மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

எப்போதும் நான் வீழ்கின்ற மனிதர்களின் பக்கமே நிற்கின்றேன் எஸ்.ராமகிருஷ்ணன்
வி.எஸ்.முஹம்மத் அமீன், 01-15 - February - 2019


வாசிப்பு, எழுத்தைத் தாண்டி எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு உணர்வு அவசியம் இல்லையா? சமூகக் கட்டுடைப்புக்கு எதிராக ஒரு எழுத்தாளராக உங்களுடைய பங்களிப்பு எவ்வகையில் அமைந்துள்ளது? எல்லா மனிதர்களைப்போலவே ஓர் எழுத்தாள னையும் இந்தச் சமூகம் பாதிக்கிறது. அவனுடைய வாழ்க்கை அவனுடைய அடையாளங்களை உரு வாக்குவதில்லை. நான் யார்? எந்த மதத்தை, சாதியைச் சார்ந்தவன், எனது திருமண முறை என்ன, என் பிள்ளைகளை எங்கே படிக்க அனுப்புகின்றேன் என்று எல்லாரையும் போலத்தான் எழுத்தாளனையும் பாதிக்கிறது. சாதாரண மனிதன் கண்டுகொள்ளாமல் போகின்றான். எழுத்தாளன் கண்டுகொள்கின்றான்.

அதனை வெளிப்படுத்துகின்றான். இந்த வெளிப் படுத்துதலும் இரண்டு வகையாக அமைகின்றன. தனது சிந்தனையைப் பயன்படுத்தி அதற்கு எதிராக எழுதுவது ஒருவகை. உதாரணமாக ஒருவித எழுத்தாளர்கள் அதற்கு எதிராக எழுதுவது, போராட்டத்தில் கலந்து கொள்வது, நேரடியாக அரசியல் களத் தில் செயல்படுவது என்று ஒருவர் தன் தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இன்னொரு வித மான எழுத்தாளர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதில்லை. அதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். இந்த இரண்டும்தான் இதுவரைக்குமான மரபு. ஆனால் இன்று இருக்கும் எழுத்தாளன் இரண்டும் இல்லாத இன்னொரு மரபில் வருகின்றார்கள். எது இவர்களை இப்படி உருவாக்குகிறது? பண்பாடா, பண்பாட்டை உருவாக்குகின்ற அதிகாரமா, அல்லது அந்த அதிகாரம் தான் கைக்கொண்டிருக்கின்ற அறமா, எது இந்த பிரச்னைகளுக்குக் காரணம் என்பதை ஆராய் கின்றான்.

அந்தத் தளத்தில் அவன் செயல்படுகின்றான். என்னுடைய எழுத்துகள் முழுவதும் பண்பாடு சார்ந்த அரசியலைத்தான் பேசுகிறது. சமூக அரசியலைப் பேசவில்லை. இந்தப் பண்பாடு எப்படிச் சிதைக்கப்படுகிறது. இந்தப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது, இதற்குள் வேறு அடையாளங்கள் வரும்போது அது என்னவாக உருவாகிறது, காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்கிறது. இது முழுவதும் பண்பாட்டுத் தளத்தில் நடக்கக் கூடிய ஒரு வாதம். இது நேரடியான அரசியல் களம் அல்ல.

அதேவேளையில் இந்தப் பண்பாட்டுத்தளங்களை விவாதிப்பதற்கான ஆள்கள் இருக்கின்றார்களா என்றால் இல்லை. அப்படியானால் எழுத்தாளர்கள்தாம் பண்பாடு சார்ந்த, அதற்குள் இருக்கின்ற அரசியலை, நுண்தளங்களை விவாதிக்க வேண்டியிருக்கிறது. நேரடி அரசியலில் நம்பத்தகுந்த, சிந்தனைப்பூர்வமான ஆள்கள் இல்லாததால் அங்கு எழுத்தாளர்கள் தேவைப் படுகிறார்கள். அதனை எழுத்தாளர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் எழுத்தாளன் நேரடி அரசியலை விட்டு விலகியே இருக்கின்றான். மாறாக அவனுக்குள் அரசியல் சார்ந்த கோபங்கள் இருக்கின்றன. அவனுக்குள் இருக்கும் அரசியல் நேரடியான அரசியல் இல்லை. அவன் தன் கோபங்களை எல்லா நேரங்களிலும் வெளிப்படுத்துவதில்லை. அதை அவன் எழுத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றான். அதை வாசிக் கும் போதுதான் புரிந்து கொள்ள முடியும். நமக் குப் பிடிக்காத விசயங்களிலுள்ள அரசியலை எடுத்துக்கொள்கிறோமே தவிர பிடித்த விசயங் களுக்குள் உள்ள அரசியலை எடுத்துக் கொள்வ தில்லை. அதே நேரத்தில் காலனி ஆதிக்கத்தின் மீதான விமர்சனங்கள் வந்த பிறகு நேரடிக் களத்தில் இயங்குபவர்களுக்கு இணையாக நுண் ஆய்வுகளில் பண்பாட்டு வேறுபாடுகளைக் கண்டு பிடிக்கக் கூடியவர்களுக்கு ஓர் இடம் இருக்கிறது.

நான் அந்த வகையில் வருகிறவன். இன்னும் சொல்வதானால் நான் வேறு ஒரு தளத்தில் இருக்கின்றேன். நான் இரண்டிலிருந்தும் வேறு படுகிறேன். நான் படித்த பேரிலக்கியங்கள் எனக் குக் கற்றுத்தருவது ஒரு மருத்துவப் பணியைப் போல இரண்டு பக்கங்களும் யுத்தம் நடக்கின்ற போது இரண்டுக்கும் இடையே ஒரு மருத்துவர் தேவைப்படுகிறார். வீழ்பவர் யாராக இருந்தாலும் அவருக்குச் சிகிச்சை தேவையிருக்கிறது. அவரு டைய துயரைத் துடைக்க வேண்டியிருக்கிறது. அவரது அடிப்படை விசயத்திற்கான குருதி தேவையிருக்கிறது. இந்த யுத்தத்தில் இந்த மருத்துவர் எந்தப் பக்கமும் நிற்க முடியாது. இரண்டு பேருமே காரணமின்றி அடித்துக் கொள்கிறார்கள். இங்கு வீழ்கின்ற மனிதர்களின் பக்கம் தான் நான் நிற்கிறேன். எப்போதும் நான் வீழ்கின்ற மனிதர்களின் பக்கமே நிற்கின்றேன். ஒரு மனிதன் நிர்கதியடையும்போதெல்லாம் அங்கு ஒரு எழுத்தாளனுடைய தேவை இருக்கிறது.

அவனுக்கான ஒரு குரல் தேவையிருக்கிறது. ஆதரவுக்கை தேவை யிருக்கிறது. அவனுக்கான முதலுதவி வழங்குவதற்கு ஆள் தேவையிருக்கிறது. இங்கு வீழ்ந்துகிடப்பது தனிமனிதர் அல்ல. ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறது. அந்தச் சமூகத்திற்கு இந்தப் பணி தேவையிருக்கிறது. அது கிராமமாக இருக்கலாம், விவசாயமாக இருக்கலாம், அடிப் படை மனிதர்களாக இருக்கலாம். அவர்களுக்குப் பரிந்துபேசுவதும், துணை நிற்பதும் அரசியல்தான். போராட்டமும், ஊர்வலமும் மட்டுமே அரசியல் அல்ல. தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதுதான் அரசியல். நான் இடதுசாரி சிந்தனைகளால் உருவானவன்.  பெரியாரியக்  கோட்பாடுகள் எனக்குள் இருக்கின்றன. நான் படித்த இலக்கியங்கள் எனக்குள் இருக்கின்றன.

அவையெல்லாம் சொல்வது பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான். அதுதான் எனது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை என்னுடைய எல்லாப் படைப்புக்குள்ளும் நீங்கள் காணலாம். ஒழுக்கவிழுமங்கள் வேகமாகச் சரிந்து வரு கின்றன. இதனுடைய அதிர்வை நீங்கள் உணர்கின்றீர்களா? ஒழுக்க விழுமங்கள் கைவிடப்படுவதற்கு யார் காரணம்?

நாம் அறிந்து விடுபடுகின்றோமா, யாராவது வெளியிலிருந்து நம்மைத் தூண்டுகின்றார்களா? என்றால் வெளியிலிருந்து வரும் தூண்டல்களுக்காக நாம் இந்த மீறல்களை மேற் கொள்கிறோம். தனிநபர் தன்னுடைய சிந்தனைப் பூர்வமாக மீறுவது குறைவுதான். ஒழுக்கம் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. பொது ஒழுக்கம் தன்னைத் தளர்த்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு அடிப்படையான ஒரு கூறு இருக்கின்றது. ஒழுக்கத்தைக் கைக் கொள்கின்ற மனிதன் அறத்தை முன்வைக்கின்றான். அந்த அறம் என்னவென்றால் நான் செய்யக்கூடிய செயல் தூய்மையானது, இன்னொருவருக்குத் தீங்கிழைக்காதது. இந்த ஒழுங்கைக் கைக் கொள்வதன் மூலமாக நானும், என் சமூகமும் மேம்பட முடியும். இந்த ஒழுக்க விதிகள்தான் எல்லாவற்றிலும் இருக்கின்றன. பாலியல் ஒழுக்கம் மட்டுமே ஒழுக்கம் அல்ல. உணவு உண்பது, உறங்குவது, சக மனிதனுடன் பழகுவது என எல்லா நியதிகளும் அடிப்படை அறத்துடன் தொடர்புடையவை. இது மீறப்படும் போது மனித உறவுகள் கசப்படைகின்றது. இதனால் வெறுமை உருவாகிறது. இதனைப் போக்கிக் கொள்ள திரும்பத் திரும்ப இந்த மீறல் உருவாகின் றன. இது சந்தை உருவாக்கிய குழப்பம்.

வணிகச் சந்தையும், வணிகப் பொருள்களும் தொழில் மயமான ஓர் உலகம் ஏற்படுத்திய சிந்தனைதான் இதற்கு முக்கியமான காரணம். இன்னொரு புறம் குடும்ப அமைப்பு உடைந்துகொண்டே இருக்கிறது. குடும்பத்தின் வெளிப்புற அமைப்பு உடைந்து வருகிறது. உள் அமைப்பு வசதி, பொருளாதாரம் என்ற ஒரு சிறிய கட்டுமானத்தில்தான் இருக்கிறது. இப் போது இந்தக் குடும்ப அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இதற்கு மாற்று எதையும் நாம் கண்டறியவில்லை. குடும்பம் வேண்டாம் என்று சொன்னால் கூட்டு சமூகமாக வாழப்போகிறோமா, தனியாக வாழப்போகிறோமா என்றால் இல்லை. எந்த மாற்றுவடிவமும் இல்லை. இந்த மீறல்களின்போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை. வெளியேறிச் செல்வதையும், கைவிடுவதையும், ஒழுக்க மீறல்களையும் பெரிதாகப் பேசும்போதெல்லாம் அதன் விளைவுகளை நாம் யோசிப்பதில்லை. மனிதன் தனிமைப்படுத்தப்படுவதைக் குறித்து நாம் சிந்திப்பதில்லை. அடிப்படை அறங்கள் கைவிடப்படும்போது ஓர் ஆழமான வருத்தத்தை உருவாக்குகிறது. தொலைக்காட்சியில் நான் பார்த்த காட்சி என்னை அதிரவைத்துவிட்டது. வடநாட்டில் நடந்த நிகழ்வு அது. சாலையோரத்தில் சென்ற ஒரு பெண்ணை நான்குபேர் தூக்கிச் சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு முயலும்போது கிராமத்து விவசாயிகள் தடிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் அந்த இளைஞர்கள் ஓடி விடுகின்றார்கள்.

ஆனால் காப்பாற்ற வந்த நான்கு விவசாயிகளும் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்கின்றார்கள். 50,60 வயதைக் கடந்த, நாம் அன்றாடம் காணும் சாதாரண விவசாயிகளின் தோற்றத்தில் இருப்பவர்கள் அவர்கள். எது இவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது? இத்தனை ஆண்டுகாலம் இந்திய விவசாயிகள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வண்ணம் இவர்கள் நடந்துகொண்டார்களே...! என்ன அவஸ்தை இது. தம் மகள் வயதில்,பேத்தி வயதில் உள்ள ஒரு பெண்ணை ஏன் வன்புணர் கின்றார்கள்? ஆழமான அறம் கைவிடப் படுகின்றதோ என்ற கேள்வி எழுகிறது. இந்திய சமூகத்தின் அடித்தட்டிலும்கூட அறம் போய் விட்டதோ என்று தோன்றியது. பாலியல் வறட்சிதான் இதற்குக் காரணமா? இப்படிச் செய்வதால் என்ன நடந்துவிடப்போகிறது என நினைப்பது காரணமா? இப்படி நடப்பது நம் காலத்தின் இயல்பா? இதே இடத் தில் அவன் தன் மகளையோ, பேத்தியையோ காணும்போது என்ன ஆவான்?

இந்தத் தகப் பன் நாளை எப்படி வீட்டிற்குச் செல்வõன்? அவன் பிள்ளைகள் இவனைக் குறித்து என்ன நினைக்கும்? பள்ளியில் படிக்கும் அவனுடைய மகள் நாளை இந்த அவமானத்திற்கு உள்ளாவாளா? இவனுடன் வசிப்பவர்கள் இந்த மனிதனை என்ன செய்யப் போகிறார்கள்? அலைஅலையாய் கேள்விகளை உருவாக்குகிறது. சாதாரண மனிதன் ஏன் அறத்தைக் கைவிட்டான்? என்ற கேள்விதான் என்னை ஆட்டிப் படைக்கிறது. இந்திய சமூகத்தில் அடிப்படைகள் நொறுங்குவதைப் பார்க்கிறேன். எத்தனை ஆண்டுகாலம் நாம் காப்பாற்றி வந்த அறம். இதனை இவன் கைவிட் டால் எந்த நம்பிக்கையில் இவனைக் காப்பாற்றப் போகிறோம்? இதுபோன்ற நம்பிக்கை இழக்கும் தருணங்களில் பேரிலக்கியங்களுக்குள் செல்கிறேன். இன்னும் எல்லாம் கெட்டுவிடவில்லை. இவர்கள் நான்குபேர் மட்டுமே சமுதாயம் இல்லை. அறம் எஞ்சியிருக்கிறது என்ற நம்பிக்கையை அது ஊட்டுகிறது. நம்பிக்கையை உருவாக்கும் இலக்கியங்கள் தேவைப்படுகின்றன.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்