன்றே வயது நிரம்பிய அன்பு மகள் சாலிஹாவின் கால்களைப் பிடித்து தூக்கி தரையில் அடித்தே கொன்றனர். 

அவர்களின் தாய் வயது, தங்கை வயது, மகள் வயது, பேத்தி வயது இருந்த யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லாரையும் வன்புணர்ந்தனர். கொன்றனர். 5 மாத கர்ப்பிணியான பில்கீஸையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். மயங்கிய பில்கீஸை இறந்துவிட்டதாக எண்ணி விட்டுச் சென்றது வெறிக்கும்பல்.

நினைவு திரும்பிய பில்கீஸ் தன் வெற்றுஉடம்பை மறைக்க ஆதிவாசியின் வீட்டி லிருந்து ஆடையை வாங்கி அணிந்து கொண்டு அருகிலிருந்த காவல்துறை அலுவலகத்திற்குச் சென்று புகாரளித்தார். அன்று தொடங்கிய பில்கீஸின் நீதிக்கான போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நீதிக்கான நெடும்பயணம்

2002 மார்ச் 03ஆம் நாள் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 04ஆம் நாள் தாஹோத் மாவட்டத்தில் உள்ள லிம்கேடா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தினார் பில்கீஸ் யாரெல்லாம் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டார்கள் என்று பில்கீஸ் சொன்னபோதும் அவர்கள் வழக்குப் பதிய மறுத்தனர்.

மார்ச் 25ஆம் நாள் பில்கீஸின் தொடர் முயற்சியால் முதலில் முகமறியாத குற்றவாளிகள் எனப் பதியப்பட்டு பின்னர் அவர்கள் மீது ஊஐகீ பதியப்பட்டது. லிம்கேடா மாவட்ட நீதிபதி முன் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒருமித்த கருத்தைக் காரணம் காட்டி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

நீதிமன்றம் குற்றவாளிகளைக் காப்பற்ற முயல்வதை உணர்ந்த பில்கீஸ் ஏப்ரல் மாதம் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகினார். முன்னாள் அரசு வழக்கறிஞரான ஹரிஷ் சால்வேவை உச்சநீதிமன்றத்தில் பில்கீஸ் பானுவுக்கு ஆதரவாக வழக்கு தொடரக் கோரியது.

லிம்கேடா மாவட்ட நீதிபதியின் அறிக்கை, குஜராத் காவல்துறைக்கு எதிராக பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 2003ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் குஜராத் மாநில அரசின் CBI நிறுத்துமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 18ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது.

2004 ஜனவரி மாதம் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை சிபிஐ கைது செய்தது. பிப்ரவரி 11ஆம் நாள் குஜராத் காவல்துறை கலவரத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி இடைக்கால அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. ஏப்ரல் 9ஆம் நாள் 6 காவல்துறை அதிகாரிகள், பாலியல் வன்புணர்வை மறைத்து போலியான அறிக்கை கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் உட்பட 20 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. மே 12ஆம் நாள் குஜராத் காவல்துறையினரின் அத்துமீறல், உடந்தையாக இருந்ததை சிபிஐ உறுதி செய்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது. குஜராத் அரசு குற்றவாளிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்தியது. இனி குஜராத்தில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த பில்கீஸ் வழக்கை வெளி மாநிலத்திற்கு மாற்ற ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்தார். ஆகஸ்ட் மாதம் வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2005 ஜனவரி 13இல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பிப்ரவரி 20ஆம் நாள் 12 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அஹமதாபாத்தில் இருந்து மீண்டும் விசாரணை தொடங்கியது. 2008ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் 11 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தது.

2008ஆம் ஆண்டு மும்பை நாசிக் சிறையிலிருந்து குற்றவாளிகள் குஜராத்தின் கோத்ரா சிறைக்கு மாற்றப்பட்டனர். விடுவிக்கப்பட்ட காவல்துறையினர், மருத்துவர்களுக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடுத்தார் பில்கீஸ் பானு.

2017 மே 4ஆம் நாள் சாட்சியங்களை அழித்த குற்றச்சாட்டின் கீழ் 5 காவல்துறையினர் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேரை குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் மேல் முறையீடு செய்தனர். ஜூலை 10ஆம் நாள் தண்டனைக்கு எதிரான மருத்துவர்கள், காவல் துறையினரின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானுவுக்கு ரூபாய் ஐம்பது இலட்சம் கொடுக்க வேண்டும்.

பில்கீஸுற்கு அரசு வேலை வழங்கி பாதுகாப்பான தங்குமிடம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் 2019 ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அரசு வேலையும், வீடும் குஜராத் அரசு வழங்கவில்லை.

2022 மே 15ஆம் நாள் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளில் ராதேஷியாம் ஷா, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான். 2022 ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை தினத்தை முன்னிட்டு நன்நடத்தையின் அடிப்படையில் பில்கீஸ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கொடிய குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு முன்விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட ஜஸ்வந்த், கோவிந்த்,

சைலேஷ் பட், ராதேஷியாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய், பிரதீப், பகாபாய், ராஜுபாய், மிதேஷ்பட், ரமேஷ் ஆகிய 11 மிருகங்களையும் ஆரத்தி எடுத்தும், காலில் விழுந்து வணங்கி இனிப்புக் கொடுத்தும் சங்பரிவாரங்கள் வரவேற்றன.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன தெரியுமா? எஸ்.பி, நீதிபதி உள்ளிட்ட குழு, குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த ஜெயில் அட்வைஸரி கவுன்சில் குழுவில் இருந்த கோத்ராவின் பாஜக எம்.எல்.ஏ ராகுல் ஜி இந்த விடுதலை குறித்துச் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அவர்கள் அனைவரும் பிராமணர்கள், சிறப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தவறு எதுவும் செய்திருக்க மாட்டார்கள். அப்படியே அவர்கள் ஏதாவது செய்திருந்தாலும் கூட அதற்குத் தகுந்த காரணம் இருக்கும். அதனால்தான் அவர்களது விடுதலைக்குப் பரிந்துரைத்தோம்’ என்றார்.

கொடூரமான கொலை, வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளிகளின் விடுதலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பில்கீஸின் உள்ளம் எப்படித் துடித்திருக்கும்? கயவர்கள் தைரியமாக வெளியே வலம் வருகிறார்கள். பில்கீஸின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத சூழல். ஆனாலும் பில்கீஸ் நம்பிக்கை இழக்கவில்லை. சோர்ந்துவிடவில்லை. பின்வாங்கவில்லை. பில்கீஸ் பானு மேல் முறையீடு செய்தார்.

நாடு முழுவதும் பலரும் பில்கீஸுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுபாஷினி அலீ, செய்தியாளர் ரேவதி, லக்னோ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ரூப்ரேகா, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா ஆகியோர் 11 குற்றவாளிகளின் முன் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தனர். இந்தப் பொது நல வழக்கு மனுவை அரசமைப்புச் சட்டப் பிரிவு 32இன் கீழ் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

2024 ஜனவரி 08ஆம் நாள் நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் இருவரும் ‘பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மிகவும் முக்கியம். குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. எனவே குற்றவாளிகள் 11 பேரும் ஒரு வாரத்திற்குள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என்ற தீர்ப்பை வழங்கியது.

குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ராதேஷியாம் ஷாவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை மறைத்து, இரு உயர் நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதாக தவறான தகவலைத் தெரிவித்து மோசடியான உத்தரவைப் பெற்றுள்ளான் ராதேஷியாம் ஷா. உண்மைகளை மறைத்து உச்ச நீதிமன்றத்தையே இவர்கள் தவறாக வழி நடத்தியுள்ளார்கள் என்பதை நீதிபதிகள் வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தண்டனையும் விடுதலையும்

36 பெண்கள், 35 குழந்தைகள் உள்பட 97 பேர் படுகொலை செய்யப்பட்ட நரோடா பாட்டியா படுகொலைகளைத் திட்டமிட்டதற்காக குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், குழந்தைகள் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த மாயா கோட்னானிக்கு 2012ஆம் ஆண்டு இருபத்தெட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2018இல் குஜராத் உயர் நீதிமன்றத்தால் கோட்னானி விடுவிக்கப்பட்டார். நரோடா பாட்டியா படுகொலையில் தண்டனை பெற்ற மனோஜ் குக்ரானியின் மகள் பயாலுக்கு பாஜக தேர்தலில் சீட் வழங்கியது.

முன்னாள் குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) ஆர்பி ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட், தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டனர். ஏன் தெரியுமா?

இந்தக் கலவரம் அரங்கேறிய போது சஞ்சீவ் பட் ஐககு குஜராத் உளவுத்துறையில் துணை கமிஷ்னராகவும் உள்நாட்டு பாதுகாப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் பழிவாங்கும் வன்முறையைத் தூண்டும் என்று முதலில் தெரிவித்த அதிகாரிகளில் சஞ்சீவ் பட்டும் ஒருவர்.

அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி, ‘72 மணிநேரத்திற்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தட்டும்’ என்று காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு கூறியதாக சஞ்சீவ் பட் வாக்குமூலம் அளித்தார். அதேநேரத்தில் சிறப்பு விசாரணைக் குழு மோடியையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் காப்பாற்ற நினைப்பதாக உச்சநீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார்.

ஆனால் வழக்கிலிருந்து மோடி உள்ளிட்ட சிலர் விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்டது செல்லாது எனக் கலவரத்தில் இறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜஃப்ரியின் மனைவி ஜகியா ஜஃப்ரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத் தொடர்பாகத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது

சரியானதே எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஜகியா ஜஃப்ரி இந்த வழக்கைத் தொடர்வதற்குக் காரணமாகச் செயல்பட்டதாகச் சொல்லி பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிடுவதற்காக உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (CJP) அமைப்பின் செயலாளரான தீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளிகள் விடுதலை பெறுவதும் நீதிக்காகப் போராடுபவர்கள் கைது செய்யப்படுவதுமான குஜராத் மாடல் நீதியின் அவமானச் சின்னமாகத் திகழ்கிறது.

இனி..

பணபலம், ஆட்சி அதிகாரத்தின் மூலம் காவல், சட்டம் எல்லாவற்றையும் தன் கொடும் பிடிக்குள் வைத்து ஜனநாயக நாட்டில் எதேச்சதிகாரத்தை நிகழ்த்தி வரும் பாஜக அரசுக்கு எதிராகப் பில்கீஸ் போராடிப் பெற்ற வெற்றி இது.

வழக்கறிஞர் ஷோபா குப்தா, கணவர் யாகூப் ரசூல் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நீதிக்காகக் குரல் கொடுக்கும் இலட்சக் கணக்கான மக்களுடன் பில்கீஸ் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கான, பெண்களுக்கான நீதியைப் பெற்றுத் தந்துள்ளார். குற்றவாளிகளை மீண்டும் சிறையிலடைக்கும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இப்போதே 9 குற்றவாளிகள் தலை மறைவாகிவிட்டதாகச் செய்திகள் வலம் வருகின்றன. மீண்டும் இவர்கள் விடுவிக்கப்படலாம்.

நீதியின் சமாதியின் மீது ஆலயம் எழுந்திருக்கின்ற இந்த ‘புதிய பாரதத்தில்’ பில்கீஸுக்கான நீதி முழுமை பெறுவது எப்போது?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்