நீதிபதி முஹம்மது யாசீன்
பாலக்காடு மாவட்டம் கூர்க்காபரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யாசீன். இவருக்கு ஏழு வாயதாகும்போது தந்தை குடும்பத்தை உதறிவிட்டுப் போக தாய், தன்னைவிட இரண்டு வயது இளைய சகோதரனுக்கும் நிழலாய் மாறினார் யாசீன்.
தங்கள் மஹல்லாவில் மாதந்தோறும் வழங்கும் அரிசியை மட்டும் வைத்து சமையல் செய்ய தாய் கண் கலங்கி நிற்பதைப் பார்த்து ஏழு வயதிலேயே அதிகாலையில் வீடு வீடாகச் செய்தித்தாள் விநியோகம் செய்து கிடைக்கும் குறைந்த வருவாயைத் தாயிடம் வழங்கிவிட்டு பள்ளிக்கூடம் சென்று படித்தார்.
முஹம்மது யாசீனுக்கு வயது ஏற ஏற செய்த வேலைகளின் பட்டியலும் நீண்டது. அதிகாலை செய்தித்தாள் விநியோகம் முடிந்ததும் பால் பாக்கெட் விநியோகம் செய்வதும், பள்ளி விடுமுறை நாள்களில் பெயிண்டர் பணி, கட்டிடப்பணி என்று கிடைத்த வருமானம் மூலம் குடும்ப வறுமையைப் போக்கியதுடன் தனது படிப்பையும் தொடர்ந்தார்.
பள்ளிக்கூட நாள்களில் பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டு படிப்பில் மதிப்பெண் குறைவாக எடுப்பதால் சக மாணவர்களின் கேலியைப் புறந்தள்ளி +2 தேர்ச்சி பெற்றார். பின்னர் பி.ஏ. பொது நிர்வாகம், மின்னணுவியல் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற முஹம்மது யாசீன் 2019ஆம் ஆண்டு எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிப்பில் சேர்ந்த போது முன்பைவிட அதிக பணத்தேவை இருந்தது.
ஆனாலும் தளராத முஹம்மது யாசீன் உணவு விநியோக வேலையைத் தேர்வு செய்தார். மாலை கல்லூரி முடிந்து நள்ளிரவு வரை உணவு விநியோகம் செய்து கல்லூரிக் கட்டணம் கட்டுவதை அறிந்த முந்தைய ஆண்டு மாணவர்கள் சிலர் தங்களது படித்து முடிந்த புத்தகங்கள், சீருடைகளை வழங்கி உதவினார்கள். 2023இல் சட்டப்படிப்பு முடித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்த முஹம்மது யாசீன் உள்ளத்தில் அதைவிட உயர்ந்த இலட்சியம் இருந்தது. கேரள மாநில சட்டப்பணிகள் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வெழுதிய முஹம்மது யாசீன் இரண்டாவது ரேங்குடன் தேர்ச்சி பெற்று தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளார்.
ஏழு வயதில் கூலி வேலையில் தொடங்கி படிப்படியாக முன்னேறிய முஹம்மது யாசீன் 29வது வயதில் நீதிபதி எனும் தகுதியைப் பெற்றுள்ளார். வாழ்த்துகள் கனம் நீதிபதி அவர்களே!