ஒரு மாத காலம் நோன்பிருந்து பெருநாளைக் கொண்டாட நாம் தயாராகி விட்டோம்.
ரமளான் பசித்திருக்கும் மாதம் மட்டுமல்ல பிறர் பசியகற்றும் மாதமும் ஆகும். ஈகைப் பெருநாள் ஈகை உணர்வை உணர்த்தும் நாளாகும்.
ஈகைப் பண்பு ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்க வேண்டிய அவசியமான பண்பு. அதிலும் குறிப்பாக பசி பட்டினி அதிகரித்திருக்கின்ற இந்தக் காலத்தில் பசித்தவருக்கு உணவு அளித்து மகிழ்கின்ற உதவும் மனம் அனைவருக்கும்
வாய்க்க வேண்டும்.
பசி எனும் கொடிய நோய் இன்றும் நாம் வாழக்கூடிய காலத்தில் வேரூன்றி இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் 67 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் அவதியுறுகின்றனர்.
எல்லா நோய்க்கும் நவீன மருத்துவ யுகத்தால் மருந்தைக் கண்டறிய முடிகிறது. பட்டினிச் சாவுகளுக்கு மருந்து என்ன? பிறர் பசித்திருக்கக் கூடாது நம்மைப் போல் அவர்களும் உணவு உண்ண வேண்டும் என்கின்ற ஈகைக் குணம் தான் மாமருந்து. இத்தகைய ஈகைக் குணத்தைத்தான் இஸ்லாம் ஈகைப் பெருநாள் மூலம் நமக்கு உணர்த்துகிறது.
ரமளானில் நோன்பிருந்து உணவையும் தண்ணீரையும் தவிர்த்து இருப்பதன் மூலம் பசியையும் தாகத்தையும் அனுபவிக்கும் மனிதர்களின் உணர்வுகளை ஒவ்வொரு நோன்பாளியும் அறிந்து கொள்கின்றனர். இறைவன் மீதான அச்சமும் அவன் மீதான நேசமும் மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும் என்பதற்கான பயிற்சிக் களம்தான் நோன்பு.
சக மனிதனுக்கு உதவும் குணத் தையும் இம்மாதம் வளர்க்கிறது. தனது செல்வத்தில் ஜகாத் எனும் 2.5 விழுக்காடு தேவையுடையோருக்கு வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்று. இந்த ஜகாத்தை முஸ்லிம்கள் பெரும்பாலும் ரமளான் காலத்திலேயே வழங்குகின்றனர். அனைத்து மக்களும் பெருநாளை மகிழ்ச்சி பொங்க, வயிறாறக் கொண்டாட வேண்டும் என்பதற்கு ஓர் அழகிய ஏற்பாட்டையும் இஸ்லாம் செய்து கொடுக்கிறது. பெருநாள் அன்று உணவருந்தும் வசதி கொண்ட ஒவ்வொருவரும் அதே வகையிலான உணவை தேவையுடையவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆன்மிக வழிபாடுகளை மட்டுமின்றி சமூக நலனிலும், சமூக மாற்றத்திலும் அக்கறை கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்பதற்கு இதுவொரு சான்று. பெருநாளில் மட்டுமல்ல, அனைத்து நாள்களிலும் அனைவரின் நலம் நாட இஸ்லாம் ஊக்குவிக்கிறது.
மித மிஞ்சிய உணவு விரயம் ஒரு பக்கம், ஒரு வேளை உணவுக்கும் திண்டாட வேண்டிய வறுமை நிலை மறுபக்கம் என இரு சாரார் சமூகத்தில் எப்போதுமே உள்ளனர். வசதி படைத்தோர் விரயம் செய்யும் உணவுப் பொருட்களை உணவுத் தேவையுள்ள பசித்தோருக்கு வழங்கினாலே பாதி பட்டினிச் சாவுகள் குறைந்துவிடும்.விரயம் செய்பவர்களை சைத்தானின் சகோதரர்கள் எனச் சாடுகிறது திருமறை.
தான் உண்பதையே பிறரையும் உண்ணச் செய்ய வேண்டும். தான் உடுத்துவதையே பிறரையும் உடுத்தச் செய்ய வேண்டும். இரப்போர்க்கு தன்னிடம் உள்ளதில் நல்லவற்றையே ஈதல் வேண்டும் எனப் பகர்ந்தார்கள் நபிகளார்(ஸல்) அவர்கள்.
ஃபித்ரா என்ற நன்கொடையை கட்டாயமாக பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து விட வேண்டும். அன்று காலையிலேயே ஏழைகளுக்கு வழங்குவதன் நோக்கம் பெருநாள் தினத்தன்று எந்த ஒரு மனிதனும் பசித்திருக்கக் கூடாது என்பது தான்.
ரமளான் மாதம் முழுவதும் பகல் பொழுதில் நோன்பிருந்து பசித்திருக்கும் பணக்காரனும், வறுமையால் நெடுநாள்கள் பசியோடு இருக்கும் ஏழையும், நோன்புப் பெருநாளில் உண்டு மகிழ்கின்றனர். கொடுப்பவனும் மகிழ்கிறான்; பெறுபவனும் மகிழ்கிறான். அன்று, பசி என்பது யாரிடத்திலும் காணப்படுவதில்லை.
ஏழைகளின் பசித் துயரை, பணக்காரர் களும் உணர்வதற்கு ரமளான் நோன்பு ஒரு காரணமாகிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு இரக்கம் உண்டாகிறது. மனிதாபிமானம் வளர்கின்றது. இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, ரமளான் முழுவதும் நோன்பிருந்து, வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஜகாத், சதகா போன்ற தான, தர்மங்களையும் செய்து, இறைவனின் அன்பிற்குப் பாத்திரமான மனிதன், இதற்குரிய கூலியை, பயனை இறைவனிடமிருந்து பெறுகின்ற இந்நாள் ஒரு வெற்றித் திருநாள்.
சமூகத்தில் வறுமை ஒழிய இஸ்லாம் வகுத்த மகத்தான திட்டம்தான் ஜகாத். அனைவரும் முறையாக ஜகாத்தைக் கணக்கிட்டு வறியவர்களைக் கண்டறிந்து உதவினாலே சமூகத்தில் கணிச மாக வறுமை குறைந்துவிடும்.
மக்கள் ஜகாத் எனும் ஏழை வரியை கொடுக்கத் தவறுகிற போது, அதனால் ஏற்படுகிற துன்பம், தனி மனிதர்களை மட்டும் பாதிப்பதாக இருக்காது. மாறாக ஒட்டுமொத்த சமூகமே பாதிப்படைகிற அளவுக்கு வறுமை, பசி, பட்டினி இப்போது இருப்பதை விட மோசமானதாக மாறி விடும். திருட்டு, வழிப்பறி, விபச்சாரம் போன்ற சமூகத் தீமைகள் மலிந்து விடும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களிடம் இஸ்லாத்தில் சிறந்த செயல் எதுவென தோழர்கள் கேட்டபொழுது ‘அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் முகமன் உரைப்பதும் உணவளிப்பதும்’ என்றார்கள்.
பசித்திருக்கின்ற மனிதனுக்கு உணவளிப்பதை விடச் சிறந்த தர்மம் என்ன இருக்க முடியும்? சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சிறிது சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகைக் குணத்தை வலியுறுத்தும் இறைவனின் மார்க்கம்.
‘அபூதரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரைக் கவனிப்பீராக..!" என்று நபி(ஸல்) அவர்கள் தன் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல்: முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறைவிசுவாசியாக மாட்டார்.’
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் பிறர் துன்பம் துடைக்க தர்மம் செய்வதைக் கடமையெனக் கருதி யாசிப்பவர்கள் கேட்கும் பொழுதெல்லாம் தமக்கு இல்லை என்றாலும் கூட வறியவர்களுக்கு உதவிய வரலாற்று நிகழ்வுகள் பல உண்டு.
குறிப்பாக ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வீசும் காற்றைப் போல இறைவழியில் தர்மம் செய்வார்கள்.
ரமளான் மாதத்திலும் ஈகைப் பெருநாள் தினத்திலும் வரியவர்களுக்கு ஈதுல் ஃபித்ர் எனும் தர்மம் கொடுத்தல், ஜகாத்தை கணக்கிட்டு வழங்குதல், தான தர்மம் செய்தல், யாசிப்பவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல், தேவையுள்ளவர்களுக்கு உடை வழங்குதல் போன்ற வறுமை ஒழிய மகத்தான திட்டங்களின் மூலம் ஈகைப் பெருநாள் அனைத்து மக்களிடத்திலும் மகிழ்ச்சித் திருநாளாக மலர்கிறது.