1864ஆம் ஆண்டு பிறந்த ஹக்கீம் அஜ்மல் கான் இருபதாம் நூற்றாண்டின் யுனானி மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கியவர். மருத்துவரான அஜ்மல் கான் சிறந்த இலக்கியவாதி, தேசியவாதி, அரசியல்வாதி. யுனானி, ஆயுர்வேதிக்கை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவர். இவருடைய காலத்தில் யுனானி மருத்துவம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 1905ஆம் ஆண்டு யுனானி பெண்கள் கல்லூரியைக் காந்தியை வைத்து திறக்க வைத்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் டாக்டர் ஹக்கீம் அஜ்மல் கானின் பங்கு அளப்பரியது. காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர் அஜ்மல் கான். காந்தி, லாலா லஜபதிராய், சுவாமி சாரதானந்த், கிலாபத் இயக்கத்தின் நாயகர்கள் லியாக்கத் அலீ, சௌக்கத் அலீ, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற பல காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தன் வாழ்வை அர்பணித்தார்.
இவருடைய யுனானி மருத்துவ அரிய சேவைக்காக ஆங்கிலேயர் ஆட்சியில் ஹாசிக் உல் முல்க் பட்டமும், தங்கப்பதக்கமும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ஆனால் 1920 தீவிர விடுதலைப் போராட்டத்தால் ஆங்கிலேயர்கள் கொடுத்த பட்டத்தையும், தங்கப்பதக்கத்தையும் பிரிட்டிஷ் அரசிடம் மீண்டும் ஒப்படைத்தார். 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அஜ்மல்கான். கான்பூரில் நடந்த ஜம்மியத்துல் உலமா தேசியத் தலைவர்கள் மாநாட்டில் மசிஹ் உல் முல்க் பட்டத்தை இவருக்கு வழங்கினார்கள்.
யங் இந்தியா பத்திரிகையில் ஹக்கீம் அஜ்மல் கான் குறித்து காந்தி பாராட்டி எழுதிஉள்ளார். மக்கள் நோய்நொடியின்றி வாழவும், விடுதலை இந்தியாவிற்குப் பாடுபட்டு தன் வாழ்வை அர்ப்பணித்த டாக்டர் ஹக்கீம் அஜ்மல் கான் 1927 டிசம்பர் 29இல் மரணம் அடைந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு ஹக்கீம் அஜ்மல் கானின் தியாகத்தைப் போற்றும் விதமாக அஞ்சல் வில்லை(ஸ்டாம்ப்) வெளியிடப்பட்டது.