ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஈகைத் திருநாளாம் ஈதுல் ஃபித்ர் பெருநாளைக் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் உங்களுடன் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
ரமளான் நோன்பின் நோக்கம் இறையச்சம், நன்றி செலுத்துதல், நேர்வழி அடைதல். இந்த மகத்தான மூன்று நோக்கங்களையும் திருமறைக் குர்ஆன் தெளிவுபட விளக்குகிறது. ‘நோன்பின் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர்களாய்த் திகழக்கூடும்’ (2:283), ‘அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக நீங்கள் இறைவனுடைய மேன்மையைப் போற்றி நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே (இந்த வழி) அருளப்பட்டுள்ளது’ (2:185), ‘என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.’ (2:186)
இறையச்சம் கொள்வதன் மூலமே நேர்வழி அடைய முடியும், நேர்வழி அடைந்ததற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். இந்த ரமளான் நோன்பை வழமையான பழக்கங்களில் ஒன்றாகக் கடந்துவிடாமல் இந்த நேரத்தில் நாம் இந்த நோக்கங்களை முன்வைத்து ரமளான் சிந்தனையைப் பெற வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயச் சொந்தங்களே..!
நாம் இந்த நோன்பை வரவேற்று மகிழ்ந்தோம். கண்ணியப்படுத்தினோம். புனிதச் செயல்களின் மூலம் இந்த நோன்பை உயிர்ப்பித்தோம். இந்த ரமளான் நம்மிடம் இறை நெருக்கத்தை ஏற்படுத்த மட்டுமே வரவில்லை. இறையச்சத்தை நம்மிடம் விதைத்துச் சென்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏன் இத்தகைய தொடர் பயிற்சியை இறைவன் நமக்கு வழங்குகின்றான் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆய்வுப் பூர்வமாக நாம் இந்த ரமளானை அணுக வேண்டும். இறையச்சத்தை நம்முள் வளர்ப்பது மட்டுமல்ல. இறையச்சமுள்ள ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும். மனித குலத்தை இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, அஞ்சி வாழ்பவர்களாக மாற்றியமைக்க முழு மூச்சுடன் பணிபுரிய வேண்டும்.
இந்த மாதம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம். திருக்குர்ஆனின் செய்தி என்ன? இந்தக் குர்ஆன் எத்தகைய மாற்றத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
திருக்குர்ஆன் கட்டமைக்க விரும்பும் சமுதாயத்தைக் கட்டமைப்பதுதான் நாம் செலுத்தும் நன்றி. எதைப் பெற்றோமோ அதைக் கொண்டுதான் நன்றி செலுத்த வேண்டும். இறைவன் நமக்கு நேர்வழியை வழங்கியிருக்கின்றான். இந்த நேர்வழியின் பெருமதியை உலகிற்கு எடுத்தியம்புவதன் மூலமும், இந்த நேர்வழியின் பால் உலக மக்களை அழைத்து வழிநடத்துவதும்தான் திருக்குர்ஆன் நம்மிடம் எதிர்பார்க்கிறது.
ஐந்து வசனங்கள் மட்டுமே ரமளான் நோன்பு தொடர்பாக அருளப்பட்டிருக்கின்றது. ஏனைய வசனங்கள் இந்த நோன்பும், இந்தக் குர்ஆனும், இதனை வழங்கிய இறைவனும், வழிகாட்டிய இறைத்தூதரும் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதையே பேசுகிறது. எனவே ரமளானின் இந்த ஒரு மாதப் பயிற்சியை இவ்வளவு சிரமேற்கொண்டு மேற்கொள்கின்றோம் என்றால், அதன் மாற்றத் தைப் பிரதிபலிக்க வேண்டும். அதுதான் இந்த ஈகைத் திருநாள் தருகின்ற செய்தியாகும்.
சகோதரச் சமுதாயச் சொந்தங்களே..!
மனிதன் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சிப் பூர்வமாக அணுகுகின்றான். அந்த ஆய்வின் அடிப்படையில் மனித குலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய எத்தனையோ கண்டுபிடிப்பு
களை நிகழ்த்திக் காட்டியுள்ளான். மருத்துவ உலகில், தொழில் உலகில் எத்தனையோ புரட்சிகரமான ஆய்வுகளும் கண்டெடுப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஆய்வும், சிந்தனையும் மனிதனை அந்தப் படைப்பின் நோக்கத்தை அடைவதன் பக்கம் அவனை இட்டுச் செல்கிறது.
எல்லாவற்றையும் ஆய்ந்தறிந்து சிந்திக்கும் மனிதன் தன்னையும், தன்னைப் படைத்த இறைவனையும் குறித்து சிந்திக்கத் தவறிவிட்டான். இறைவனைக் குறித்த சிந்தனைதான் மனிதப் படைப்பின் நோக்கத்தையும், பயனையும் நமக்கு விளக்குகின்றன. இறைவன் எதற்காக மனிதனைப் படைத்தான், இந்த உலகத்தைப் படைத்தான், இறைவன் மனிதனிடம் வேண்டுவது என்ன? இவற்றை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளான்.
இஸ்லாம் இறைவனைக் குறித்த சிந்தனையைத்தான் பிரதானமாகச் சொல்கிறது. அங்கிருந்துதான் மனித அறிவு விரிவாக்க மடைகிறது. படைத்த இறைவனையும், படைப்பின் நோக்கத்தையும் அறியும் போதுதான் வாழ்வின் அர்த்தம் அவனுக்குப் புரியத் தொடங்குகிறது. இறைவனைக் குறித்த சிந்தனைக்கும், மனிதன் முன்வைக்கும் வினாக்களுக்கும் திருக்குர்ஆன் மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கு ஒரு பேரருளாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனின் பக்கம் உங்களின் ஆய்வுப் பூர்வமான சிந்தனையைத் திருப்ப வேண்டும். இறைவனுடைய அழைப்பைக் குறித்து சிந்திக்கும் போதுதான் நேர்வழியைக் கண்டடைய முடியும். இந்த மகத்தான வாழ்வியல் பேருண்மையைத்தான் இந்த நோன்புப் பெருநாள் பறைசாற்றுகிறது.
இயக்க இதயங்களே..!
இந்தக் களத்தின் நாயகர்கள் நீங்கள்தான். இஸ்லாம் எத்தகைய பயிற்சியை வழங்குகிறதோ, எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்க விரும்புகின்றதோ அத்தகைய முன்மாதிரி நாயகர்களாக நீங்கள் திகழ வேண்டும். இந்த ரமளான் மாதம் வழங்கிச் சென்ற பயிற்சியின் செயல் வீரர்களாக நீங்கள் மாற வேண்டும். இந்த மாற்றத்தை நீங்கள் தொடங்கி வைக்க வேண்டும்.
உங்களிடமிருந்து தொடங்கும் இந்த மாற்றம்தான் சமுதாயத்தில் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்புதான் மனித குலத்தின் மீது எதிரொலிக்கும். ரமளான் சாதாரண பயிற்சிகளை வழங்கவில்லை. வாழ்வின் ஒட்டுமொத்த நோக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை இந்தப் பயிற்சிக் களம் வழங்கியிருக்கின்றது. ரமளான் ஏற்படுத்த விரும்பும் மாற்றத்தின் பிரதிகளாக நீங்கள் இருப்பதுதான் இந்தப் பெருநாளில் நீங்கள் பெற்றுக் கொள்கின்ற செய்தியாகும்.
இறுதியாக..
ஒருமாத கால ரமளான் நோன்பை நிறைவு செய்யக்கூடிய இந்த நேரத்தில் இந்தியா மிகப் பெரும் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றது. இந்த மண்ணை அமைதி நிறைந்ததாக, நீதிமிக்கதாக, எல்லாரும் வாழ்த் தகுந்ததாக நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமெனில், நீதிமிக்க ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட, நாட்டின் உண்மையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்ற நேர்மையான ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது.
கடந்த பத்தாண்டுகளில் இந்த நாடு பெரும் பின்னடைவையும், பேரிழப்பையும் சந்தித்துள்ளது. மோசமான, தீய ஆட்சியாளர்களிடம் நாடு சிக்கினால் ஒரு நாட்டின் நிலை என்னவாகும் என்பதற்கு இன்றைய இந்தியா உதாரணமாக இருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும். தீய ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும். நல்லவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பெரும் பொறுப்பாகும்.
உலகம் இன்றைக்கு நிம்மதி இழந்து தவிக்கிறது. போர்க்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஃபலஸ்தீன மண்ணை இஸ்ரேல் கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றது. பச்சிளம் குழந்தைகள் நம் வாழும் காலத்தில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகின்றார்கள். இந்த ரமளான் நாள்களில் கூட அவர்கள் நிம்மதியாக நோன்பு நோற்க இயலாத அளவிற்கு இஸ்ரேல் அட்டூழியம் செய்தது. உலக நாடுகளின் கோரிக்கையை மறுத்து பிடிவாதமாக இந்த இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் சர்வதேச நீதிமன்றத்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். போர்க்குரல் ஓய வேண்டும். ஃபலஸ்தீனர்கள் இழந்த வாழ்வை மீளப் பெற வேண்டும். சுதந்திர ஃபலஸ்தீன் மலர வேண்டும்.
உலகமெங்கும் ஒலிக்கும் ஈகைத் திருநாளின் வாழ்த்துகள் ஃபலஸ்தீனக் குழந்தைகளின் புன்னகைகளிலிருந்து ஒளிர வேண்டும். ரமளானின் உன்னத நோக்கங்களை அடைவோம். இறையச்சமுள்ள நல்வாழ்வை நம்மிடமிருந்து தொடங்குவோம்.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு, புதுச்சேரி