மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இந்த ரமளானை என்ன செய்யப் போகிறோம்?
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1-15 மார்ச் 2024


இந்த ரமளானை என்ன செய்யப் போகிறோம்?

நம் வாழ்வில் மீண்டும் ஒரு ரமளான். இந்த ரமளானையும் கடந்த ரமளான்களைப் போன்றே கடந்துவிடப் போகிறோமா? இல்லை இந்த ரமளானிடம் நம்மை ஒப்படைத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளப்போகின்றோமா? ஒவ்வொரு ரமளானிலும் நாம் திட்டமிடுகின்றோம். ரமளானை வரவேற்று நிகழ்வுகளை நடத்துகின்றோம். தஹஜ்ஜத், தராவீஹ், திருமறை ஓதல், விரிவுரைகள் என வழிபாடுகளில் மூழ்கித் திளைக்கின்றோம்.

முடிந்தளவு தீயன தவிர்ந்து நல்லன செய்கின்றோம். நமக்குள் ஒரு மெல்லிய மாற்றம் படர்கிறது. ரமளான் பிறை வளர்வது போன்ற ஒரு சின்ன வளர்ச்சி. அது உச்சம் தொட்டதும் தேய்பிறையாய்த் தேய்ந்து போகின்றான் நமக்குள் எழுந்த நல்லவன்.

ரமளானின் நோக்கம் இறையச்சம். முப்பது நோன்புகள் நோற்றுப் பயிற்சி மேற்கொள்கின்றோம். ஓராண்டு, ஈராண்டு அல்ல சற்றேறக்குறைய முப்பது, நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக ஆண்டுதோறும் முப்பது நாள்கள் பயிற்சி மேற்கொள்கின்றோம். உண்மையில் நாம் இறையச்சமுள்ளவர்களாக மாறியிருக்க வேண்டும். முஸ்லிம் சமுதாயம் இறையச்சமுள்ள சமுதாயமாக மாறியிருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் அப்படியில்லை.

சரி கடந்ததை விடுங்கள். இந்த ரமளானை என்ன செய்யப் போகிறோம்? முப்பது நோன்புகளையும் நோற்பது, திருக்குர்ஆனை குறைந்தது ஒருமுறையாவது முடிப்பது, தமிழாக்கம் படிப்பது, தொழுகைகளை தவறாமல் ஜமாஅத்துடன் தொழுவது, தஹஜ்ஜத், சுன்னத், நஃபில்களைப் பேணுவது என்ற வழக்கமான திட்டமிடல்களுடன்தான் இந்த ரமளானையும் அணுகப் போகின்றோமா? இல்லை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ரமளானை முன்வைத்து நம்மை மாற்றிக்கொள்ளப் போகின்றோமா?

மாற்றத்தின் மாதம் ரமளான்

விழித்திருக்கும் நேரத்தில் உறக்கம், உறங்கும் நேரத்தில் உணவு, சாப்பிடும் நேரத்தில் பசித்திருத்தல் என்று ரமளான் வழக்கமான நம் வாழ்வைச் சற்றே மாற்றிவிடுகிறது. இங்கிருந்து நமக்கான மாற்றத்தையும் தொடங்கலாம். அதற்கு முன்பு நம்மைக் குறித்த நமது மதிப்பீடு நமக்குப் பிடிபட வேண்டும். எது நமது பலம்? எது நமது பலவீனம்? என்ற சுயம் அறிதல் நலம். பலமான நமது திறன்களைக் கூர் தீட்டிக் கொள்வதற்கும், பலவீனங்களைக் களைவதற்கும் ரமளான் மிகச் சிறந்த நல்வாய்ப்பு.நிதானமாக நம்மை நாம் ஆய்வு செய்ய வேண்டும். நம்முடன் நாம் பேச வேண்டும்.

நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவிருக்கும் பலநூறு கேள்விகளையும் கேட்டுத் தீர்த்துவிட வேண்டும். கொஞ்சம் நமது கடந்த காலத்தைத் திரும்பிப்பாருங்கள். எங்கெல்லாம் தவறிழைத்திருக்கின்றோம் என்பது மெல்லப் புரிபடும். அதை வைத்துக் கொண்டு எதிர்காலப் பாதையைப் பாருங்கள். பெரிய பெரிய திட்டங்களெல்லாம் வேண்டாம்.

சின்னச் சின்னத் திட்டங்கள் போதும். உங்களை நீங்கள் மாற்றிவிட முடியும் என்று நம்புகின்றீர்களா? நம்மையே நாம் மாற்றமுடியவில்லை என்றால் நம்மால் எதையும் மாற்ற முடியாது. நம் பேச்சை நாமே கேட்கவில்லை என்றால் அந்தப் பேச்சின் பெருமதிதான் என்ன? மாற்றத்திற்குத் தயாராகுங்கள். மாறுங்கள்.

இச்சையடக்கப் பயிற்சி

 நோன்பு வைத்துக் கொண்டு யாரும் உணவருந்துவதில்லை. பசியடக்கப் பயிற்சியில் நாம் வெற்றிபெற்றுவிடுகிறோம். ஆனால் நோன்பு பசியடக்கப் பயிற்சி மட்டும் அல்ல. இச்சையடக்கப் பயிற்சி நோன்பின் பிரதான அம்சம். நாவடக்கம் மிக முக்கியம். அலைபாயும் எண்ணங்களுக்கான நங்கூரம் ரமளான் நோன்பு. தீயன பார்த்தல், கேட்டல், எண்ணுதல் என பாவங்களின் தாக்குதலிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இறைவன் அருளிய கேடயம் இந்த ரமளான்.

மன இச்சைக்கு நாம் அடிபணியத் தொடங்கினால் அதனை வழிபடத் தொடங்கிவிடும் அபாயம் இருக்கிறது. நாம் இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் மன இச்சையைக் கடவுளாக்கிக் கொள்ளும் பேரபாயத்தில் சிக்கிக் கொள்கின்றோம்.

பசித்திருக்கும் போது உணவுக்கும் நீருக்கும் ஏங்கும் வயிற்றைக் கட்டுப்படுத்துவதுபோல் மனதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ரமளானைப் போன்ற சிறந்த பயிற்சிக்களம் வேறெதுவும் இல்லை. பட்டினி மாதமாக மட்டும் சுருக்கிவிடாமல் இன்னும் விரிவாக ரமளானை நாம் அணுக வேண்டும்.

ஆன்மிகப் பெருஞ்சுவை

இயல்பாகவே ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு ஆன்மிகவாதிதான். நாளுக்கு ஐந்துவேளை இறைவனிடம் சரணடைகின்ற அழகிய ஆன்மிகப் பயிற்சியை இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்ட அடியானுக்கு வழங்குகிறது. இந்தப் பயிற்சி பள்ளிவாசலுடன் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கையே வணக்கம் என்ற பெருங்கோட்பாட்டை உள்ளடக்கியிருக்கிறது. அத்தகைய ஆன்மிகத் தேடலின் உயர்வான காலம்தான் ரமளான் மாதம்.

பசித்திருப்பது மட்டுமின்றி, திருமறைக் குர்ஆனுடனான நெருக்கம், உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல், இரவு விழித்திருந்து வணங்குதல் என்ற ஆன்மிகத் தேட்டத்தை இன்னும் ஆழமாக ரமளான் விதைக்கிறது. அதனை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒருமாத காலம் முழுமையாக இறைவனிடம் உங்களை ஒப்படைத்து விடுகின்ற பெரும் தவம் வேண்டும். வழக்கமான ஓட்டங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டோ, குறைத்துக் கொண்டோ இந்தப் பயிற்சிக் களத்திற்குள் நுழைந்துவிட வேண்டும். குறைந்தபட்சம் ரமளானில் இறுதிப் பத்துநாள்கள் இஃதிகாஃப் எனும் ஆன்மிகத் தேடலில் நீங்கள் ஈடுபட்டுப் பாருங்கள். ஆன்மிகத்தின் பெருஞ்சு வையை ருசிப்பீர்கள். உங்களை நீங்களே கண்டு கொள்வீர்கள்.

இதயப் பூட்டைத் திறக்கும் தருணம்

மனித குலத்திற்கு இறைவன் வழங்கிய மாபெரும் அருட்கொடை திருக்குர்ஆன். இறைவாக்கெனும் பெருங்கடலின் கரையில் நின்று கை நனைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த அறிவுக் கடலில் மூழ்கிக் குளிக்கும்போதுதான் முத்தெடுக்க முடியும். திருக்குர்ஆன் மாபெரும் அறிவுக் களஞ்சியம். ஒப்பற்ற சிந்தனைப் பெட்டகம். திருமறைக் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதி இன்புறலாம். இனிமையாக ஓதக் கேட்டு உயிர் சிலிர்க்கலாம். உச்சரிப்புப் பழகி அழகூட்டலாம். தமிழுணர்ந்து மெய் அறியலாம்.

முடிந்தால் திருமறைக் குர்ஆனை ஆய்வு செய்யுங்கள். திருமறை விரிவுரையை வாசியுங்கள். பல விரிவுரைகளை ஒப்பாய்வு செய்து பாருங்கள். இந்தக் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்காதவாறு இதயத்தில் பூட்டுகளை மாட்டியிருந்தால் அந்த இதயப் பூட்டைத் திறக்க வேண்டிய அருமையான தருணம்தான் ரமளான்.

அழைப்பியல் காலம்

நாம் இந்த இறைமார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமா அல்லது இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? எவ்வித முயற்சியுமில்லாமல் தானாக நம் இதயத்தில் வந்துவிழுந்த மாபெரும் பொக்கிஷம் இஸ்லாம். இந்த நறுமணத்தை, ஓரிறையின் உன்னதக் கோட்பாட்டை, உலகை உய்விக்க வந்த பெரும் தத்துவத்தை உலக மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டியது முஸ்லிமான ஆண் பெண் அனைவரின் மீதும் கடமை.

ரமளான் மாதம் அழைப்பியலுக்கான காலமும் கூட. ரமளான் நோன்பு திறப்பு நிகழ்வு, பெருநாள் சந்திப்பு நிகழ்வுகலெல்லாம் சமய நல்லிணக்க நிகழ்வுகள். உரையாடலுக்கான வாய்ப்புகள் அந்த நிகழ்வுகளில் கிடைப்பதில்லை. தனிப்பட்ட நம் நட்பு வட்டத்திலுள்ள சகோதரச் சமுதாயச் சொந்தங்களை வீட்டிற்கு அழைத்து நோன்பு துறப்பு நிகழ்வுகளை நடத்தலாம். முழு இரவு ஆன்மிகச் சங்கமம் நிகழ்வை இதர மத அன்பர்களை அழைத்து நிகழ்த்தலாம். அன்பைப் பெருக்குவதற்கும், அறிதலுக்கும் புரிதலுக்குமான காலமாக இந்த ரமளானைப் பயன்படுத்த வேண்டும்.

இவை தவிரவும் பாவமன்னிப்பு, வாரி வழங்குதல் என்ற வழக்கமான திட்டப் பட்டியல் உங்களிடம் இருக்கலாம். பெரும் பெரும் திட்டங்கள் தீட்டி சோர்வுறுவதைவிட சின்னச் சின்ன இலக்குகளைத் தீர்மானித்து அடைந்துவிடலாம். எதுவாயினும் இந்த ரமளானை என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டமும், தெளிவும் நம்மிடம் வேண்டும். இல்லையெனில் நம் நோன்பின் ஆண்டுக்கணக்கில் ஓராண்டு கூடுதலாய் இருக்கும். வேறென்ன?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்