மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அறிவுத்தளத்தில் இளைஞர்களைத் தயார்படுத்துகிறோம்!
- சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் கமாலுத்தீன் நேர்காணல், ஏப்ரல் 16-30, 2024


 


நீங்கள் கல்லூரிப் பேராசிரியர், பள்ளித் தாளாளர் என 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். கடந்த ஆண்டிலிருந்து சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தலைவராக சமூகப் பணியிலும் காலடி எடுத்து வைத்து இருக்கின்றீர்கள். இதனை எப்படி உணர்கிறீர்கள்?

நான் கல்விப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே மாணவ இளைஞர் சமூகத்தில் பணியாற்றக்கூடிய மிகப்பெரும் களமான இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(குஐˆ) எனக்குக் கிடைத் தது. இறையருளால் சாலிடாரிட்டி அமைப்பின் இந்த ஆண்டிற்கான தமிழ் மாநிலத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் புரட்சியை, மாற்றத்தை, அவர்களின் மேம்பாடு தொடர்பான பல விஷயங்களை நாங்கள் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறோம். அதை நோக்கிய பயணம் தான் வரக்கூடிய காலங்களில் இருக்கும்.

கட்டுக்கடங்காத, துடிதுடிப்பான இளைஞர்களை ஓர் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து இளைஞர் அமைப்பாகச் செயல்படுவதில் உங்களுக்கு இருக்கும் சிக்கல் என்ன?

இன்றைய இளைஞர்கள், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களை ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வருவதே மிகப் பெரும் சவால்தான். இருந்த போதிலும் உலக வரலாற்றில் ஏற்பட்ட அத்தனை மாற்றங்களையும் இளைஞர்கள் ஓர் இயக்கமாக, அமைப்பாகச் செயல்பட்டுத்தான் சாதிக்க முடிந்தது. அவர்களை ஓர் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் சாலிடாரிட்டி விரும்புகிறது.

சாலிடாரிட்டி அமைப்பின் கொள்கை, இலக்கு குறித்துச் சொல்லுங்களேன்!

‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே! முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்ற இஸ்லாத்தின் கொள்கை எதுவோ அதுதான் சாலிடாரிட்டியின் கொள்கையாக இருக்கிறது. சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதற்காக இன்றைய இளைஞர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்வது தான் சாலிடாரிட்டியின் நோக்கமாக இருக்கின்றது.

சமுதாயத்தை மறுகட்டமைப்பு செய்வது எனும் மிகப்பெரும் கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனைச் சாலிடாரிட்டி எப்படிச் செய்து காட்ட உள்ளது?

இளைஞர்களை இந்த இயக்கத்திற்கு அதிகமாகச் சேர்ப்பதன் மூலமாகத்தான் இப்பணியைச் செய்ய முடியும். இளைஞர்களின் பலத்தை, அவர்களின் திறனைக் கொண்டும், அவர்களின் ஆளுமைகளைக் கொண்டும் தான் இந்த இலக்கை எங்களால் எட்டிப் பிடிக்க முடியும்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரும் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதல், புரிதலை வழங்கி இந்த அமைப்பிற்குள் அவர்களை அழைக்கின்றோம்.

நமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும் இருக்கக்கூடிய சமூகச் சூழலில் சாலிடாரிட்டி தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் என்னென்ன?

பொதுவாகவே முஸ்லிம் சமுதாயமாகட்டும் அல்லது பொதுச் சமூகமாக இருக்கட்டும் இந்தச் சமூகத்தில் அதிகமான இயக்கங்கள், அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இத்தனை அமைப்புகள், இயக்கங்கள் இருக்கும்பொழுது சாலிடாரிட்டி எனும் இன்னொரு இயக்கம் எதற்கு? அதற்கு ஏன் நாங்கள் வரவேண்டும்? என்கிற மிகப்பெரும் கேள்வியை முன்வைத்து அமைப்புகளில் சேர்ந்து களப்பணியாற்ற மறுப்பதை இன்றைய பிரச்னையாகப் பார்க்கின்றோம்.
ஆனால் 50% மேல் இளைஞர் பட்டாளம் இருக்கும் நம் நாட்டில் அந்த மொத்த கோடிக் கணக்கான இளைஞர்களுடனும் இணைந்து, இணைத்துப் பணியாற்ற தற்போது இருக்கும் ஒட்டுமொத்த இயக்கங்களின் எண்ணிக்கை
யும் இணைந்தாலும் போதாது! இன்னும் பல இயக்கங்கள் வரவேண்டிய சூழல் தான் இருந்து வருகிறது. அப்போதுதான் இத்தனை நபர்களிடமும் நம்மால் ஒரு மறுமலர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

பிற இளைஞர் அமைப்புகளில் இருந்து சாலிடாரிட்டி எப்படி வேறுபடுகிறது?

பிற அமைப்புகளுடன் நாங்கள் அறிவுத் தளத்தில், விவேகத்தளத்தில் வேறுபடுகின் றோம். ‘மற்றவர்கள் அறிவுத் தளத்தில் வேலை செய்யவில்லையா?’ என்று நீங்கள் கேட்கலாம். இளைஞர்களை உணர்ச்சி வசப்படுத்தி, அவர்களின் சிந்தனைகளைத் தவறான திசையில் கிளர்ச்சியூட்டி வேலை செய்யக்கூடிய நிறைய இயக்கங்கள், அமைப்புகள் இருக்கின்றன. அதில் சில அமைப்புகள் சாதித்தும் இருக்கின்றன! நாங்கள் விரும்புவது அறிவு சார்ந்த சிந்தனை, கொள்கை, சித்தாந்த ரீதியாக ஒரு மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவேகத்தின் மூலம் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் உங்களது தலைமையின் கீழ் சாலிடாரிட்டி அமைப்பிலும் சமூகத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விசயங்களாக எதனைக் கருதுகிறீர்கள்?

இளைஞர்கள் சமூக மேம்பாட்டிற்காகக் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டங்களை நாங்கள் தீட்டி இருக்கின்றோம். அவர்களுக்கான தனிப்பட்ட பண்பாடு இருக்கின்றது. அவற்றில் நேர்மறையாக உள்ளவற்றை உயர்த்தவும், எதிர்மறைப் பண்புகளைக் களையவும் வேண்டும். இந்த அடிப்படையில் இளைஞர்களிடம் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

எண்ணிலடங்கா பிரச்னைகள் நாளுக்கு நாள் இளைஞர் சமூகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது குறித்த எந்த வித விழிப்பு உணர்வும் இன்றைய இளைஞர் பட்டாளத்திடம் இல்லை. தற்போது இளைஞர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றை அவர்களுக்கு உணர்த்தி அவர்களைக் கொண்டே அதைக் களைய வைக்க வேண்டி உள்ளது. சமூக, அரசியல் ரீதியாக அவர்களைக் களம் காண வைக்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களை சாலிடாரிட்டி இளைஞர் சமூகத்தில் செய்ய வேண்டும் என விரும்புகிறது. அதையும் இளைஞர்களை வைத்தே செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறது. அதற்காக இளைஞர்களை ஆயத்தப்படுத்தக்கூடிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

தற்போதைய இளைஞர்களிடம் இருக்கக்கூடிய பாசிட்டிவ், நெகட்டிவ்களாக நீங்கள் பார்ப்பது என்ன?

இன்றைய இளைஞர்களிடம் பாசிட்டிவ்களும் அதிகம் இருக்கின்றன. அதற்குச் சற்றும் சளைக்காமல் நெகட்டிவ்களும் அதிகம் இருக்கின்றன. அவர்கள் ஆற்றல் வாய்ந்த, திறன்மிக்கவர்களாக இருக்கின்றனர். அதிகம் தகவல்களைத் (Informative) தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் சமகாலப் பிரச்னைகள் சார்ந்தும், தகவல்கள் தொழில்நுட்பங்கள் சார்ந்தும் கேட்கும் பொழுது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய தகவல் களஞ்சியமாக இருக்கின்றார்கள்.

அநீதிக்கு எதிரான உரிமை பறிக்கப்படுகின்றது எனில் அதற்குக் குரல் கொடுக்கக்கூடிய, போராடக்கூடிய குணம் அவர்களிடம் இருக்கின்றது. பெரும்பான்மையான இளைஞர்களுக்குச் சமூக சேவை செய்வதற்கான மனப்பான்மை அதிகம் இருக்கின்றது. சுனாமியாக இருக்கட்டும், மழை வெள்ளமாக இருக்கட்டும் அனைத்து பொதுச் சேவைகளிலும் களத்தில் நின்று பணியாற்றுபவர்கள் அதிகமாக இளைஞர்களாகத்தான் இருக்கின்றனர்.

எதிர்மறைப் பண்புகள் என்றால் அவர்கள் குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கின்றனர். குறிக்கோளற்ற சமூகம் எங்கு சென்று சேரும்? ஏதோ ஒரு விஷயத்தில் அவர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். போதை, ஆபாசம் அல்லது காதல் வயப்படுதல், சினிமா நடிகர்களின் பின் செல்லும் மோகம், பொழுதுபோக்கு என்று ஏதாவது ஒரு விதத்தில் அடிமைப்படக்கூடிய ஒரு நிலை அவர்களிடம் இருக்கின்றது. இதனால் அவர்களின் குறிக்கோள்கள் மாறுகின்றன. நான் யார், எனது கடமை என்ன, எனது பொறுப்பு என்ன என்பதை இவ்வாறு அடிமைப்படுவதனால் மறந்து விடுகின்றனர். அவர்களிடம் உள்ள நேர்மறைப் பண்புகளை உயர்த்துவதும் எதிர்மறைப் பண்புகளை அவர்களிடம் களை எடுப்பதும் தான்சாலிடாரிட்டின் பணியாக இருக்கின்றது.

கடந்த ஒன்றரை ஆண்டு கால சாலிடாரிட்டியின் சாதனைகள் என்ன?

இதுவரை கிட்டத்தட்ட 18 மாவட்டங்களில் 27 கிளைகளைத் தொடங்கி இருக்கிறோம். சாலிடாரிட்டியின் நோக்கம், குறிக்கோளுக்காக பணியாற்றக்கூடிய இளைஞர்கள் பலரை உருவாக்கி இருக்கின்றோம். சமூக சேவை ரீதியாகப் பல பணிகளைச் செய்து வருகிறோம்.

தமிழகத்தில் 75% மேற்பட்ட மாவட்டங்களில் ‘ஒற்றுமையை நோக்கி’ எனும் கருப் பொருளில் வாகனப் பரப்புரை நடத்தினோம். அதில் கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர்கள் சமூக ஒற்றுமைக்காக மிகப்பெரிய பரப்புரைப் பயணத்தைச் செய்து இருக்கின்றோம்.

இஸ்லாமோ ஃபோபியாவிற்கு எதிராக பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி வருகிறோம்.

அண்மையில் மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாளே நாங்கள் களத்தில் இறங்கினோம். கயத்தாறு, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஏரல் ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வேலை செய்தோம். இரண்டு வித வேலைகளில் அதிக கவனம் செலுத்தினோம். ஒன்று நிவாரணப் பணி, இரண்டாவது மறுவாழ்வுப் பணிகள். கிட்டத் தட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் பயனடைந்தார்கள். முதலாவதாக மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருந்த உணவுகளைத் தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக வழங்கினோம்.

இரண்டாவது கட்டமாகச் சமைக்கும் அளவிற்கு அவர்களின் வீடுகள் சீராகிய போது அதற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினோம். மூன்றாவது கட்டமாக அம்மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளில் ஈடுபட்டோம். அவர்களின் தொழில், வியாபாரம் நடத்தும் கடைகளிலிருந்த பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. இந்த அடிப்படையில் அவர்களின் தொழில் தேவைகளை அறிந்து, அதற்கான புள்ளி விவரங்களைச் சேகரித்து உதவி செய்தோம். பெரிய கிரைண்டர், மளிகைக் கடைகளுக்கு ஃபிரிட்ஜ், தேநீர்க்கடைகளுக்குத் தேவையான பொருள்கள், பலருக்கு இஸ்திரிப் பெட்டிகள், தையல் இயந்திரங்கள், முடி வெட்டும் கடைகளுக்கான உபகரணங்கள், தொலைப்பேசி கடைக்குத் தேவையான உபகரணங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளோம். ஒரு ஹோமியாபதி கிளினிக் மொத்தமாக அழிந்து விட்டது அந்த கிளினிக்குகளுக்குத் தேவையான பொருள்களையும் வழங்கினோம்.

பள்ளி மாணவர்களுக்கான பைகள், புத்தகங்கள், நோட்டுகள், ஸ்டேஷனரி கிட் போன்றவற்றை வழங்கினோம். மேலும் பல குடும்பங்களுக்குச் சமையலறைக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வழங்கியிருக்கிறோம். ஒட்டு மொத்தமாக ஐந்து டன் எடையுள்ள ரூ. 25 முதல் 30 இலட்சம் மதிக்கத்தக்க பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினோம்.

வீடுகளை இழந்த மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தோம். அரசிடம் விசாரிக்கும் போது அவர்களுக்கு வீடு கட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்குத் தற்காலிகமாக ரூபிங் சீட்டுகளை வைத்து வீடு கட்டித் தரும் பணிகளையும் செய்து வருகின்றோம்.

உங்களது தாய் அமைப்பான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கும் சாலிடாரிட்டிக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கின்றது?

இன்றைய இளைஞர்களின் சிந்தனைக்கு ஏற்றாற் போல இயங்கக்கூடிய ஒரு தளம் தேவைப்படுகிறது என்பதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உணர்ந்ததால்தான் கடந்த ஆண்டு சாலிடாரிட்டி எனும் இந்த
இளைஞர் அமைப்பை உருவாக்கியது. நாங்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கீழ் இயங்கக்கூடிய ஓர் இளைஞர் அமைப்பாக இருக்கின்றோம்.

தந்தை மகனுக்கு இடையிலான உறவு தான் ஜமாஅத்திற்கும் சாலிடாரிட்டிக்கும் இடையில் இருக்கக்கூடிய உறவு. ஜமாஅத்திற்குக் கீழ் இயங்குவதைத்தான் எங்களுக்கு உள்ள மிகப்பெரும் சுதந்திரமாகப் பார்க்கிறேன். இதுவரை எங்களின் முடிவுகள், செயல்பாடுகள், செயல்திட்டங்கள் போன்றவற்றிற்கு ஜமாஅத் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

நமது நாடு ஒரு மிகப்பெரும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. சாலிடாரிட்டி தேர்தலை மையப்படுத்திய பணிகளை எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

சாலிடாரிட்டி நேரடியாக வாக்கு அரசியலில் ஈடுபடாது. ஆனால் இன்புளுயென்ஷியல் பாலிடிக்ஸ் என்று சொல்லக்கூடிய ஓட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய களமாக சாலிடாரிட்டி இருக்கும். 2024 தேர்தல் மிகவும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆக இருக்கின்றது. முழுமையாக 100% மக்கள் வாக்கு அளிப்பதில்லை. அதனை ஒட்டி 100 விழுக்காடு வாக்கு செலுத்துவதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பலரிடம் வாக்காளர் அடையாள அட்டையே இல்லை. இன்னும் சில இடங்களில் வேண்டுமென்றே வாக்காளர்களை வாக்காளர் பட்டியல்களிலிருந்து நீக்கியுள்ளனர். இது போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்களது பரப்புரையைச் செய்து வருகிறோம். வாக்காளர் அடையாள அட்டை பெயர் திருத்தம், புதிய நபர்களைச் சேர்த்தல் போன்றவற்றைச் செய்கிறோம்.

குறிப்பாக இளைஞர் சமூகத்தில் 2024 தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த புரிதலை வழங்க வேண்டும். குறிப்பாக ஃபாசிஸம், வகுப்புவாதம் வரக்கூடாது. அவற்றுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். தற்போது அது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்பு உணர்வு செய்கின்ற பணியைத் தொடங்கி இருக்கின்றோம். களத்தில் பல பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

எழுத்தாக்கம் : ஷே. ஹபிபுர் ரஹ்மான்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்