மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

உரையாடலுக்கான காலத்தை உருவாக்குவோம்!
1-15 மார்ச் 2024


உரையாடலுக்கான காலத்தை உருவாக்குவோம்!

தேநீர்க்கடை தொடங்கி தொலைக்காட்சி வரை எங்கும் விவாதம், எதிலும் விவாதம். எதிரும் புதிருமாகக் குரல் உயர்த்தி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கும்போது உரையாடலுக்கான புதிய களத்தை உருவாக்கியிருக்கிறது புனித ஜான்பால் மன்றம். அதுவும் பொதுவான பொழுதுபோக்கு உரையாடல் அல்ல. அர்த்தமுள்ள ஆன்மிக உரையாடல். சமய நல்லிணக்கம் என்ற பெயரில் மும்மதத்தவரையும் மேடையில் வைப்பது சிறப்பு செய்வதோ, மதங்களிலுள்ள சில செய்திகளைப் புகழுரைப்பதோ அல்லாமல் ஒரு மதத்தவரை தங்களின் மன்றத்துக்கு அழைத்து நீங்கள் சார்ந்திருக்கும் மதம் குறித்துப் பேசுங்கள்.

அது குறித்த எங்களின் ஐயங்களுக்குத் தெளிவு தாருங்கள் என்ற அடிப்படையில் சமய நல்லிணக்கத்தின், மதங்களுக்கிடையேயான உரையாடலின் உண்மையான தேட்டத்தை நிகழ்வாக்கி இந்தியாவிற்கே முன்மாதிரிப் பாதையை அமைத்துத் தந்துள்ளது திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட புனித ஜான்பால் மன்றம்.

2024 பிப்ரவரி 18ஆம் நாள் மாலை திருச்சி மேலப்புதூர் ஆயர் இல்ல வளாகத்திலுள்ள ஜான்பால் உரையாடல் மன்றத்தில் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற தலைப்பில் பல்சமய உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மஃரிப் எனும் மாலை வேளைத் தொழுகையை அந்த அரங்கிலேயே நிகழ்த்தினர். திருச்சி நூருல் ஹுதா பள்ளிவாசல் இமாம் மௌலவி இத்ரீஸ் பாகவி தலைமையேற்று நடத்திய இத்தொழுகையை சகோதரச் சமுதாயச் சொந்தங்கள் பார்வையிட்டனர்.

பல்சமய இறை வேண்டலுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் திருக்குறள் கல்வி மையத் தலைவர் திருக்குறள் சு.முருகானந்தம், திருச்சி கத்தோலிக்க மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணி ச.ஜேம்ஸ் செல்வநாதன் ஆகியோர் இஸ்லாத்துடனான தங்களது உறவையும், புரிதலையும் மகிழ்வுரையாக நிகழ்த்தினர்.

இந்த அருமையான நிகழ்வை மிகச்சிறப்பாக முன்னெடுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசிய புனித ஜான்பால் உரையாடல் மன்ற இயக்குநர் அருள்பணி முனைவர் க.சார்லஸ் இந்த நிகழ்வின் தேவையையும், இஸ்லாம் குறித்த தமது விரிவான பார்வையையும் முன்வைத்தார். ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினரும் சமரசம் இதழின் பொறுப்பாசிரியருமான வி.எஸ்.முஹம்மத் அமீன் இஸ்லாம் குறித்த விரிவான உரை நிகழ்த்தினார். சகோதரச் சமுதாயச் சொந்தங்கள் இஸ்லாம் குறித்து எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்தார்.

இந்த உரையாடல்கள் தொடர வேண்டும். உரையாடலுக்கான காலத்தை உருவாக்குவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்