மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

கதை

லாபம்
ஆரூர் புதியவன், நவம்பர் 16-30


மாலை நெருங்கும் வேளையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பல்பொருள் அங்காடி. எங்கும் கிடைக்காத பல அரிய பொருட்களைக் கொண்ட அக்கடை வாசனைத் திரவியங்களுக்கு மிகவும் பேர் பெற்றது.

தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதிகளிலிருந்தும் விவரம் தெரிந்தவர்கள் அந்தக் கடைக்குத் தேடி வருவார்கள். அதற்குக் காரணங்கள் என்னென்ன என்பதைப் பல பக்கங்களுக்குச் சொல்ல வேண்டும்.

ஒரே சொல்லில் சொல்லவேண்டும் என்றால் `வணிக அறம்` எனலாம். கடைநிலைக் கடைஊழியன் ராஜா சுறுசுறுப்பாக இருந்தான். கடையில் கடைசியாகச் சேர்ந்தவன் என்றாலும், அவனை ராஜாவாகவே உணர வைத்தது அந்தக் கடை.

அங்கே வீசும் மெல்லிய நறுமணம், யாரையும் அங்கிருந்து எளிதில் நகர விடாது. தன் கடைக்குத் தேவையானதை வாங்க திருவாரூரிலிருந்து வந்திருந்த மொத்த வணிகர் ரஃபீக் பாயை ராஜா கவனித்துக் கொண்டிருந்தான். ராசிபலன்களில் நம்பிக்கையில்லாத ரஃபீக் பாய் தன் கடைக்கு ராசி ஸ்டோர் என்று ஏன் பெயர் வைத்தாரென யாருக்கும் தெரியாது.

அவர் ஊத் என்ற அத்தரின் பரம ரசிகர். "ஊத்' அத்தருக்கு ஊரெங்கும் போலிகள் உண்டு. இங்கே உண்மையான ஊத் மட்டுமல்ல, போலிகளும் உண்டு. ஆனால் விற்பதற்கு முன் அவற்றைப் போலி என்று உண்மையைச் சொல்லி விற்பார்கள்.

6 எம்.எல் நூறு ரூபாய், 12 எம்.எல் இருநூறு ரூபாய் என்று ஓர் அலுமினியப் புட்டியில் நிறைந்திருந்த அத்தரைக் காட்டிய ராஜா, அதன் மூடியின் உட்புறம் ஒட்டியிருந்த துளிகளிலிருந்து ஒரு மைக்ரோ துளியை ரஃபீக் பாயின் புறங்கையின் ஓர் ஓரத்தில் வைத்தான்.

நெஞ்சார உள்ளிழுத்த ரஃபீக், "இதைத்தானப்பா இவ்வளவு நாள் தேடிக்கிட்டிருந்தேன். மக்காவில் ஒருமுறை வாங்கினேன், பிறகு தேடிக்கொண்டே இருந்தேன்' என்று சொல்லிக்கொண்டே திரும்பினால் அங்கே அக்கடையின் உரிமையாளர் ஹாஜா பாய் நின்று கொண்டிருந்தார்.

முதலாளி ஹாஜா பாயைப் பார்த்த ராஜா, வேலையில் மேலும் உற்சாகம் காட்டினான். 6 எம்.எல் நூறு ரூபாய்க்கு என 5 பாட்டில்களை நிரப்பினான்.

கடையின் பரபரப்பு குறையாத நேரத்தில் வழக்கமாக ஒரு சுற்று வரும் ஹாஜாபாய் அங்கிருந்து நகராமல் இந்த வியாபாரம் முடிவதையே பார்த்துக் கொண்டிருந்தார். மனத்தில் மணத்தை நிறைத்துக் கொண்ட திருவாரூர் ரஃபீக் பாய் 500 ரூபாய் சலவைத் தாளை எடுத்து நீட்டினார். கல்லாப் பெட்டி அருகே குல்லாவோடு நின்று தொகையை வாங்கிக் கொண்ட ஹாஜாபாய், ரஃபீக் பாயின் காதில் மெல்ல சொன்னார்.

"தம்பி, உங்களிடம் தவறாக விலையைச் சொல்லிவிட்டான். நீங்கள் வாங்கிய அத்தர் 6 எம்.எல் இருநூறு ரூபாய். ஆனால் அதை நூறு ரூபாய்க்கு தவறாக விற்றுள்ளார்' என்றதும் ரஃபீக் பாய், "இவ்வளவு மலிவாக அது கிடைக்காதே என்று நானும் நினைத்தேன்' என்று சொல்லிக்கொண்டே இன்னொரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினார்.

அதற்கு ஹாஜா பாய், "மன்னிக்கணும். ஒரு வியாபாரம் முடிந்த பிறகு, மேலும் உங்களுக்கு அப்பொருளின் அவசியத்தை நீங்களே வெளிப்படையாகச் சொன்ன பிறகு கூடுதலாகப் பணம் பெறுவது எனக்குச் சரியாகப்படவில்லை. நீங்கள் அடுத்த முறை வாங்கும்போது உரிய விலை தந்தால் போதும், இந்த முறை தவறு எங்களுடையது' என்று கூறி, கூடுதல் ஐநூறு ரூபாயைக் கண்டிப்போடு மறுத்து விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராஜாவுக்கு, நெற்றி வியர்த்துப் போனது. பதற்றத்தில் "பாய் மன்னிச்சுடுங்க.. என்னால நஷ்டமான இந்த ஐநூறு ரூபாயை என் சம்பளத்திலே பிடிச்சுக்குங்க..' என்றான் குற்ற உணர்வோடு.

"அட, விடுப்பா. தொழிலில் கவனமா இருக்கணும். விலையை மாற்றிச் சொல்லி விடக் கூடாது' என்று அவர் அறிவுரை கூற, இன்னொரு அலுமினியப் புட்டியைக் காட்டி, "இது எவ்வளவு சொன்னீங்க பாய்' என்றான்.

"இது 6 எம்.எல் முப்பது ரூபாய்' என்றார். இப்போது ராஜாவின் முகத்தில் குதூகலம் குடியேறியது. "பாய், இந்தப் புட்டியைத்தான் 6 எம்.எல் இருநூறு சொன்னீங்கன்னு நினைச்சு இதுவரை 30 பாட்டில் வித்துட்டேன்' என்றான்.

"என்னது, 30 ரூபாய் பொருளை 200 ரூபாய்க்கு வித்தியா?' என்று அதிர்ச்சியோடும் ஆவேசத்தோடும் முகம் சிவந்தார் ஹாஜாபாய்.

"நமக்கு லாபந்தானே முதலாளி' என்றான் ராஜா.

"முட்டாள்' என்று கையிலிருந்த காகிதத்தை அவன் முகத்தில் விசிறினார் ஹாஜாபாய்.

இப்படி அவர் கோபப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது.

"லாபமாம் லாபம்..! 30 ரூபாய் பொருளை 200 ரூபாய்க்கு விற்றது ஹராம். இதை வாடிக்கையாளர்கள் கண்டுபிடித்தால், இந்தக் கடை காலங்காலமாகத் தேடிய நற்பெய ருக்குக் களங்கம் உண்டாகும்.'

"பாய் அவங்க திருப்தியாதான் வாங்கிட்டுப் போனாங்க..' என்று ராஜா அவரைச் சமாதானப்படுத்த முயன்றான்.

"அது இந்தக் கடையில் ஏமாற்று வேலை இருக்காது என்ற நம்பிக்கையாலே வாங்கியிருப்பாங்க. பாவிப் பயலே இப்படிப் பண்ணிட்டியே..' என்றார் கோபம் குறையாத ஹாஜா.

தன்னால் ஏற்பட்ட ஐநூறு ரூபாய் இழப்பைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஹாஜாபாய், தன்னால் ஐயாயிரத்து நூறு ரூபாய் லாபம் கிடைத்ததற்குப் பாராட்டாமல் "ஹராம்' என்று கொந்தளிக்கிறாரே.. என்று குழப்பத்தில் நின்றான் ராஜா.

கல்லாவிலிருந்து ஐயாயிரத்து நூறு ரூபாயைத் தனியாக எடுத்து ஓர் உறையில் போட்டார் ஹாஜாபாய்.

மஃரிப் தொழுகைக்காக அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து பாங்கோசை கேட்டது.

 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்