வாழ்க்கை சுருங்கிக் கொண்டு வருகிறது. எல்லாமே சிறிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற வாழ்வு இது. 50 ஓவர் கிரிக்கெட் இன்று இருபது ஓவர்களாகச் சுருங்கி விட்டது. ஆனால் இரண்டு, மூன்று தலைமுறை என்று நாவல்களில் கால நீட்சி செய்து கொண்டே செல்கின்றீர்களே..! இன்றைக்குத் தோன்றியிருக்கும் காலச் சுருக்கம் என்பது வணிக ரீதியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். உலகில் அதிகமான நேரத்தை மனிதன் காத்திருத்தலுக்காகச் செலவிடுகின்றான். எந்த உயிரினமும் காத்திருத்தலுக்காக நேரம் செல விடுவதில்லை. சாலையோரத்தில் இட்லி சாப்பிடுவதற்காகக் காத்திருக்கின்றான். விமானத்திற்காக நான்குமணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
சில நபர்களைச் சந்திப்பதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்பதற்காக ஒரு மனிதன் நாற்பது ஆண்டுகளாகக் காத்திருக்கின்றான். காத்திருத்தலே வாழ்க்கை என்றாகிப்போன ஒரு சமூகத்தில், வணிகச் சந்தை நீங்கள் எதெற்கெல்லாம் நேரம் கொடுப்பீர்களோ அதையெல்லாம் சுருக்கி விட்டது. இந்த நேரத்தை மிச்சப்படுத்திவிட்டு என்ன செய்யப் போகின்றீர்கள்? கிரிக்கெட் 20 ஓவராகச் சுருங்கிவிட்டது. கோக் சிறியதாகிவிட்டது. எல்லாவற்றையும் சுருக்கிவிட்டு என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்கள் நேரத்தைச் சுருக்கித்தந்துவிட்டு உங்கள் நேரத்தையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்காக மாற்றுங்கள் என்று சொல்கின்றான்.
பணம் சம்பாதிப்பதற்காக நாம் வாழவில்லை. வாழ்வதற்குப் பணம் தேவை அவ்வளவுதான். நீங்க சும்மாதானே இருக்கின்றீர்கள். பணம் சம்பாதியுங்கள் என்று சொல்கின்றான். வணிகச் சந்தை நம்மை எப்படி உருவாக்கிவிட்டது என்றால் எதுவுமே பத்து நிமிடங்களுக்கு மேல் அவனுக்கு விருப்பமானதாக இல்லை. பதினைந்து நிமிடம் அவனால் தொடர்ந்து இருப்புக் கொள்ளவில்லை. இது ஒரு மனநிலை. இந்த மனநிலை அதிகாரத்தால், வணிக நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட மனநிலை. மனித வாழ்வை சந்தை தீர்மானிக்கின்றது. இதற்கு எதிராகத்தான் இலக்கியம் இயங்குகிறது. திரும்பத் திரும்ப ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலைப் படிக்க விரும்புகின்ற, பலமணி நேர கச் சேரியைக் கேட்க விரும்புகின்ற, பத்துமணி நேரம் இரயிலில் அமர்ந்து செல்ல விரும்புகின்றவன்தான் மனிதன். தொடர்ந்து கிரிக்கெட்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கின்றார்கள்.

காலையிலிருந்து மாலைவரைக்கும் நடக்கும் ஊர்வலத்தைப் பார்ப்பவர்கள் இருக்கின்றார்கள். கண் முன்னே காட்சிகள் மாறிக் கொண்டிருந்தால் மனிதன் பார்த்துக் கொண்டேதான் இருப்பான். நாவலும் அப்படித்தான். அதை எழுதுகின்றவனுக்குத்தான் அது சவாலே தவிர படிப்பவனுக்கு அல்ல. தண்டி தண்டியான ஹாரிபட்டரை சிறுவயதுப் பிள்ளைகள் நம்காலத்தில் படிக்கின்றார்கள். 700 பக்கங்கள் கொண்ட நாவலைப் பத்து பாகங்களையும் படிக்கின்றவர்கள் இருக்கின்ற காலத்தில் தமிழில் நாவல்கள் பெரிதாக இருக்கின்றன என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இது நாவல்களின் யுகம். அங்கு ஒரு நாவல் இரண்டு இலட்சம், பத்து இலட்சம் என விற்பனையாகின்றது. டாவின்சி கோட் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது. எதுவுமே சிறிய நாவல்கள் இல்லை. வாசகர்கள் படிக்குமளவு இரசனையாகச் சொன்னால் படிப்பார்கள்.
சாதாரண மனிதன் தனக்கு எது கொடுக்கப்படுகிறதோ அதனையே படிக்கின்றான். தமிழ் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. பெரிய நாவல்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். என்னுடைய சிறிய புத்தகங்களை விட பெரிய புத்தகங்களே அதிகம் விற்பனையாகி உள்ளன. சிறிய புத்தகங்களில் நிறைவடையாத மனது கொண்டவர்கள் இருக்கின்றார்கள். ஜென் கவிதைகளை நான் நூறுபக்கங்களுக்குள் எழுதிவிட முடிவு செய்து எழுதினேன். ஆனால் அதை 500 பக்கங்கள் எழுதியிருக்கலாமே என்று கேட்பவர்களும் இருக்கின்றார்கள். இந்த பொதுப்புத்தியை வணிக நிறுவனங்கள் மாற்ற முயல்கின்றன. நீண்ட நாள்கள் ஒரு பொருள் இருந்தால் அவனால் இன்னொரு பொருளை விற்க முடியாது. நீண்டகாலமாக ஒரு உணர்ச்சியில் இருந்தால் இன்னொரு உணர்ச்சிக்கு நீங்கள் உள்ளாக மாட்டீர்கள். வாரப்பத்திரிகைகள் போல, இந்த வாரத்தை மறந்தால்தான் அடுத்த வார இதழை வாங்குவீர்கள். இலக்கியம் மறதிக்கானது அல்ல. நினைவுக்கானது. இனிமேல் ஆயிரம், இரண்டாயிரம் பக்கங் களைக் கொண்ட நாவல்கள் தமிழில் வர இருக்கின்றன. மூன்று தலைமுறை இல்லை. ஐம்பது தøலமுறைகள் வரை எழுதலாம். அதற்கான கால அவகாசம்தான் வேண்டும்.
பத்தி எழுத்துகள் மக்களைச் சென்றடைந்ததைப் போல நவீன எழுத்துகள் மக்களைச் சென்று சேரவில்லைதானே...! பத்தி எழுத்துகள் பாப்கார்ன் மாதிரி. ஒரு வேர்க்கடலையைப் போல, சாக்லேட்டைப் போல விருப்பமான நேரத்தில் அதனை நீங்கள் சாப் பிடலாம். அதையே உணவாகச் சாப்பிடமுடியாது. பத்திரிகைகளின் இடைவெளியை நிரப்புவதற்காகத்தான் பத்தி எழுத்துகள் தேவைப்பட்டன. ஒரு பெரிய விஷயத்தை எளிமையாகச் சொல்வதற்கு பத்தி எழுத்துகள் ஒரு சாதனம். நூறுபக்கத்தில் சொல்வதை நான்கு பக்கங்களுக்குள் சொல்ல வேண்டும். விரிவாக எழுத வேண்டிய வரலாற்றை "எனது இந்தியா'என்ற பத்தியாக எளிமையாக எழுதினேன். பத்தி எழுத்துகளில் வரலாற்றை, கவிதையை, அரசியல், இசை, சினிமா, தத்துவம் என எல்லாவற்றையுமே எழுதியிருக்கின்றார்கள். ஒவ்வொரு வரும் அவரவருக்குத் தேவை யானதைச் சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் இப்படி எழுத முடியாது. இன்று பத்தி என்பது புகழ்பெற்ற ஒரு வடிவமாகிவிட்டது. பத்தி இல்லாத பத்திரிகைகளே கிடையாது. சிறுகதை, தொடர்கதையை விட்டுவிட்டு ஒவ்வொரு இதழும் ஐந்தாறு பத்திகள் போடத் தொடங்கிவிட்டார்கள். வாசகர்கள் இதனைத் தொடர்ந்து வாசிக்கின்றார்கள். பத்தி எழுத்துகள் வெகுஜன இதழ்களில் வெளியாவதால் பரவலாக மக்களைச் சென் றடைகிறது. வெகுஜன இதழ்களில் அவர்களுக்கான கேளிக்கைகளுக்கிடையே பத்திகள் மூலம் செய்திகளைச் சொல்ல முடிகிறது. தீவிர வாசிப்பாளர்களைத் தாண்டி வெகுஜன வாசகர்களை அடைய முடிகிறது. பயணத்தை, இலக்கியவாதிகளை, வரலாற்றைச் சொல்லமுடியும். கதாவிலாசத்தில் ஐம்பது எழுத்தாளர்களை அறி முகப்படுத்தியிருக்கிறேன். தேசாந்திரியில் பல இடங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். சிறிது வெளிச்சத்தில் சினிமாக்களை அறிமுகப்படுத்தி யிருக்கிறேன். எனக்கும் பொதுமக்களுக்குமான தளமாக பத்தியை நான் பயன்படுத்துகிறேன்.
தேசாந்திரியாக இந்தியா முழுவதும் வலம் வந்தவர் நீங்கள். இந்தப் பயணங்களினூடாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, மௌனி, தி.ஜா,ஜெயகாந்தன் போன்றோரின் கதை மாந்தர்களான பாத்திரப்படைப்புகளை எங்காவது சந்திக்க நேர்ந்திருக்கிறதா? சரவாண்டிஸ் எழுதிய "டான் குகேயாத்'என்ற புத்தகம் ஒன்று உள்ளது. டான் குகேயாத் என்பவன் தான் படித்த புத்தகங்கள் நிஜமானதுதானா என்பதை அறிய பயணம் செய்கின்றான். இறுதியில் டான் குகேயாத் சொல்லுவான். "இந்தப் புத்தகங்கள் உலகத்தை நம்வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. ஏனென்றால் அங்கெல்லாம் போகாத மனிதருக்கு அந்த உலகம் அவர்களுடைய வீட்டிற்குள் வந்துவிட்டது. உலகம் புத்தக வடிவில் பார்ப்பதற்கு இன்னும் வசீகரமாக இருக்கிறது' என்று சொல்கிறான். சிறுவயதில் நான் படித்த, கேட்ட விசயங்களை உண்மைதானா என்று அறிய விரும்பினேன்.
பள்ளி யில் நான் கங்கையை வரைந்தபோது என்னை என் ஆசிரியர் "நீ ஒருவன்தான் கங்கையைச் சரியாக வரைந்திருக்கின்றாய்' என்றார். "ஸார்.. நீங்கள் கங்கையைப் பார்த்திருக்கின்றீர்களா?'என்று கேட்டேன். "நான் பார்க்கவில்லை. நீ போய் பார்'என்றார். நான் என் அப்பாவிடம் சொல்லி அடுத்த ஆண்டு கங்கைக்குச் சென்று பார்க்கிறேன். அது நான் வரைந்த கோடு அல்ல. அது பிரமாண்டமான நதி. அதுபோல்தான் இமயமலை, கடல் என்று கோடுகளில் வரைகின்றோம். ஆனால் அதுவல்ல. நான் உண்மையை விரும்பிப் பார்க்கத் தொடங் கினேன். அப்படித்தான் இந்தக் கதாபாத்திரங்களையும் பார்க்கிறேன். வாழ்விலிருந்து நிறைய மனிதர்களை எடுத்து நாம் கதாபாத்திரமாக்குகின்றோம். ஆனால் அவன் கதாபாத்திரமாகும்போது நித்திய மான ஓரிடத்திற்கு வந்துவிடுகிறான். அவன் உல கிலிருந்து மறைந்துபோய் விடுவான். ஆனால் கதைக்குள்ளிருந்து மறைந்து போக மாட்டான்.
உலகில் வசிப்பதை விட கதைகளில் அதிகமான மனிதர்கள் வசிக்கின்றார்கள். கதை என்பது மனிதனுக்கான இன்னொரு வாழ்விடம். யாராவது ஒருவருடைய கதைக்குள் நீங்கள் வாழமுடியும். அதற்கு ஒரேயொரு வழி இருக்கிறது. நீங்கள் கதாபாத்திரமாக மாறவேண்டும். மனிதர்களுடைய மொத்த முயற்சியுமே கதாபாத்திரமாகுவதுதான். ஆனால் நீங்கள் விரும்பினால் மட்டும் நீங்கள் கதாபாத்திரமாக முடியாது. உங்கள் செயல்கள் மட்டும்தான் உங் களைக் கதாபாத்திரமாக மாற்றுகிறது. வாழ்வில் நீங்கள் செய்கின்ற நல்லது, கெட்டதுகள், வாழ்வை நீங்கள் கொண்டு செலுத்துகின்ற விதம்தான் உங்களைக் கதாபாத்திரமாக்குகிறது. கதாபாத்திரமாக மாறமுடியாதபோது நம்மை ஒரு கதா பாத்திரமாகக் கருதிக் கொள்கிறோம்.
அதுதான் இன்று நடக்கும் சகல கூத்துகளும். தன்னை ராஜாவாக, மிகப்பெரியவனாக ஒருவன் நினைத்துக் கொள்கிறான். சாதியச் சார்பு கொண்ட எழுத்துகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்? சாதியத்தை உயர்த்திப் பிடிப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எவருமே விரும்பி ஒரு சாதியில் பிறப்பதில்லை. ஆனால் விரும்பி விடுபடலாம். அப்படித்தான் விடுபட்டோம். கல்வி வந்ததும் சாதிப்பெயர்களை நாம் நீக்கிக் கொண்டோம். பெயருக்குப் பின்னால் போட்ட சாதிப்பெயரைத் தூக்கிவிட்டு கல்வியைப் போட ஆரம்பித்தோம். சாதிய அடையாளங்களை நீக்குவதுதான் நம் காலத்தில் முக்கியமானதாக இருக்கிறது. யாருடனும் அமர்ந்து சாப்பிடுவேன். யார் வீட்டுப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்வேன். சாதியை நீக்கம் செய்பவனாகத்தான் கல்வி என்னை உருவாக்கியது. ஒரே வகுப்பறையில் படிக்கின்றேன். ஒரே தொழிற்சாலையில் வேலை செய்கின்றேன்.

ஒரே பேருந்தில் பயணம் செய்கின்றேன். இதில் எப்படி ஒரு சாதி உயர்ந்தது? இன்னொன்று தாழ்ந்தது? என்று கல்வியின் வருகை நமக்குப் புரியவைத்தது. கல்வி தோற்றதும் நாம் சாதி அடையாளங்களை எடுத்துக் கொண்டோம். கல்வி வணிகமானது, கல்வி தோற்றதும் சாதிக்குத் திரும்பிவிட்டார்கள். கூகுள் போன்ற பெருநிறுவனத்தில் வேலை செய்பவன் தன் சாதிப் பெயரைப் போட்டு விளம்பரம் செய்கின்றான். கல்வி உன்னை உச்ச இடத்தில் வைத்துவிட்டது. இப்போது உனக்கெதற்கு சாதி அடையாளம்? சாதி அடையாளத்தை நான் விரும்பவில்லை. அதே வேளையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதுபவர்களை நான் வரவேற்கிறேன். எதன் பெயரால் தான் செருப்பு அணிவதற்குக்கூட தடைவிதிக்கப்பட்டோம்?
எதன் பெயரால் உணவு மறுக்கப்பட்டது?
இவர்கள் ஏன் சக மனிதனின் கழிவுகளைத் தூக்கிச் சுமந்தார்கள்? இந்த வலிகளை, உண்மையான உரிமைகளை எழுதும்போது அதற்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அதுபோல சுயசாதி பெருமைகளைப் பேசுவதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். ஒருவனுடைய திருமணத்தின்போதும், மரணத்தின்போதும்தான் சாதி தேவைப்பட்டது. ஆனால் இன்று அதுவும் இல்லை. எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். மின் மயானத் தில் எரியூட்டிக் கொள்ளலாம். இவ்வளவு நவ நாகரிகமான சூழலிலும் கூட சாதி முன்பைவிட மோசமாகிவிட்டது. படித்தவன் அதிகமாக சாதியப் பிரிவுகளைத் தூக்கிப் பிடிக்கின்றான். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திற்கு நான் பேசச் சென்றபோது "இங்கு குறிப்பிட்ட இந்த சாதியினர் அதிகமாக இருக்கின்றார்கள்' என்று சொல்கிறார்கள். இங்கும்கூட குறிப்பிட்ட வேலைக்கு, குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்தான் வருகிறார். சாதியின் ஒவ்வொரு படியிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். இதைச் செய்வதுதான் இலக்கியம். இலக்கியத்தின் மூலம் அடிப்படை உரிமைகளைப் பேசலாம். ஆனால் சாதிப் பெருமைகளைப் பேசக்கூடாது. சாதிய தீண்டாமைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது.
உபபாண்டவம் நாவலுக்காக இந்துத்துவா வினரின் எதிர்வினைகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? மகாபாரதம் புனித நூலாகக் கருதப்பட்டாலும் அது ஒரு இலக்கியப் பிரதி. அது இந்தியாவின் நினைவுத் திரட்டு என்று சொல்லுவேன். ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான நினைவின் தொகுப்பு மகாபாரதம். இதனை ஒரு புனித நூலாக மட்டுமே கருதவேண்டியதில்லை. நகரங்கள் உருவாக்கப்படுவது, அதற்காக காடு கள் அழிக்கப்படுவது குறித்தும் நகர்மயமான ஒருகாலத்தை அது பிரதானப்படுத்துகிறது. மகாபாரதத்திற்கு சமகால முக்கியத்துவம் வந்து விடுகிறது. நான் மகாபாரதத்தை தனித்த இலக்கியப் பிரதியாகப் பார்க்கிறேன். இந்தியா முழுமைக் கும் ஒருமிக்கின்ற பிரதி என்பதைத்தான் நாவ லில் எழுதினேன். இந்தப் புத்தகத்தை வாசிக்கின்றவர்களில் பெரும் பகுதியானவர்கள் மதக் கோட்பாடுகளுக்காவே அதனைப் படிக் கின்ற தீவிர மத நம்பிக்கையாளர்கள். அவர்கள் என் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். அது நாவல். பன்முக வாசிப்புக்கு இடம் தரக்கூடியது. ஐராவதி கார்வே, பன்ரார்கர் படித்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு மொழி யிலும் புதிய கண் ணோட்டத்தில் எழுத் தாளர்கள் எழுதியிருக் கின்றார்கள். இந்தியா வின் பிரதான படைப் பாளிகள் அத்தனை பேரும் இராமாய ணம், மகாபாரதம் போன்ற பிரதிகளுக்கு எதிர்வினை ஆற்றி யிருப்பார்கள். தமிழில் புதுமைப்பித்தன் இராமா யணத்திற்கு எதிராக எழுதியிருக்கின்றார். அந்தப் படைப்பை இந்தக் கோணத்திலிருந்து பார்க்கலாமே..! தமிழில் மகாபாரதம் சார்ந்த தாக்கம் இருக்கிறது. வழிபாட்டு முறையில், சடங்காக, கூத்தாக இருக்கிறது. அதனை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதுதான் என் நாவல். அது புதிய விளக்கம், கண்ணோட்டம். எதிர்க்குரல்கள் சில ஆண்டு களுக்குள் காணாமல் போய்விட்டது.