ஏகாதிபத்தியத் திமிரில் தம்மை எதிர்க்கும் நாடுகளே இவ்வுலகில் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டுச் செயல்படும் அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடும் வேலையைக் கச்சிதமாகவும் கவனமாகவும் செய்து வருகிறது.
ஃபலஸ்தீன், இஸ்ரேல் விவகாரத்தில் சமாதானம் செய்யப் போவதாக ஒரு பக்கம் பேசுவதும் ஆனால் சமாதானம் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகவும் அமெரிக்கா காய் நகர்த்தி வருகிறது.
உணவு இன்றி, உடை இன்றி, இயற்கை உபாதைகளை எப்படிச் சமாளிப்பது என்று சிரமப்பட்டு அன்றாடம் அல்லல்படும் பெண்கள், அதிலும் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் பெண்கள், அப்பாவிக் குழந்தைகள் பட்டினியில் சுருண்டு விழுவதும், பால் இல்லாத தாயின் மார்பை பாலுக்காக உறிஞ்சிட அதில் ரத்தம் வழிய வழிய அதைக் குடிப்பதும் பத்திரிகைகளில் செய்தியாகப் படிக்கும் போது கண்கள் குளமா
கின்றன. இதயம் இறுகிப் போய் விடுகிறது.
ஃபலஸ்தீனர்கள் திட்டமிட்டுக் கொல்லப்படுவதும் ஈவு இரக்கமின்றி வீடுகள் தகர்க்கப்படுவதும் 22க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஃபலஸ்தீனர்களுக்குச் சிகிச்சை அளிக்கின்ற காரணத்தால் ஏவுகணையால் தாக்கப்பட்டு மக்கள் கரிக்கட்டையாக அடையாளம் தெரியாமல் மடிந்து கிடப்பதும் கொடுமை! கொடுமை! இந்தக் கொடுமைகளைக் கண்டித்துத் தான் சவூதி அரேபியா, எகிப்து, கத்தார், ஜோர்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஏன் அமெரிக்காவிலே கூட அதிபர் மாளிகையில் பணிபுரிவோர் நூற்றுக்கணக்கானோர் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேலுக்கு ஆயுதம் தாங்கிய கப்பல்களை, நவீன ஆயுதங்களை, ஏவுகணைகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அதே வேளையில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிப்பதாக நாடகமும் நடத்துகிறார். பிரதமர் நெதன்யாகுவை மிரட்டுவது போல் தனி நடிப்பு. இந்த அப்பட்டமான நாடகத்தை உலகம் நம்பும் என்று அவர் நம்புகிறார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை முன்வைத்து இன்று இஸ்ரேல் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது எவ்வளவு கொடுமைகளைக் காஸாவில் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து செய்திருந்தால் இப்படிப்பட்ட தாக்குதலை ஹமாஸ் நடத்தி இருக்கும் என்று உலகைச் சிந்திக்க வைக்கிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நியாயம் இருக்குமோ என்று உலகைப் பேச வைத்துள்ளது.
1945இல் நாடற்ற நாடோடிகளாய் நாதியற்றுத் திரிந்த யூதர்களை இங்கிலாந்து ஃபலஸ்தீனின் ஒரு பகுதியில் அமர வைக்க, ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுகிறதாம்’ என்ற கிராமத்துப் பழமொழிக்கு ஏற்ப ஐ.நாவில் நெதன்யாகு ஃபலஸ்தீனமே இல்லாத ஒரு வரைபடத்தை இஸ்ரேல் நாடாகக் காண்பித்தார் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அதுதான் தற்போதைய பிரச்னையின் தொடக்கம் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒண்ட இடம் கொடுக்கப் போய் யூதர்கள் ஃபலஸ்தீனர்களை விரட்டி விட்டு அந்த இடங்களை எல்லாம் இஸ்ரேலுக்குச் சொந்தமாக்கி அங்கு யூதர்களைக் குடி அமர்த்துகிறது. ஈழத்தில் தமிழர்களை விரட்டி விட்டு ராணுவ உதவியுடன் அந்த இடங்களில் சிங்களர்களைக் குடி அமர்த்துவதைப் போன்ற அத்துமீறலை இஸ்ரேல் செய்து வருவது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறியும் உணவுப் பொட்டலங்களைப் பொறுக்கப் போய் ஃபலஸ்தீனர்கள் பலர் இறந்துபோய் உள்ளனர். ஏன் இதனை காஸாவில் அமெரிக்கா வீடுவீடாகச் சென்று கொடுக்கலாமே! அமெரிக்கா கொடுத்தால் இஸ்ரேல் தடுத்து விடுமா? பொட்டலம் எடுக்கப் போய் ஒரே நேரத்தில் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆடு, மாடுகளை விடக் கேவலமானவர்களா மனிதர்கள்? பொறுக்கித் தின்பதற்கு அவர்கள் என்ன பிச்சைக்காரர்களா? அவர்களில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் தானே.
நெஞ்சில் வஞ்சம் மட்டுமே கொண்டே ஈரம் இல்லா எதேச்சதிகாரி நெதன்யாகு. இவர் செய்வதை நியாயப்படுத்துகிறது இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அமெரிக்க அடிமை நாடுகள். ஆனால் முஸ்லிம் நாடுகள் கண்டித்து முணுமுணுக்கக் கூட ஏன் அஞ்சுகின்றன? வேகமாக மூச்சு விடக் கூட இயலாமல் நிற்பதற்குக் காரணம் என்ன? 2009இல் பிரபாகரன் அப்பாவி மக்கள் 3 இலட்சத்திற்குமேல் கொல்லப்பட்டபோதும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொன்ற போதும் பாலகன் பாலச்சந்திரன் மார்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும் தமிழ்நாட்டு மக்கள் வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்தனர். இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகு என்ன பேசி என்ன நடக்கப் போகிறது? இனியாவது ஒற்றுமையாக ஓங்கிக் குரல் எழுப்புங்கள். நிச்சயம் உங்கள் ஒற்றுமை ஃபலஸ்தீனர்களைக் காப்பாற்றும்.
ஒரு கரிபால்டியால் இத்தாலியில் இளைஞர்களைத் திரட்டி போராட முடியும் போது அதையே பின்பற்றி மாஜினியால் இத்தாலி விடுதலைக்குப் போரிட்டு வெல்ல முடிகிற போது இந்தப் போரை எதிர்க்கும்
எத்தனை நாடுகள் உள்ளன. ஏன் உங்களால் முடியாது?
ஒரு புரட்சியாளர் சேகுவேராவால் பிடல்காஸ்ட்ரோவோடு சேர்ந்து அமெரிக்க எடுபிடி எதேச்சதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்துப் போராடி அவனை விரட்டி அடித்து விட்டு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது நடந்ததா இல்லையா? அன்று கியூபா புரட்சிக்கு யார் ஆதரவு கொடுத்தது. பின்பு தான் சோவியத் யூனியன் ஆதரவு தந்தது. அது சாத்தியமாகும் போது இது சாத்தியமாகாதா?
வடகொரியா சின்ன நாடு. ஈரான் மிகப்பெரிய நாடல்ல, இவை எல்லாம் அமெரிக்காவை மிரட்டுகின்றன. அதைப்போல் மற்ற பவர்ஃபுல் நாடுகள் ஏன் அமெரிக்காவை எதிர்த்து கொதித்தெழக் கூடாது. வியட்நாம் போரின் போது பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதிக்கத்தில் இருந்து வியட்நாமை விடுவிக்க தலைமறைவாக இருந்து ஒரு கப்பலில் எச்சில் தட்டைக் கழுவினாலும் இதயத்தில் செத்து மடியும் தன் வியட்நாம் மக்களை நினைத்து மீண்டும் களம் புகுந்து பல இலட்சம் வியட்நாம் மக்கள் குழந்தைகளைப் பறிகொடுத் தாலும் வியட்நாமிற்கு கோசிமின் விடுதலை வாங்கித் தந்ததை நினைத்துப் பாருங்கள்.
அப்போது ஒரு பெண் குழந்தை நிர்வாணமாக வெடிகுண்டுக் காயங்களுடன் ஓடிவந்த காட்சி உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வர அமெரிக்க மக்கள் ஒன்று திரண்டு அமெரிக்க ராணுவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த போது மிரண்டு போன அமெரிக்கா பின் வாங்கி ஓடியது. இப்படி உலக நாடுகள் ஃபலஸ்தீனர்களுக்குப் பக்கபலமாக இருந்தால் இஸ்ரேலால் என்ன செய்ய முடியும்?
நம் இந்திய வரலாற்றில் சிவகங்கையைப் பிடித்த பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து மறைந்திருந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது தனது கணவர் முத்துவடகுநாதர் கொல்லப்பட்டதை அறிந்து சிறிய படையை வைத்து ஹைதர் அலீ உதவியுடன் இழந்த தன் நாட்டைப் போராடி ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து மீட்ட வரலாறு நம் வீரமங்கை வேலுநாச்சியாரைச் சேரும். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு யாருக்கும் கிடையாது. அன்றைக்கு வேலு நாச்சியாருக்கு உதவிய ஹைதர் அலீ அவர் மகன் திப்பு சுல்தான் போல் ஃபலஸ்தீனர்களுக்கு உதவ ஒரு ஹைதர் அலீ கிடைக்கவில்லையா?
போரை எதிர்க்கும் நாடுகள் ஒன்றிணையவில்லை என்றால் இஸ்ரேலும் அடங்காது. அமெரிக்காவும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தாது. இதுவரை 32000 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது அரசு வெளியிட்டது. சாவு இன்னும் அதிகமாகத் தான் இருக்கும். காஸாவில் ஒரு கட்டிடம் இல்லை. மருத்துவமனை இல்லை, குடிநீர் இல்லை, உணவு இல்லை, ஒண்ட இடம் இல்லை, எல்லாம் முடிந்து விட்டது. வான்வழித் தாக்குதலில் எல்லாம் முடித்துவிட்ட இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஒன்றிரண்டு பேர் தப்பி இருக்கும் அல்லது காயம்பட்டு இருக்கும் மக்களையும் கொன்றொழிக்கப் போகிறார்கள். 21.03.2024 ஆம் தேதி மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இல்லாமல் செய்துள்ளது. எத்தனை பேர் மடிந்தார்கள் என்பது கணக்கில்லை.
தனிமனிதனாக நம்மால் போக முடியாது. ஆனால் நாடுகள் கண்டிக்கலாமே! ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரோஸி ‘ரமளான் மாதத்தில் தாக்குதலை நிறுத்துங்கள்’ என்று இஸ்ரேலுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். நான்கு முறை இஸ்ரேல் போருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அதிக நாடுகள் போரை எதிர்த்து வாக்களித்தன. ஆனால் போரை நிறுத்தப் போவதாக தற்போது நாடகமாடும் அமெரிக்கா தனது வீட்டோ சக்தியால் அதைச் செயலிழக்கச் செய்தது. இஸ்ரேல் நடத்தும் போரை ஆதரித்தது. இதுவரை இல்லாத அளவில் குட்ரோஸி மனிதநேயம் மிக்கவராக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
உலகில் இதுவரை இல்லாத அளவிற்குப் போரில் பத்திரிகையாளர்கள் 200க்கும் மேற் பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா கட்டிடங்கள் 250க்கும் மேற்பட்டவைகள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இப்படி இதுபோல் நடந்ததில்லை. ஐநா ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நாவிற்கே இந்த நிலை. அப்படியானால் அப்பாவி ஃபலஸ்தீன மக்களின் நிலை என்ன? சிந்திக்கவே இயலவில்லை. நெஞ்சம் வெடித்து விடும் போல் உள்ளது. மனித நேயம் செத்துப் போய் விட்டது. அந்த மக்கள் மனநிலையை எண்ணிப் பார்க்க முடியவில்லை. காப்பாற்ற யாரும் இல்லையா என்று கதறும் சத்தம் தான் நம் காதுகளில் ஒலிக்கிறது.
இந்த இலட்சணத்தில் ரமளான் நேரத்தில் இஸ்லாமியர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்காத இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் உட்பட டெல்லி, கேரளா, மேற்கு வங்காளம் முதல்வர்களும் இந்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து பாதிக்கப்பட்டு இந்தியா வந்துள்ள இஸ்லாமியர்களில் சிறுபான்மையினரான அஹமதியா மக்கள் மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்யாக்கள் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் அகதிகள் தானே. ஈழத் தமிழர்கள் என்ன எங்கள் தொப்புள் கொடி உறவுகள் இல்லையா? தமிழர்கள் மீது பாசம் பொழிவதாகக் காட்டிக் கொள்ளும் ஒன்றிய அரசு தமிழருக்குக் குடியுரிமை இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? 25 கோடி சிறுபான்மை மக்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். போரை எதிர்க்கும் நாட்டினரே அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் அஞ்சி அஞ்சி அடிமையாக 1000 ஆண்டுகள் வாழ்வதை விட அடக்குமுறையை எதிர்த்து ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்று உணருங்கள்.
கடந்த வாரம் ஃபலஸ்தீன மேற்குக் கரை யில் 427 ஃபலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 13இல் இஸ்ரேல் ஸ்னைப்பர் வீரர் ஒருவர் 13 வயது ஃபலஸ்தீனச் சிறுவனைச் சுட்டு கொன்றான். ஆனால் அந்தக் கொலைகாரனுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்கவீர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
காஸாவைக் காக்கும் கடமை வீரர்களே! களத்தில் போராடும் தியாகச் சீலர்களே! எண்ணத்தில் இமயமாய் உறுதி கொள்ளுங்கள். என்ன விலை தந்திடவும் என்றும் தயங்காதீர்! என்னதான் விளைவென்றாலும் துணிந்து ஏற்றிடுங்கள்!
இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை
ஃபலஸ்தீன இமாம் ஷேக் மஹ்மூத் அல்ஹஸ்ஸனாத் ஜும்ஆ குத்பா உரையை மிக மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
‘ஃபலஸ்தீனர்கள் 30,000 பேர் ஷஹீதாக்கப்பட்டு (இறைவழியில் கொல்லப்பட்டு) இருக்கிறார்கள்.
70,000 பேர் படுகாயமடைந்து இருக்கிறார்கள். 2 இலட்சம் பேர் வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் செய்தி சமுதாயத்தைத் தட்டி எழுப்பி, விழித்தெழச் செய்யவில்லை என்றால், என் குத்பா உரையின் வார்த்தைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும்?
இதற்கு மேல் என்ன நான் சொல்வது? இதற்கு மேல், யாரிடம் சொல்வது? தொழுகைக்காக நிற்கின்ற உங்கள் வரிசைகளை ஒழுங்காக நேராக்கிக் கொள்ளுங்கள். தொழ ஆரம்பிப்போம்.’
- ஜ. ஜாஹிர் உசேன்