மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

தியாகத் திருநாள் தரும் செய்தி
- அ.அஃப்ராஸ் அமீன் ஸலாமி, ஜூன் 16-30



ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்நாளில் எதையாவது தியாகம் செய்திருப்போம். இவை அனைத்தும் இயல்பானதே. இப்ராஹீம்(அலை) அவர்களின் கனவில் அல்லாஹ் அவர்களுக்குக் குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த காரணத்தினால் அவர்களைச் சோதிப்பதற்காகத் தன்னுடைய குழந்தையையே தியாகம் செய்யும்படி அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான். அவர்களும் அந்த விஷயத்தை நிதானமாக மகனிடத்தில் சொல்வதும் மகன் இஸ்மாயீல்(அலை) அதற்குச் சம்மதிப்பதும் நீண்ட வரலாறு. பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்களின் மூலமாக ஒரு ஆட்டை தியாகம் செய்தால் போதும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான்.

இஸ்லாமிய வாழ்வு நெறி தங்களுக்குக் கிடைக்கும் முன்னர் மக்கள் எண்ணற்ற விழாக்களையும், பெருநாள்களையும் கொண்டாடி வந்தார்கள். ஆனால் இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகமான பின் அவர்களின் நிலைகளும் மாறியது. அனைவரின் இதயங்களும் நேரிய பாதையை அடைந்தது, இருளிலிருந்த மக்கள் ஒளியின் பக்கம் திரள் திரளாக நுழைந்தார்கள். இஸ்லாம் அரேபிய தீபகற்பம் முழுவதுமாகப் பரவிய பிறகு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு நாள்களைப் பெருநாளாகக் கொண்டாட அனுமதித்தார்கள். ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள். மற்றொன்று ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள்.

இந்த இரண்டு பெருநாள்களைப் போன்று மற்ற எந்த மதங்களிலும் தனிச் சிறப்பு பெற்ற பெருநாளோ வரலாறோ கிடையாது. இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘இந்நாளில், நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்குக் கொடுத்துக் கொண்டாடுங்கள்’ என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் இன்றைய காலத்தில் அதிகமானோர் செல்வங்களைச் சேகரிப்பதிலும் அதனை இந்த உலக இன்பங்களுக்காகச் செலவு செய்வதிலும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இஸ்லாமியப் பாதையில் ஈடேற்றம் பெறுவதற்காகவும், நன்மையைச் சேகரிப்பதற்காகவும் செலவு செய்யத் தயங்குகின்றார்கள். இறைவன் நமக்குக் கொடுத்த செல்வங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றால் அல்லாஹ்விற்கு அதனைக் கொடுக்க வேண்டும் என்பதல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் அதனைக் கொடுத்தால் போதுமானது. அப்படி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்கு ஓர் அழகான வாய்ப்பு தியாகத் திருநாள் மூலமாகக் கிடைத்திருக்கின்றது.

குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடாகும். குர்பானிக்காக பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தச்சொட்டு பூமியில் விழுவதற்கு முன்பாக அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்டு நன்மைகளைப் பெற்றுத்தருகிறது. எனவே குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

பெருமைக்காக குர்பானி கொடுக்காமல் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக குர்பானி கொடுக்க வேண்டும். ‘அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!’ (திருக்குர்ஆன் 22:37)

இறைவன் மனிதனுக்கு ஏற்படுத்திய இந்தத் தியாக உணர்வு மறுமையில் மட்டும் பயனுள்ளதாக இறைவன் ஆக்கவில்லை. மாறாக அவன் கொடுக்கக்கூடிய அந்த பலிப் பிராணியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கும், மற்றொரு பங்கை உறவினர்களுக்கும், ஒரு பங்கை அவரின் குடும்பத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள இறைவன் வழிகாட்டியுள்ளான். இதன் மூலமாக மூன்று வகையினரும் பயனடைவதை நம்மால் காண முடிகிறது. 

இரு பெருநாள்களின் அடிப்படையே மனிதன் நிம்மதியையும் மகிழ்வையும் அடைய வேண்டும் என்பதே! நோன்புப் பெருநாள் தினத்தன்று ஈதுல் பித்ர் எனும் தர்மத்தை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். அதேபோல் ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் கொடுக்கக்கூடிய பலிப் பிராணியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதும் இறைக்கட்டளை. ஆகவே ஒரு மனிதனுடைய நிம்மதியும் மகிழ்வும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நிம்மதியாகவும், மகிழ்வாகவும் வைத்திருப்பதில் தான் இருக்கின்றது என்பதை இரு பெருநாள்களும் நமக்குக் கற்றுத் தரும் மிகப்பெரிய பாடமாக இருக்கின்றது.

இறைவனுக்காக நம்முடைய குர்பானிகளைச் செய்கிறோம். அதுபோல இறைவனுடைய ஆலயமான மக்காவிலுள்ள புனித கஅபாவுக்குச் சென்று அங்கு நாம் தியாகத்தை மேற்கொள்வது சிறந்த வழிபாடாக இருக்கிறது. ஒரே நேரத்தில் குர்பானி, பயணம் என்ற இரு தியாகங்களை ஹாஜிகள் மேற்கொள்வது அவர்களைப் பிறந்த குழந்தைகளைப்போல பாவமற்றவர்களாக வீட்டிற்குத் திருப்பி அனுப்புகிறது.

இந்த உலக மக்களின் பொருத்தத்திற்காக எத்தனையோ காரியங்களை நாம் செய்கின்றோம். நம்மைப் படைத்தவனுடைய பொருத்தத்தைப் பெறுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை மிக்கவனின் பொருத்தத்தைப் பெறுவதற்குக் குர்பானியும், ஹஜ்ஜும் ஒரு சிறந்த வழித்துணைச் சாதனமாக இருக்கின்றது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்