விவசாயிகளை ஒருபோதும் கைவிடாம வாழ வைப்பது இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையும்தான். இதைத்தான் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், தம் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. இதில் இடுபொருள்கள் செலவு குறைவு. பராமரிப்பு எளிது. வேலையாள்கள் குறைவு. சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு ஆகியன தாம் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கை விவசாயத்தோடு ஒருங்கிணைந்த பண்ணையும் அமைத்து வெற்றி நடைபோட்டு வருகிறார் அஹ்மத். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ் பஜார் கிராமத்தில் அமைந்துள்ள அரியா டெய்ரி பார்ம்ஸ் (Aria Dairy Farms) ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிடுவதற்காக, சென்னை சூளைமேட்டில் இயங்கி வரும் Skilled Youth Professional Association (SYPA) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் சமரசம் சார்பாக நாமும் இணைந்தோம். அஹ்மத் அளித்த நேர்காணல்.
நான் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவன். எங்களுடைய குடும்பத் தொழில் வைர வியாபாரம், ரியல் எஸ்டேட், பிளாஸ்டிக் உற்பத்தி, நகை வியாபாரம் ஆகும். நான் பொறியியல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, லண்டன் செல்ல எண்ணி இருந்தேன். எனது தந்தை வியா பாரத்தில் ஈடுபட அழைக்க 2005லிருந்து 2010 வரை எனது தந்தையுடன் தொழிலை கவனிக்கத் தொடங்கினேன். அத்து டன் நான் தனியாகவும் ஐ.டி., கட்டுமானத்துறை, இன்டீரியர் டிசைன் ஆகியவற்றையும் நன்றாக நடத்தி வந்தேன்.
* ஒருங்கிணைந்த பால்பண்ணை அமைக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? நாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு பிரபலமான கார் கம்பெனி, தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக எனது தந்தை இந்த 200 ஏக்கர் நிலத்தை வாங்கினார். ஆனால், திடீரென இந்த இடத்தை வேண்டாம் என்று அவர்கள் சொல்லி விட்டார்கள்.
அதனால், இந்த இடத்துல நாமே விவசாயம் செய்யலாம் என்று முடிவு செய்தோம். என்னுடைய சித்தப்பா நசீர் அவர்கள்தான் இங்க விவ சாயத்தை ஆரம்பித்தார்கள். நெல்லி, மேஞ்சியம் மரங்களை நட்டு, ஆடு, மாடுகளையும் வளர்க்கத் தொடங்கினார். நாங்கள் செய்து கொண்டிருந்த வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருந்தாலும், என் மனதுக்குள் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது. விவசாயம் செய்யும் இளம் தொழிலதிபர்
* இந்தப் பண்ணைத் தொழிலில் முழுமையாக எப்பொழுது ஈடுபட்டீர்கள்? எனது தந்தையாருடன் தொழில் செய்து கொண்டிருக்கும் போது, துபாயில் உள்ள எனது நண்பர்கள் இந்தியாவில் ஏதாவது புதுமையான தொழில் செய்ய லாம் என்ற ஆலோசனை வழங்கி வந்தார்கள். ஒருநாள், என் சித்தப்பா இந்தப் பண்ணையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாக்கெட் பால், ஜெர்சி பால்களை குடிக்காதே என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பொழுது அதைப் பற்றி முழுமையாக எதுவும் எனக்குத் தெரியாது.

2010ஆம் ஆண்டு, ஒரு நாள் இந்தப் பண்ø ணக்கு வந்தேன். அப்பொழுது இங்க இருந்த ஆடு, மாடுகளின் எண்ணிக்கையை கணக்குப் பார்த்தேன். 2005இல் வாங்கின எண்ணிக்கையும், இப்போ இருந்த எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அபரிமிதமான அளவுக்கு ஆடு, மாடு, கோழிகள் பெருகியிருந்தன. எனக்கு வியப்பாக இருந்தது. 2000த்தில் என் சித்தப்பா 60 ஆடுகளோடு இந்தப் பண்ணையில் விவசாயம் செய்யத் தொடங் கினார். 2010இல் இந்தப் பண்ணையில் 150 ஆடுகள் இருந்தன. 10 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 35 முதல் 40 சதவீதம் வரை இருந்தது. 40 சதவீதத்திற்கும் மேல் இலாபம் இருக்கிற தொழிலாக இருப்பதை நேரடியாகக் கண்டேன். 2005 இல் 10 மாடுகள், 2010இல் 80 உருப்படிகளாகவும், 2009 இல் 4 கோழி, 1 சேவலாகவும் இருந்தது ஒன்றரை ஆண்டில் 129 கோழியாக உருவாகி இருந்தது.
* உங்களுக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரி யாதே? அப்புறம் எப்படி இத்தொழிலை நல்ல முறையில் நடத்தி வருகின்றீர்கள்? என்னுடைய சித்தப்பா விவசாயத்தை குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அது மட்டுமின்றி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விவசாயத்தின் முக்கியத்துவத்தை கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்கள் : முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய் கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். (அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)) இந்த நபிமொழிதான் என்னை விவசாயத்தின் பக்கம் திருப்பிவிட்டது. இதன் பிறகு விவசா யம், ஒருங்கிணைந்த பண்ணை பற்றிய நிறைய தகவல்களைச் சேகரித்தேன். வெளிமாநில விவ சாயிகளிடமும் நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இணையம் வழியாகவும் கற்றுக் கொண்டேன். பண்ணையின் மேலாளர் நஜீப் இப்பண்ணையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து வரு கிறார்.
இவர் இத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். ஆடு, மாடுகள் வளர்ப்பது, பராமரிப்பது அனைத்தையும் இவரே கவனித்து வருகின்றார். வெளிமாநிலங்களான குஜராத், ஹரியானா, ராஜாஸ்தான் போன்ற இடங்களிலிருந்து மாடுகளை வாங்கி வருவதும், நாட்டு மாடுகளை பராமரித்தும் வருகிறார் மேலாளர் உமர். எங்கள் பண்ணையில் 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
* நாட்டு மாடுகள் வளர்ப்பதற்கான காரணம் என்ன? கலப்பின மாடுகளைவிட நாட்டு மாடுகள்தான் பல வகையில் நல்லது என்பதை உணர்ந்து, நாட்டு மாடுகளைத்தான் வளர்க்கணும்னு முடிவு செய்து பங்குதாரர்களோடு 2011 ஜூலையில் இந்த பண்ணையைத் தொடங்கினோம். 2011இலிருந்து 2012 வரை சிறிய அளவில்தான் இந்தப் பண்ணையை நடத்தி வந்தோம். பின்னர் எனது பங்குதாரர்கள் சிலர் மிகப் பெரிய தொகையை இதில் முதலீடு செய்வதாகத் தெரிவித்தனர். ஆனால் அதனை செயல்படுத்த முடியவில்லை.
முதலீட்டை பெற முடியாத காரணத்தால் 2013 இலிருந்து 2015 வரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி நஷ்டம் ஏற்பட்டு இப்பணையை நடத்த முடியுமா என்ற சூழல் ஏற்பட்டது. ஆனாலும் இறைவன் அருளால் விடõமுயற்சியால் 2016லிருந்து குறைந்த இலாபம் பெறத் தொடங்கினோம். தொழிலில் பிரேக் ஈவன் ஏற்பட்டது. 2017 ஜனவரியில் ஓரளவு இலாபம் பெறத் தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக இந்தப் பண்ணை நடத்தப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின்பு நாட்டு மாடுகள் குறித்து தமிழகத்தில் அதிக அளவில் விழிப்பு உணர்வு ஏற்பட்டு, கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலில்தான் சக்தி அதிகம் என்பதை உணரத் தொடங்கிய நேரமது. தற்போது அதிகமான பால் பண்ணை விவசாயிகள் நாட்டு மாடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
* ஒருங்கிணைந்த பண்ணையில் என்னென்ன இருக்கின்றன? எங்கள் பண்ணையில் 270 நாட்டு மாடுகளும், 350 செம்மறி ஆடுகளும், 10,000த்திற்கும் மேற் பட்ட நாட்டுக் கோழிகளும், 300க்கும் மேற்பட்ட கருங்கோழிகளும் (மத்திய பிரதேசத்தில் அதிகம் காணப்படும் கடகநாத் கோழி), 100 வாத்துகளும் வளர்த்து வருகின்றோம். ஏ2 பால் தயார் செய் கின்றோம். கால்நடைப் பண்ணை மட்டுமின்றி, எவ்வித இரசாயனமும் இன்றி விவசாயம் செய்கின்றோம். இங்குள்ள 210 ஏக்கரில் 40 ஏக்கரில் கால்நடை பண்ணையும், 40 ஏக்கரில் 10 விதமான பழங்களையும் விளைவிக்கின்றோம்.
இங்கு நெல்லி, வாழை, மாம்பழம், பலா, சப்போட்டா, மாதுளை, நாவல், சாத்துக்குடி, கொய்யா, பப்பாளி போன்றவைகளையும், நீர்த் தாவர வகையைச் சேர்ந்த அசோலா குட்டை போன்றவற்றையும் வளர்த்து விற்பனை செய்து வருகின்றோம். 20 ஏக்கரில் மாட்டு தீவனங் களுக்காகவும் காய்கறி பண்ணையும் இங்கு உரு வாக்கி உள்ளோம். அதே போன்று மாட்டின் சாணத்தி லிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் கட்டமைப்பு வச தியை செய்துள்ளோம். மாட்டிலிருந்து கிடைக்கக் கூடிய பால், தயிர், மோர், நெய் ஆகியவற்றையும் விற்பனை செய்கின்றோம். ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் புல் விளைவிக்கப்படுகிறது.
* அதென்ன ஏ2 பால்? ஏ2 பால் (அ2 Mடிடூடு) என்பது ஏ2 வகை பீட்டா கேசின் அதிகம் கொண்ட பசுவின் பால் ஆகும். பீட்டா கேசின் என்பது பசுவின் பாலில் உள்ள ஒரு முக்கியப் புரதம். இதில் ஏ1 மற்றும் ஏ2 என இரு வகைகள் உண்டு. ஏ1 வகை பீட்டா கேசின் ஐரோப்பியப் பசுக்களின் பாலிலும் ஏ2 வகை பீட்டா கேசின் இந்தியத் துணைக்கண்டப் பசுக்களின் பாலிலும் அதிகம் காணப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் பசுவினங்களில் ஏற்பட்ட மரபணுத் திடீர் மாற்றத்தின் விளைவாக இந்த இரு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
குழந்தைகள் ஏ2 பாலை அருந்துவதால் ஆரோக்கியமாகவும், உடல் வளர்ச்சியும் பெற்று வளர்கின்றனர். சர்க்கரை நோய் மட்டுமின்றி, வேறு நோய்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் குறைவு. * நீங்கள் ஏ2 பால் விற்பனை செய்வதின் நோக்கம் என்ன? 2011லேயே ஏ1, ஏ2 பால் என இருவகையான பாலைப் பற்றி கேள்விப்பட்டேன். வெளிநாட்டு மாட்டு வகைகளான ஜெர்சி, ஹெச்.எப் போன்ற வகை மாட்டுப் பாலை ஏ1 பால் என்றும், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நாட்டு மாட்டுப் பாலை ஏ2 பால் என்றும் கூறுகிறோம்.
ஏ1 பால் வகைகளில் உடல் நலத்திற்கு கெடுதல் என்று நியூஸிலாந்தைச் சேர்ந்த கீத் உட்ஓர்க் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்திருக்கிறார். அதனால் நாம் அந்த வகை பாலை உற்பத்தி செய்யாம இந்திய நாட்டு மாடுகளின் பாலை உற்பத்தி செய்யலாம் என்ற எண்ணத்தோடு தான் இந்த ஒருங்கிணைந்த பண்øணயில் நாட்டு மாடுகளை வளர்த்து அதன் மூலம் கறக்கப்படும் ஏ2 பாலை விற்பனை செய்து வருகின்றோம்.
* கறவை மாடுகளுக்கான தீவனத்தை எப்படி விளைவிக்கிறீர்கள்? மாடுகளுக்காக மொத்தம் 20 ஏக்கரில் கோ4, கோ5, அகத்தி, சுபாபுல், வேலி மசாலா ஆகிய தீவனங்கள் வளர்க்கப்படுகின்றன. வழக்கமாக கோ 4 தீவனத்தை சாகுபடி செய்யும் போது 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் சாகுபடி செய்வார்கள்.

ஆனால், இங்கே 50 சென்டி மீட்டருக்கு 50 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்திருக்கோம். இதனால் 10 ஆயிரம் புற்கள் வைக்கும் இடத்தில் 11 ஆயிரம் புற்கள் வைக்க முடிகிறது. இதன் மூலம் கூடுதல் பலன் கிடைக்கிறது. அதனால், புல் கரணை இழப்பு, வளர்ச்சிக் குறைவுனு பிரச்னை வந்தா, எந்தப் பாத்தினு பார்த்து உடனே சரி செய்ய முடிகிறது. அதனால், தீவன உற்பத்தி குறையவே குறையாது.
* மாடுகள் எப்படி வளர்க்கப்படுகின்றன? காலை, மாலை இரண்டு வேளையும் பசுந் தீவனம், வைக்கோல், அடர் தீவனம்னு கொடுக்கப்படுகிறது. தினமும் 4 லிருந்து 6 மணி நேரம் மேய்ச்சலுக்கு விட்டு விடுவோம். அதனால், மாடுகள் ஆரோக்கியமாக உள்ளது. நாட்டு மாடு களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். அதோடு நாட்டு மாடுகளின் சாணம் தரமான உரமாகும். ஆனால் கலப்பின மாடுகளின் சாணம் நாட்டு மாடுகள் அளவுக்கு தரம் கிடையாது.
நாட்டு மாட்டின் சாணத்தில் நுண்ணுயிர்கள் அதிகம். நாட்டு மாடுகள் எளிதில் சினை பிடிக்கும். மாடுகளுக்கு எவ்விதமான ரசாயன தீவனங்களும் நாங்கள் வழங்குவதில்லை. இங்கு விளைவிக்கப்படும் பயிர்களையே தீவன மாக வழங்குகின்றோம். இங்கு வளர்க்கப்படும் மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை. சுதந்திரமான சூழலில் வளர்கின்றன. மாடுகளுக்கு எவ்வளவு புற்கள் கொடுக்கப் பட்டன? எவ்வளவு பால் கறந்தது? எந்த வகையான மாடுகளிடையே எந்த மாதிரியான மாறுதல்கள் உள்ளன என அனைத்தையும் முறையாகப் பதிவு செய்து வருகின்றோம்.
* நாட்டு மாட்டு பாலுக்கும் கலப்பின மாட்டு பாலுக்கும் என்ன வித்தியாசம்? நாட்டு மாடுகள் 500 கிலோ வரை இருக்கும். 50 லிட்டர் இரத்தத்திலிருந்து 5 லிட்டர் பாலாக சுரக்கிறது. தினமும் 10 லிட்டரிலிருந்து 12 லிட்டர் பால்தான் கறக்கும். தன்னுடைய இரத்தத்தில் 10இல் 1 பங்குதான் பாலாக தருகின்றது. ஆனால் கலப்பின மாடுகள் 3இல் ஒரு பங்கு அதாவது, 20 இலிருந்து 25 லிட்டர் வரை தன்னுடைய இரத்தத்தை பாலாக தருகின்றது.
எந்த மாட்டுப் பாலில் சத்து அதிகம் என்று பார்த்தால், நாட்டு பாலில்தான். அதனால் தான் நாட்டு மாட்டின் பாலான ஏ2 பாலை அருந்தச் சொல்கிறார்கள் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும். இந்திய நாட்டு மாட்டை குறை சொன்னவர்கள், இன்று நம்முடைய மாட்டை வெளிநாடுகளில் இறக்குமதி செய்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாட்டு மாட்டின் பால் குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.
* உற்பத்திப் பொருள்களை எப்படி சந்தைப் படுத்துகிறீர்கள்? கால்நடைப் பண்ணை தொடங்கும் பொழுது இடைத்தரகர்கள் இல்லாமல் இத்தொழிலை நடத்த வேண்டுமென்பதுதான் எங்களுடைய எண்ணம். இடைத்தரகர்கள் இல்லாமல் இன்று வரை எங்களுடைய பொருள்களை சந்தைப்படுத்துகின்றோம்.
வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக எங்களுடைய பொருள்களை விற்பனை செய்கின்றோம். இடைத்தரகர்கள் இல்லையென்றால் விவசாயி விளைவிக்கின்ற பொருள்களுக்கு நல்ல விøலயும் கிடைக்கின்றது. விவசாயி நன்றாக இருப்பார். எங்கள் பண்ணையில் தயாராகின்ற ஏ2 பாலை முதலில் அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு விற்பனை செய்தோம். அதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கையை பெற்றோம். அதன் பிறகு கொஞ்சம் விரிவாக்கி சென்னைக்கு கொண்டு வந்தோம்.

சென்னையில் பெரும்பாலான மக்கள் எங்களுடைய ஏ2 பாலை வாங்கிச் செல்கிறார்கள். வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கே சென்று டெலிவரி செய்கின்றோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கின்றோம். அதேபோல் எங்களிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லை. பண்ணைக்கு யார் வேண்டுமானாலும் வர லாம். பண்ணையைச் சுற்றிப் பார்க்கலாம். பண்ணையைப் பற்றிய சந்தேகங்களை எங்களிடம் கேட்கலாம் என்பதõல், வாடிக்கையாளருக்கும், புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கும் விவசாயத்தின் மீதும் எங்கள் பொருள்களின் மீதும் நம்பிக்கை ஏற்படுகின்றது.
* ஒருங்கிணைந்த பண்ணையில் வேறு எந்த மாதிரி தொழில்களை செய்யலாம்?
நாள்தோறும் வருமானம் என்ற முறையில் பால், மோர், தயிர், நெய் என வியாபாரம் செய்யலாம். மீன் வளர்ப்பில் ஈடுபட்டும், காய்கறிகள் கீரைகள் பயிரிட்டும், சுழற்சி முறையில் பயிர் வகைகள் பயிரிட்டும் நம்முடைய வருமானத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.
* புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உங்களுடைய அறிவுரை? எந்தத் தொழிலை செய்தாலும் அதில் நேர்மை யும், விடாமுயற்சியும், கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் வெற்றி பெறலாம். சரியாகத் திட்டமிட்டு செய்தார் நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கக் கூடிய அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்து நல்ல இலாபத்தை ஈட்ட முடியும். பணம் மற்றும் இடம் இருக்கிறது என்பதற்காகவும், விவசாயம் பற்றி எதுவுமே தெரியாமலும் இத்தொழிலை தொடங்காதீர்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் நேர்மறை சிந்தனையுடன் தொடங்க வேண்டும்.
விவசாயம், கால்நடைப் பண்ணை பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு தொடங்கலாம். விவசாயத்தின் மீதும், இந்தத் தொழி லின் மீதும் திருப்தி இருக்க வேண்டும். இலாபம் என்பது உடனே கிடைத்து விடாது. கொஞ்ச காலங்கள் இதற்காக கஷ்டப்பட வேண்டும். 42 கால்நடைப் பண்ணை மட்டுமின்றி, காய்கறிப் பண்ணை வைக்கலாம். நாட்டுக் கோழி, கருங்கோழிகள் வளர்க்கலாம். ஒரே இடத்தில் பல்வேறு வகை யான தொழில்கள் செய்யும் பொழுது இதன் மூலம் ஒவ்வொரு தொழிலிலிருந்தும் இலாபம் வரும்.
* என் பசு திட்டத்தை பற்றி விளக்கவும்? பசு வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் பல நகரவாசிகளுக்கு இருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புகள் நகர வாழ்க்கையில் இல்லாமல் உள்ளது. இவ்வாறு ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாக "என் பசு திட்டம்'' (Oதீண அ இணிதீ) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பசுவை வாங்கி எங்களிடம் ஒப்படைக்கலாம். அல்லது, பசுவிற்கான தொகையை கொடுத்துவிட்டால் நாங்களே பசுவை வாங்கி விடுவோம். இதன்பிறகு அதை பராமரிக்கும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். மாட்டிலிருந்து கறக்கப்படும் பாலையோ அல்லது அதற்கு ஈடான தொகையையோ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.