செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்காக நாலடியாரை மலையாளத்தில் மொழிபெயர்த்து அரும்பெரும் பணியென நிமிர்ந்து நின்ற யூஸுஃபின் படைப்பை, கோழிக்கோடு முண்டியாடி தாமோதரன் தம்முடைய படைப்பென அவருடைய பெயரிலேயே வெளியிட பிரச்னை வெடித்தது. மலையாள எழுத்தாளர் விஜயன் கோடஞ்சேரியிடம் பிழைதிருத்தக் கொடுத்த நாலடியாரை, விஜயனின் நண்பர் தாமோதரன் தாம் எழுதியதாகச் சொல்ல வழக்கு, விசாரணை என ஏழு ஆண்டு களாக நீடித்து தற்போது நீதிமன்றம் எதிர் தரப்பினருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. ஓர் எழுத்தாளனின் படைப்பை கபளீகரம் செய்த அநியாயம் நிகழ்ந்தபோது தமிழ் எழுத்துலகில் கனத்த மௌனம் நிலவியது. மனம் துவண்டுபோயிருந்த யூஸுஃபுக்கு புதுத் தெம்பையும், உரிய அங்கீகாரத்தையும் சாகித்ய அகாதமி வழங்கியுள்ளது. 2018ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது குளச்சல் மு.யூஸுஃபுக்குக் கிடைத்த செய்தியறிந்து நாகர்கோவிலுள்ள அவரது இல்லத்திற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்புத் துறை சார்பாக, நாகர்கோவில் ஜமாஅத் வட்டத் தின் நண்பர்கள் ஃபஸுலுர் ரஹ்மான், அமீர் அப்பாஸ்,கபூர் மீம்பிள்ளை ஆகியோருடன் சென்று சந்தித்தோம். பாரதியார், வைக்கம் முஹம்மது பஷீர், சுந்தர ராமசாமி ஆகிய படைப்பிலக்கியவாதிகள் யூஸுஃபின் எழுத்துலக முன்னோடிகள். மீஸான் கற்கள், மஹ்ஷர் பெருவெளி, அழியா முத்திரை, பாத்துமாவுடைய ஆடு, எங்க உப்பாவுக்கொரு ஆனையிருந்தது, உலகப் புகழ்பெற்ற மூக்கு போன்ற 28 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்த பெரும் பணியை யூஸுஃப் நிகழ்த்தியிருக்கின்றார்.
அண்மையில் வெளிவந்த ஹைகல் எழுதிய முஹம்மத் நபி(ஸல்) நூலை அழகுதமிழில் அணிசேர்த்திருக்கின்றார் யூஸுஃப். இதுவரை 32 நூல்களை மொழிபெயர்த்திருக்கின்றார். அவசர நிலை காலகட்டத்தில் ராஜன் எனும் மாணவனை நக்ஸலைட் முத்திரை குத்தி அழித்த கொடுங்கணங்களைச் சொல்லும் "ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்', நக்ஸலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள், வர்க்கீசை என்கவுண்டர் செய்த காவலரின் ஒப்புதல் வாக்குமூலம், பாலியல் தொழிலாளியின் சுயசரிதையான "நளினி ஜமீலா' என்ற வரிசையில் அடித்தட்டு மக்கள் வாழ்வியலைப் பதிவுசெய்யும் வகையில் மலையாளத்தில் வெளி யான "மணியன் பிள்ளையுட ஆத்ம கதா'நாவலை "திருடன் மணியன்பிள்ளை' என்ற பெயரில் மொழி பெயர்க்க அதனை காலச்சுவடு வெளியிட்டது. அந்த நூல் இப்போது சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்திருக்கின்றது. திருவள்ளுவர் திருச்சபையின் தமிழ்த்தொண்டர் விருது, தொ.மு.சி. ரகுநாதன் நினைவு விருது, பரமேஸ்வரி அய்யர் விருது, இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது, வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது, சமூக நல அமைதி அறக்கட்டளை விருது, தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது ஆகியன குளச்சல் யூஸுஃபின் சொத்துகள். விருதின் தருணத்தை சமரசம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்ளக் கேட்டபோது மனம் திறந்தார் யூஸுஃப். எப்போதிருந்து மொழிபெயர்க்கத் தொடங் கினீர்கள்? 2010 ஆம் ஆண்டு வாக்கில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அதுவும் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அல்ல. சும்மா எழுதுவேன்.
அப்டியே கிழிச்சுப் போட்டுடுவேன். என் ஆத்ம திருப்திக்காக எழுதினேன். அத்தோடு முடிந்தது. எழுதுவதும், கிழிப்பதுமாக இருந்தேன். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீஸான் கற்கள் நாவலையும் அப்படித்தான் மொழிபெயர்த்து வைத்திருந்தேன். அந்த நேரத்தில் என் வணிகம் தொடர்பா காலச்சுவடு போயிருந்தேன். பேச்சுவாக்கில் இந்தத் தகவலைச் சொல்ல அதைக் கேட்டார்கள். கொடுத்தேன். பெருமாள் முருகனும், திருநெல்வேலி சீனிவாசனும் "நல்லாருக்கே..! இதைப் புத்தகமாக போடலாமே'ன்னு காலச்சுவடு பதிப்பகத்திற்குச் சொல்ல, அப்படித்தான் என் எழுத்துகள் நூல்வடிவம் பெற்றன. நான் அதிகம் வாசிக்கிறேன். அதனால் எழுதுகிறேன். ண "திருடன் மணியன்பிள்ளை' நாவலை மொழி பெயர்க்கத் தோன்றியது எப்படி? மணியன் பிள்ளையுட ஆத்ம கதா நாவலை வாசித்தபோது ஹென்றி ஷாரியரின் "பட்டாம் பூச்சி' நாவலின் பாதிப்பைத் தந்தது.
பட்டாம் பூச்சியின் அந்நியத் தன்மையிலிருந்து வேறு பட்டு மணியன்பிள்ளை நம் ஊர்க்கதையாக ஒரு உணர்வைத் தந் தது. மலையாள நாவல் என்றாலும் துவரங் குறிச்சியில் மணியன் மரக்கடை போடுவது, அங்கு திமுக பிரமுகராக மாறுவது, கர்நாடகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தது என ஒரு நெருக்கத்தையும், வியப்பையும் இந்த நாவல் தந்தது. 1980, 85 காலகட்டத்தில் ITC புகையிலைக் கம்பெனிக்காரர்கள் 90 இலட்ச ரூபாயை மணியன் பிள்ளைக்குத் தரவேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எப்படிப்பட்ட கள்ளனென்று..! ண மொழிபெயர்ப்பதிலுள்ள இடர்கள் என்று எதைச் சொல்வீர்கள்? மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கல், தமிழுக்குப் பதிலாக அதில் இடம் பெறும் சமஸ்கிருதச் சொற்கள்தான். மலையாளமும் தமிழும் இரு மொழிகள் அல்ல. இரு லிபிகள். தமிழில் எழுதியதை மலையாளியோ, மலையாளத்தில் எழுதியதை தமிழரோ வாசிக்க முடியாது. ஆனால் அதே விசயத்தை இருவரும் பேசிப் புரிந்து கொள்ள முடியும். எழுத்து வடிவங்கள்தான் வேறுவேறு..!

மொழியை அப்படியே பெயர்க்க முடியுமா? மொழிபெயர்ப்பில் பல உத்திகளைக் கையாள்வார்கள். நான் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பேன். இந்த முறை தவறு என்று சொல்வார்கள். "மதர் டங்க்' என்பதை "தாய் நாக்கு' என்றா மொழிபெயர்ப்பீர்கள் என்று கேட் பார்கள். அந்த அளவு புரிதல் இல்லாமல் யார் மொழிபெயர்ப்பார்கள்? வார்த்தைக்கு வார்த்தைதான் சரியான மொழிபெயர்ப்பு. அதன்பிறகு அதனை எடிட் செய்ய வேண்டும். அதில்தான் மொழிபெயர்ப்பின் வெற்றி அடங்கியுள்ளது. மொழிபெயர்ப்பை விடவும் நான் எடிட்டிங்கில்தான் கூடுதல் கவனம் செலுத்துவேன். ண மொழித்தழுவல்களையே சிலர் மொழிபெயர்ப்பு என்கின்றார்களே...! ஒரு பாராவைப் படித்துவிட்டு அதைத் தழுவி இவர்களாக எழுதுவார்கள். இது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. அதில் ஜீவன் இருக்காது. மூலத்தில் இல்லாதது மொழிபெயர்ப்பில் எதுவும் இடம்பெறக்கூடாது. மலையாள லிபியை அப்படியே தமிழ் லிபியில்கூட எழுதலாம். அரபுத் தமிழ் மாதிரி அப்படியே படிக்க முடியும். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்க்க வேண்டுமென்றால் எதை மொழிபெயர்ப்பீர்கள்? பெருமாள் முருகனின் எழுத்துகளை..! அதனை மலையாளத்தைத் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கிற்காக விருதுகளை வீசி எறியும் காலத் தில் உங்களுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறதே...! சாகித்ய விருதுகள் பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அதில் சில குளறுபடிகள் இருக்கின்றன. பதிப்பகத்தை முன்வைத்து தரப்படுவதாகக் கூடச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இது எழுத்தாளனுக்கான விருது. நான் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வருகிறேன். அப்படியொரு சூழல் வந்தால் திருப்பித் தரத் தயங்க மாட்டேன். கொடுங்கோன்மையை எதிர்த்து நிற்க எளிய படைப்பாளியான எனக்குக் காலம் தந்த ஆயுதம் இந்த விருது.