நிலத்தின் முந்தானையாய்
நீண்டிருக்கும்
கடல்கூட
தன் எல்லையைத் தாண்டி
ஊருக்குள் வருவதில்லை
உயரத்தில் இருந்து
ஊர்வலமாய் வருகின்ற மழை
இந்த மாநகரத்தை
தண்ணீரால் சிறைப்படுத்தி விட்டது
மழை
இசைக்கத் தொடங்கும்போது
அதன் பாடலில்
மலரத் தொடங்குகின்றன
பெயர் சூட்டப்படாத மலர்கள்
பூமிக்கும் மழைக்கும்
பிறந்த பிள்ளைகள்
தாவரங்களாகி விட்டன. அதன்
கட்டுக்கு அடங்காத பிள்ளைகள்
காடுகளாகி விட்டன
காற்றோடு மழை கலந்து விட்டால்
தூறல்களில் தோன்றுகின்றன
வானவில்கள்
ஒளிக்கீற்றுகளில்
ஒழுகும் மழை
தங்கக் காசுகளைத்
தானமாகத் தருகின்றது
நிலத்தில் பெய்கிற மழை
எப்போதாவது
மனதிற்குள் பொழிகின்றபோது
நம் குற்றங்கள்
கழுவப்படுகின்றன
வாழ்க்கை பரிசுத்தமாகின்றது
பூமி தொடாத
மழையின் தூய்மையை
மனிதர்கள் பெறுவதற்காகவே
காலம் காலமாக
மழை பொழிகின்றது
குடை விரித்துக்கொண்டு
அலையும் மனிதர்களை
மழை ஆசீர்வதிப்பதில்லை
கொட்டிக்கொடுக்கும்
வள்ளல் தன்மையைக்
கற்றுக்கொள்ள வேண்டியே
கல்விக்கூடங்களுக்கும்
விடுமுறை அளிக்கிறார்கள்
மழைக்காலங்களில்
மேகங்கள் போல்
தொட முடியாத தூரத்தில் வசிப்பவர்கள்
உண்மையில்
உயர்ந்தவர்கள் இல்லை
மழையைப் போல்
மண்ணுக்கு வரும்
மனிதர்கள் மட்டுமே
வரலாற்றில் வசிக்கிறார்கள்
வாழும்போதே
தொடர்புக்கு: 99404 48693