மாணவப் பருவத்திலேயே மகளின் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தைப் பெற்றோர் ஊக்குவித்ததன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இரண்டு முறை இடம் பெற்று உலக சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியாவின் ஜித்தாவைச் சேர்ந்த ரிதாஜ் ஹுஸைன் அல் ஹாஸ்மி.
15 வயதாகும் ரிதாஜ் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் போதே புத்தக வாசிப்பில் பேரார்வம் காட்டினார். தனது தோழிகள் ஓ#வு நேரத்தில் விளையாட்டுகளில் ஈடுபடும் போது ரிதாஜ் அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டினார்.
தங்களது மகளின் இலக்கியத் தேடலைப் புரிந்து கொண்ட அவரது பெற்றோரும் புத்தகங்கள் வாங்கி பரிசளித்ததுடன் வாசிப்பை ஊக்கப்படுத்தி சிறிய சம்பவங்களைக் கதைகளாக எழுத ஆர்வமூட்டினர்.
ரிதாஜ் அல் ஹாஸ்மி தனது 9ஆவது வயதில் Treasure Of The Lost Sea என்ற முதல் நாவலை எழுதினார். 12ஆவது வயதில் அடுத்தடுத்து Portal Of The Hidden World, Beyond The Future World என்று இரண்டு நாவல்கள் எழுதி வெளியிட்டார். உலகின் முதல் இளம் வயது பெண் பதிப்பாளர் என்று கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார்.
சவூதி அரேபியாவின் பிரபலமான நாளிதழான அரப் நியூஸ் பத்திரிகை இவரது கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. அண்மையில் சவூதி அரேபியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்று எரிசக்தி வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சவூதி இளைஞர்களின் பங்களிப்பு பற்றிய ரிதாஜ் அல் ஹாஸ்மியின் கட்டுரைகள் World's Youngest Female Columnist என்ற பிரிவில் 2ஆவது முறையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் வகையில் மூன்று நாவல்கள் எழுதி வருவதாகக் கூறும் ரிதாஜ் அல் ஹாஸ்மி, பரந்துபட்ட வாசிப்பைப் பழக்குவதன் மூலம் இலக்கிய ஆர்வத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறார்.