மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

புல்டோசர்கள் இடித்து நொறுக்குவதற்கல்ல..
k. ரியாஸ், 16-30 செப்டம்பர், 2024



அண்மையில் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது முன்னேறு ஆற்றின் குறுக்கே உள்ள பிரகாஷ்நகர் பாலத்தில் 9 பேர் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தின் போக்கு அதிகமாக இருந்ததால் அவர்களைக் காப்பாற்றுவது பெரும் சவாலாக இருந்த நேரத்தில் தம் உயிரையும் துச்சமாக மதித்து அவர்களைக் காப்பாற்ற முன்வந்தார் சுபான் கான். அவருக்குத் துணை நின்றார் வெங்கடரமணா.


ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த சுபான் கான் பிரகாஷ்நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜேசிபி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ‘நான் உயிரிழந்தாலும் பரவாயில்லை. ஒரே ஓர் உயிர்தான் போகும். நான் பிழைத்தால் ஒன்பது உயிர்களுடன் திரும்பி வருவேன்’ என்று கூறி சுபான் கான் புல்டோசரை எடுத்தார். ‘35 இலட்சம் மதிப்பிலான ஜேசிபி போனாலும் பரவாயில்லை. உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்று சுபானுக்கு உறுதுணையாக நின்றார் ஜேசிபி உரிமையாளர் வெங்கடரமணா.
அடித்துப் புரண்டுவரும் வெள்ளச் சுழற்சிக்கு மத்தியில் ஜேசிபியைச் செலுத்தினார் சுபான். பாதிகூடச் செல்ல முடியவில்லை. திரும்பி விட்டார். மீண்டும் முயன்றார் முடியவில்லை. திரும்பி விட்டார். இறுதியாகப் போராடிச் சென்றார். 9 பேரையும் பத்திரமாக மீட்டுத் திரும்பினார் சுபான் கான்.


‘என் அப்பா உள்ளே செல்லும்போது நான் நடுங்கினேன். ஆனால் அவர் சாதித்துக் காட்டிவிட்டார்’ என்று நெகிழ்கிறார் சுபான் கானின் மகள். ஆகீகு தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஓகூ ராமாராவ் உள்ளிட்ட பலரும் சுபானின் துணிச்சலையும் முயற்சியையும் பாராட்டி வருகின்றனர். சமூக ஊடகங்களில் புல்டோசர் ஹீரோ என சுபானைப் பாராட்டிப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


உத்திரப்பிரதேசம், ஹரியானா போன்ற பாஜக மாநில அரசுகள் முஸ்லிம்களின் வீடுகளையும், கடைகளையும், வழிபாட்டுத் தலங்களையும் வெறுப்பினால் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு தங்களை புல்டோசர் பாபாவாக பெருமிதமாகக் கூறிவரும் நிலையில் ‘புல்டோசரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று உ.பி. முதலமைச்சரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்று பிரதமர் மோடி கூறி வரும் வேளையில் புல்டோசரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு மட்டுமல்ல உலகிற்கே பாடம் புகட்டியிருக்கிறார் உண்மையான புல்டோசர் ஹீரோவான சுபான் கான்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்