மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஏழைகளின் மருத்துவர் ஏஜாஸ் அலீ
ரியாஸ் மொய்தீன், 16-28 பிப்ரவரி 2025


 

டாக்டர் ஏஜாஸ் அலீ


பீகாரில் மருத்துவர்கள் ரூ.800 முதல் ரூ.1,200 வரை கட்டணம் பெறும் நிலையில் ‘ஏழைகளின் காவலர்’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஏஜாஸ் அலீ பத்து ரூபாய் மட்டுமே மருத்துவக் கட்டணமாகப் பெறுகிறார்.

1984ஆம் ஆண்டு தனது வீட்டில் ஒரு மருத்துவமனையைத் திறந்தபோது தொடங்கிய அவரது இந்தப் பயணம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தக் குறைந்த கட்டணத்துடன் தொடர்கிறது. ஆஷியானா திகா சாலையிலும் பிக்னா பஹாரியிலும் அமைந்துள்ள அவரது மருத்துவமனை பீகார் முழுவதிலுமிருந்து மலிவு விலையில் மருத்துவ சேவையை நாடும் நோயாளிகளை ஈர்த்துள்ளது.

இதனால் அங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டுமின்றி குறைந்த செலவில் அல்லது பணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றார். சில தருணங்களில் சிகிச்சைகளுக்குத் தவணை முறையில் பணம் செலுத்தவும் அனுமதிக்கிறார்.

‘நோயாளிகளின் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதால் எனது கட்டணத்தை ஒருபோதும் உயர்த்தவில்லை’ என்று டாக்டர் ஏஜாஸ் அலீ கூறுகிறார். ‘டாக்டர் அலீயின் மாதிரியை மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து பின்பற்ற வேண்டும். மருத்துவம் இரக்கமுள்ளதாகவும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை அவர் நிரூபிக்கிறார்’ என்று உள்ளூர் சுகாதார அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

டாக்டர் அலீயின் இந்தத் தியாகப் பணி மேலும் தொடர அங்குள்ள சமுதாய மக்கள் இவருக்கு அவர்களால் முடிந்த ஒத்துழைப்பையும் பொருளாதார உதவியும் செய்கின்றனர். கார்ப்பரேட் நிறுவங்களின் கைகளில் மருத்துவ உலகம் மிகப்பெரும் வியாபாரமாக மாறிவரும் இன்றைய சூழலில் மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமே பார்க்காமல், சேவையாகக் கருதி பிரதிபலன் பாராமல் செயல்படும் ஏஜாஸ் அலீ போன்ற மருத்துவர்களும் அரிதாக இருக்கின்றார்கள் என்பது இந்த மண்ணில் இரக்கமும், மனித நேயமும் எஞ்சி இருக்கின்றன என்பதன் அடையாளங்களாகத் திகழ்கின்றன. தொடரட்டும் இந்த மக்கள் சேவை!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்