செங்குன்றம் இலாஹி பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றி வந்த மௌலவி அபுல் ஹஸன் பாகவி உடல் நலக் குறைவினால் இறைவனிடம் மீண்டார். அவருக்கு மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக பாகவிகள் பேரவை, செங்குன்றம் பெருமானார்(ஸல்) அவர்கள் புகழ்பாடும் உலமா பேரவை, புரசை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து செங்குன்றத்தை அடுத்த காவாங்கரையில் 600 சதுர அடியில் இடம் வாங்கியது.
கேரள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஒருமா சாரிட்டபிள் டிரஸ்டுடன் இணைந்து ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீட்டின் சாவி ஒப்படைக்கும் விழா கேரள ஜமாஅத்தே ஹிந்த் சென்னை மாநகரத் தலைவர் அப்துல் நாசர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்குன்றம் மஸ்ஜிதே ஆயிஷா தலைமை இமாம் மௌலவி முனைவர் ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி உரையாற்றும் போது, ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சேவை அமைப்பான ஒருமா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்திடம் ஆலிம்கள் சந்தித்து இறந்து போன மௌலவி அபுல் ஹஸன் பாகவி அவர்கள் குடும்பத்திற்காக வீடு கட்டித் தரும்படி வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து அழகிய வீட்டைக் கட்டித் தந்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு மக்கள் பணிகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றி வருவது பாராட்டுக்குரியது’ என்றார்.
மண்ணடி இமாம் மௌலவி பக்ருத்தீன் பாகவி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநகர முன்னாள் பொறுப்பாளர் புரான்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் ஜஇஹி கேரளா வடசென்னை பொறுப்பாளர் முஹம்மத் ஷஃபி, ஒருமா அமைப்பின் சமூக சேவைச் செயலாளர் ஷஜீர், காவாங்கரை மஸ்ஜிதே முஹம்மதியா தலைவர் எம்.ஹுசேன் மைதீன், செயலாளர் ஏ. முஹைதீன் புஹாரி, பொருளாளர் எஸ்.காஜா உசேன், நாசர், அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.