மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

வழிகாட்டுகிறார் ஜவ்ஹரா மெஹர்
குளச்சல் ஆசிம், 16-31 மார்ச் 2023


கடின உழைப்பும், சுய சிந்தனையும் இணைந்தால் அனைத்தும் வசப்படும் என்பதற்கு உதாரணம் ஜவ்ஹரா மெஹர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகிலுள்ள சாப்பனங்காடி கிராமத்தைச் சேர்ந்த மௌலவி அப்துல் சத்தார் சுபைதா தம்பதியரின் மகள் மெஹர்.

பெற்றோரின் ஊக்குவிப்பால் பி.டெக் மின்னணுவியல் தேர்ச்சி பெற்றார். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஜவ்ஹராவின் மேற்படிப்பு ஆசையைத் தெரிந்து கொண்ட கணவர் ஜுபைர் முழு ஒத்துழைப்பு வழங்க ஜவ்ஹரா தொலைதூரக் கல்வியில் எம்.பி.ஏ படித்து வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி படிக்கும் கணவரின் சகோதரிக்குக் கைடு புக் வாங்குவதற்குப் பல புத்தக விற்பனைக் கடைகளில் ஏறி இறங்கிய பிறகு குறிப்பிட்ட வினா விடைத் தொகுப்பு ஸ்டாக் இல்லை என்றே பதில் வந்தது.

தனது நாத்தனாருக்குத் தேர்வு நெருங்கியபோது அவருக்கு உதவ ஜவ்ஹரா முன்வந்தார். கடந்த ஆண்டுகளின் பழைய தேர்வு வினாத் தாள்களைத் தேடியெடுத்து அனைத்துப் பாடங்களுக்கும் புதிதாக ஒரு தேர்வு வழிகாட்டி வினா விடை கையெழுத்துப் பிரதி தயார் செய்து நாத்தனாருக்கு வழங்கினார். 85 விழுக்காட்டுக்கும் அதிகமான வினாக்கள் இவரின் தொகுப்பிலிருந்து கேட்கப்பட்டிருந்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

ஜவ்ஹராவின் தேர்வு வழிகாட்டி குறித்து தெரியவர பலரும் அவரை அணுகினர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பாடங்களுக்கு வினா விடை தொகுப்பு தயாரிக்க புத்தகங்கள், இணையத்தில் தேடியபோது நாமே ஏன் இதைப் புத்தகமாக வெளியிடலாமே என்ற கேள்வி எழுந்தது. அவரது எண்ணத்திற்கு கணவர், உறவினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க இன்று கேரள மாநில கல்வித்துறையின் மகத்தான சாதனையாளராக வலம் வருகிறார் ஜவ்ஹரா மெஹர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு K-TET எழுதுவதற்கான துணைவன் கைடு புக் வெளியிட்ட குறுகிய காலத்தில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள SET, NET, HSST, HSA, பாரா மெடிக்கல், மருந்து ஆய்வக உதவியாளர் தேர்வு உட்பட 18 தேர்வுகளுக்குத் தயாராக வினா விடை தொகுப்பு வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் மெஹர்.

இவரின் வினா விடை தயாரிப்புகளுக்குக் காப்புரிமை வழங்க பல பதிப்பகங்கள் முயற்சிக்க, தனது கணவர் உதவியுடன் One One Three Publication என்ற பதிப்பகத்தை நிறுவினார். இவரது புத்தகங்களுக்கு மாணவர்கள், பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துப் பாடங்களிலும் 40000 பிரதிகள் விற்பனையாகி இவரது பதிப்பகம் International Book Of Records சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஜவ்ஹராவின் அசாதாரண முயற்சிகளுக்கு அங்கீகாரமாக Indian Women Talent Award, Women Leadership Award, Indian Top 100 Author's Award உட்பட 2022ஆம் ஆண்டு மட்டும் பத்து விருதுகள் தேடி வந்தது. அடுத்ததாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் இயர் புக்கை தயாரித்து வருகிறார்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்