மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஃபலஸ்தீன ரத்தத்தின் மீது விழா கொண்டாட வெட்கமில்லையா? அநீதிக்கெதிரான அறச் சீற்றம்
அ.அப்துல் சத்தார், ஏப்ரல் 16-30, 2025


 

2025 ஏப்ரல் 4 அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக ஊழியர்களுக்கான பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கக் கூட்டத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், முன்னாள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர், இன்றைய தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா ஆகியோர் மேடையில் இருந்தனர்.

அப்போது, ஓர் இளம் பெண் திடீரென மேடையை நோக்கி விரைந்து வந்தார். அவர், மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் இஸ்ரேலுக்கு செயற்கை நுண்ணறிவு(அஐ) தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதை எதிர்த்துக் கடுமையாகக் குரல் எழுப்பினார். ‘உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எல்லாம் பாசாங்கு செய்பவர்கள்! மைக்ரோசாஃப்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 50,000 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் ரத்தத்தின் மீது 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட உங்களுக்கு வெட்கமில்லையா? இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ளுங்கள்! நானும் மைக்ரோசாஃப்ட் ஊழியர் தான், ஆனால் இதற்கு நான் துணை போக மாட்டேன்!’ என்று கூறினார்.

மைக்ரோசாஃப்டின் பெண் பிரதிநிதி ஒருவர் அவரை வெளியே அழைத்துச் செல்ல முயன்றபோதும், அவர் தொடர்ந்து தனது கருத்தை உரத்துக் கூறிக் கொண்டிருந்தார். இந்த வீர மங்கையின் பெயர் வானியா அகர்வால். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர் சம்பளத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர் ஆவார். அதுபோல எதிர்ப்புக் குரல் எழுப்பிய மற்றொருவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தள அமைப்பில் மென்பொறியாளராகப் பணியாற்றி வரும் மொராக்கோவைச் சேர்ந்த இப்திஹால் அபூ ஸாத். எதிர்ப்புக்குரல் எழுப்பியதற்காக இவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

இந்நிலையில் குவைத் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரத் தொழிலதிபரும், குவைத் நிதித்துறையின் டிஜிட்டல் மாற்றத்தை மேற்பார்வையிடும் மைஃபதூரா உட்பட பல முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்துல்லா அல்டோபஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய வானியா அகர்வாலுக்கும், இப்திஹால் அபூ ஸாத்துக்கும் நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளார்.

ஃபலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் அட்டூழியங்களையும், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதையும் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது உயர் ஊதியத்தையும், பணியையும் பொருட்படுத்தாமல் இஸ்ரேலின் அராஜகத்துக்கு எதிராகத் துணிந்து குரல் எழுப்பிய வானியாவையும், இப்திஹாலையும் நீதியில் நிலைத்திருக்கும் அனைவரும் வாழ்த்துகின்றனர். நாமும் வாழ்த்துவோம். ஃபலஸ்தீன் வெல்லும்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்