சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் (All India Muslim Personal Law Board) சார்பாக அதன் பொதுச்செயலாளர் மௌலானா பசுலுர் ரஹீம் முஜத்திதி அவர்கள் தலைமையில் சமுதாயத் தலைவர்கள் 21.08.2024 புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
இக்குழுவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும் சமரசம் ஆசிரியருமான ஏ.அப்துர் ரகீப், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் MLA, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, பேராசிரியர் நஸ்ருல்லா பாஷா, ஃபாத்திமா முஸப்பர் MC, புரபொஷனல் கூரியர் நிறுவனர் அஹ்மது மீரான் உட்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இச்சந்திப்பின் போது சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா உடனிருந்தனர்.
நடந்து முடிந்த மக்களவை கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரியத் திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்த்து அதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்விற்கு அனுப்ப உதவியமைக்-காக குழுவினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வின் போதும் இச்சட்டத்தையும் அதில் இடம் பெற்றுள்ள ஜனநாயக விரோதக் கூறுகளையும் திமுக உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டுமெனக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று மீண்டும் பேச்சுகள் எழுந்துள்ளது குறித்த கவலையைக் குழு வெளிப்படுத்தியது. பொது சிவில் சட்டத்தைத் திணிப்பதை எதிர்த்துக் கடந்த ஆண்டு ஜூலை 13 அன்று பிரதமருக்கும், சட்ட ஆணையத்தின் தலைவருக்கும் கடிதம் எழுதியதை முதலமைச்சர் குறிப்பிட்டார். முஸ்லிம் சமுதாயத்துடன் என்றென்றும் தான் உறுதுணையாக இருப்பதாகவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.